அதிவேக பெர்த் ஆடுகளத்தில் ஆஸ்திரேலியாவை சாய்த்த 'பும்ரா புயல்'

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
பெர்த் நகரில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று புதிய வரலாறு படைத்தது. 534 ரன்கள் இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணி, 4-வது நாளான இன்று 58.4 ஓவர்களில் 238 ரன்களில் ஆட்டமிழந்தது.
ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட், பெர்த் டெஸ்ட் போட்டியில் ஆட்டம் 5 நாட்கள் வரை நீடிக்காது என்று முன்பே கூறியிருந்தார். அதுபோல ஆஸ்திரேலிய அணி 4வது நாளிலேயே தோல்வி அடைந்து ஆட்டத்தை முடித்துள்ளது.
பெர்த்தில் உள்ள புதிய ஆப்டஸ் மைதானத்தில் நடந்த 4 டெஸ்ட் போட்டிகளில் இதுவரை தோல்வி அடையாமல் இருந்து வந்த ஆஸ்திரேலிய அணியைத் தோற்கடித்து இந்திய அணி புதிய சாதனையை நிகழ்த்தியது.
“இந்தியாவிலிருந்து எந்தவிதமான தோல்வி சுமையையும் எடுத்துவரவில்லை” என்று கேப்டன் பும்ரா தொடக்கத்திலேயே தெரிவித்திருந்தார். அதை மெய்யென நிரூபிக்கும் வகையில் தனது கேப்டன்ஷிப்பில் முதல் வெற்றியைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.
- பார்டர்-கவாஸ்கர் கோப்பை: அதிக வெற்றிகளுடன் ஆதிக்கம் செலுத்தும் இந்திய அணி - ஓர் சுவாரஸ்ய வரலாறு
- பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட்: ஆஸ்திரேலியா 100 ரன்கள் வரை தாக்குபிடிக்குமா? - பதிலடி கொடுத்த பும்ரா படை
- பெர்த் டெஸ்ட்: அடிபட்ட புலி ஆஸ்திரேலியாவை சமாளிக்குமா பும்ரா தலைமையிலான படை?
- பார்டர் கவாஸ்கர் தொடர்: ஃபார்மில் இல்லாதபோதும் கோலியை கொண்டாடும் ஆஸ்திரேலிய ஊடகங்கள்

தடுமாறிய ஆஸ்திரேலியா
பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியான பெர்த் டெஸ்டில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 150 ரன்களும், ஆஸ்திரேலிய அணி 104 ரன்களும் சேர்த்தன. 2வது இன்னிங்ஸில் இந்திய அணி 46 ரன்கள் முன்னிலை பெற்று ஆடி, ஜெய்ஸ்வால் 161 ரன்கள், கோலி சதம், ராகுல் 77 ரன்கள் ஆகியோரின் அபார ஆட்டத்தால் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 487 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது.
இதையடுத்து 534 ரன்கள் வெற்றி இலக்குடன் நேற்று மாலை 2வது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி பும்ராவின் துல்லியமான லைன் அன்ட் லென்த் பந்துவீச்சில் சிக்கி 12 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது தடுமாறியது.
கவாஜா, ஸ்டீவ் ஸ்மித் இன்றைய ஆட்டத்தைத் தொடங்கினர். மிகப்பெரிய இலக்கு என்பதால், இயல்பாகவே ஆஸ்திரேலிய பேட்டர்களுக்கு நெருக்கடி அதிகரித்தது. விக்கெட்டை இழந்துவிடக்கூடாது என்ற கவனத்துடன் கவாஜா ஆடியது நன்கு தெரிந்தது. ஆனால், ஆட்டம் தொடங்கிய 2வது ஓவரிலேயே சிராஜ் பந்துவீச்சில் ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்து கவாஜா 4 ரன்னில் ஆட்டமிழந்தார்.
ஆஸ்திரேலிய அணியின் டாப்-4 பேட்டர்கள் மெக்ஸ்வீனி(0), கவாஜா(4), கம்மின்ஸ்(2), லாபுஷேன்(3) என ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 17 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து ஆஸ்திரேலிய அணி தடுமாறியது.

பட மூலாதாரம், Getty Images
மீட்க முயன்ற ஸ்மித்-ஹெட் கூட்டணி
5வது விக்கெட்டுக்கு ஸ்மித், டிராவிஸ் ஹெட் கூட்டணி சேர்ந்து அணியைச் சரிவிலிருந்து மீட்க முயன்றனர். ஸ்டீவ் ஸ்மித் ஏற்கெனவே ஃபார்மில் இல்லை என்பதால், மிகுந்த கவனத்துடன் இந்திய பந்துவீச்சை எதிர்கொண்டார். முதல் இன்னிங்ஸில் பும்ரா பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்ததால், க்ரீஸை விட்டு இறங்கி ஆடி, கால்களை நகர்த்தி ஆடி விழிப்புடன் பேட் செய்தார்.
ஸ்மித் நிதானமாக பேட் செய்ய, டிராவிஸ் ஹெட் அவ்வப்போது பவுண்டரிகள் அடித்து ரன்களைச் சேர்த்தார். இதனால், இருவரும் 5-வது விக்கெட்டுக்கு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
ஆனால் சிராஜ் வீசிய அற்புதமான ஆஃப் ஸ்டெம்பிலிருந்து சற்று விலக்கி பேக்ஆஃப் லென்த்தில் வீசிய பந்தை ஸ்மித்தால் ஆடவும் முடியவில்லை, பேட்டை எடுக்கவும் முடியாமல் தவித்தார். இறுதியில் பேட்டில் பந்து பட்டு விக்கெட் கீப்பர் ரிஷப்பந்திடம் கேட்சானது. சிராஜின் ஆகச்சிறந்த பந்துவீச்சில் ஸ்மித் 17 ரன்னில் ஆட்டமிழந்தார்.

பட மூலாதாரம், Getty Images
டிராவிஸ் அதிரடி அரைசதம்
அடுத்து வந்த மார்ஷ், டிராவிஸ் ஹெட்டுடன் சேர்ந்தார். நண்பகல் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்புக்கு 104 ரன்களுடன் இறுக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தது. ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும் டிராவிஸ் ஹெட் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 63 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
உணவு இடைவேளைக்குப்பின் மார்ஷ், ஹெட் இருவரும் சேர்ந்து ரன்களை வேகமாகச் சேர்க்கத் தொடங்கினர். வாஷிங்டன் சுந்தர், ராணா, நிதிஷ் ரெட்டி பந்துவீச்சில் இருவரும் பவுண்டரிகளை அடித்தனர். இதனால் இருவரின் பார்ட்னர்ஷிப் 50 ரன்களைத் தொட்டது.

பட மூலாதாரம், Getty Images
பும்ரா வலையில் சிக்கிய ஹெட்
டிராவிஸ் ஹெட் விக்கெட்டை எடுக்கும் முயற்சியில் பும்ரா இறங்கினார். சதத்தை நோக்கி நகர்ந்த ஹெட்டுக்கு துல்லியமாக லென்த்தில் பந்துவீசியதால் சற்று தடுமாறினார். பும்ரா வீசிய 39-வது ஓவரில் ஆடமுடியாத அவுட்சைட் ஆப்சைடில் விலக்கி வீசிய பந்தை ஹெட் தொட முயற்சிக்கவே பேட்டில் பட்டு ரிஷப்பந்திடம் கேட்சானது. டிராவிஸ் ஹெட் 89 ரன்களில் ஆட்டமிழந்தார். 6-வது விக்கெட்டுக்கு இருவரும் 81 ரன்கள் சேர்த்தனர்.
மிட்ஷெல் மார்ஷும் அரைசதம் நோக்கி நகர்ந்த நிலையில் நிதிஷ் குமார் ரெட்டி பந்துவீச்சில் 47 ரன்கள் சேர்த்தநிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஸ்டார்க் 12 ரன்களிலும், லேயான் டக்அவுட்டிலும் வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர். விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரே கடைசிவரை போராடிய நிலையில் ராணா பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி 36 ரன்களில் ஆட்டமிழந்தார்.
58.4 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 238 ரன்களுக்கு ஆட்டமிழந்து 295 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

பட மூலாதாரம், Getty Images
குறைத்து மதிப்பிட்ட ஆஸ்திரேலிய அணி
நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் சொந்த மண்ணில் 3-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் ஆகியிருந்ததால் இந்திய அணியை ஆஸ்திரேலிய வீரர்கள் குறைத்து மதிப்பிட்டுவிட்டனர். கேப்டன் கம்மின்ஸ் கடந்த மார்ச் மாதத்துக்கு பின் டெஸ்ட் போட்டிகளில் விளையாடமல் இருந்து பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கு வந்தார். ஸ்மித், லாபுஷேன் ஃபார்மில் இல்லாத நிலையில் அணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பெர்த் ஆடுகளத்தை ஆஸ்திரேலிய வீரர்கள் பெரிதும் நம்பியிருந்தனர். இந்த மைதானத்தில் 4 போட்டிகளிலும் தோல்வி அடையாததால் இந்த ஆட்டத்திலும் தோற்கமாட்டோம் என்று நினைத்திருந்தனர். ஆனால், 2வது நாளில் இருந்து ஆடுகளம் வேறுவிதமாக மாறியதை ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களால் எதிர்கொள்ள முடியவில்லை, இதனால் ஜெய்ஸ்வால்-ராகுல் பார்ட்னர்ஷிப்பை உடைக்கவும், கோலியை ஆட்டமிழக்கச் செய்யவும் கடும் சிரமப்பட்டனர்.
அதுமட்டுமல்லாமல் 4வது நாளில் இருந்து ஆடுகளத்தில் உள்ள பிளவுகள் பெரிதாகியதால், பேட் செய்வது கடினமாக இருக்கும் என்று கூறப்பட்டது. அதனை உறுதி செய்வது போல், இன்றைய ஆட்டத்தில் திடீரென வீசப்பட்ட பவுன்ஸர்கள், தாழ்வாக வந்த பந்து என சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலிய பேட்டர்கள் திணறினர்.
ஆனால், இந்திய அணியோ கேப்டன் ரோஹித் சர்மா, சுப்மன் கில் இல்லாத நிலையிலும், அஸ்வின், ஜடேஜா ஆகிய மூத்த வீரர்களை பெஞ்சில் அமர வைத்து, இளம் வீரர்களுடன் துணிச்சலாக களமிறங்கியது. இந்த முடிவு தவறாகிவிட்டதோ என்று முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 150 ரன்களில் ஆட்டமிழந்தபோது ரசிகர்கள் எண்ணினர்.
ஆனால், பும்ரா, சிராஜ், ராணா, நிதிஷ் ரெட்டியின் பந்துவீச்சு பட்டையைக் கிளப்பி ஆஸ்திரேலிய அணியை 104 ரன்களில் சுருட்டியது. அதன்பின் இளம் வீரர் ஜெய்ஸ்வாலின் அற்புதமான சதம், கோலியின் 500 நாட்களுக்குப் பின் சிறந்த சதம் ஆகியவை இந்திய அணிக்கு பெரிய ஊக்கமாக அமைந்தன.

பட மூலாதாரம், Getty Images
1991 ஆட்டத்தை நினைவுபடுத்திய இந்திய அணி
இந்திய அணி வெளிநாட்டில் மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற 3வது மிகப்பெரிய வெற்றி இதுவாகும். இதற்கு முன் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக 318 ரன்களிலும், இலங்கைக்கு எதிராக304 ரன்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி வென்றிருந்தது. இது 3வது மிகப்பெரிய வெற்றியாக இந்திய அணிக்கு அமைந்தது.
ஒரு அணி முதல் இன்னிங்ஸில் 150 ரன்கள் அல்லது அதற்கு குறைவான ரன்களுக்கு ஆட்டமிழந்த பின், வீறுகொண்டு எழுந்து டெஸ்ட் போட்டியை வென்றது இது 2வது முறையாகும்.
இதே ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 1991ம் ஆண்டு பிரிட்ஜ்டவுனில் நடந்த டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி இதேபோன்ற ஆகச்சிறந்த வெற்றியைப் பெற்றது. மேற்கிந்தியத் தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் 149 ரன்களுக்கு ஆட்டமிழந்து, 2வது இன்னிங்ஸில் 536 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்து, 343 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை பந்தாடியது.
அப்போது மேற்கிந்தியத் தீவுகள் அணியில் கர்ட்னி வால்ஷ், அம்புரோஸ், மால்கம் மார்ஷல், பேட்டர்ஸன் என 4 வேகப்பந்துவீச்சாளர்கள் மட்டுமே பந்துவீசி ஆஸ்திரேலிய பேட்டர்களை துவம்சம் செய்தனர்.
அதேபோன்று இந்த டெஸ்டில் இந்திய அணி பும்ரா, சிராஜ், புதுமுகங்கள் ராணா, நிதிஷ் ரெட்டியை வைத்துக்கொண்டு ஆஸ்திரேலிய அணியை புரட்டியெடுத்துள்ளது.
அதிலும் பும்ராவின் பந்துவீச்சுதான் இந்த ஆட்டத்தின் பிரமாஸ்திரமாக இருந்தது. பும்ராவின் டெஸ்ட் பந்துவீச்சு குறிப்பாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக, ஆஸ்திரேலிய மண்ணில் 19-ஆக இருக்கிறது. ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் கூட இந்த அளவு குறைவான சராசரி வைக்கவில்லை, ஆனால், பும்ரா அசாத்தியமான சராசரியை வைத்துள்ளார்.
பும்ரா அசத்தல்
பெர்த் டெஸ்ட் போட்டிக்கு முதல்முதலாக கேப்டன் பொறுப்பை ஏற்று செயல்பட்ட வேகப்பந்துவீச்சாளர் பும்ரா முதல் போட்டியிலேயே கேப்டனுக்குரிய பொறுப்புடன் செயல்பட்டு அணிக்கு வெற்றி தேடித் தந்துள்ளார். இரு இன்னிங்ஸிலும் சேர்த்து 8 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்ததால், ஆட்டநாயகனாகவும் பும்ரா அறிவிக்கப்பட்டார்.
கோலி ஃபார்மில் இல்லையா?
வெற்றிக்குப் பின் இந்திய அணியின் கேப்டன் பும்ரா பேசுகையில் “மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. முதல் இன்னிங்ஸில் நாங்கள் மிகவும் அழுத்தத்தில் இருந்தோம். ஆனால், அருமையாக மீண்டுவந்து பதிலடி கொடுத்தோம். 2018-ஆம் ஆண்டில் இதே பெர்த் மைதானத்தில் விளையாடியுள்ளேன். இந்த விக்கெட் தொடக்கத்தில் மெதுவாகவும், பின்னர் மாறும் என்றும் தெரிந்துகொண்டேன். நாங்கள் மிகவும் சிறப்பாகவே டெஸ்டுக்கு தயாரானோம்."
"உங்கள் திறமை மீது நம்பிக்கை வையுங்கள் என அனைத்து வீரர்களிடம் தெரிவித்தேன். ஜெய்ஸ்வால் அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கோலி ஃபார்மில் இல்லை என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை, கடினமான ஆடுகளத்தில் கோலியின் ஆட்டத்தைக் கணிப்பது கடினம். ரசிகர்களின் ஆதரவு ஊக்கமாக இருந்தது” எனத் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
இந்திய அணி மீண்டும் முதலிடம்
இந்த டெஸ்ட் தொடர் இந்திய அணிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. 4-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தினால் தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு முன்னேற முடியும் என்பதால், கடும் நெருக்கடியுடன் இந்திய அணி களமிறங்கியது.
இந்த வெற்றி மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அட்டவணையிலும், இந்திய அணி 15 ஆட்டங்களில் 9 வெற்றிகள், 5 தோல்விகள், ஒரு டிரா என 110 புள்ளிகளுடன், 61.11 சதவீத வெற்றியுடன் முதலிடத்துக்கு முன்னேறியது.
இந்த தோல்வியால் ஆஸ்திரேலிய அணி 13 போட்டிகளில் 8 வெற்றி, 4 தோல்வி, ஒரு டிரா என 90 புள்ளிகளுடன் வெற்றி சதவீதம் 57.69 எனக் குறைந்து 2வது இடத்துக்குத் தள்ளப்பட்டது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












