'ஒரே குடும்பத்தில் குழந்தை முதல் பெரியவர் வரை 18 பேர் பலி' - சௌதி பேருந்து விபத்தில் துயரம்

சௌதி அரேபியாவில் மெக்காவில் இருந்து மதீனாவுக்கு இந்திய யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் கிடைத்துள்ளதாக ஹைதராபாத் காவல் ஆணையர் வி.சி. சஜ்ஜனார் தெரிவித்தார்.
இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் இறந்ததாகக் கூறப்படுகிறது.
பிபிசியிடம் பேசிய ஹைதராபாத்தில் உள்ள பஞ்சகுட்டாவைச் சேர்ந்த கியாசுதீன், இறந்தவர்களில் தனது உறவினர்கள் 18 பேர் அடங்குவர் என்று கூறினார்.
"அந்தக் குடும்பத்தின் தலைவர் நசிருதீன். அவரது மகன்கள், மகள்கள், அவர்களது மனைவிகள் மற்றும் குழந்தைகள் மெக்காவுக்குச் சென்றனர். இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் அமெரிக்காவில் இருந்ததால் மெக்காவுக்குச் செல்லவில்லை. அவரைத் தவிர குடும்பத்தில் உள்ள அனைவரும் இறந்துவிட்டனர்," என்று கியாசுதீன் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
'ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் இறந்தனர்'
"என் பெயர் கியாசுதீன். நான் பஞ்சகுட்டாவில் வசிக்கிறேன். என் சகோதரியின் மகள் குடும்பத்தைச் சேர்ந்த மொத்தம் 18 பேர் பேருந்து விபத்தில் இறந்ததாகக் கூறப்படுகிறது. காலையில் நான் அலுவலகத்திற்குச் செல்லும்போது, என் மருமகன் போன் செய்து இது நடந்ததாகச் சொன்னார். உடனடியாக என் சகோதரியின் வீட்டிற்குச் சென்றோம். பின்னர் விபத்து தொடர்பாக இங்கு ஒரு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டிருப்பதை அறிந்தோம். இங்கு வந்த பிறகு விசாரித்ததில் மொத்தம் 18 பேர் விபத்தில் இறந்ததாகத் தெரிந்தது," என்று கியாசுதீன் கூறினார்.
"அவர்கள் மெக்காவிலிருந்து மதீனாவுக்குப் பயணம் செய்து கொண்டிருந்த போது விபத்து நடந்ததாகக் கூறுகிறார்கள். அவள் என் சகோதரியின் மகள். என் மருமகனின் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் இருந்தனர். என் சகோதரியின் குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்கள் உட்பட மொத்தம் 18 பேர் பயணம் சென்றிருந்தனர். அவர்கள் அனைவரும் இறந்தனர். அவர்கள் அனைவரும் முதல் முறையாக உம்ரா யாத்திரைக்குச் சென்று கொண்டிருந்தனர்," என்று அவர் கூறினார்.

'இறந்தவர்களில் 5 பேர் ஒரே குடும்பத்தினர்'
சௌதி அரேபியாவில் நடந்த பேருந்து விபத்தில் தனது குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் இறந்ததாக ரிஸ்வான் அகமது என்பவர் தெரிவித்தார். அவரது தாயார், சகோதரர், மைத்துனி மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகள் விபத்தில் இறந்ததாக அவர் கூறினார்.
"என் பெயர் ரிஸ்வான் அகமது. என் மூத்த சகோதரர், அவரது மனைவி, அவர்களது இரண்டு குழந்தைகள் மற்றும் என் அம்மா என மொத்தம் ஐந்து பேர் மெக்காவுக்குச் சென்றிருந்தனர். காலை 8.30 மணிக்கு அது பற்றி எனக்குத் தெரியவந்தது. பேருந்து தீப்பிடித்தது. அனைவரும் பேருந்தில் இருந்ததாக என் அத்தை கூறினார். துபாயில் வேலை செய்து வந்த என் மூத்த சகோதரர் விடுமுறையில் இங்கு வந்திருந்தார்.
அவர்கள் இரவு எட்டு மணிக்கு (நவம்பர் 16) போன் செய்தார்கள். அவர்கள் மதீனா செல்வதாகக் கூறினர். அது பதினைந்து நாள் பயணம். அவர்கள் அடுத்த ஞாயிற்றுக்கிழமை திரும்பி வருவதாக இருந்தது. என் சகோதரனின் இரண்டு குழந்தைகள் சிறியவர்கள். ஒருவருக்கு ஒன்பது வயது, மற்றொருவருக்கு ஏழு வயது. என் அம்மாவுக்கு 60 வயது. காலையில்தான் விஷயம் எங்களுக்குத் தெரியவந்தது." என்று அவர் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












