கொல்கத்தா தீ விபத்தில் பலியான தமிழக குடும்பம்: சுற்றுலா சென்ற இடத்தில் நடந்த சோகம்

    • எழுதியவர், சேவியர் செல்வகுமார்
    • பதவி, பிபிசி தமிழ்

கொல்கத்தாவில் ஒரு ஹோட்டலில் நடந்த தீவிபத்தில் உயிரிழந்த தமிழ்நாட்டை சேர்ந்த 2 குழந்தைகள் உள்ளிட்ட 3 பேருடைய உடல்களும் கரூர் கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டன.

தீயணைப்பு வாகனங்கள் மிகவும் தாமதமாக வந்ததால் அனைவரும் மூச்சுத்திணறி உயிரிழந்ததாக இறந்தவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா நகரில் உள்ள ரிதுராஜ் என்ற ஆறு மாடி ஹோட்டலில் கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி அன்று இரவு 8 மணியளவில் ஏற்பட்ட தீவிபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த முத்து கிருஷ்ணனும், அவருடைய மகள் வழிப்பேத்தி தியா (வயது 10) மற்றும் பேரன் ரிதன் (4) ஆகிய மூவரும் உயிரிழந்தனர்.

அவர்களின் உடல்கள் சென்னைக்கு விமானத்தில் கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலமாக கரூர் மாவட்டம் உப்பிடமங்கலம் பேரூராட்சிக்குட்பட்ட ஜோதிவடம் என்ற ஊருக்குக் கொண்டு வரப்பட்டு, இன்று (மே 1) மாலை அடக்கம் செய்யப்பட்டன.

சுற்றுலாவுக்காக கொல்கத்தா சென்ற நாளிலேயே தீவிபத்து

தீவிபத்தில் உயிரிழந்த முத்து கிருஷ்ணன், சென்னையைச் சேர்ந்தவர். கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

அவருடைய மகள் மதுமிதாவின் கணவர் பிரபு. உப்பிடமங்கலம் ஜோதிவடத்தைச் சேர்ந்த பிரபு, சோற்றுக்கற்றாழையில் இருந்து மருந்து தயாரிப்புக்கான மூலப்பொருட்களைத் தயாரித்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வருகிறார்.

இவருடைய உறவினர்கள் தரும் தகவல்களின்படி, பிரபு, அவருடைய மனைவி, குழந்தைகள் மற்றும் மாமனார் ஆகிய 5 பேரும், டெல்லியில் நடந்த உறவினரின் திருமணத்துக்கு ஏப்ரல் 18 -ஆம் தேதி அன்று சென்றுள்ளனர்.

திருமணம் முடிந்தபின், பல பகுதிகளுக்கு சுற்றுலா சென்று விட்டு, அங்கிருந்து ஏப்ரல் ஆம் தேதி 29 அன்று கொல்கத்தாவுக்கு சுற்றுலாவுக்காகச் சென்றுள்ளனர். அங்கு தங்கியிருந்தபோது நடந்த தீவிபத்தில்தான் இவர்கள் மூவரும் புகையில் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர்.

பிபிசி தமிழிடம் பேசிய பிரபுவின் உறவினர் சோமு, ''அன்று இரவு 8 மணியளவில், இவர்கள் 3 பேரையும் ஓட்டலில் இருக்க வைத்துவிட்டு, உணவு வாங்குவதற்காக பிரபுவும் அவரது மனைவியும் சென்றுள்ளனர்.

நடந்து செல்லும் துாரத்தில் இருந்த ஒரு உணவகத்தில், உணவு வாங்கிக் கொண்டிருந்தபோது, ஓட்டலில் தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக பிரபுவின் மாமனார் போனில் தகவல் தெரிவித்துள்ளார். இருவரும் ஓடிவந்து பார்த்தபோது முதல் தளத்தில் தீப்பிடித்து மேலே பெரும் புகை கிளம்பியுள்ளது. மேலே சென்று காப்பாற்ற வழியில்லாமல் இருந்துள்ளது.'' என்றார்.

தீவிபத்து நிகழ்ந்து ஒரு மணி நேரம் கழித்தே தீயணைப்பு வாகனங்கள் வந்ததால்தான் அவர்களை காப்பாற்ற முடியவில்லை என்று பிரபு தெரிவித்ததாக சோமு கூறினார்.

இந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர் மற்றும் 12 பேர் காயங்களுடன் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஹோட்டலின் உரிமையாளர் ஆகாஷ் சாவ்லா, மேலாளர் கெளரவ் கபூர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். .

பாதுகாப்பு வசதிகள் எதுவுமில்லாத ஹோட்டல்

காவல்துறை நடத்தியுள்ள முதற்கட்ட விசாரணையில் 1989 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்த ஹோட்டலின் தீ பாதுகாப்பு அனுமதி கடந்த 2022 ஆம் ஆண்டிலேயே காலாவதியாகிவிட்டதாகத் தெரியவந்துள்ளதாக இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி கூறுகிறது

காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் அருகிலுள்ள கட்டடங்களில் இருந்து ஏணிகளைப் பயன்படுத்தி 90 பேரைக் காப்பாற்றியுள்ளதாக அரசு தரப்பு தெரிவித்துள்ளது.

தீ விபத்து நடந்த ஹோட்டலைப் பார்வையிட்ட மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, ''ஹோட்டலில் தீயணைப்பு அமைப்பு செயலிழந்துள்ளது. குழாய்கள் இருந்தன. தண்ணீர் இல்லை. ஒரே ஒரு படிக்கட்டு இருந்தது, ஆனால் மக்களால் அதைப்பயன்படுத்த முடியவில்லை. புகை வெளியேறவும் வழியில்லை. அதனால் பெரும்பாலான மக்கள் தீ மற்றும் புகையினால் உயிரிழந்துள்ளனர்.'' என்று கூறியுள்ளார்.

ஆனால் 14 பேர் உயிரிழந்த இந்த தீ விபத்துக்கு மாநில அரசு மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தின் ஒட்டு மொத்த அலட்சியமே காரணமென்று பாரதிய ஜனதா கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

இதுகுறித்து அம்மாநிலத்தின் பாஜக சட்டமன்ற உறுப்பினரும், எதிர்க்கட்சித் தலைவருமான சுவேந்து அதிகாரி, தனது எக்ஸ் பக்கத்தில், ''பொது மக்கள் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்க அரசு தவறிவிட்டு, ஹோட்டல் நிர்வாகத்தின் மீது முழுப் பழியையும் சுமத்தி, அவர்களை பலிகடாக்களாகக் கருதி மூடிமறைக்க முடியாது" என்று விமர்சித்துள்ளார்.

''அந்த ஹோட்டலில் இரண்டு லிப்ட்கள் இருந்துள்ளன. ஆனால் புகை மேலே முற்றிலும் பரவிவிட்டதால் எதையுமே பயன்படுத்த முடியவில்லை. மற்றவர்களாலும் மேலே போக முடியவில்லை. ஒரு வேளை தீயணைப்பு வாகனம் விரைவாக வந்து தீயை அணைத்திருந்தால் புகை குறைந்து, காப்பாற்றப்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக பிரபு தெரிவித்தார்.'' என்று கூறினார் சோமு.

கொல்கத்தாவைச் சேர்ந்த பிபிசி செய்தியாளர் ருபாயத் பிஸ்வாஸ், ''அந்த ஓட்டலில் அவசர கால வழி எதுவுமே இல்லை. தீயணைப்பு வீரர்கள், ஜன்னலை உடைத்து, கண்ணாடியை உடைத்துதான் உள்ளே சென்றுள்ளனர். அதனால்தான் பெரும்பாலானவர்களைக் காப்பாற்ற முடிந்துள்ளது. அந்த ஓட்டலில் நிறைய விதிமீறல்கள் இருந்துள்ளன.'' என்றார்.

இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள், வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களின் உடல்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்ப மாநில அரசே ஏற்பாடு செய்வதாக ஓர் அதிகாரி, செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். அதன்படி சென்னைக்கு 3 பேருடைய உடல்கள் அனுப்பப்பட்டு, அங்கிருந்து கரூருக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

இதுபற்றி பிபிசி தமிழிடம் பேசிய உப்பிடமங்கலம் பேரூராட்சி கவுன்சிலர் செல்லப்பன், ''கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல், இவர்களின் உடல்களைக் கொண்டு வருவதற்கு ஏற்பாடுகளைச் செய்தார். கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியும் கொல்கத்தாவிலிருந்து இங்கு கொண்டு வரும் வரை அதிகாரிகளிடம் பேசி, உடல்களைக் கொண்டு வந்ததோடு அடக்க நிகழ்விலும் பங்கேற்றார்.'' என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.