You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாலத்தீனம்: ஹமாஸ் தலைவர்களை அழிக்க திட்டமிடும் இஸ்ரேல் சுரங்கங்களை தாக்குவது ஏன்?
காஸாவிலிருக்கும் ‘நிலத்தடி தளங்களில்’ ஹமாஸின் மூத்த பிரமுகர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களில் காஸாவில் இரண்டு வெவ்வேறு தளங்களில் ‘மூத்த’ ஹமாஸ் பிரமுகர்களை குறிவைத்து இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் கூறியது.
ஒரு நிலத்தடிச் சுரங்கத்தில் ஹமாஸின் பல மூத்த தளபதிகள் ஒளிந்திருந்ததாக இஸ்ரேலிய ராணுத்தின் செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி தெரிவித்தார்.
"ஹமாஸின் வடக்கு காஸா பகுதி படைப்பிரிவின் தலைவரான அஹ்மத் ராண்டோர் மற்றும் ஹமாஸ் ராக்கெட் படைப்பிரிவின் தலைவரான ஹைமன் சியான் உட்பட பல மூத்த ஹமாஸ் தளபதிகள் ஒரு நிலத்தடிச் சுரங்கத்தில் மறைந்திருந்தனர்," என்று ஹகாரி கூறினார்.
தாக்குதலுக்கு உள்ளான மற்றொரு நிலத்தடி தளத்தில், காஸாவின் ஹமாஸ் அரசாங்கத்தின் தலைவர் ஆசம் டாலிஸ் உட்பட ஹமாஸின் அரசியல் பிரிவின் மூத்த உறுப்பினர்கள் இருந்ததாகத் தெரிவித்தார்.
இரண்டு தளங்களும் ‘குறிப்பிடத்தக்க வகையில் சேதமடைந்துள்ளன’ என்று அவர் கூறினார்.
பிபிசியால் இந்த இஸ்ரேலிய அறிக்கையை சுயாதீனமாக சரிபார்க்க முடியவில்லை.
மருத்துவமனையின் மீது தாக்குதல்
கடந்த சில நாட்களாக காஸாவில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனையான அல் ஷிஃபாவினுள் ஹமாஸுக்கு எதிரான துல்லியமான தாக்குதலை நடத்தி வருவதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.
அந்த மருத்துவமனையில் நூற்றுக்கணக்கானோர் அவசர சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் ஆயிரக்கணக்கானோருக்கு உறைவிடமாக அந்த மருத்துவமனை உள்ளது.
இந்த தாக்குதல் உளவுத்துறை தகவலின் அடிப்படையில் நடைபெறுவதாகவும் இது அவசியமான ஒன்று எனவும் இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் சமூக ஊடகத்தில் தெரிவித்துள்ளது.
தங்கள் படையில் மருத்துவக் குழுவினரும், அரேபிய மொழி தெரிந்தவர்களும் இருப்பதாகவும் அவர்கள் இந்த சிக்கலான சூழலை எதிர்கொள்ள பயிற்சி பெற்றவர்கள் என்றும் இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் தெரிவித்துள்ளது. அவர்களின் நோக்கம், “ஹமாஸ் மனித கேடயங்களாக பயன்படுத்தும் பொதுமக்களை தாக்குவது அல்ல” என்று உறுதி அளித்துள்ளது.
“மருத்துவமனையில் உள்ள அனைத்து ஹமாஸ் தீவிரவாதிகளும் சரணடைய வேண்டும்” என்றும் அறிவித்துள்ளனர்.
மருத்துவமனையின் உள்ளே ஆயுத நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ள வேண்டும் என காஸா அதிகாரிகளை ஏற்கெனவே எச்சரித்ததாகவும், ஆனால் அது நடைபெறவில்லை என்றும் இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் தெரிவித்துள்ளது.
மருத்துவமனையை தங்கள் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தவில்லை என்று ஹமாஸ் மறுத்துள்ளது. சர்வதேச குழு வந்து நேரில் இதனைப் ஆய்வு செய்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவமனை மீதான தாக்குதலை “போர் குற்றம்”, “தார்மீக குற்றம்”, “மனிதத்துக்கு எதிரான் குற்றம்” என்று கண்டித்துள்ளது.
இஸ்ரேல் பொதுமக்கள் பயன்படுத்தும் இடத்தை தாக்குகிறது, ராணுவ தளவாடத்தை அல்ல என்றும் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் தரும் தகவலின் உண்மைத்தன்மையை பிபிசி உடனே உறுதி செய்ய முடியவில்லை.
அல்-ஷிஃபா மருத்துவமனை உள்ளே இஸ்ரேல் ராணுவம்
அல் ஷிஃபா மருத்துவமனை உள்ளேயும் அதனை சுற்றியும் நோயாளிகள், மருத்துவ பணியாளர்கள் என ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தஞ்சம் அடைந்துள்ளனர்.
அல்-ஷிஃபா மருத்துவமனையில் இருக்கும் ஒருவர், புதன்கிழமை அதிகாலை இஸ்ரேல் ராணுவத்தினர் மருத்துவமனை உள்ளே“புகைக் குண்டை வீசினர்” என்று பிபிசியிடம் தெரிவித்தார். இதனால் பலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.
“இஸ்ரேல் ராணுவத்தினர் சிறப்பு அறுவை சிகிச்சை துறையின் உள்ளே நுழைவதை நான் பார்த்தேன்” என்று நேரில் பார்த்த காதர் அல்-சானௌன் தெரிவித்தார்.
“மருத்துவமனை உள்ளே ஆறு டாங்கிகளை பார்த்தேன். மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட கமோண்டா படையினர் இருந்தனர். அவர்கள் பிரதான அவசர சிகிச்சை துறையின் உள்ளே நுழைந்தனர். சிலர் முக கவசம் அணிந்திருந்தனர். அவர்கள் அரேபிய மொழியில், “நகராதீர், நகராதீர்” என்று கத்தினர்.
மருத்துவமனையின் உள்ளே இருக்கும் பத்திரிகையாளர் ஒருவர், இஸ்ரேல் ராணுவத்தினர் ஒவ்வொரு அறையாக, ஒவ்வொரு தளமாக சென்று நோயாளிகள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் என ஒவ்வொருத்தரையும் விசாரிக்கின்றனர் என்று தெரிவித்தார். அரேபிய மொழி தெரிந்த மருத்துவர்கள் மற்றும் நபர்கள் உடன் இருந்தனர் என்றும் தெரிவித்தார்.
இஸ்ரேல் ராணுவம் முழு கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் துப்பாக்கி சூடு எதுவும் நடைபெறவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
காஸா சுகாதாரத்துறையின் செய்தித் தொடர்பாளர், “அடுத்த சில நிமிடங்களில் அல்-ஷிஃபா மருத்துவமனையில் தாக்குதல் நடத்தப் போகிறோம் என இஸ்ரேல் தெரிவித்தது” என கூறியதாக அல்-ஜசீரா செய்தி வெளியிட்டது.
காஸா அதிகாரிகள் தாக்குதல் குறித்து செஞ்சிலுவை சங்கத்தை எச்சரித்ததாக அஷ்ரஃப் அல்-கித்ரா தெரிவித்தார்.
மருத்துவமனையில் நிலைமை மோசமாகி வருவதாக உலக சுகாதார நிறுவனம் திங்கள்கிழமை எச்சரித்தது. சுமார் 200 உடல்கள் புதைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்தன.
மின் இணைப்பு துண்டிப்பு காரணமாக மருத்துவமனையில் அத்தியாவசிய மருத்துவ கருவிகள் செயல்படவில்லை என்று அதன் இயக்குநர் தெரிவித்தார்.
மின்சாரம் இல்லாததால் பல குறைமாத குழந்தைகளுக்கும், டயாலிசிஸ் தேவைப்படும் 45 சிறுநீரக நோயாளிகளுக்கும் முறையான சிகிச்சை வழங்க இயலவில்லை என உலக சுகாதார நிறுவன செய்தித் தொடர்பாளர் திங்கள்கிழமை தெரிவித்தார்.
அமெரிக்க உளவுத்துறை கொடுத்த தகவல்
“ஒரு மருத்துவமனையை வான்வழியாக தாக்குவதை நாங்கள் ஆதரிக்கவில்லை. எதிர்த்து போராட முடியாத, உடல் நலம் குன்றிய, அப்பாவி மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்படுவதையும் நாங்கள் விரும்பவில்லை.” என்று வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு குழு செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
கடந்த செவ்வாய்கிழமை, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், மருத்துவமனைகள் மற்றும் நோயாளிகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்ததை அவர் நினைவு கூறினார்.
மறுபுறம், அமெரிக்க அதிபரும் இஸ்ரேல் பிரதமரும் தொலைபேசியில் பேசியுள்ளனர்.
இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமெரிக்கர்கள், பல குழந்தைகள் உட்பட ஹமாஸால் கடத்தப்பட்ட பிணை கைதிகளை விடுவிப்பது குறித்து இரு தலைவர்களும் விரிவாக பேசினர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அல்-ஷிஃபா மருத்துவமனையின் கீழ் ஹமாஸ் ஆயுத தளவாடம் இருப்பதாக தனது உளவுத்துறை தெரிவித்துள்ளதாக அமெரிக்கா முதல் முறையாக அறிவித்தது. அமெரிக்கா அறிவித்த அடுத்த சில மணி நேரங்களில், மருத்துவமனையின் உள்ளே இஸ்ரேல் ராணுவத்தினர் நுழைந்தனர்.
மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு அமெரிக்க அதிபரே “முழு பொறுப்பு” என்றும் இஸ்ரேலுடன் இந்த தாக்குதலில் அமெரிக்கா நிற்கிறது என ஹமாஸ் குற்றம் சாட்டியுள்ளது.
அமெரிக்க உளவுத்துறையின் அறிக்கை, மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதலை நடத்த அனுமதி அளித்துள்ளது என்று ஹமாஸ் கூறியுள்ளது.
மயானமாகி விட்ட மருத்துவமனை
மருத்துவமனையின் கீழே உள்ள சுரங்கங்களில் ஹமாஸ் இயங்கி வருவதாக இஸ்ரேல் கூறுகிறது. ஆனால் ஹமாஸ் இதனை மறுத்துள்ளது.
மருத்துவமனையை விட்டு வெளியே சென்றால் படுகாயம் அல்லது மரணம் ஏற்படுவதற்கான அபாயம் உள்ளது என மருத்துவமனை ஊழியர் கூறுகிறார்.
“தொடர் துப்பாக்கி சூடு மற்றும் குண்டு வீச்சுகள் மருத்துவமனையில் ஏற்கெனவே உள்ள அவசர நிலையை மேலும் மோசமாக்கியுள்ளது” என உலக சுகாதார நிறுவன இயக்குநர் டெட்ரோஸ் அதனோம் கெப்ரியெசுஸ் கூறியுள்ளார்.
உணவு மற்றும் ஜெனரேட்டர்களை இயக்க எரிபொருள் ஆகியவை தீர்ந்து விட்டதாக பல்வேறு ஆதாரங்களிலிருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன. சில நேரங்களில் சூரிய சக்தி பயன்படுத்தப்படுகிறது.
உலக சுகாதார நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கிறிஸ்டியன் லிண்ட்மெயர், “மருத்துவமனையை சுற்றி தகனம் செய்யக் கூட எடுத்து செல்லப்படாத கேட்பாரற்று பிணங்கள் கிடக்கின்றன” என்று திங்கள்கிழமை கூறியிருந்தார்.
“மருத்துவமனை, மருத்துவமனை போல் செயல்படவில்லை, கிட்டத்தட்ட மயானம் ஆகிவிட்டது” என்றார் .
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)