You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சாதி குறிப்பிட்டு சம்மன்: சேலம் விவசாயிகளுக்கு அமலாக்கத் துறை அலுவலகத்தில் நடந்தது என்ன? பிபிசி கள ஆய்வு
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு விவசாயிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜராகும்படி கூறிய விவகாரம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தின் பின்னணியில் பா.ஜ.க. பிரமுகர் இருப்பதாக குற்றம்சாட்டுகிறார்கள் விவசாயிகள். இந்த விவகாரத்தில் உண்மையில் என்ன நடந்தது?
சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவில் கல்வராயன் மலைகளை ஒட்டி அமைந்திருக்கிறது ராமநாயக்கன் பாளையம் கிராமம். இந்த ராமநாயக்கன்பாளயத்தில் வசிக்கும் சி. கண்ணய்யன் (வயது 70), கிருஷ்ணன் (வயது 67) ஆகிய இரண்டு பேரும் சகோதரர்கள். இதில் கண்ணய்யனுக்கு மட்டும் 4 குழந்தைகள் இருக்கிறார்கள். நான்கு பேரும் வேறு ஊர்களில் வேலைபார்க்கும் நிலையில், சகோதரர்கள் இருவரும் ராமநாயக்கன் பாளையத்தில் உள்ள தங்கள் நிலத்திலேயே வீடு கட்டி வசித்து வருகின்றனர்.
இங்கு அவர்களுக்கு ஆறரை ஏக்கர் நிலம் இருக்கிறது. அந்த நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் இந்த இரு விவசாயிகளும் சென்னையில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதையடுத்து, இருவரும் அங்கு ஆஜராகிவந்துள்ளனர்.
விவசாயிகள் இருவருக்கு கறுப்புப் பணத்தை வெள்ளையாக்குவதைத் தடுக்கும் சட்டத்தின் (PMLA) கீழ் விசாரணைக்கு ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டதும், அந்த நோட்டீஸ் அனுப்பப்பட்ட உறையில், பட்டியலினத்தவரான இவர்களது ஜாதி குறிப்பிடப்பட்டதும்தான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியது எதற்காக?
கடந்த 2017ஆம் ஆண்டில் இரண்டு காட்டெருமைகள் இந்தச் சகோதரர்களின் நிலத்தில் இறந்துகிடந்தன. தன் நிலத்திற்கு அருகில் உள்ளவர் நிலத்தில் போடப்பட்டிருந்த முள்வேலியில் சிக்கித்தான் எருமைகள் இருந்ததாக கிருஷ்ணன் கூறுகிறார். இந்த எருமைகள் இரண்டையும் அவர் தனது நிலத்திலேயே புதைத்துவிட்டார். சில வாரங்களுக்குப் பிறகு, இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்துவந்த வனத் துறையினர் அவற்றைத் தோண்டியெடுத்தனர்.
அவை இரண்டும் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக கண்ணய்யன், கிருஷ்ணன் ஆகிய இருவர் மீதும் 1972ஆம் ஆண்டின் வன உயரின பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 9, பிரிவு 39, பிரிவு 50, பிரிவு 51 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். சில நாட்கள் சிறையில் இருந்த பிறகு, இருவரும் ஜாமீனில் வெளிவந்தனர்.
இந்த வழக்கு சேலம் மாவட்ட நடுவர் நீதிமன்றம் -2ல் நடந்தது. அந்த வழக்கில் இவர்கள் இருவர் மீதான குற்றச்சாட்டுகளும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படாததால் இருவரும் விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில்தான் 2023ஆம் ஆண்டு ஜூன் 26ஆம் தேதி சென்னையில் உள்ள அமலாக்கத் துறையின் துணை இயக்குநர் ரிதேஷ் குமாரின் பெயரில் இந்த இரு விவசாயிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அந்த நோட்டீஸில், 2002ஆம் ஆண்டின் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்குவதைத் தடுக்கும் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் அந்த நோட்டீஸ் அனுப்பப்படுவதாகவும் இந்த இரு விவசாயிகளும் அவரது குடும்பத்தோடு, ஆதார் அட்டை, நிலவுடமை விவரங்கள், வங்கி விவரங்களோடு சென்னையில் உள்ள அமலாக்கத் துறையின் அலுவலகத்தில் ஜூலை 5ஆம் தேதி ஆஜராக வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகிவிடலாம் என இவர்களது வழக்கறிஞர் அரங்க. செல்லதுரை கூறியதால், அனைவரும் ஜூலை ஐந்தாம் தேதியன்று சென்னை வந்தடைந்தனர். அவர்களுடன் சென்னையில் வழக்கறிஞர் பிரவீணா என்பவரும் இணைந்துகொண்டார்.
அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடந்தது என்ன?
கண்ணய்யன், கிருஷ்ணன், விவசாயிகளுக்கு நெருக்கமானவரான கண்ணன், வழக்கறிஞர் அரங்க. செல்லதுரை, வழக்கறிஞர் பிரவீணா ஆகியோர் காலை ஒன்பதரை மணியளவில் அமலாக்கத் துறை அனுப்பிய நோட்டீஸோடு அந்த அலுவலகத்தைச் சென்றடைந்திருக்கின்றனர். அமலாக்கத் துறை அலுவலகத்தில் என்ன நடந்தது என விவரிக்கிறார் விவசாயிகளுடன் சென்ற வழக்கறிஞரான அரங்க. செல்லதுரை.
"நாங்கள் ஒன்பதரை மணியளவில் அங்கு சென்று அமர்ந்ததும் அதிகாரிகள் ஒவ்வொருவராக அலுவலகத்திற்கு வந்தனர். பிறகு நாங்கள் அங்கிருந்தவர்களிடம் நாங்கள் எதற்காக வந்திருக்கிறோம் என்பதைச் சொன்னோம். ஆனால் இந்த விவசாயிகளைப் பார்த்தவுடனேயே அங்கிருக்கும் துணை இயக்குநருக்கு பொறிதட்டியிருக்கிறது. ஏதோ தவறாக நடந்திருக்கிறது என உணர்ந்துவிட்டார். கொஞ்ச நேரத்தை கடத்திவிட்டு, அப்படியே அனுப்பிவிடலாம் என நினைத்திருக்கிறார்கள். ஆனால், நாங்கள் தொடர்ந்து இந்த நோட்டீஸிற்காக வந்திருக்கிறோம் என்பதைச் சொன்னோம். "
"முதலில் வழக்கறிஞர்களான எங்களையும் வைத்துக்கொண்டு அவர்களது ஆவணங்களைப் பரிசீலிக்க வேண்டும் என்று சொன்னோம். அதனை அவர்கள் ஏற்கவில்லை. தனியாகத்தான் விசாரிப்போம் என்றார்கள்."
"எங்களை விசாரித்துவிட்டு, அவர்களது முடிவு என்ன என்பதைச் சொல்லவேண்டுமென திரும்பத் திரும்பக் கேட்டோம். அவர்கள் முரண்பட்டே பேசினார்கள். இதையடுத்து வழக்கறிஞர் இருவரையுமாவது இணை இயக்குநரைச் சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று சொன்னோம். ஆனால், அது முடியாது என்று சொல்லிவிட்டார்கள். இது பிரச்சனையாகப் போய்க்கொண்டிருக்கவே, நாங்கள் 100ஆம் நம்பரை அழைத்து பிரச்சனையைச் சொன்னோம். நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திலிருந்து காவல்துறையினர் வந்தார்கள். அவர்களும் இது குறித்துக்கேட்டபோது, யார் வந்தாலும் வழக்கறிஞர்களை உள்ளே அனுமதிக்க முடியாது என்று கூறினார்கள்."
"இதற்குப் பிறகு டிஜிபி அலுவலகத்திற்குச் சென்றோம். அங்கே டிஜிபி இல்லை. ஆகவே வேறு ஒரு அதிகாரியிடம் நடந்தவற்றைச் சொல்லி, அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்குப் பதிவுசெய்யும்படி சொன்னோம். அவர்களிடம் புகாரை அளித்துவிட்டு வந்துவிட்டோம். அதற்குப் பிறகு, பெரிதாக எந்த நடவடிக்கையும் இல்லை. இப்போது ஐந்தாறு மாதங்களுக்குப் பிறகு திடீரென இந்த விவகாரம் பூதாகரமாகியிருக்கிறது" என்கிறார் அரங்க. செல்லதுரை.
அமலாக்கத் துறை நோட்டீஸ் விவகாரத்தில் பா.ஜ.க. பிரமுகரின் பங்கு என்ன?
கண்ணயன் - கிருஷ்ணன் ஆகியோரின் நிலத்திற்கு அருகில் உள்ள நிலம் ஜி. குணசேகரன் என்பவருக்குச் சொந்தமானது. இவர் சேலம் கிழக்கு மாவட்ட பா.ஜ.க. செயலராக இருந்து வருகிறார் (கிருஷ்ணன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருக்கிறார்). இந்த குணசேகரனுக்கும் கண்ணய்யன் - கிருஷ்ணன் ஆகிய இருவருக்கும் நீண்ட காலமாகவே பிரச்னைகள் இருந்து வருகின்றன. "பக்கத்து நிலத்துக்காரரான குணசேகரன் என்பவர், நீண்ட காலமாகவே எனக்குத் தொல்லைக் கொடுத்துவந்தார். என்னை பயிர் செய்யவிடாமல் செய்துவந்தார். இதன் காரணமாக, அவர் மீது ஆத்தூர் ஊரகக் காவல் நிலையத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பாக புகார் அளித்திருந்தேன். பிறகு மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் புகார் அளித்தேன். இதனால், அவரைக் கைதுசெய்தார்கள். பிறகு அவர் ஜாமீனில் வெளியில் வந்தார்.
ஜாமீனில் வெளியில் வந்த அவர், தன்னைச் சிறைக்கு அனுப்பியதால் மூன்று லட்ச ரூபாய் கொடுத்தால் மட்டுமே என்னுடைய வயலில் பயிர் செய்ய முடியும் என்று அச்சுறுத்தினார். இது அராஜகம் என்று சொன்னேன். இதையடுத்து, அவரிடம் நான் கடன் வாங்கியதாக போலியாக பத்திரம் ஒன்றை உருவாக்கினார். இதையடுத்து ஆத்தூரில் வழக்குப் பதிவுசெய்தேன். இந்த வழக்கு நடந்துவருகிறது.
இந்த நிலையில்தான் குணசேகரனின் தூண்டுதலின் பேரில் அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியது" என்கிறார் கிருஷ்ணன்.
அவர்தான் தூண்டிவிட்டார் எனச் சொல்வது எப்படி என கிருஷ்ணனிடம் கேட்டபோது, "சம்மன் வந்த உறையில் 'பள்ளர்' என என்னுடைய ஜாதி குறிப்பிடப்பட்டிருந்தது. அது இவருக்குத்தான் தெரியும். தவிர, அவருக்கும் எனக்கும் நீண்ட காலமாகவே பிரச்சனைகள் இருக்கின்றன. ஆகவே இவர் தூண்டுதலில்தான் அது நடந்திருக்க வேண்டும்" என்கிறார் கிருஷ்ணன்.
குணசேகரன் தரப்பு சொல்வது என்ன?
கண்ணய்யன் - கிருஷ்ணன் தரப்பின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அவருக்கு அருகில் நிலத்தை வைத்துள்ள குணசேகரன் மீதே சாட்டப்பட்டிருக்கும் நிலையில், குற்றச்சாட்டுகளை மறுக்கிறார் குணசேகரன்.
"ஆரம்பத்தில் கண்ணய்யன் - கிருஷ்ணன் குடும்பத்தினர் எங்களுக்கு நெருக்கமானவர்களாகவே இருந்தனர். நாங்கள் இங்கே நிலத்தை வாங்க விரும்பியபோது, இந்த நிலத்தை அடையாளம் காட்டியவர்களே அவர்கள்தான். அதனால், நெருக்கமாகவே பழகிவந்தோம். கிருஷ்ணனின் நிலத்திற்கு அருகில் ஸ்ரீரங்கன் என்பவரது நிலம் இருக்கிறது. அவர் சிபிஎம்மைச் சேர்ந்தவர். கிருஷ்ணன் தரப்பிற்கும் ஸ்ரீரங்கன் தரப்பிற்கும் ஏற்பட்ட மோதலில் ஸ்ரீரங்கன் கொல்லப்பட்டார். அதில் கிருஷ்ணன், கண்ணய்யன் உள்ளிட்டோர் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டுவிட்டனர்." என்கிறார் குணசேகரன்.
"இதற்குப் பிறகு 90களின் ஆரம்பத்தில், ஸ்ரீரங்கன் வசம் இருந்த நிலத்தை கிருஷ்ணன் - கண்ணயன் தரப்பு எடுத்துக்கொள்வது என்றும் அதற்குப் பதிலாக 90 ஆயிரம் ரூபாயை ஸ்ரீ ரங்கனின் மனைவிக்குக் கொடுத்துவிடுவது என்றும் முடிவானது. அப்போது அந்த அளவு பணம் அவர்களிடம் இல்லை. இதனால், என் தாயார் இவர்களுக்கு 90 ஆயிரம் ரூபாயை கடனாகக் கொடுத்தார். அதில் 30 ஆயிரம் ரூபாய்க்கு வட்டி இல்லை. மீதமுள்ள 60 ஆயிரம் ரூபாய்க்கு வங்கி அளவுக்கு வட்டி அளிக்க வேண்டும். ஆனால், இந்தக் கடன் பத்திரத்தை பதிவுசெய்யவில்லை. இந்த 90 ஆயிரம் ரூபாயை கொடுத்து, கண்ணய்யனின் மனைவி பெயரில் நிலம் மாற்றிக்கொள்ளப்பட்டது."
"இந்த நிலையில், எனக்கும் இந்தப் பகுதியைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி ஒருவருக்கும் சில வருடங்களுக்கு முன்பு பிரச்சனை ஏற்பட்டது. அப்போது இதுபோல பதிவுசெய்யாத கடன் பத்திரம் இருப்பதை அறிந்த காவல்துறையினர், அந்த நிலத்தை கேட்கும்படி கிருஷ்ணனைத் தூண்டிவிட்டனர். இதையடுத்துத்தான் எனக்கும் அவர் தரப்புக்கும் பிரச்சனை ஏற்பட்டது. இந்த நில விவகாரம் இன்னமும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது."
"இந்த நிலையில்தான் இவரது நிலத்தில் எருமைகள் மின்சாரம் தாக்கி இறந்தன. அதனை இவர்கள் புதைத்துவிட்டார்கள். இதனை வனத்துறைக்கு யாரோ சொல்லிவிட அவர்கள் கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து வந்தே எருமைகளைத் தோண்டியெடுத்து வழக்குப் பதிவுசெய்தார்கள். இந்த வழக்கை அடிப்படையாக வைத்து அமலாக்கத்துறை அவர்களுக்கு சம்மன் அனுப்பியிருக்கிறது."
"இந்த நிலையில், இந்த சம்மன் அனுப்பச் சொல்ல நான் தூண்டியதாகச் சொல்கிறார்கள். நான் பத்தாவது படித்திருக்கிறேன். ஆங்கிலம் எழுதப்படிக்கக்கூட வராது, நான் தூண்டிவிட்டால் அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்புவார்களா என்பதை நீங்கள் முடிவுசெய்துகொள்ளுங்கள்" என்கிறார்.
இந்த விவகாரத்தில், விவசாயிகளுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது ஒரு பிரச்னை என்றால், அந்த சம்மன் வந்த கவரில் இவர்களின் ஜாதி குறிப்பிடப்பட்டிருந்தது மற்றொரு பிரச்சனை.
அமலாக்கத் துறையின் விசாரணைக்குச் சென்றபோது எனது ஜாதி குறித்து எப்படி எழுதலாம் எனத் தான் கேள்வியெழுப்பியதாகவும் அதற்கு அமலாக்கத் துறை அதிகாரிகள் மழுப்பலாகப் பதிலளித்ததாகவும் சொல்கிறார் கிருஷ்ணன்.
வனத்துறையிடம் இது குறித்துக்கேட்டபோது, அதிகாரபூர்வமாகப் பேச மறுத்துவிட்டனர். "இந்த வழக்கின் விவரங்களைக் கேட்டு சில ஆண்டுகளுக்கு முன்பாக அமலாக்கத் துறையிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. ஆனால், அந்த சமயத்திலேயே விவசாயிகள் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுவிட்டதால், நாங்கள் அந்தக் கடிதத்திற்கு பதில் அளிக்கவில்லை. இந்த விவகாரத்திற்கும் எங்களுக்கும் வேறு எந்தத் தொடர்பும் இல்லை" என்கிறார்கள் வனத்துறை அதிகாரிகள். இந்த வழக்கின் ஆவணங்களில் விவசாயிகளின் ஜாதி எங்கேயாவது குறிப்பிடப்பட்டிருக்கலாம், ஆனால், அது பற்றித் தெளிவாகத் தெரியவில்லை என்கிறார்கள் அவர்கள்.
இது தொடர்பாக அமலாக்கத் துறை அதிகாரபூர்வமாக எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை. வேறு சில ஊடகங்களில் அதிகாரபூர்வமற்ற முறையில் வந்த தகவல்களின்படி, "வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் 9 மற்றும் 51வது பிரிவுகளின் கீழ் பதிவுசெய்யப்படும் குற்றங்களை நீதிமன்ற ஆணைகளின்படி விசாரித்து வருகிறோம். அப்படித்தான் இந்த வழக்கிலும் சம்மன்கள் அனுப்பப்பட்டன. ஜாதியைப் பொறுத்தவரை, காவல்துறையின் ஆவணங்களில் இருக்கும் தகவல்களே அப்படியே எழுதப்பட்டு அனுப்பப்படுகின்றன. அப்படித்தான் இதில் ஜாதி இடம்பெற்றிருக்க வேண்டும்" என்று கூறப்பட்டிருக்கிறது.
ஆறு மாதங்களுக்கு முன்பாக விவசாயிகளுக்கு அமலாக்கத்துறையால் சம்மன் அனுப்பப்பட்ட நிகழ்வு இப்போது எப்படி பூதாகரமானது? "சமீபத்தில் எங்கள் வழக்கறிஞர் பிரவீணா ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இதைக் குறிப்பிட்டார். அதை வைத்துத்தான் இப்போது எல்லோரும் இந்த விவகாரத்தை மீண்டும் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்" என்கிறார் கிருஷ்ணன். ஒரு யுடியூபில் இது குறித்து வந்த பிறகு மீண்டும் இந்த விவகாரம் பேசு பொருளானதாகச் சொல்கிறார் வழக்கறிஞர் அரங்க. செல்லதுரை.
தற்போது இந்த விவசாயிகள் மீதான வழக்கை கைவிட அமலாக்கத்துறை முடிவுசெய்திருப்பதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)