அணுகுண்டு கையிருப்பை இரட்டிப்பாக்க சீனா அவசரம் காட்டுவது ஏன்?

சீனா அணுஆயுதம்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், மாட் மர்ஃபி
    • பதவி, பிபிசி செய்தி, வாஷிங்டன்

சீனா கடந்த ஆண்டு அதன் அணு ஆயுத இருப்புகளை கணிசமாக விரிவுபடுத்தியுள்ளது. மேலும் தற்போது சுமார் 500 செயல்பாட்டு அணு ஆயுதங்களை வைத்திருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்க பாதுகாப்புத் துறையின் தலைமையகமான பென்டகன் வெளியிட்ட ஆண்டு அறிக்கையில், பெய்ஜிங் 2030 ஆம் ஆண்டுக்குள் அதன் ஆயுத இருப்புகளை இரட்டிப்பாக்கி 1,000 அணுகுண்டுகளுக்கு மேல் வைத்திருக்கும் என நம்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் சீனா "முதலில் தாக்க மாட்டோம்" கொள்கையைத் தொடர்ந்து கடைப்பிடிப்பதாக அது கூறியது.

அறிக்கையில் ஆயுத இருப்புகளின் அதிகரிப்பு எதிர்பார்த்ததை விட அதிகமாக இருப்பதாகக் கூறப்பட்டாலும், சீனாவின் இருப்புகள் இன்னும் ரஷ்யா மற்றும் அமெரிக்காவின் இருப்புகளை விட குறைவாகவே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் (SIPRI) கூற்றுப்படி, ரஷ்யா சுமார் 5,889 போர் ஏவுகணைகள் கொண்ட அணு ஆயுத இருப்பை கொண்டுள்ளது, அதே நேரத்தில் அமெரிக்கா 5,244 அணு ஆயுதங்களை வைத்திருக்கிறது.

அதிகரிக்கும் சீனாவின் அணு ஆயுத இருப்பு

பட மூலாதாரம், Getty Images

2049க்குள் உலகத் தர ராணுவம்- சீனாவின் இலக்கு

2021ஆம் ஆண்டில் சீனா சுமார் 400 போர் ஏவுகணைகள் கொண்டிருப்பதாக பாதுகாப்புத் துறை மதிப்பிட்டுள்ளது.

"அவர்களின் [சீனா] இலக்கு என்னவாக இருந்ததோ அதிலிருந்து மிகப்பெரிய மாற்றம் இருப்பதாக குறிப்பிட முயற்சிக்கவில்லை... ஆனால் அவர்கள் அந்த முந்தைய கணிப்புகளை மீறும் வகையில் இருக்கிறார்கள்" என்று ஒரு மூத்த அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார். மேலும், இந்த பிரச்சினை "[அமெரிக்காவுக்கு]" பல கவலைகளை எழுப்புகிறது என்று கூறினார்.

2049 ஆம் ஆண்டுக்குள் சீனா ஒரு "உலகத் தரம் வாய்ந்த ராணுவத்தை" களமிறக்கும் என்று சீன திபர் ஷி ஜின்பிங் அறிவித்துள்ளார். அவர் 2012-ல் பதவியேற்றதில் இருந்து, நாட்டின் ஆயுதப் படைகளை நவீனமயமாக்க முயன்றுள்ளார்.

அதிகரிக்கும் சீனாவின் அணு ஆயுத இருப்பு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சீனா 'முதல் தாக்குதல் இல்லை' என்ற கொள்கையை கடைப்பிடிக்கிறது என அமெரிக்க அறிக்கை கூறுகிறது.

அமெரிக்க அதிகாரிகள், பெய்ஜிங் 2022 -ல் ஏவுகணை தளங்களின் மூன்று புதிய குழுக்களின் கட்டுமானத்தை முடித்திருக்கலாம் என்று கூறினர். இந்த தளங்களில் குறைந்தது 300 புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை (ICBM) கிடங்குகள் உள்ளன என்று அறிக்கை கூறுகிறது. இந்த ஏவுகணைகள் 5,500 கிமீ (3,400 மைல்கள்) க்கும் அதிகமான வரம்பைக் கொண்ட ஏவுகணைகள்.

மக்கள் விடுதலை ராணுவ ஏவுகணைப் படைகள், "மக்கள் சீனக் குடியரசு அமெரிக்க கண்டம், ஹவாய் மற்றும் அலாஸ்காவில் உள்ள இலக்குகளுக்கு எதிராக பாரம்பரிய தாக்குதல்களை அச்சுறுத்த அனுமதிக்கும்" ஏவுகணைகளை உருவாக்க முயன்று வருவதாக அமெரிக்க அறிக்கை கண்டறிந்தது.

அதிகரிக்கும் சீனாவின் அணு ஆயுத இருப்பு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சீனா எதிர்பார்த்ததை விட அதிகமாக ஆயுத இருப்பை கொண்டிருப்பதாக அமெரிக்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அணு ஆயுத இருப்புகளின் அதிகரிப்பு இருந்தபோதிலும், சீனா "எதிரியின் முதல் தாக்குதலை தடுப்பது, தடுப்பு தோல்வியுற்றால் 'எதிர் தாக்குதல்' கொள்கையைத் தொடர்ந்து கடைப்பிடிக்கிறது" என்று அறிக்கை கூறியது.

ஹென்றி பாய்ட் சர்வதேச மூலோபாய ஆய்வுகளுக்கான நிறுவனத்தின் மூத்த உறுப்பினரான ஹென்றி பாய்ட் பிபிசியிடம், இந்த அதிகரிப்பு விகிதம் "மிகவும் அதிகமானதாக" தெரியவில்லை என்று கூறினார்.

மேலும், சீனா தனது 1,000 அணு குண்டுகள் என்ற இலக்கை நோக்கி "மதிப்பிடப்பட்டதை விட சற்று வேகமாக நகர்கிறது" என்று அவர் ஒப்புக்கொண்டார்.

ஆசியா சமூக கொள்கை நிறுவனத்தின் மூத்த உறுப்பினரான லைல் மோரிஸ் பிபிசியிடம், ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் போன்ற வளர்ச்சிகள் சீனா தனது இரண்டாம் தாக்குதல் கொள்கையை மறுபரிசீலனை செய்ய வைக்கின்றன, இதனால் அதன் இருப்புகளை விரிவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது என்று கூறினார்.

அதிகரிக்கும் சீனாவின் அணு ஆயுத இருப்பு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2023க்குள் 1000 போர் ஏவுகணைகள் கொண்டிருக்க வேண்டும் என்ற இல்லை நோக்கி சீனா வேகமாக நகர்கிறது என அமெரிக்க அறிக்கை கூறுகிறது

தைவானை கைப்பற்ற சீனா திட்டம்

வியாழக்கிழமை பென்டகன் அறிக்கையில், பெய்ஜிங் சமீப மாதங்களில் தைவானுக்கு எதிராக "ராஜதந்திர, அரசியல் மற்றும் ராணுவ அழுத்தத்தை அதிகரித்துள்ளது" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் ஷி தனது பாதுகாப்புத் தலைவர்களுக்கு 2027 ஆம் ஆண்டுக்குள் தீவை வலுகட்டாயமாக மீண்டும் கைப்பற்றும் ராணுவ திறனை வளர்க்க உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது. தைவானின் வான்பரப்பில் அதிகரித்த விமானங்கள் மற்றும் அதன் நீர்நிலைகளைச் சுற்றியுள்ள தொடர் ராணுவ பயிற்சிகள் மூலம் தீவை நிலையற்றதாக்க உத்தரவிடப்பட்டுள்ளன, என பென்டகன் அறிக்கை மேலும் கூறுகிறது.

இந்த அறிக்கை சீனா-அமெரிக்க உறவுகளில் ஒரு சுணக்கம் இருக்கும் நிலையில் வருகிறது. புதன்கிழமை, வாஷிங்டன் சீன வான்படை விமானிகள் பசிபிக் பகுதியில் சர்வதேச வான்வெளியில் அமெரிக்க இராணுவ விமானங்களுக்கு எதிராக நூற்றுக்கணக்கான "கட்டாய மற்றும் ஆபத்தான" சூழ்ச்சிகளை நடத்தியதாகக் குற்றம் சாட்டியது. சூழ்ச்சிகளின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களையும் வெளியிட்ட பென்டகன், 2021-ம் ஆண்டு முதல் 180 சம்பவங்கள் நடந்துள்ளதாகக் கூறியது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)