You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கத்தார்: இஸ்ரேல் - ஹமாஸ் இடையே அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்த முடியாதது ஏன்?
- எழுதியவர், ஜெரிமி ஹோவெல்
- பதவி, பிபிசி உலக சேவை
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்யும் முயற்சிகளில் இருந்து விலகுவதாக கத்தார் அரசாங்கம் கூறியுள்ளது. பேச்சுவார்த்தைக்கு இருதரப்பும் தயாராக இல்லாததால் இம்முடிவை எடுத்துள்ளதாக கத்தார் தெரிவித்துள்ளது.
கத்தார் நாட்டில் உள்ள ஹமாஸ் அலுவலகத்தை மூடுவதற்கு அமெரிக்காவிடமிருந்து கத்தார் அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
கத்தார், ஒரு சிறிய பணக்கார நாடு. நாடுகளுக்கிடையே மத்தியஸ்தம் செய்பவராக, மத்திய கிழக்கில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியுள்ளது கத்தார் அரசு.
ஆனால், தற்போதைய இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சி கத்தாருக்கு அவ்வளவு எளிதாக இல்லை.
கத்தார் எப்படி மத்திய கிழக்கின் முக்கிய மத்தியஸ்தராக மாறியது?
கத்தார் பாரசீக வளைகுடாவில் 11,600 சதுர கிமீ பரப்பளவைக் கொண்ட ஒரு சிறிய நாடு. இந்நாடு அதிக அளவு இயற்கை எரிவாயு ஏற்றுமதியில் ஈடுபடுகின்றது. மேலும், கத்தார் நாட்டின் தனிநபர் வருமானம் உலகில் ஆறாவது இடத்தில் உள்ளது.
கத்தார் அரசாங்கம் சர்வதேச அளவில் சமாதானம் ஏற்படுத்தும் முயற்சிகளை தொடர்ந்து செய்து வருகின்றது.
கடந்த இருபது ஆண்டுகளாக மத்திய கிழக்கு, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவில் உள்ள தரப்புகளுக்கு இடையே பல போர் நிறுத்தங்கள் மற்றும் சமாதான ஒப்பந்தங்களுக்கு உதவி செய்துள்ளது.
நவம்பர் 2023 இல் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே தற்காலிக போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தையை கத்தார் நடத்திய போது, 240 பாலத்தீன கைதிகளுக்காக 105 இஸ்ரேலிய பணயக்கைதிகள் இரு தரப்புக்கும் இடையே மாற்றப்பட்டனர்.
கடந்த 2020 ஆம் ஆண்டில், ஆப்கானிஸ்தானில் இருபது ஆண்டுகளாக நீடித்த போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக தாலிபன் மற்றும் அமெரிக்க அரசுக்கு இடையே அமைதி உடன்படிக்கைக்கு கத்தார் உதவி செய்தது.
இதன் விளைவாக, அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் தங்கள் படைகளை ஆப்கானிஸ்தானில் இருந்து விலக்கிக் கொண்டனர். தலிபான்கள் நாட்டின் அதிகாரத்தை ஏற்றுக்கொண்டனர். போரும் முடிவுக்கு வந்தது. தாலிபன் அதிகாரத்தைக் கைப்பற்றியது.
மேலும், 2023 இல் அமெரிக்காவிற்கும் இரானுக்கும் இடையிலான கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்திலும் கத்தார் உதவி செய்தது.
அதே ஆண்டில் நடந்து கொண்டிருந்த யுக்ரேன் - ரஷ்ய மோதலின் போது யுக்ரேனிலிருந்து ரஷ்யாவிற்கு அழைத்துச் செல்லப்பட்ட யுக்ரேனிய குழந்தைகளைத் திரும்பக் கொண்டுவர ரஷ்யாவிற்கும் யுக்ரேனுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் கத்தார் தலையிட்டு உதவி செய்தது.
கத்தார் அரசு, கடந்த 2020 ஆம் ஆண்டில், சாட் அரசாங்கத்திற்கும் 40 எதிர்தரப்பு குழுக்களுக்கும் இடையில் போர்நிறுத்தத்துக்கு உதவியது.
மேலும், 2010 இல் சூடான் அரசாங்கத்திற்கும் மேற்கு மாகாண டார்பூரின் (Darfur) ஆயுதக் குழுக்களுக்கும் இடையேயான சமாதான ஒப்பந்தத்தை மேற்பார்வையிட்டது.
கத்தார் மத்தியஸ்தரானது ஏன் ?
தனது அரசியலமைப்புச் சட்டத்தில் அமைதி ஏற்படுத்துவது நாட்டின் பங்கு எனக் கத்தார் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
"சர்வதேச மோதல்களுக்கு அமைதியான தீர்வுகளை ஊக்குவிப்பதன் மூலம் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பு வலுப்படும். அக்கொள்கையின் அடிப்படையில் , தங்கள் நாட்டின் வெளியுறவுக் கொள்கையானது அமைந்துள்ளது" என கத்தார் அரசின் அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 7 கூறுகிறது.
மேலும், அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடாக கத்தார் உள்ளது. அதன் ராணுவத்திலுள்ள ஆயிரக்கணக்கானோருக்கு அல் உதெய்த் விமான தளத்தில் பயிற்சி நடத்த கத்தார் உதவுகிறது.
அதேசமயம், தாலிபன் மற்றும் ஹமாஸ் போன்ற குழுக்களையும் தனது நாட்டிற்குள் அலுவலகங்கள் அமைக்க கத்தார் அரசு அனுமதித்துள்ளது.
“ஒருவரோடு ஒருவர் நேரடியாகப் பேசிக்கொள்ளாத , அரசியல் நாடகத்தின் இடையே ஒரு பாலமாகச் செயல்பட, கத்தார் அரசு உதவுகிறது” என்று பிரிட்டனைச் சேர்ந்த ராயல் யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிட்யூட்டைச் சேர்ந்த டாக்டர் எச்.ஏ. ஹெல்லியர் கூறுகிறார்.
" தலிபான் மற்றும் ஹமாஸ் போன்ற குழுக்களை போர்ச்சூழலில் அணுகுவதற்கு கத்தார் அரசு நன்றாக உதவுகிறது. ஏனெனில் அவர்கள் கத்தாருடன் ஒருபோதும் மோதவில்லை," என்றும் அவர் கூறுகிறார்.
"அமெரிக்க ராணுவத்தின் இருப்பு காரணமாக, இந்த குழுக்களின் பிரதிநிதிகள் தோஹாவில் பாதுகாப்பாக உணர்கிறார்கள்.
கத்தார் அரசின் உதவியால் பிற நாடுகளின் படுகொலை முயற்சிகளில் இருந்து விடுபட்டு பாதுகாப்பாக பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்றும் அவர்கள் நினைக்கிறார்கள்." என்றும் அவர் கூறினார்.
"சர்வதேசப் பிரச்னைகளைத் தீர்க்கும் சக்தியாகக் கருதப்படுவது கத்தார் நாட்டின் பிம்பங்களுள் ஒன்று” என பிரிட்டனைத் தளமாகக் கொண்ட சர்வதேச விவகாரங்கள் சிந்தனைக் குழுவான சதாம் ஹவுஸைச் சார்ந்த டாக்டர் சனம் கூறுகிறார்.
"கத்தார் சமாதானத் தூதுவராக இருப்பது அமெரிக்காவிற்கு பயனுள்ளதாக இருக்கும். அதனால் மேற்குலக நாடுகளில் தனக்கென செல்வாக்கையும் கத்தார் அரசு பெற முடியும். அது மட்டுமின்றி, கத்தார் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை பாதுகாப்பானதாகவும் நிலையானதாகவும் உருவாக்குகிறது."
அமைதிக்கான பேச்சுவார்த்தை நடவடிக்கைகளை மேற்பார்வையிடுவதில் உயர் பயிற்சி பெற்ற தூதர்கள் குழு ஒன்று கத்தாரில் உள்ளது என்கிறார் டாக்டர் வகீல்.
ஆனாலும், போர் இடைநிறுத்தம் செய்ய நாடுகளுக்கிடையில் பெரிய அளவில் உதவிசெய்யவோ, நிரந்தர போர் நிறுத்தங்களுக்கு உறுதியளிக்கவோ, கத்தார் அரசால் முடியவில்லை.
“போர்ச் சூழலில், இரு தரப்பினரும் தங்களது வன்முறை நடவடிக்கைகளை முடித்துக் கொண்டு, அமைதி விரும்பும் நேரத்தில், போர் மோதல்களின் முடிவைக் கண்காணிப்பதில் கத்தார் அரசாங்கம் மிகச் சிறந்தது. ஆனால், போரை முடிவுக்குக் கொண்டு வர வேறு வழியும் அவர்களிடம் இல்லை” என்று டாக்டர் வகீல் கூறுகிறார்.
இஸ்ரேலுக்கும் காஸாவிற்கும் இடையே மத்தியஸ்தம் செய்வது கத்தாருக்கு ஏன் கடினமாக உள்ளது?
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் இனி நாங்கள் மத்தியஸ்தம் செய்யப் போவதில்லை என கத்தார் அரசாங்கம் கூறியுள்ளது.
எனினும், தோஹாவில் உள்ள ஹமாஸ் அலுவலகத்தை மூடப்போவதாக வெளியான செய்திகளை அது நிராகரித்துள்ளது.
கத்தார் அரசாங்கம் ஹமாஸுக்கு சாதகமாக இருப்பதாகவும் பயங்கரவாதக் குழுவை வளர்ப்பதாகவும் கூறி கத்தார் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
"2012 இல் சிரிய அரசாங்கத்துடன் ஹமாஸ் தலைவர்கள் முரண்பட்ட பிறகு டமாஸ்கஸில் இருந்த ஹமாஸ் அலுவலகத்தை மாற்றிக்கொள்ளுமாறு கத்தார் அரசாங்கம் ஹமாஸுக்கு தெரிவித்தது. ஒருவேளை அவர்கள் அமெரிக்காவுடனும் இஸ்ரேலுடனும் ஒருங்கிணைத்து அதைச் செய்திருக்கலாம்" என்று டாக்டர் ஹெல்லியர் கூறுகிறார்.
முந்தைய மோதல்களுக்குப் பிறகு இஸ்ரேல் மற்றும் ஹமாஸின் போர் நிறுத்தத்துக்கு கத்தார் அரசு உதவியது என்றும் அவர் கூறுகிறார்.
“இஸ்ரேல் அரசாங்கம் அமைதியை விரும்புவதை விட அதன் பாதுகாப்புக்கு உத்தரவாதம் பெறவே விரும்புகிறது. போரைத் தொடர்வது அதன் நோக்கங்களை அடைய மட்டுமே உதவும். ஆனால் மறுபுறம் ஹமாஸ் அமைதியாக வாழ விரும்புகிறது. இப்படி இரண்டு தரப்பும் வேறு விதமாக தங்களது போர் நிறுத்தக் கொள்கையுடன் கத்தாரை அணுகியது” என்று டாக்டர் வகீல் கூறுகிறார்.
கத்தாரை விட்டு வெளியேறி துருக்கி அல்லது இரானுக்கு,தனது அலுவலகத்தை ஹமாஸ் மாற்றலாம் என்றும் தகவல்கள் உள்ளன.
ஆனால் ஹமாஸ் தலைவர்கள் தங்குவதற்கு பாதுகாப்பான இடமாக கத்தார் இருக்கும். "ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே , தோஹாவை விட்டு இரானுக்குச் சென்றபோது, அவர் இஸ்ரேலியப் படைகளால் விரைவாகக் கண்டுபிடிக்கப்பட்டார்," என்று டாக்டர் ஹெல்லியர் ஒரு சம்பவத்தை நினைவு கூறுகின்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)