You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விண்வெளியில் ஆரோக்கியமாக இருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? குளிப்பது, துணி துவைப்பது எப்படி?
- எழுதியவர், க.சுபகுணம்
- பதவி, பிபிசி தமிழ்
கடந்த ஆண்டு ஜூன் மாதம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்ற விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் இருவரும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 2025 வரையிலும் அங்கேயே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இந்நிலையில், கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேலாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் சுனிதா வில்லியம்ஸின் உடல்நிலை குறித்துக் கவலைகள் எழுப்பப்பட்டன.
ஆனால், தனது உடல்நிலை குறித்துக் கவலைப்பட வேண்டியதில்லை எனவும், தனது தோற்றத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கு ‘திரவ மாற்றமே’ காரணம் எனவும் சுனிதா வில்லியம்ஸ் கடந்த செவ்வாயன்று கூறியுள்ளார்.
கடந்த வாரம் நாசா வெளியிட்ட சுனிதா வில்லியம்ஸின் புகைப்படத்தில், அவரது முகம் சற்றுப் பெரிதாகவும், மெல்லிய உடலுடனும் தோன்றிய நிலையில், அவரது உடல்நிலை குறித்துக் கவலைகள் எழுப்பப்பட்டன.
இதைத் தொடர்ந்து, கடந்த நவம்பர் 12ஆம் தேதியன்று நியூ இங்கிலாந்து ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் கிளப்ஹவுஸ் கிட்ஸ் ஷோ என்ற நிகழ்ச்சியில் பேசிய விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ், அந்தக் கவலைகள் அவசியமற்றவை எனவும், தான் ஆரோக்கியமாக இருப்பதாகவும் கூறினார்.
அப்போது, “என் உடல்நிலை குறித்து வதந்திகள் பரவி வருவது குறித்துக் கேள்விப்பட்டேன். ஆனால், நான் இங்கு ஆரோக்கியமாக இருக்கிறேன். என் உடல் எடை, நான் இங்கு வந்தபோது எப்படி இருந்ததோ, அதே அளவில்தான் இருக்கிறது. விண்வெளியில், உடலிலுள்ள திரவங்கள் இடம்பெயர்வதே அப்படித் தோற்றமளித்ததற்குக் காரணம்,” என்று கூறினார் சுனிதா வில்லியம்ஸ்.
விண்வெளியில் நீண்டகாலம் இருப்பதால் மனித உடலில் பக்க விளைவுகள் ஏற்படும் என்பதை நாம் முன்கூட்டியே அறிந்துள்ளோம். ஆனால், அந்தப் பக்க விளைவுகளைச் சமாளிக்க, ஆரோக்கியத்தைப் பேண, விண்வெளி வீரர்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள்?
நீண்டகாலம் விண்வெளியில் இருந்தால் என்ன ஆகும்?
விண்வெளியில் ஈர்ப்பு விசையில் ஏற்படும் மாற்றங்களால், ஒரு மாதத்திற்கு 1% வரை எலும்பின் அடர்த்தியை, விண்வெளி வீரர்கள் இழக்க நேரிடும். இது ஆஸ்டியோபோரோசிஸ் தொடர்பான எலும்பு முறிவுகள் மற்றும் நீண்டகால உடல்நலப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.
விண்வெளியில் ஈர்ப்புவிசை இருக்காது என்பதால், உடலிலுள்ள திரவங்கள் மேல்நோக்கி இடம் பெயரலாம். இதைத்தான் சுனிதா வில்லியம்ஸ் தனது உடல் தோற்றம் வேறுபட்டிருப்பதற்குக் காரணமாகக் கூறினார்.
இதுகுறித்து விளக்கிய மொஹாலி இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன், “பூமியில் இருக்கும்போது, உடலிலுள்ள திரவங்கள் ஈர்ப்பு விசையால் கீழ்நோக்கித் தள்ளப்படும். ஆனால், விண்வெளியில் அத்தகைய ஈர்ப்பு விசை இல்லாத காரணத்தால், உடலிலுள்ள திரவங்கள் மேல்நோக்கிச் செல்லும். அதன் காரணமாகவே, முகம் மற்றும் கை, கால்களின் அளவு வேறுபட்டுத் தெரிகிறது,” என்று விளக்கினார்.
நீண்டகாலம் தனிமையிலும், வேறு எங்கும் செல்ல முடியாமல் ஒரே இடத்திலும் வாழ்வதால், உளவியல் சிக்கல்கள் ஏற்படக்கூடும். இயற்கையான உடல் கடிகாரம் இல்லாததால், மனச்சோர்வு மற்றும் தூக்கப் பிரச்னைகள் ஏற்படலாம்.
விண்வெளி வீரர்களின் ஒரு நாள் வாழ்க்கை எப்படி இருக்கும்?
கடந்த 12ஆம் தேதியன்று பேசிய சுனிதா வில்லியம்ஸ், தான் பூமியில் இருந்து சுமார் 250 மைல் (402கி.மீ) தொலைவில் இருப்பதாகக் கூறினார்.
இந்நிலையில், பூமியில் இருந்து 400கி.மீ தொலைவில் இருக்கும் விண்வெளி வீரர்கள், சர்வதேச விண்வெளி நிலையத்தில் செய்ய வேண்டிய அன்றாடப் பணிகள் மற்றும் அவர்களின் வாழ்க்கை முறை குறித்து முன்பே திட்டமிடப்பட்டுள்ளன என்று முன்னதாக பிபிசி-யிடம் குறிப்பிட்டுள்ளார், கடந்த 2009 மற்றும் 2011இல் சுமார் 104 நாட்களை விண்வெளியில் கழித்த விண்வெளி வீரரான நிக்கோல் ஸ்காட்.
விண்வெளி வீரர்களுக்கென பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருக்கும், 'குறுகிய, ஆனால் சொகுசான' அறையிலிருந்து தினசரி கண் விழிக்கும் அவர்கள், தங்களது அன்றாடப் பணிகளை மேற்கொள்வார்கள். சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் விண்வெளி வீரர்களின் வியர்வை, சிறுநீர் ஆகியவை மறுசுழற்சி செய்யப்படும்.
அவர்கள், பக்கிங்ஹாம் அரண்மனை அளவுக்குப் பெரிதாக இருக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்தைப் பராமரிப்பது, அங்கு அறிவியல் பரிசோதனைகளை மேற்கொள்வது போன்ற பணிகளை மேற்கொள்வார்கள்.
விண்வெளி வீரர்கள், தங்கள் அன்றாடப் பணிகளுக்கு இடையே கட்டாயமாக இரண்டு மணிநேர உடற்பயிற்சிகளைச் செய்தாக வேண்டும்.
“இந்த உடற்பயிற்சிகள் என்பவை, ஒருவர் சுய விருப்பத்தின் பெயரில் செய்வதல்ல. விண்வெளியில் இருக்கும் வீரர்கள் அனைவரும் தங்கள் தினசரிப் பணிகளின் ஒரு பகுதியாக, இதையும் கட்டாயம் செய்தாக வேண்டும்,” என்று கூறுகிறார் முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன்.
இதில், மூன்று உடற்பயிற்சி இயந்திரங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அவை, ஈர்ப்பு விசையற்ற நிலையில் வாழ்வதால் எலும்பு அடர்த்திக் குறைபாடு ஏற்படுவதைத் தவிர்க்க உதவுகின்றன. இதில், ஏ.ஆர்.இ.டி (ARED – Advanced Resistive Exercise Device) எனப்படும் உடற்பயிற்சி இயந்திரம் முக்கியப் பங்கு வகிக்கிறது.
அதில் செய்யப்படும் உடற்பயிற்சிகள், விண்வெளி வீரர்களின் உடலில் எலும்பு அடர்த்தி மற்றும் தசை அடர்த்தி குறைவதைத் தடுக்க உதவுகின்றன. இதுபோக, டிரெட்மில், சைக்கிளிங் போன்ற இரண்டு உடற்பயிற்சி உபகரணங்களும் இருக்கும்.
“பூமியில் ஒருவர் எந்தவித வேலையும் செய்யாமலே இருந்தாலும், அவரது உடல் தசைகள் தொடர்ச்சியாகச் செயல்பட்டுக் கொண்டே இருக்கும். ஆனால், ஈர்ப்பு விசையற்ற விண்வெளியில் நிலைமை அப்படியில்லை. ஆகவே, தசைகள் செயல்பாடற்று இருப்பதைத் தவிர்க்கத் தொடர்ச்சியாக உடற்பயிற்சிகள் வழங்கப்படுகின்றன,” என்று கூறினார் முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன்.
விண்வெளி வீரர்களுக்கு உரிய பயிற்சிகள் அளிக்கப்பட்டிருந்தாலும், அவர்களது உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்காக, அவர்கள் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்படுவார்கள் எனவும், அவர்களது உடலில் இதயம், ரத்தம், மூளை ஆகியவற்றின் செயல்பாடு தொடர்ந்து கண்காணிக்கப்படும் எனவும் கூறுகிறார் இஸ்ரோவின் முன்னாள் தலைவர் சிவன்.
விண்வெளி வீரர்கள் எதிர்கொள்ளும் உளவியல் சிக்கல்கள்
கோவிட் ஊரடங்கின்போது, வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டபோது, பொதுமக்களில் பலரும் மன அழுத்தம், மன உளைச்சல் போன்ற பல்வேறு உளவியல் சிக்கல்களை எதிர்கொண்டனர்.
இந்நிலையில், பூமியில் இருந்து வெகு தொலைவில், நினைத்த நேரத்தில் வெளியில் வந்து காற்று வாங்கக்கூட முடியாத சூழலில் அடைபட்டுக் கிடக்கும் விண்வெளி வீரர்களின் மனநிலை எப்படியிருக்கும்?
அவர்கள் அந்தச் சூழலுக்கு ஏற்ற பயிற்சிகளை எடுத்துக்கொண்ட பிறகுதான் விண்வெளிக்குச் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள் எனக் கூறுகிறார் இஸ்ரோவின் முன்னாள் தலைவர் சிவன்.
மேலும், அவர்களது மன ஆரோக்கியத்தைப் பேணுவதற்காக, அவர்களுடன் பூமியில் இருந்து ஒருவர் தொடர்ச்சியாகத் தொடர்புகொண்டபடி இருப்பார் எனவும் அவர் தெரிவித்தார்.
உதாரணத்திற்கு, சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் விண்வெளி வீரருடன் கட்டுப்பாட்டாளர் ஒருவர் தொடர்பில் இருப்பார் எனக் கூறும் முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன், அதனுடன் கூடவே “அவருடைய குடும்பத்தினருடன் பேசுவதற்கான வாய்ப்புகளும் தொடர்ச்சியாக ஏற்படுத்தித் தரப்படும்,” என்று தெரிவித்தார்.
இத்தகைய உரையாடல்கள், விண்வெளி வீரர்களின் மனநலனைப் பேணுவதில் முக்கியப் பங்கு வகிப்பதாகக் கூறுகிறார் வெங்கடேஸ்வரன்.
சமீபத்தில் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் பள்ளிக் குழந்தைகளுடன் உரையாடியது போன்ற நடவடிக்கைகள் குறித்த செய்திகள் வெளியாகின. இத்தகைய உரையாடல்கள் பணி நிமித்தமாக மேற்கொள்ளப்பட்டாலும், இவையும் அவர்களது மன ஆரோக்கியத்தைப் பேணுவதில் கணிசமாகப் பங்கு வகிப்பதாகக் கூறினார் இஸ்ரோவின் முன்னாள் தலைவர் சிவன்.
விண்வெளியில் குளிப்பது, துணி துவைப்பது எப்படி?
விண்வெளி வீரர்கள் தங்கள் உடல்நலனை, மனநலனைப் பேணுவதில் கவனம் செலுத்துவது போலவே, இதில் மற்றொரு சவாலும் இருக்கிறது.
பூமியில் இருப்பவர்கள், தங்கள் ஆடைகளை தினசரி அல்லது இரு நாட்களுக்கு ஒருமுறை துவைத்துப் பயன்படுத்துவார்கள். ஆனால், விண்வெளியில் துணி துவைக்க முடியுமா? எப்படி குளிப்பார்கள்?
“விண்வெளி வீரர்கள் தினமும் ஸ்பாஞ்ச் குளியல் எடுத்துக் கொள்வார்கள். அதோடு, பூமியில் செய்வதைப் போல் அங்கு ஆடைகளைத் துவைத்துக் கொள்ள முடியாது,” என்று விளக்குகிறார் முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன்.
“விண்வெளியில் ஈர்ப்பு விசையில்லாத காரணத்தால், விண்வெளி வீரர்களைப் போலவே அவர்களது ஆடைகளும் மிதந்துகொண்டுதான் இருக்கும். ஆகையால், ஆடைகள் விரைவில் அழுக்காவதோ, அதனால் சுகாதாரப் பிரச்னைகள் ஏற்படுவதோ நடக்காது. இதனால், அவர்கள் அந்த உடைகளை நீண்டகாலத்திற்குப் பயன்படுத்த முடியும்,” என்று கூறுகிறார் அவர்.
பிபிசி-யிடம் தனது விண்வெளி நிலைய அனுபவம் குறித்து முன்பு பகிர்ந்திருந்த விண்வெளி வீரர் நிக்கோல் ஸ்காட், “ஆடைகள் உடலுடன் ஒட்டாத காரணத்தால், உடலில் இருந்து வெளிப்படும் திரவங்கள் அவற்றைப் பெரிதும் பாதிக்காது. என்னிடம் இருந்த ஓர் ஆடையை நான் மூன்று மாதங்களுக்குப் பயன்படுத்தினேன்,” என்று தெரிவித்திருந்தார்.
இப்படியாகப் பயன்படுத்திய பிறகு, கழிவாகப் போடப்படும் ஆடைகள், விண்வெளி நிலையத்திற்குத் தேவையான பொருட்களைக் கொண்டு செல்லும் விண்கலங்களில் கழிவுகளாகச் சேர்க்கப்பட்டு, வளிமண்டலத்தில் எரிக்கப்பட்டு விடும் என்றார் த.வி.வெங்கடேஸ்வரன்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)