நூறு நாள் திட்டத்தில் போதிய அளவு வேலை தரப்படுவது இல்லையா? உண்மை என்ன? பிபிசி கள ஆய்வு
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை 'விக்சித் பாரத் - ஜிஆர்ஏஎம்ஜி' எனப் பெயர் மாற்றம் செய்து புதிய சட்டமாக இந்திய அரசு கொண்டு வந்துள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கடந்த 2005 ஆம் ஆண்டு ஊரகப் பகுதிகளில் 100 நாட்கள் வேலை வழங்குவதை உறுதி செய்யும் வகையில் இத்திட்டத்தைக் கொண்டு வந்தது. அதை தற்போது 125 நாட்களாக உயர்த்துவதாக மத்திய அரசு கூறுகிறது.
எனினும் இத்திட்டத்திற்கான மத்திய - மாநில அரசுகளின் நிதி பகிர்வு விகிதங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
'இதனால் மாநிலங்களின் செலவீனம் உயரும்' எனக் கூறி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
'புதிய திட்டத்தின்படி மாநிலங்களைவிட மத்திய அரசுக்கு அதிக அதிகாரத்தை வழங்குகிறது' எனவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
"ஒருநாள் வேலைக்குக் கூட இனி மத்திய அரசு உத்தரவாதம் கொடுக்காமல் தனது கடமையைக் கை கழுவியுள்ளது" என தனது எக்ஸ் பக்கத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
முதலமைச்சர் கூறுவது உண்மைக்கு மாறானதாக உள்ளதாக பிபிசி தமிழிடம் கூறிய தமிழக பா.ஜ.க தலைமை செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, "எங்கெல்லாம் தொழில் முன்னேற்றம் இல்லாமல் வறுமை உள்ளதோ அங்கெல்லாம் 100 நாள் வேலைத்திட்ட பணி ஒதுக்கப்படுகிறது" என்கிறார்.
"தமிழ்நாட்டில் தொழில் முன்னேற்றம் ஏற்பட்டுவிட்டதாகக் கூறும் முதலமைச்சர், வேலை இல்லை எனக் கூறுவது முரண்பாடாக உள்ளது" எனவும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து, டிசம்பர் 24 அன்று மாநிலம் முழுவதும் 100 நாள் வேலைத்திட்டத்தில் மாற்றம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
திட்டம் தொடர்பாக தி.மு.க -பா.ஜ.க ஆகியவற்றுக்கு இடையே கருத்து மோதல் ஏற்பட்டு வரும் நிலையில், திட்டத்தின்கீழ் ஊதியம் பெறும் பயனாளிகளின் மனநிலையை அறிவதற்கு களத்துக்குச் சென்றது பிபிசி தமிழ்.
முழு விவரம் காணொளியில்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



