செங்கோல் முதல் பிரதமர் உரை வரை இடம்பெற்ற தமிழ்: தமிழகத்தை குறி வைத்து நடக்கும் அரசியலா?

புதிய நாடாளுமன்றம்

பட மூலாதாரம், ANI

    • எழுதியவர், க. சுபகுணம்
    • பதவி, பிபிசி தமிழ்

இன்று சுமார் ஒரு மணிநேரம் நடந்த பூஜைக்குப் பிறகு செங்கோல் முன்பாக விழுந்து கும்பிட்ட பிரதமர், புதிய நாடாளுமன்றத்தில் முதல்முறையாக உரையாற்றியபோது, “இங்கு செங்கோல் நிறுவப்பட்டுள்ளது. புனிதமான செங்கோலின் பெருமையை மீட்டெடுக்க முடிந்தது நம் அதிர்ஷ்டம்,” என்று தெரிவித்தார்.

புதிய நாடாளுமன்றத்தைப் பொறுத்தவரை ஆதீனங்கள் டெல்லியில் பிரதமரை சந்தித்தது, நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவப்பட்டது, பிரதமர் உரை என்று பல்வேறு விதங்களில் தமிழ்நாட்டின் தொடர்பு இருந்துகொண்டே இருந்ததாகவும் இது அரசியல் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் அணுகுமுறை என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், “நம் நாடாளுமன்றத்தில் நம் மனதை ஆளும் தமிழ் ஒலித்தபடியே நம் தமிழ் அரசர்கள் பயன்படுத்திய செங்கோல் நிறுவப்பட்டுள்ளது.

இந்த வரலாற்று நிகழ்வு தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் வரலாற்றுப் புகழைச் சேர்த்திருக்கிறது. இதைப் புறக்கணித்தவர்கள் தமிழுக்கும் தமிழ் கலாசாரத்திற்கும் துரோகம் செய்து மிகப்பெரிய வரலாற்றுப் பிழையை ஆற்றியுள்ளார்கள் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது,” என்று தெரிவித்தார்.

தமிழிசை சௌந்தர்ராஜன் நாடாளுமன்றத்தில் தமிழின் பெருமை ஒலித்ததாக்க கூறியது குறித்துப் பேசிய மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன், “பிரதமர் தமிழர்களுக்கு அளிக்கும் அதிக முக்கியத்துவத்தை இம்மாதிரியான உயிரற்ற பொருட்களில் கொடுப்பதைவிட, தமிழ் மக்களுடைய உரிமைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்,” என்று கூறினார்.

ஆனால், பிரதமரின் இந்த அணுகுமுறை கட்டாயம் அரசியல் உள்நோக்கம் கொண்டதுதான் என்று கூறும் மூத்த பத்திரிகையாளர் பத்ரி சேஷாத்ரி, “தன்னை வெறுப்பவர்கள் இருப்பதற்காக தமிழ்நாட்டு மக்கள் அத்தனை பேரையும் அதற்காக நான் ஒதுக்கிவிட மாட்டேன் என்பதை உணர்த்துவதற்காகவே பிரதமர் தொடர்ந்து தமிழர் பெருமைகளைப் பேசுவதையும் தமிழர் அடையாளங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் செயல்களையும் செய்கிறார்,” என்று கூறுகிறார்.

புதிய நாடாளுமன்றம்

பட மூலாதாரம், ANI

புதிய நாடாளுமன்றத்தில் பிரதமர் என்ன பேசினார்

பிரதமர் புதிய நாடாளுமன்றத்தில் ஆற்றிய முழு உரையில், “ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சிப் பயணத்திலும் சில தருணங்கள் வரலாற்றுச் சிறப்புமிக்கதாக மாறும். மே 28 அத்தகைய ஒரு நாள் தான்.

இது வெறும் கட்டடம் இல்லை, 140 கோடி இந்திய மக்களுடைய லட்சியத்தின் சின்னம். இது இந்தியாவின் உறுதியைப் பற்றிய செய்தியை உலகுக்கு வழங்குகிறது,” என்று கூறினார்.

மேலும், “இந்தப் புதிய நாடாளுமன்றம் தன்னிறைவு பெற்ற இந்தியாவின் எழுச்சிக்குச் சாட்சியாக விளங்கும். செங்கோல் இங்கு நிறுவப்பட்டிருக்கிறது. இந்தச் செங்கோல் சோழ வம்சத்தில் நீதி மற்றும் நல்லாட்சியின் அடையாளமாக இருந்தது.

இப்படிப்பட்ட புனிதமான செங்கோலின் பெருமையை மீட்டெடுக்க முடிந்தது நம்முடைய அதிர்ஷ்டம். இனி அவை தொடங்கும்போதெல்லாம் இந்தச் செங்கோல் நம்மை ஊக்குவிக்கும். இந்தியா முன்னேறும்போது, உலகமும் முன்னேறும். இந்தியாவினுடைய வளர்ச்சியின் மூலம் உலகின் வளர்ச்சிக்கும் இந்தப் புதிய நாடாளுமன்றம் வழிவகுக்கும்,” என்று பேசினார்.

புதிய நாடாளுமன்றம்

பட மூலாதாரம், ANI

"இந்தியா ஜனநாயகத்தின் தாய்"

அதோடு, “இந்தியா ஒரு ஜனநாயக நாடு மட்டுமல்லாது ஜனநாயகத்தின் தாயும்கூட. அடிமைத்தனத்துக்குப் பிறகு பலவற்றை இழந்து புதிய பயணத்தைத் தொடங்கிய நம் இந்தியா, பயணத்தில் பல ஏற்றத் தாழ்வுகளைக் கடந்து, சவால்களைக் கடந்து சுதந்திரத்தின் பொற்காலத்தில் நுழைந்திருக்கிறது.

பல ஆண்டுக்கால அந்நிய ஆட்சி நம் பெருமைகளை நம்மிடமிருந்து பறித்தது. இன்றைக்கு இந்தியா அந்தக் காலனித்துவ மனநிலையை விட்டுச் சென்றுவிட்டது. இந்தப் புதிய நாடாளுமன்றம், பழைமையும், புதுமையும் ஒன்றாக இருப்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு.

புதிய நாடாளுமன்றம் கட்டப்பட்டதன் மூலம் 60,000 தொழிலாளர்களுக்கு வேலை கிடைத்தது. அவர்களுக்கென டிஜிட்டல் கேலரி கட்டப்பட்டிருக்கிறது. வருங்காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

அதனால்தான் புதிய நாடாளுமன்றம் கட்டுவது காலத்தின் தேவையாக அமைந்திருக்கிறது. இன்று, புதிய இந்தியா புதிய இலக்குகளை நிர்ணயித்திருக்கிறது.

புதிய பாதைகளை விரும்புகிறது. அதன் உற்சாகம் புதியது, பயணம் புதியது, யோசனை புதியது, திசை புதியது, பார்வை புதியது. எனவே, இந்த 25 ஆண்டுகளில் நாம் அனைவரும் இணைந்து இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும்.

புதிய நாடாளுமன்றம்

பட மூலாதாரம், ANI

இன்று, இந்தப் புதிய நாடாளுமன்றத்தை நிர்மாணித்ததற்காக நாம் பெருமிதம் கொள்கிறோம். இங்கு இயற்றப்படும் சட்டங்கள் வறுமையை அகற்ற உதவும்.

கடந்த ஒன்பது ஆண்டுகளில் நாட்டில் நான்கு கோடி ஏழைகளுக்கு வீடுகள் மற்றும் 11 கோடி கழிவறைகள் கட்டப்பட்டதை நினைக்கும்போது அது எனக்கு அளவற்ற திருப்தியைத் தருகிறது. நாட்டிலுள்ள கிராமங்களை இணைக்க 4 லட்சம் கி.மீ சாலைகளை அமைத்திருக்கிறோம்," என்று கூறினார்.

“தமிழ் மக்களின் உரிமைகள்தான் முக்கியம்”

“செங்கோலுக்கு அங்கீகாரம், தமிழ்நாட்டிற்கு மரியாதை போன்றவையெல்லாம் உயிரற்ற பொருட்கள். அந்த உயிரற்ற பொருட்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை, தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளுக்குக் கொடுக்கலாமே!” என்கிறார் மூத்த செய்தியாளர் குபேந்திரன்.

பிபிசி தமிழிடம் பேசிய குபேந்திரன், “இங்கு வாழும் உயிருள்ள மக்களுக்கு என்ன தேவை, அவர்கள் பேசும் மொழிக்கு என்ன தேவை என்பதைச் செய்தால் அது காலத்திற்கும் பேசப்படும்.

நீதி, நெறி தவறாமல் ஆட்சி புரிவதுதான் செங்கோன்மை. அதன் வழியில் வந்ததுதான் செங்கோல். அந்த வகையில் ஆட்சி செய்வதில்தான் பெருமை உள்ளது. அதை அங்கு நட்டு வைத்துவிட்டு, ஆட்சி செய்வதால் மட்டுமே பெருமை வந்துவிடாது.

தமிழிசை சௌந்தர்ராஜனோ, மத குருமார்களோ, ஆதீனங்களோ யார் வேண்டுமானாலும் இதைப் பெருமையாகச் சொல்லலாம். ஆனால், தமிழ் மக்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் செய்த நன்மைகள் என்ன?” என்று கேள்வியெழுப்புகிறார்.

மேலும், “சிறு சான்றாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையைச் சொல்லலாம். அதற்குப் பிறகு அடிக்கல் நாட்டப்பட்டு பல மருத்துவக் கல்லூரிகள் கட்டி முடிக்கப்பட்டுவிட்டன. ஆனால், இன்னமும் ஏன் மதுரை எய்ம்ஸ் முடிக்கப்படாமலே இருக்கிறது?

இதைச் செய்யாமல், ஆதீனம் கொடுத்த செங்கோலை பக்கத்தில் வைத்துக் கொள்வதால் எந்த நன்மையும் வந்துவிடாது.

இப்படியெல்லாம் செய்து சமூக ஊடகங்களைப் பேச வைப்பதால் எந்தப் பயனும் இல்லை. மாநிலம் பயனுறச் செய்வதுதான் ஓர் ஆட்சியாளருக்கு அழகு,” என்கிறார் மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன்.

“பிரதமர் செய்வது அரசியல்தான்”

தமிழ் மொழிக்கும் அதன் பாரம்பரியத்திற்கும் நாடாளுமன்றத்தில் கொடுக்கப்பட்ட பங்களிப்பு குறித்துப் பேசிய மூத்த பத்திரிகையாளர் பத்ரி சேஷாத்ரி, “பிரதமர் நிச்சயமாக இதில் அரசியல்தான் செய்வதாக” கூறினார்.

அவர் பிபிசி தமிழிடம் பேசியபோது, “தமிழ்நாட்டில் உள்ள தமிழ் பிரிவினைவாதிகளான திராவிட முன்னேற்றக் கழகம், தமிழ் தேசியவாதிகள் ஆகியோர் என்ன கேட்கிறார்கள்?

நீட் தேர்விலிருந்து விலக்கு வேண்டும், மற்றவர்களுக்கு என்ன கொடுக்கப்படுகிறது என்பதைப் பற்றிக் கவலையில்லை எங்களுக்கு அதிக நிதி வேண்டும் என்று சிலவற்றைத் தமிழர் நலன் என்று ஒரு தோற்றத்தை அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவற்றோடு கூடுதலாக தமிழர்களை வஞ்சிக்கிறீர்கள் எனச் சொல்வார்கள்.

புதிய நாடாளுமன்றம்

பட மூலாதாரம், ANI

ஆனால், தமிழ்நாட்டைக் கீழே தள்ளி இன்னொரு மாநிலத்தை உயர்த்துவதற்கான வாய்ப்பே கிடையாது. அப்படியொரு தனி ஃபார்முலாவை யாரும் தீட்டவில்லை. அப்படி இருந்தால் பாஜகவால் இங்கு வெல்ல முடியாது என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும்,” என்று கூறியவர், புதிய நாடாளுமன்ற திறப்பின்போது செய்யப்பட்டது கட்டாயம் அரசியல்தான் என்கிறார்.

“தமிழர்கள் தங்களை நம்ப வேண்டும் என்பதுதான் அந்த அரசியல். அதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ, அதையெல்லாம் செய்கிறார். ‘கோ பேக் மோதி’ எனச் சொன்னாலும்கூட, ஒரு சிலர் வெறுப்புப் பேச்சைப் பேசுகிறார்கள் என்பதற்காக மொத்த மக்களையும் உதறிவிட்டுப் போக முடியாது அல்லவா!

ஆகையால், திருவள்ளுவர் கூறுவது போல் ‘அவர் நாண நல் நயம் செய்துவிடல்’ என்ற அணுகுமுறையைத்தான் பிரதமர் கொண்டுள்ளார்,” என்று கூறுகிறார் பத்ரி சேஷாத்ரி.

“மக்களுக்குத் தன்மீது நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும், தான் அவர்களுக்காக நிற்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக பிரதமர் தனிப்பட்ட முறையில் முயல்கிறார்.

ஒரு கலாசார தொடர்பை உருவாக்க முயல்கிறார்கள். இங்கு இருப்பவர்கள் பிரிவினையை ஆயுதமாகப் பயன்படுத்தினால், இணைத்துக்கொள்வதை பாஜக ஆயுதமாகப் பயன்படுத்துகிறது. இதில் எது நிற்கப் போகிறது என்பதை அடுத்த சில ஆண்டுகளில்தான் பார்க்க வேண்டும்,” என்றும் தெரிவித்தார் மூத்த பத்திரிகையாளர் பத்ரி சேஷாத்ரி.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: