இரண்டு கைகள் இல்லாமல் கார் ஓட்டுனர் உரிமம் பெற்ற சென்னை இளைஞர்
தன்னுடைய பத்து வயதில் ஏற்பட்ட மின்சார விபத்தால் தனது இரு கைகளையும் இழந்தவர் சென்னை, வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த தான்சேன். மனம் தளராமல் பள்ளிப்படிப்பை முடித்தவர், பின்னர் சட்டப் படிப்பை முடித்துவிட்டு இப்போது தொழிலாளர் சட்ட மேலாண்மை குறித்து படித்து கொண்டிருக்கிறார்.
“என்ன தான் என்னுடைய சில வேலைகளை நானே பார்த்துக் கொண்டாலும் நான் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு யாராவது ஒருவரின் துணையை நாட வேண்டி இருந்தது. அது எனக்கு மிகவும் சிரமமாக இருந்தது. அதனால் கார் ஓட்டி பழக வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது.
ஆனால் 2 கைகளும் இழந்த நான் எப்படி கார் ஓட்ட முடியும், அதனால் கால் மூலமாக கார் ஓட்டலாம் என்று முடிவெடுத்து அது குறித்த செய்திகளை தேடத் தொடங்கினேன். இந்தியாவில் முதன்முறையாக மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் கால் மூலமாக கார் ஓட்டி ஓட்டுனர் உரிமத்தை பெற்ற செய்தியை பார்த்தேன்.
அது எனக்கு நம்பிக்கையை கொடுத்தது. அதற்பிறகு கேரளாவில் ஒரு பெண் கால் மூலமாக கார் ஓட்டி ஓட்டுனருக்கான உரிமத்தை பெற்றிருந்திருந்தார். அதன்பிறகு நானும் கால் மூலமாக கார் ஓட்டலாம் என்று முடிவெடுத்து கடந்த வருடம் கார் வாங்கினேன்” என்கிறார் தான்சேன்.
சொந்தமாக கார் வாங்கிய பிறகு, கால் மூலம் கார் எப்படி ஓட்டுவது என ஆளிள்ளாத மைதானத்தில் முதலில் பழகி இருக்கிறார் தான்சேன். அவருக்கு உதவுவதற்காக நண்பர்களும் உடன் சென்றுள்ளனர். நன்றாக கார் ஓட்டப் பழகிய பிறகு ஓட்டுநர் உரிமத்திற்காக விண்ணப்பித்துள்ளார்.
பல கட்ட சோதனைகளுக்கு பிறகு, தமிழ்நாட்டில் கால் மூலம் கார் ஓட்டி வாகன உரிமம் பெற்ற முதல் நபர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார் தான்சேன்.
மேலும் விவரம் காணொளியில்.
தயாரிப்பு: ஹேமா ராக்கேஷ்
படத்தொகுப்பு: ஜனார்த்தனன்

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



