You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மழைநீரில் ஒரு வாரம் மூழ்கிய நெற்பயிரை காப்பது எப்படி? வேர் அழுகலை எவ்வாறு தடுப்பது?
- எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாட்டில் அக்டோபர் இரண்டாம் வாரத்தில் துவங்கி டிசம்பர் கடைசி வரையிலான மழைக்காலம் வடகிழக்கு பருவமழை பெய்யும் காலம் ஆகும். மாநிலத்தின் ஆண்டு சராசரி மழை அளவு 450 மி.மீ ஆகும்.
ஆனால், இந்த ஆண்டு அக்டோபர் முழுவதும் மழைப் பொழிவு மிக குறைவாகவே பதிவானது. நவம்பர் 7ஆம் தேதி நிலவரப்படி176 மி.மீ மழை மட்டுமே பதிவாகி உள்ளது. இது இயல்பை விட 23% குறைவாகும்.
வடகிழக்கு பருவமழையால் மட்டுமே மாநிலத்திற்கு ஆண்டின் 50% மழை கிடைக்கிறது.
இந்த ஆண்டு தென் மாவட்டங்களில் மேற்குத் தொடர்ச்சி மலைகளை ஒட்டியுள்ள கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் அதிக மழைப்பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
இந்த பருவமழை காலங்களில் விவசாய பணிகளை மேற்கொள்ளும் விவசாயிகளின் நெற்பயிர் மழை நீரில் மூழ்கி கடும் இழப்பு ஏற்படுவது, மழையால் மகசூல் குறைவது, பயிர்கள் பகுதியாக சேதமடைவது என பல்வேறு விதமான பாதிப்புகளை சந்திக்கின்றனர்.
விவசாயிகள் அனைவரும் அரசு வழங்கக்கூடிய பயிர் காப்பீட்டுத் தொகையை பெற விண்ணப்பம் செய்து இருப்பர். ஆனால், அது அனைத்து விவசாயிகளுக்கும் கிடைப்பது இல்லை. மழை பொழிவால் பயிர்கள் சேதமடைந்தால் அது விவசாயிகளுக்கு பெரும் பொருளாதார இழப்பாக அமைந்து விடுகிறது.
இதனை சமாளிக்க விவசாயிகள் தங்களின் நிலங்களில் பயிரிடும் பயிர்கள் மழையில் சிக்கினால் அவற்றை பாதுகாப்பாக விளைச்சல் வரை எடுத்துச் சென்று மகசூல் பெறுவது எப்படி?
ஒரு வாரத்திற்கு மேல் மழைநீரில் பயிர்கள் மூழ்கி இருந்தால் அதை காக்கும் வழிகள் என்ன? வயலோரம் ஏற்படும் கரையான் நோயை தடுப்பது எப்படி? மழை காலத்திலும் அதிக மகசூல் பெற வழிகள் என்ன?
தமிழ்நாடு முழுவதிலும் இந்த காலத்தில் இரண்டு லட்சம் ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பளவில் விவசாயிகள் நெல் விவசாயம் செய்து வருகின்றனர். இதற்கு அடுத்தபடியாக திண்டுக்கல் போன்ற சில மாவட்டங்களில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டு உள்ளது. பயிர்களை முறையாக பராமரித்து பாதுகாப்பது மட்டுமே இந்த மழை காலங்களில் விவசாயிகளுக்கு ஏற்படும் பயிர் சேதங்கள் தவிர்க்க உதவும்.
மழைநீரில் ஒரு வாரம் மூழ்கிய நெற்பயிரை காப்பது எப்படி?
வடகிழக்கு பருவ மழை காலங்களில் பெரும்பாலான விவசாயிகள் தங்களது வயல்களில் நெற் பயிரையே பிரதான பயிராக பயிரிடுவதை வழக்கமாக கொண்டு உள்ளனர்.
அதிலும் டெல்டா தவிர்த்து மற்ற பகுதிகளில் 90 முதல் 110 நாட்களுக்குள் மகசூல் தரக்கூடிய குறுகிய கால நெல் ரகங்களையே தேர்வு செய்து நடவு செய்து உள்ளனர்.
அதிக மழை பொழிவால் நெற்பயிர்கள் மழையில் மூழ்கினால் அதனை பல வழிகளில் பாதுகாத்து இழப்பைத் தவிர்த்து மசூலுக்கு கொண்டு சென்று லாபம் பெறலாம்.
மழைநீரில் ஒரு வாரம் மூழ்கிய நெற்பயிரை காப்பாற்றி நல்ல மகசூல் பெறலாம் என்கிறார் பரமக்குடி வேளாண் ஆராய்ச்சி நிலையத்தின் இணை பேராசிரியர் மற்றும் தலைவர் முத்துராமு.
"மழை காலங்களில் நெற்பயிர்களை பயிரிடும் போது வயல்வெளியை சுற்றி மழை நீர் செல்லும் அளவிற்கு வரத்து கால்வாய் பாதையை சீர் அமைத்து வைக்க வேண்டும். மழை வந்தாலும் வரத்து கால்வாய் வழியாக மழைநீர் வெளியே சென்று பயிர்கள் பாதுகாக்கப்படும்."
"தாழ்வான பகுதிகளில் உள்ள வயலில் நன்கு வளர்ந்த நெற்பயிர்கள் ஒரு வாரத்திற்கு மழை நீரில் மூழ்கி இருந்தால் அதில் வேர் அழுகல் நோய் தாக்கும். எனவே, வரத்துக் கால்வாயை சீர் செய்து, முடிந்த வரை நீரினை வேகமாக வயலில் இருந்து வெளியேற்ற வேண்டும். அல்லது மின் மோட்டார் உதவியுடன் நீரை உறிஞ்சி வெளியேற்ற வேண்டும்."
"பின் ஒரு ஏக்கருக்கு மேங்கோசெப் + கார்பெண்டாசிம் இணைந்த பூஞ்சாணங் கொல்லி 1/2 கிலோவை யூரியாவுடன் சேர்த்து வயல்களில் தெளிக்க வேண்டும். அது பயிர்களின் வேரில் ஏற்படும் அழுகலை தடுத்து மீண்டும் பயிர் செழித்து வளர உதவும்", என அவர் கூறினார்.
பயிர் கலைப்பு விதைப்பு முறை என்ன பலன் தரும்?
தொடர்ந்து பேசிய அவர் "மழை காலங்களில் சில இடங்களில் பயிர்கள் நன்கு செழித்து வளரும் சில இடங்களில் வளர்ச்சிக் குறையும். இதனை பராமரிப்பு செய்யாமல்விட்டால் மகசூல் குறையும். எனவே நன்கு வளர்ந்த இடங்களில் இருக்கும் பயிர்களை எடுத்து சரிவர வளராத பகுதியில் நட்டு வைக்கும் போது விவசாயிகளுக்கு இழப்பே இல்லாமல் முழு மகசூல் கிடைக்கும்" என்றார்.
மழைக்கால கரையான் அரிப்பை தடுக்க முடியுமா?
பருவ மழை காலங்களில் நெற்பயிர்களின் மையப்பகுதியில் மழைநீர் அதிகம் இருந்து வயல் ஓரங்களில் நீர் அளவாக இருக்கும் போது கரையான் அரிப்பு ஏற்பட்டு, இதனால் மகசூல் பாதிப்புகள் ஏற்படும். இதனை தடுக்க 1.5% குளோர் பைரி ஃபாஸ் வயல் வெளியின் ஓரங்களில் தூவுவதன் மூலம் கரையான் அரிப்பை தடுத்து பயிர்களை காப்பாற்றி மகசூல் ஈட்டி லாபம் பெற முடியும்.
மிளகாய் பயிரை காப்பாற்ற வழி இருக்கா?
பெரும்பாலான விவசாயிகள் மழைக்காலங்களில் மிளகாய் பயிரிடுவதை தவிர்ப்பர்கள். இவை நெற்கதிர் போல் கிடையாது. சிறு மழையைக் கூட மிளகாய் தாங்காது. இதனை மழைக் காலங்களில் கண்மாய் ஓரங்களின் மேட்டுப் பகுதிகளில் நடுவு செய்தால் பலன் இருக்கும். மழை காலம் முடிந்த பின் மீண்டும் வயல்களில் மிளகாய் செடிகளை நடவு செய்து பராமரிப்பு செய்து இழப்பின்றி மகசூல் கிடைக்கும்.
பொதுவாகவே கரும்பு, வாழை, நெல் ஆகியவை நீரிலேயே வளரக்கூடிய பயிர் வகைகள் என்பதால் அதற்கு பாதிப்புகள் பெருமளவு இருக்காது. பயறு, சிறு தானியம், காய்கறி வகைகள் மட்டுமே மழையால் பாதிக்கப்படுகின்றன.
மத்திய அரசின் சார்பில் விவசாயிகளின் சந்தேகங்களுக்கு உதவுவதற்காக இலவசமாக கிசான் தொலைபேசி எண் வழங்கப்பட்டுள்ளது.
18001801551 என்ற எண்ணிற்கு அழைத்து வேளாண் அதிகாரிகளிடம் தங்களுக்கு தேவையான வேளாண் உதவிகளை எப்போது வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)