வான்கடேவில் இந்தியப் பந்துவீச்சாளர்கள் திணறியபோது தகர்ந்த நம்பிக்கைகள்

    • எழுதியவர், ஓம்கார் டாங்கே
    • பதவி, பிபிசி மராத்தி

இந்திய அணி 397 ரன்களைக் குவித்து நியூசிலாந்தை வீழ்த்தியிருந்தாலும், சில முக்கியமான நம்பிக்கைகள் தகர்ந்திருப்பதாகவே கிரிக்கெட் நிபுணர்கள் கருதுகிறார்கள்.

இதுவரை மிக வேகமாக விக்கெட் எடுத்துவந்த இந்தியப் பந்துவீச்சாளர்கள் இந்தப் போட்டியில் மிகவும் நெருக்கடியான தருணத்தில் விக்கெட்டை எடுக்கத் தவறினார்கள்.

வான்கடே மைதானத்தில் ஒரு நீண்ட நிசப்தம் நிலவியது. சமூக வலைத்தளங்களில் 'இன்னொரு துயரத்தை' தாங்க இயலாது என்று இந்திய ரசிகர்கள் எழுதத் தொடங்கியிருந்தார்கள்.

உண்மையிலேயே இதுவரை கூறப்பட்டுவந்தது போல இந்தியாவின் பந்துவீச்சு வரலாற்றிலேயே வலிமையானதுதானா?

என்ன நடந்தது?

12 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு இந்தியா முன்னேறியுள்ளது. மும்பையில் புதன்கிழமை (நவம்பர் 15) நடைபெற்ற அரையிறுதியில் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது.

இப்போட்டியில் இந்தியாவின் ஆட்டத்தை பொறுத்தவரையில் இந்த வெற்றி எதிர்பாராதது அல்ல. இந்தப் போட்டியின் ஸ்கோர் போர்டைப் பார்த்தால், இது மிகப்பெரிய வெற்றி என்பது தெளிவாகிறது. ஆனால் இந்திய அணியின் ரன் குவிப்பைப் பார்த்தால், இந்த வெற்றி இன்னும் எளிதாகவே கிடைத்திருக்க வேண்டும்.

நீண்ட இடைவெளியில் விக்கெட் இல்லாத பந்துவீச்சு, தவறவிட்ட கேட்சுகள், ரன் அவுட்கள் மற்றும் இந்திய ரசிகர்களின் பதற்றம் என நீண்ட ரோலர் கோஸ்டர் பயணத்துக்குப் பிறகே இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

ஆனாலும் இந்த உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் சில முக்கியமான சிக்கல்கள் வெளிப்பட்டுள்ளன.

இப்போட்டியின் முடிவு மேலும் இனிதாக வேண்டுமென்றால் இந்தப் பிழைகள் நீக்கப்பட வேண்டும்.

பெரிதாக ரன்குவித்தும், எளிதாக வெற்றிபெற முடியவில்லை

டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயரின் அபார சதத்தால் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 397 ரன்கள் குவித்தது.

இந்தப் போட்டியில் இந்திய அணி உறுதியான வெற்றியுடன் அரையிறுதிக்குள் நுழைந்தது.

முன்னர் இதே மும்பை வான்கடே ஆடுகளத்தில் இலங்கைக்கு எதிராக 302 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தென் ஆப்பிரிக்கா 243 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோல்வியடைந்தது. ஆனால், நியூசிலாந்துக்கு எதிராக அப்படிப்பட்ட வெற்றியை இந்திய அணியால் மீண்டும் பெற முடியவில்லை.

விக்கெட் வீழ்த்துவதற்குத் திணறிய தொடக்கப் பந்துவீச்சாளர்கள்

இந்தியப் பந்துவீச்சு அதிர்ச்சிகரமாகத் தொடங்கியது. ஜஸ்பிரித் பும்ராவின் முதல் பந்தில் டெவோன் கான்வே பவுண்டரி அடித்து நியூசிலாந்தின் கணக்கைத் தொடங்கினார்.

முதல் ஒன்பது போட்டிகளில் வீசியது போல இந்தப் போட்டியில் பும்ராவால் வீச முடியவில்லை. முதல் 3 ஓவர்களில் 22 ரன்கள் எடுத்தார். இதில் வைட்பால்களும் அடங்கும்.

முதல் 9 போட்டிகளில் 3.55 என்ற எகானமி ரேட்டில் மட்டுமே பந்து வீசிய பும்ரா, அரையிறுதியில் 6.40 என்ற எகானமி ரேட்டில் ரன்களைக் கொடுத்தார். முதல் 10 ஓவரில் 'பவர் ப்ளே'யில் விக்கெட் எடுக்க முடியவில்லை.

397 ரன்களின் பாதுகாப்பு மற்றும் முகமது ஷமியின் கனவு ஆட்டம்தான் இந்திய அணியின் பந்துவீச்சில் இருந்த சிக்கல்களை மறைத்திருக்கிறது. இறுதிப்போட்டியில் இந்த தவறு நடந்தால், அது இந்தியாவுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும்.

ஜடேஜாவுக்கு ஏற்பட்ட பின்னடைவு

ஜஸ்பிரித் பும்ராவைப் போலவே, ரவீந்திர ஜடேஜாவும் முதல் ஒன்பது போட்டிகளில் 4-க்கும் குறைவான எகானமி விகிதத்தில் பந்து வீசினார். ஆனால், நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் அவரும் பும்ராவைப் போலவே அதிக ரன்களை விட்டுக் கொடுத்தார்.

இந்தியா பேட்டிங் செய்தபோது சான்ட்னருக்கு ஆடுகளம் நன்கு துணை புரிந்தது. அதனால், ஜடேஜா மீது இந்திய அணி அதிக எதிர்பார்ப்பை வைத்திருந்தது. ஆனால் அந்த அளவுக்கு ஜடேஜாவால் செயல்பட முடியவில்லை.

ஜடேஜா 10 ஓவர்களில் 6.30 சராசரியில் 63 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. கேன் வில்லியம்சன் - மிட்செல் ஜோடி அவரது பந்துவீச்சை எளிதாக விளையாடியது.

பும்ரா மற்றும் ஜடேஜாவைப் போலவே முகமது சிராஜும் அதிக ரன்களைக் கொடுத்தார். அவர் 9 ஓவர்களில் 78 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினார்.

வெற்றி நழுவிப் போக இருந்த தருணம்

கேன் வில்லியம்சன் மற்றும் டேரில் மிட்செல் ஆகியோர் மூன்றாவது விக்கெட்டுக்கு 181 ரன்கள் சேர்த்தனர். முதலில் ஜாக்கிரதையாக விளையாடிய இருவரும், செட்டில் ஆன பிறகு நல்ல ஷாட்களை ஆடினர்.

இந்தியச் சுழற்பந்து வீச்சாளர்களிடம் அவர் திணறவே இல்லை. எனவே இறுதியாக ரோஹித் ஷர்மா பந்தை ஜஸ்பிரித் பும்ராவிடம் கொடுக்க வேண்டியிருந்தது.

பும்ரா இரண்டாவது ஸ்பெல்லில் வில்லியம்சனை கிட்டத்தட்ட வெளியேற்றினார். ஆனால், அவரது எளிதான கேட்சை முகமது ஷமி தவறவிட்டார்.

பின்னர் ஷமி தாமே பந்துவீசி வில்லியம்சனை வீழ்த்தினார். அந்தத் தருணத்தில் வில்லியம்சனை வீழ்த்த முடிந்திருக்காவிட்டால், ஷமி விட்ட கேட்ச், மிகவும் விலை உயர்ந்ததாக மாறியிருக்கும். இந்தியாவின் வெற்றியையும் பறித்திருக்கக் கூடும்.

பந்து வீச்சாளர்கள் கொடுத்த 300-க்கும் அதிகமான ரன்கள்

திறமையான பந்துவீச்சு இந்திய அணியின் வெற்றியின் முக்கிய அம்சமாகவே கருதப்படுகிறது. இந்த உலகக் கோப்பையின் 9 தொடர் ஆட்டங்களில் எதிரணி அணியால் ஒருமுறை கூட 300 ரன்களை எடுக்க முடியவில்லை.

ஆனால், அரையிறுதியில் நியூசிலாந்து 329 ரன்களை எட்டியது. டேரில் மிட்செல் சதம் அடித்து 134 ரன்கள் எடுத்தார். வில்லியம்சன் 69 ரன்களும், கிளென் பிலிப்ஸ் 41 ரன்களும் எடுத்தனர். அவர்களின் பேட்டிங் காரணமாக, 40 ஓவர்கள் வரை நியூசிலாந்து வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு ஓரளவு இருக்கவே செய்தது.

கடைசி 10 ஓவர்களில் நியூசிலாந்தை இந்தியப் பந்துவீச்சாளர்கள் போராடித் தடுத்தார்கள்.

மீண்டும் ஒருமுறை எதிரணியின் பத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தியது. ஆனால் இந்தியப் பந்துவீச்சுக்கு இது ஒரு அக்னிப் பரீட்சையாகவே அமைந்துவிட்டது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)