சனாதனம்: உதயநிதி பேசிய முழு விவரம் தெரியாமல் பிரதமர் பேசுகிறாரா? மு.க.ஸ்டாலின் கூறியது என்ன?

பட மூலாதாரம், Getty Images
சனாதன விவகாரத்தில், பிரதமர் நரேந்திர மோதி, முழு விவரம் தெரியாமல் பேசலாமா என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோதி மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் சனாதனம் குறித்து தமிழ்நாட்டின் விளையாட்டுத் துறை அமைச்சரும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு தரவுகளின் அடிப்படையில் உரிய பதிலளிக்க வேண்டும் என்று பேசியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
இதற்கு பதில் கொடுக்கும் வகையில், இந்த விவகாரம் குறித்து கடந்த சில நாட்களில், முதல் முறையாக அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி பேசிய முழு விவரம் அறியாமல் பிரதமர் பேசுவது சரியா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சனாதனைத்தை பற்றி தவறாகப் பேசினால் உரிய பதிலடி கொடுக்க வேண்டும்’ என்று ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோதி பேசியதாக தேசிய செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஒரு செய்தி வந்தால் அது உண்மையா பொய்யா எனத் தெரிந்து கொள்ளும் அனைத்து வசதிகளும் நாட்டின் பிரதமருக்கு உண்டு. அப்படி இருக்கையில், உதயநிதி சொல்லாத ஒன்றை சொன்னதாகப் பரப்பியது குறித்து பிரதமர் அறியாமல் பேசுகிறாரா? அல்லது அறிந்தேதான் பேசுகிறாரா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
மேலும், ஏற்கெனவே, கடந்த சில வாரங்களுக்கு முன் அமைச்சர் எ.வ.வேலு பேசிய வீடியோவின் உண்மைத்தன்மையை அறியாமல் நாடாளுமன்றத்திலேயே பிரதமர் பேசியிருந்தார் எனக் குறிப்பிட்டுள்ள மு.க.ஸ்டாலின், “கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத பிரதமர், மக்களைத் திசைதிருப்பி, சனாதன போர்வையைப் போர்த்திக் கொண்டு குளிர்காய நினைப்பதாகத் தெரிகிறது,” எனத் தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 2ஆம் தேதி சென்னையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் ‘சனாதன ஒழிப்பு மாநாட்டை’ ஒருங்கிணைத்திருந்தது.
அதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மாநாட்டுக்கு சரியான தலைப்பு வைத்திருப்பதாகவும், சில விஷயங்களை எதிர்க்கக்கூடாது ஒழிக்கத்தான் வேண்டும் என்றும் பேசியிருந்தார்.
இதையடுத்து பாஜக ஐடி பிரிவு தலைவர் அமித் மால்வியா, உதயநிதி பேசிய வீடியோவை பகிர்ந்து, உதயநிதி 80% மக்களை இனப்படுகொலை செய்யச் சொல்கிறார் என ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இதையடுத்து இந்த விவகாரம் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் சர்ச்சையாக்கப்பட்டது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோதி இந்த விவகாரம் குறித்து மத்திய அமைச்சர்கள் கூட்டத்தில் பேசியிருப்பதாகத் தகவல்கள் வெளியானதை அடுத்து, பிரதமரை கேள்வி கேட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தனது அறிக்கையில், “பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர், பழங்குடியினர், பெண் இனத்துக்கு எதிரான சனாதன கோட்பாடுகளை ஒழிக்க வேண்டும் என்றுதான் அமைச்சர் பேசினாரே தவிர எந்த மதத்தையும் மத நம்பிக்கைகளையும் புண்படுத்தும் வகையில் பேசவில்லை,” என அமைச்சர் உதயநிதி பேசியது குறித்து விளக்கம் அளித்துள்ளார் மு.க.ஸ்டாலின்.

பட மூலாதாரம், X/@mkstalin
அமைச்சர் உதயநிதி பேசியது குறித்து பொய் பிரசாரத்தை பாஜக திட்டமிட்டே செய்வதாகக் குற்றம் சாட்டியுள்ளார் மு.க.ஸ்டாலின். அவரது அறிக்கையில், பாஜக ஆதரவு சக்திகள், “சனாதன எண்ணம் கொண்டவர்களை இனப்படுகொலை செய்யச் சொன்னார் உதயநிதி” என்று பொய்யைப் பரப்பினார்கள்.
இதை பாஜகவினரால் திட்டமிட்டு வளர்க்கப்படும் சமூக ஊடக கும்பலானது வட மாநிலம் முழுவதும் பரப்பியதாகத் தெரிவித்துள்ளார். ‘இனப்படுகொலை’ என்ற சொல்லை தமிழிலோ ஆங்கிலத்திலோ அமைச்சர் உதயநிதி எந்த இடத்திலும் சொல்லவில்லை என விளக்கமளித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இந்நிலையில், இந்த பொய் பிரசாரம் அரசியல் காரணங்களுக்காக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தனது அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளார். பாஜகவுக்கு எதிரான கட்சிகள் அனைத்தும் சேர்ந்து உருவாக்கியுள்ள இந்தியா கூட்டணி பிரதமரை நிலை தடுமாற வைத்துள்ளதாக மு.க.ஸ்டாலின் கூறுகிறார்.
“பாஜகவுக்கு இப்போது வந்திருப்பது சனாதனத்தின் மீதான ஈடுபாடு அல்ல. இந்தியா கூட்டணியில் எப்படியாவது விரிசலை ஏற்படுத்திவிட முடியாதா என்ற அரசியல் கணக்கு,” எனத் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், X/@UDHAYSTALIN
இதே விவகாரம் குறித்து இன்று காலை அமைச்சர் உதயநிதியும் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் இந்தியா கூட்டணி எழுப்பும் கேள்விகளுக்கு பதில் கூற முடியாததால்தான் இப்படி பாஜக பொய் பிரசாரம் செய்வதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
“கடந்த ஒன்பது ஆண்டுகளாக வாயிலேயே வடை சுட்டுக் கொண்டிருக்கிறீர்களே, எங்களின் நலனுக்காகச் செய்த திட்டங்கள் என்ன என்று ஒட்டுமொத்த இந்தியாவும் ஓரணியில் திரண்டு நின்று, நிராயுதபானியாக நிற்கும் ஒன்றிய பாசிச பாஜக அரசைக் கேள்வி கேட்கத் தொடங்கியுள்ளன. இந்நிலையில், த.மு.எ.க.ச மாநாட்டில் நான் பேசிய பேச்சை ‘இனப்படுகொலை செய்யத் தூண்டினேன்’ என்று திரித்து அதையே மக்களிடம் இருந்து தங்களைக் காத்துக்கொள்ளும் ஆயுதமாக நினைத்து காற்றில் கம்பு சுற்றிக்கொண்டு இருக்கின்றனர் பாஜக தலைவர்கள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் போன்ற ஏதாவது ஒரு முற்போக்குத் திட்டம் கடந்த 9 ஆண்டுகளில் ஒன்றிய அரசிடம் இருந்து வந்துள்ளதா? மதுரை எய்ம்ஸை கட்டினார்களா?" என்றும் உதயநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
அமித் ஷா போன்ற ஒன்றிய அரசின் அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் என யார் யாரோ தன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறுவதாகவும், ஆனால் அவர்கள் மீதுதான் தான் கிரிமினல் வழக்கு தொடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார் உதயநிதி ஸ்டாலின்.
தன் மீது தொடரப்பட்டிருக்கும் வழக்குகளை சட்டரீதியாக எதிர்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்து மதத்தை திமுகவினர் அவமதிப்பதாக பாஜகவினர் குற்றம் சாட்டி வரும் நிலையில், :திமுக எந்த மதத்துக்கும் எதிரி இல்லை என்பதை அனைவரும் அறிவார்கள். ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்பதைக் கற்பிக்கும் மதங்கள் அனைத்தையும் நாங்கள் மதிக்கிறோம்," என்று உதயநிதி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பாஜக மட்டுமல்லாது அதிமுகவையும், மறைமுகமாக ஆளுநரையும் சாடியுள்ளார் உதயநிதி.
"சனாதனம் என்றால் என்ன என்பதை வீட்டினுள் பத்திரமாக அடுக்கி வைத்திருக்கும் புத்தகங்களில் இருந்து தேடிக்கொண்டிருக்கும் எடப்பாடி அவர்களே, நீங்கள் ஆட்டுத் தாடிக்குப் பின்னால் நீண்ட நாள் ஒழிந்திருக்க முடியாது. ஆடு ஒருநாள் காணாமல் போகும்," என்று அவர் தெரிவித்துள்ளார்.
தான் கூறிய கருத்துகள் சரியே என வலியுறுத்தியுள்ள உதயநிதி, ‘சனாதன தர்மம்’ எதை வலியுறுத்துகிறது, அதில் அப்படி என்னதான் சொல்லப்பட்டுள்ளது என்பதை நாடு தழுவிய அளவில் பேசுபொருளாக மாற்றக் காரணமாக அமைந்த சனாதன ஒழிப்பு மாநாட்டுக்கும் அதை ஒருங்கிணைத்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத் தோழர்களுக்கும் தனது அறிக்கையில் நன்றி தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












