"இந்த நேரத்தில் ரகு, பொம்மி எங்க கூட இல்லையே" - 'எலிபெண்ட் விஸ்பரர்ஸ்' பொம்மன், பெள்ளி வருத்தம்

எலிபெண்ட் விஸ்பரர்ஸ் பொம்மன், பெல்லி

பட மூலாதாரம், Netflix

    • எழுதியவர், மோகன்
    • பதவி, பிபிசி தமிழ்

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் தெப்பக்காடு யானைகள் முகாம் உள்ளது. காடுகளிலிருந்து தனித்து விடப்படும், காயப்பட்டு வரும் யானைகள் இங்கு பராமரிக்கப்பட்டு வருகின்றன. கும்கி யானைகளுக்கான பயிற்சியும் இங்கு வழங்கப்பட்டு வருகிறது.

தெப்பக்காடு யானைகள் முகாமைச் சேர்ந்த பொம்மன், பெள்ளி தம்பதியினர் ரகு மற்றும் பெள்ளி ஆகிய யானைகளைப் பராமரித்து வந்தனர். இந்த நால்வரையும் மையப்படுத்தி எடுக்கப்பட்ட த எலிபேண்ட் விஸ்பரரஸ் (The Elephant Whisperers) என்கிற ஆவணப்படம் ஆஸ்கர் விருதுகளின் இறுதி பரிந்துரை பட்டியலில் உள்ளது.

ஆஸ்கர் வெளிச்சம் பெற்றுள்ள இந்த முதுமலை குடும்பத்தினரை சந்திக்க நேரில் சென்றோம்.

பொம்மன், பெள்ளி வளர்த்து வந்த ரகு மற்றும் பொம்மி தற்போது அவர்களின் பராமரிப்பில் இல்லை. பெள்ளி தற்போது யானை பராமரிப்பு பணியிலும் இல்லை. பாகன் பொம்மன் தற்போது கிருஷ்ணா என்கிற யானையை பராமரித்து வருகிறார்.

ரகு மற்றும் பொம்மியின் நினைவுகளால் உணர்ச்சிவயப்பட்ட பெள்ளி நம்முடன் பேசத் தொடங்கினார்.

“2017 ஆம் ஆண்டு தான் ரகு தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு கொண்டு வரப்பட்டது. உடல் எல்லாம் நாய் கடிபட்டு மிகவும் மோசமான நிலையில் தான் ரகு வந்தான். பலரும் ரகுவை காப்பாற்ற முடியாது என்று தயங்கினர். அப்போது தான் பொம்மன் உடன் இணைந்து நானும் ரகுவை பராமரிக்க தொடங்கினேன்.

முகாமிலேயே தங்கி ரகுவை பார்த்துக் கொண்டோம். ரகு மெல்ல மெல்ல உடல் நலம் தேற ஆரம்பித்தான். ரகு ஓரளவிற்கு வளர்ந்த சமயத்தில் பொம்மி வந்து சேர்ந்தது. பொம்மியையும் நாங்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது. பொம்மன், பெள்ளி, ரகு, பொம்மி என நாங்கள் நால்வரும் ஒரு குடும்பமாகவே வாழ்ந்து வந்தோம்.

யானைக்கு தேவைப்படுகின்ற நேரத்தில் பால் கொடுப்பது, குளிக்க வைப்பது, மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வது என ஒரு குழந்தையைப் போல தான் கவனித்து வந்தோம். அந்த சமயத்தில் எனது மூத்த மகள் இறந்துவிட்டால், அவளின் இறுதி சடங்கிற்கு கூட தாமதமாக செல்ல வேண்டியதாகிவிட்டது. ஏனென்றால் யானை உடன் யாராவது ஒருவர் இருந்துகொண்டே இருக்க வேண்டும்.

எலிபெண்ட் விஸ்பரர்ஸ் பொம்மன், பெள்ளி

மகள் பிரிந்த நிலையில் ரகு மற்றும் பொம்மி தான் எனக்கு ஆறுதலாக இருந்தார்கள். எங்கள் பிள்ளைகளாக வளர்த்து வந்தோம். இருவரும் நான் எங்கு சென்றாலும் என்னை பின் தொடர்ந்து வந்துவிடுவார்கள். ரகுவுக்கு பால் கொடுக்காமல் பொம்மிக்கு கொடுத்துவிட்டால் இருவருக்கும் சண்டை வந்துவிடும். ஒரு தடவை கூட இருவரையும் நான் கை நீட்டி அடித்தது இல்லை. மிரட்டுவது போல ஜாடை செய்தாலே இருவரும் அமைதியாகிவிடுவார்கள்.

யானையாக இருந்தாலும் ஒரு குடும்பமாக தான் வாழ்ந்துவந்தோம். யானை அம்மா என்று தான் என்னை அழைப்பார்கள். ஒரு கட்டத்தில் எங்கள் பராமரிப்பிலிருந்து இருவரும் செல்கிறார்கள் என்ற நிலை ஏற்பட்டதும் எங்களுக்கு மிகவும் மன கஷ்டம் ஆகிவிட்டது. பொம்மி சென்ற பிறகு நான் அந்த வேலையில் இல்லை.” என்றார்.

தெப்பக்காடு யானைகள் முகாமின் முழு நேர ஊழியரான பாகன் பொம்மன் தற்போது கிருஷ்ணா என்கிற யானையை பராமரித்து வருகிறார். அவருக்கு உதவியாக காவடி ஒருவரும் உள்ளார். தினமும் காலையும் மாலையும் யானையை குளிக்க வைத்து உணவு கொடுப்பது, கும்கி பயிற்சி வழங்குவது அதன் பின்னர் மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வது இவர்களின் பிரதான பணி.

பொம்மனின் வேலை காலை ஆறு மணிக்கே தொடங்குகிறது. கோவில் பூசாரியான பொம்மன் அதிகாலையில் கோவில் வேலைகளை முடித்துவிட்டு நேராக முகாமிற்கு சென்றுவிடுவார். கிருஷ்ணாவை குளிக்க வைத்து, உணவு வழங்கும் இடத்திற்கு அழைத்துவந்து பின்னர் மேய்ச்சலுக்கு அழைத்து செல்வார். அதே முகாமில் இருந்தாலும் ரகு மற்றும் பொம்மி தற்போது பொம்மனின் பராமரிப்பில் இல்லை.

எலிபெண்ட் விஸ்பரர்ஸ் பொம்மன், பெள்ளி

தினமும் ரகு, பொம்மியைச் சந்தித்தாலும் அவர்களுடன் நெருங்கி பழக முடியாத நிலை உள்ளதாக தெரிவிக்கிறார் பொம்மன். முகாமில் உள்ள வேலைகளை முடித்துவிட்டு மோயாற்றை கடந்து வீட்டிற்கு வந்தவர் நம்மிடம் பேசினார். “என்னுடைய அப்பா, தாத்தா அனைவரும் யானை வளர்ப்பு பணியில் இருந்தவர்கள் தான். அவர்களிடமிருந்து தான் நான் கற்றுக் கொண்டேன். 1984-ல் இருந்து நான் யானை பாகனாக உள்ளேன். பல கும்கி யானைகளையும் வளர்த்துள்ளேன். ரகு காயப்பட்டபோது நான் தான் நேரில் சென்று தெப்பக்காடு முகாமிற்கு அழைத்து வந்தேன். ரகுவை வளர்ப்பதற்கு தான் மிகவும் கஷ்டப்பட்டோம். முகாமிலியே தங்கியிருந்து பராமரித்து வந்தோம். அதன் பின்னர் பொம்மி வந்தது.

நாங்கள் ஒரு குடும்பமாக தான் வாழ்ந்து வந்தோம். ஒவ்வொரு யானையும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு வேறு ஒருவரின் பராமரிப்பிற்கு செல்வது இயல்பு தான். அப்படி தான் ரகு மற்றும் பொம்மி எங்கள் வளர்ப்பிலிருந்து சென்றார்கள். ஆனால் அந்த பிரிவு எங்களுக்கு கஷ்டமாக இருந்தது. எனக்கு அழுகையே வந்துவிட்டது.” என்றார்.

ஆவணப்படத்தில் நடித்த அனுபவம்

“நாங்கள் அவ்வாறு யானை வளர்ப்பில் இருந்தபோது தான் கார்த்திகி என்பவர் எங்களை வைத்து ஆவணப்படம் எடுக்க வேண்டும் என வந்தார். முதலில் எனக்கு தயக்கமாக தான் இருந்தது. ஆனால் எனக்கு புரியவைத்து ஒப்புக்கொள்ள வைத்தனர்” என்கிறார் பெள்ளி.

மேலும் அவர், “எனக்கு படத்தில் நடித்தோ கேமராவில் பேசிய அனுபவமோ இல்லை. எங்கள் வேலைக்கு இடையூறு இல்லாமல் படம் எடுப்பதாக கூறினார்கள். ஒரு வருடம் முழுக்க எடுத்தார்கள். எனக்கு படத்தில் நடிப்பது போல இல்லை. இயல்பாக தான் இருந்தது. அதன் பின்னர் ஆவணப்படமாக வெளியிட்டு ஆஸ்கர் வரை சென்றிருப்பதாக சொல்கிறார்கள். எனக்கு ஆஸ்கர் பற்றி எல்லாம் தெரியாது. ஆனால் பலரும் சொல்வதை கேட்பதற்கு சந்தோஷமாக உள்ளது. இதனால் எங்களுக்கும், வனத்துறைக்கும், முதுமலைக்குமே நன்மை தான்,” என்றார்.

“ஆவணப்படம் நடித்த பிறகு இது சிறப்பாக வந்துள்ளதா என்கிற சந்தேகம் எனக்கு உட்பட அனைவருக்கும் இருந்தது. ஆனால் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதாக சொல்கிறார்கள். நாங்கள் காட்டுக்குள் வசிப்பதால் எங்களுக்கு அது எல்லாம் தெரியவில்லை. உங்களைப் போல வருகின்ற பலரும் சொல்வதைக் கேட்டு தான் நாங்களே தெரிந்து கொண்டோம். ஆனால் இந்த நேரத்தில் ரகு, பொம்மி எங்களுடன் இல்லாதது வருத்தம் தான். ரகுவும் பொம்மியும் எங்கள் குழந்தைகள் தான். அவர்களால் தான் நாங்கள் இந்த அளவிற்கு சென்றுள்ளோம்,” என்றார்.

எலிபெண்ட் விஸ்பரர்ஸ் பொம்மன், பெள்ளி

பெள்ளி பேசுகையில், “நான் பணியிலிருந்து விலகிய பிறகு ரகு, பொம்மியை அதிகம் பார்ப்பதில்லை. அவர்களைப் பார்த்தால் எனக்கு கண்ணீரே வந்துவிடும். எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் என்னை அடையாளம் கண்டுவிடுவார்கள். அவர்களுக்கும் என்னை அம்மா என்று தெரியும். ரகு, பொம்மி யார் பராமரிப்பில் இருந்தாலும் பார்ப்பதற்கு அழைத்தால் நான் சென்று பார்ப்பதற்கு தயாராகவே உள்ளேன். அவர்கள் இருவரும் யானை குட்டி என்று நான் எப்போதும் பார்த்ததில்லை. இருவருமே என் குழந்தைகள் தான். தற்போது ஒன்றாக இல்லையென்றாலும் நாங்கள் எப்போதும் ஒரு குடும்பம் தான்” என கண்ணீர் மல்க முடித்துக் கொண்டார்.

தற்போது பிரிந்து இருந்தாலும் ஒன்றாக வாழ்ந்த காலத்தை நினைவு கூர்ந்து தாங்கள் ஒரு குடும்பம் தான் என்கிற உணர்விலேயே பொம்மன், பெள்ளி இருந்து வருகின்றனர். ரகு மற்றும் பொம்மி அதே முகாமில் தான் வளர்ந்து வருகிறார்கள். இந்த முதுமலை குடும்பம் தற்போது ஆஸ்கர் விருதை எதிர்நோக்கி காத்திருக்கிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: