You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மாதவிடாய் ரத்தத்தில் என்ன உள்ளது? சரும பொலிவுக்காக அதை முகத்தில் பூசுவது நல்லதா?
- எழுதியவர், அம்ரிதா பிரசாத்
- பதவி, பிபிசி தமிழ்
சமூக ஊடகங்களில் வைரலாகும் விஷயங்களை, 'டிரெண்ட்' என்ற பெயரில் மக்கள் பின்பற்றுவதுண்டு.
அதே போலதான் சமீபமாக பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் வெளிவரும் ரத்தத்தை, 'சரும பொலிவுக்காக' முகத்தில் பூசிக்கொள்வது டிரெண்ட் ஆனது.
வெளிநாடுகளில் டிக்டாக், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் அறிமுகமான இந்த செயல்முறையை, தற்போது இந்தியாவிலும் சில இளம் இன்ஃப்ளூயென்சர்கள் செய்து வருகின்றனர்.
இந்த டிரெண்டை மென்ஸ்ட்ருவல் மாஸ்கிங் (Menstrual Masking) என்று இன்ஃப்ளூயென்சர்கள் குறிப்பிடுகின்றனர்.
மாதவிடாய் ரத்தத்தில் இயற்கையாகவே அதிகளவில் ரெட்டினால் இருப்பதாகவும், அதை முகத்தில் தேய்த்துக்கொள்வதால் சருமம் மிக ஆரோக்கியமாகவும், பிரகாசமாகவும் இருப்பதாகவும் அவர்கள் கூறி வருகின்றனர்.
இது எந்த அளவுக்கு உண்மையானது? மாதவிடாய் ரத்தத்தில் உண்மையில் என்ன இருக்கிறது? இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
மருத்துவர்கள் சொல்வது என்ன?
இந்த டிரெண்ட் குறித்து தோல் மருத்துவர் தினேஷ் குமாரிடம் பிபிசி தமிழ் பேசியது. அவர் இது 'மிகவும் தவறு' என்று கூறுகிறார்.
"வைராலாகிறது என்பதற்காக நமது தோலில் இந்த ரத்தத்தை பயன்படுத்துவது சரி அல்ல. இதனால் ஆபத்தான விளைவுகள் ஏற்படும்," என்று அவர் குறிப்பிட்டார்.
இதை ஏன் பயன்படுத்தக்கூடாது என்பதற்கான காரணங்களாக மருத்துவர் தினேஷ் கூறியவை கீழே குறிப்பிடப்பட்டுள்ளன:
- இதனால் எந்த நன்மையும் இல்லை.
- மேலும் இதில் நேர்மறையாக பலன் இருக்கும் என்பதற்கு அறிவியல் ரீதியாக எந்த சான்றும் இல்லை. (பிபிசி தமிழ் சரி பார்த்தவரை இதுகுறித்து அதிகாரபூர்வமாக எந்த ஆய்வோ ஆராய்ச்சியோ இதுவரை நடத்தப்படவில்லை)
- இது ஒரு சுகாதாரமான செயல்முறை அல்ல.
- மாதவிடாய் ரத்தம் நமது சருமத்துக்குள் ஊடுருவாது.
- அதில் கிருமிகள் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
- முகத்தில் ஏதேனும் சிறிய காயங்கள் (Cuts) அல்லது திறந்த துளைகள் (Open Pores) இருந்தால், அதன் மீது இந்த ரத்தம் படும்போது, அது மேலும் எரிச்சல் அல்லது அரிப்பை ஏற்படுத்தலாம்.
மாதவிடாய் ரத்தத்தில் என்ன இருக்கிறது?
அமெரிக்க அரசின் தேசிய மருத்துவ நூலகத்தின் தகவலின்படி, மாதவிடாய் ரத்தம் என்பது அடிப்படையில் இறந்த அல்லது செயல்திறனை இழந்த திசுக்களை கொண்ட ஒரு திரவமாகும்.
கருத்தரிப்பு நிகழாதபோது, பெண்களின் கருப்பையின் உள்புற சுவரான எண்டோமெட்ரியம் (Endometrium), மாதாந்திர சுழற்சியின் ஒரு பகுதியாக மாதவிடாய் சமயத்தில் ரத்தமாக வெளிவருகிறது.
இது பிறப்புறுப்பு (vagina) வழியாக வெளி வரும்போது, அது சுரக்கும் சில திரவங்களும் (Vaginal Secretion) இதில் கலக்கின்றன.
மேலும், இயற்கையாகவே பிறப்புறுப்பில் உள்ள லாக்டோபாஸில்லஸ் போன்ற நுண்ணுயிரிகளும், வெளியேற்றத்தின்போது மாதவிடாய் ரத்தத்தில் சேர்கின்றன என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் சுமார் 300 வெவ்வேறு புரதங்கள், அமிலங்கள், என்சைம்கள் ஆகியவை இருக்கின்றன.
அடிப்படையில் மாதவிடாய் ரத்தம் என்பது உடலின் ஒரு கழிவு என்றும் டீச்மன் ரத்தப் பரிசோதனையில் (Teichmann blood test) மாதவிடாய் ரத்தத்திற்கு எதிர்மறையான முடிவுகள் இருப்பதாகவே தெரியவந்துள்ளதாகவும் அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அழகை மெருகூட்ட ரத்தத்தை பயன்படுத்தலாமா?
ஒரு நுணுக்கமான கலவையான மாதவிடாய் ரத்தத்தை முகத்தில் பூசிக்கொள்வது தேவையற்றது என்றும் அது முகத்தில் இருக்கும் மிகவும் மிருதுவான சருமத்திற்கு தீங்கு விளைவிக்கலாம் என்றும் மருத்துவர் தினேஷ் எச்சரித்தார்.
ஆனால் உடம்பில் ஓடும் ரத்தத்தை கொண்டு தோலில் உள்ள சேதங்களை சரிசெய்ய பிளேட்லட் ரிச் பிளாஸ்மா (PRP) போன்ற மருத்துவ சிகிச்சைகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பிளேட்லட் ரிச் பிளாஸ்மா (PRP) சிகிச்சையில், ஒருவரின் சொந்த ரத்தத்தில் இருந்து பிளாஸ்மா தனியாக பிரித்து எடுக்கப்பட்டு, மீண்டும் உடலில் செலுத்தப்படுகின்றது என்று தேசிய மருத்துவ நூலகத்தின் ஒரு கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சிகிச்சையின், 1-3 அமர்வுக்கு பிறகு தோலில் உள்ள திறந்த துளைகள் (Open Pores), சுருக்கங்கள், கரும்புள்ளிகள் ஆகியவை நீங்கும் என்றும், தோலின் கொலாஜன் அளவு அதிகரிக்கும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உரிய மருத்துவமனைகளில் இது போன்ற சிகிச்சைகளை செய்துகொள்வது பாதுகாப்பானது என்று தோல் மருத்துவர் தினேஷ் குமார் குறிப்பிடுகிறார்.
சமூக ஊடகங்களில் டிரெண்ட் ஆகிறது என்பதற்காக முகத்தில், நுண்ணுயிரிகள் அதிகம் இருக்கும் எச்சில், மாதவிடாய் ரத்தம் போன்றவற்றை பயன்படுத்த வேண்டாம் என்றும் அவர் எச்சரிக்கிறார்.
சரும பராமரிப்புக்கு என்ன செய்ய வேண்டும்?
நமது முகத்தில் இருக்கும் தோல் மிகவும் மென்மையானது என்று குறிப்பிடும் மருத்துவர் தினேஷ், அதை பராமரிக்கும் சில வழிமுறைகள் பற்றி குறிப்பிடுகிறார்:
- முகத்தை கழுவ ஃபேஸ் வாஷ்/ கிளென்சரை (cleanser) பயன்படுத்த வேண்டும்
- முகத்தை மாய்ஸ்சரைஸ் செய்ய ஒரு லோஷன் அல்லது கிரீம்-ஐ பயன்படுத்தலாம்.
- வீட்டை விட்டு வெளியில் செல்வது என்றால் அப்போது குறைந்தது SPF 30+ இருக்கும் ஒரு சன்ஸ்கிரீனை பூசிக்கொள்ளலாம்.
- உங்களது சருமத்தின் வகைக்கு (Dry skin, Oily Skin) ஏற்றவாறு சருமப் பராமரிப்புப் பொருட்களைத் தேர்ந்தெடுக்க வேண்டியது கவனிக்கக்கூடிய விஷயம்.
- முக்கியமாக போதிய தூக்கமும், ஆரோக்கியமான உணவை உண்பதும் தான், பொலிவான சருமத்துக்கான சிறந்த வழி.
ஆரோக்கியமான சருமத்துக்கு இதுவே போதுமானது என்றும், ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படாத எதையும் நம்பி பயன்படுத்த வேண்டாம் என்றும் மருத்துவர் தினேஷ் குறிப்பிட்டார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு