பாலத்தீனம்: இஸ்ரேலுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் தென் ஆப்ரிக்கா வழக்கு

காணொளிக் குறிப்பு, பாலத்தீனம்: இஸ்ரேலுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் தென் ஆப்ரிக்கா வழக்கு
பாலத்தீனம்: இஸ்ரேலுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் தென் ஆப்ரிக்கா வழக்கு

காஸாவில் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக இஸ்ரேல் தாக்குதல் நடத்திவரும் சூழலில் பாலத்தீனர்களுக்கு எதிராக அந்நாடு இனப்படுகொலையில் ஈடுபடுகிறதா என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று சர்வதேச நீதிமன்றத்தில் தென் ஆப்ரிக்கா வழக்கு தொடர்ந்துள்ளது. அதேநேரம் இந்த குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என கூறி இஸ்ரேல் நிராகரித்துள்ளது. தற்காப்பு நடவடிக்கைகளே மேற்கொள்வதாக அந்நாடு கூறியுள்ளது. சர்வதேச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள இந்த வழக்கு இஸ்ரேலுக்கு ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்துமா?

இனப்படுகொலை என்றால் என்ன?

சர்வதேச சட்டவிதிகளின்படி ஒரு தேசிய, இன அல்லது மதக் குழுவை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அழிக்கும் நோக்குடன் மேற்கொள்ளப்படும் செயல்கள் இனப்படுகொலையாக வரையற்றுக்கப்பட்டுள்ளது.

 ஒரு குழுவைச் சேர்ந்தவர்களை கொல்வது அல்லது உடல் ரீதியாகவோ மன ரீதியாகவோ கடும் பாதிப்பை ஏற்படுத்துவது, அந்த குழுவில் புதிதாக பிறப்பு எண்ணிக்கையை தடுக்கும் நோக்கத்துடன் நடவடிக்கைகளை மேற்கொள்வது, ஒரு குழுவைச் சேர்ந்த குழந்தைகளை வலுக்கட்டாயமாக வேறு குழுவுக்கு மாற்றுவது போன்றவை இனப்படுகொலையின் செயல்களாக கூறப்படுகிறது.

இதைத் தான் இஸ்ரேல் காஸாவில் செய்து வருவதாக தென் ஆப்ரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது. தென் ஆப்ரிக்கா சமர்பித்துள்ள ஆதாரத்தில், இஸ்ரேலின் செயல்கள் இனப்படுகொலை தன்மை கொண்டவை என்றும் பாலத்தீன தேசிய, இன குழுவின் கணிசமான பகுதியை அழிக்கும் நோக்கம் கொண்டவை என்றும் கூறியுள்ளது.

காஸாவில் வான்வழித் தாக்குதல்களை நடத்துவது மற்றும் அங்குள்ள குடிமக்களை காப்பாற்ற தவறுவது போன்றவற்றை இது குறிப்பதாக தென் ஆப்ரிக்கா கூறுகிறது. இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு உள்ளிட்டோரின் பேச்சுகளும் இனப்படுகொலை நோக்கத்திற்கு சான்றாக இந்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இஸ்ரேலின் பதில் என்ன?

தென் ஆப்ரிக்காவின் கூற்றை இஸ்ரேல் தீவிரமாக மறுத்துள்ளது.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, இனப்படுகொலை செய்ய வந்தவர்கள் நாங்கள் அல்ல , ஹமாஸ்தான் அவர்களால் முடிந்தால் நம் அனைவரையும் கொன்று விடுவார்கள் என்று கூறியுள்ளார்.

இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் தங்களால் முடிந்த அளவுக்கு தார்மீக ரீதியாக செயலாற்றுகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார். தாக்குதலுக்கு முன்பாக எச்சரிக்கை விடுப்பது போன்ற பொதுமக்கள் உயிரிழப்பைத் தவிர்க்க பல நடவடிக்கைகளை எடுப்பதாக இஸ்ரேல் ராணுவம் கூறுகிறது.

இஸ்ரேல் vs பாலத்தீனம்

பட மூலாதாரம், Getty Images

நீதிமன்றத்தால் போரை முடிவுக்கு கொண்டுவர முடியுமா?

காஸாவிற்குள்ளும் காஸாவிற்கு எதிராகவும் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று தென் ஆப்ரிக்கா விரும்புகிறது.

ஆனால், நீதிமன்றத்தின் உத்தரவை இஸ்ரேல் புறக்கணிக்கவோ அல்லது ஒத்துழைப்பு வழங்க மறுக்கவோ கூடும்.

கடந்த 2022ஆம் ஆண்டு ரஷ்யா யுக்ரேன் மீது படையெடுப்பை தொடங்கியபோது, உடனடியாக ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்று சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும் இந்த உத்தரவு புறக்கணிக்கப்பட்டது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)