உணவு டெலிவரியின்போதும் மனைவியை கூடவே அழைத்துச் செல்லும் கணவர்- நெகிழ வைக்கும் காரணம்
உணவு டெலிவரி செய்யும் பணியில் ஈடுபட்டுவரும் நபர் ஒருவர் தனது மனைவியையும் உணவு டெலிவரிக்கு கூடவே அழைத்து செல்வதும் அதற்கு அவர் கூறும் காரணமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
குஜராத்தைச் சேர்ந்த கேதன் ராஜ்வீர் , உணவு டெலிவரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இவரது மனைவி சோனல் ராஜ்வீர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தான் உணவு டெலிவரி செய்யும் இடங்களுக்கு தனது மனைவியையும் கேதன் ராஜ்வீர் அழைத்து செல்கிறார்.
இது குறித்து அவர் கூறும்போது, ஏழு மாதங்களுக்கு முன், என் மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது எனக்கு தெரியவந்தது. நெஞ்சுவலிப்பதாக கூறிய அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றேன். அவரை சோதித்த மருத்துவர்கள் எதுவும் கூறவில்லை பின்னர், ஜூனாகத்தில் எனக்கு தெரிந்த ஒருவரைத் தொடர்பு கொண்டேன்.
ஜூனாகத்தில் உள்ள மருத்துவரை அணுகுமாறு அவர் என்னிடம் கூறினார். அங்கு சென்றபோது, எனது மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது குறித்து தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்தோம்` என்றார்.
அவரது மனைவி சோனல் ராஜ்வீர் கூறுகையில், புற்றுநோய் ஒரு பயங்கரமான நோய் என்று எல்லோரும் சொல்கிறார்கள், நானும் அதை நம்புகிறேன். நான் ஒன்றை மட்டும் கூறிக்கொள்ள விரும்புகிறேன். உங்களுக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டால் பீதி அடைய வேண்டாம்.
உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தின் மீதும் முழு நம்பிக்கை வைத்திருங்கள். எப்போதும் அமைதியாக இருங்கள், தைரியமாக இருங்கள். ஒவ்வொரு கடினமான சூழ்நிலையையும் சமாளிக்க இது உதவும் என்று நம்பிக்கையுடன் பேசினார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



