லியோ படத்தில் விஜய் சிகரெட் பிடிக்கும் காட்சிகளுக்கு எதிர்ப்பு: திட்டமிட்டே வைக்கப்படுகிறதா?

விஜய், சினிமா, அரசியல்

பட மூலாதாரம், SONY MUSIC SOUTH

    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

லியோ திரைப்படத்திலிருந்து வெளியாகியிருக்கும் பாடல் காட்சியில் விஜய் சிகரெட் புகைப்பது போல இடம்பெற்றிருப்பதற்கு கடும் எதிர்ப்பு எழுந்திருக்கிறது. நடிகர்கள் சிகரெட் குடிப்பதைப் போல நடிப்பது சமூகத்தைப் பாதிக்கிறதா?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ படத்திலிருந்து "நான் ரெடிதான் வரவா" பாடல் சமீபத்தில் வெளியானது. இந்தப் பாடல் முழுக்கவே விஜய் வாயில் சிகரெட்டுடன் நடனமாடும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

இந்தப் பாடல் வெளியானவுடனேயே பல தரப்பிலிருந்தும் இதற்குக் கண்டனக் குரல்கள் எழுந்தன. பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் உடனடியாக இதனைக் கண்டித்தார்.

"லியோ திரைப்படத்தின் முதல் அறிவிப்பில் நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சி இடம் பெற்றிருப்பது வருத்தமளிக்கிறது. நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படங்களை குழந்தைகளும், மாணவர்களும் பார்க்கின்றனர்.

அவர் புகைப்பிடிக்கும் காட்சியில் நடிப்பதைப் பார்த்து அவர்களும் அப்பழக்கத்திற்கு ஆளாகிவிடக் கூடாது. புகைப்பழக்கத்திலிருந்து பொதுமக்களைக் காக்கும் சமூகப் பொறுப்பும் அவருக்கு உண்டு. சட்டமும் அதைத் தான் சொல்கிறது" என்று அவர் வெளியிட்டிருந்த ட்வீட்டில் கூறியிருந்தார்.

இந்த நிலையில், சென்னை நகரக் காவல்துறையில் இது தொடர்பாக ஆர்டிஐ ஆர்வலர் ஒருவர் விஜய் மீது புகார் அளித்துள்ளார். விஜய் நடித்திருக்கும் பாடலின் காட்சிகள் இளைஞர்களைப் போதைப் பழக்கத்திற்கு தள்ளும் வகையில் இருப்பதாக கொருக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஆர்டிஐ செயற்பாட்டாளர் செல்வம் என்பவர் சென்னை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு

விஜய் படத்தில் தொடர்ந்து இடம்பெறும் சிகரெட் காட்சிகள்

விஜய், சினிமா, அரசியல்

பட மூலாதாரம், SONY MUSIC SOUTH

நடிகர் விஜய் சிகரெட் குடிப்பதைப் போல நடிப்பதற்காக சர்ச்சைக்குள்ளாவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பாக 2007ல் வெளிவந்த அழகிய தமிழ் மகன் படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். அந்த இரு பாத்திரங்களில், கெட்டவனாக வரும் விஜய் சிகரெட் குடிப்பதைப் போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

இதையடுத்து, ஒரு கூட்டத்தில் பேசிய அப்போதைய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ், "புகைபிடிப்பது போன்ற காட்சிகளைக் கைவிடுமாறு நடிகர் விஜயக்கு அன்புடன் கோரிக்கை விடுக்கிறேன்" என்று கூறினார்.

இதற்குப் பதிலளித்த விஜய், இனிமேல் தன் படங்களில் சிகரெட் புகைப்பது போன்ற காட்சிகள் வராமல் பார்த்துக்கொள்வதாகத் தெரிவித்தார். இதற்குப் பிறகு வெளிவந்த, குருவி, வில்லு, சுறா, காவலன், வேலாயுதம், நண்பன் ஆகிய படங்களில் அவர் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகள் இடம்பெறவில்லை.

இதற்குப் பிறகு 2012ல் வெளியான துப்பாக்கி திரைப்படத்திலும் விஜய் சிகரெட் குடிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அந்த சமயத்திலும் அவர் சிகரெட் குடிப்பது போன்ற காட்சிகளில் நடிப்பதைத் தவிர்க்க வேண்டுமென்ற கோரிக்கை எழுப்பப்பட்டது.

இதற்குப் பிறகு, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த சர்கார் படத்தின் போஸ்டர்கள் முதன்முதலில் வெளியானபோது அதில் அவர் வாயில் சிகரெட்டுடன் காட்சியளித்தார்.

இதையடுத்து, தமிழக அரசின் பொது சுகாதாரத்துறையின் கீழ் இயங்கும் புகையிலைத் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பிரிவு, படத்தில் இடம்பெற்றுள்ள அந்தக் காட்சியை நீக்குமாறு விஜய், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் ஆகிய மூவருக்கும் நோட்டீஸ் அனுப்பியது.

அதனை ஏற்று, அந்த போஸ்டரை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இருந்து நீக்கியது சன் பிக்சர்ஸ். இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றும் தொடரப்பட்டது.

வேண்டுமென்றே செய்கிறாரா விஜய்?

இந்த நிலையில், தற்போது லியோ படத்திலும் அவர் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்கள் இதை வேண்டுமென்றே செய்கிறார்கள் என்கிறார் புகையிலை கட்டுப்பாட்டிற்கான தமிழக மக்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான சிரில் அலெக்ஸாண்டர்.

"இதுபோல பாடல்களிலும் போஸ்டர்களிலும் சிகரெட் பிடிக்கும் காட்சிகளை வைப்பது. அதற்கு ஏற்படும் எதிர்ப்பை வைத்து விளம்பரம்தேடுவது என்பது தொடர்ந்து நடந்துவருகிறது. 2003ஆம் ஆண்டின் சிகரெட் மற்றும் பிற புகையிலைப் பொருட்கள் சட்டம், நேரடியாகவோ மறைமுகமாகவோ புகையிலைப் பொருட்களை விளம்பரம் செய்வதைத் தடை செய்கிறது.

அந்தச் சட்டத்தின்படி, சினிமாவில் குடிப்பது போன்றோ, புகைப்பது போன்றோ காட்சிகள் இடம்பெற்றால், அந்தக் காட்சிகள் வரும்போது, "சிகரெட் புகைப்பது புற்றுநோயை ஏற்படுத்தும்" என்ற வாசகங்கள் இடம்பெற வேண்டும். தவிர, போஸ்டரிலோ, டீஸரிலோ சிகரெட் பிடிக்கும் காட்சிகள் இடம்பெறக்கூடாது. சினிமாத் துறையினர் இதை மீறிக் கொண்டேயிருக்கிறார்கள்" என்கிறார் சிரில் அலெக்ஸாண்டர்.

2018ல் சர்க்கார் படத்தின் போஸ்டர் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் சிரில் அலெக்ஸாண்டர் தொடர்ந்த வழக்கு இன்னமும் நிலுவையில் இருக்கிறது. இது தவிர, வேலையில்லா பட்டதாரி உட்பட 7 படங்களின் மீது இது போன்ற வழக்குகள் தொடரப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.

"சர்க்கார் தொடர்பான வழக்கு நடந்துவரும்போதே இது போன்ற பாடல் காட்சியை வெளியிடுகிறார்கள். ஆகவே இது இரண்டாவது விதிமீறல். நிச்சயம் தண்டனைகள் அதிகமாக இருக்கும்" என்கிறார் அவர்.

நடிகர்கள் சினிமாவில் புகைப்பது போன்ற காட்சிகள் சமூகத்தில் என்ன தாக்கத்தை ஏற்படுத்துகின்றன?

விஜய், சினிமா, அரசியல்

பட மூலாதாரம், SONY MUSIC SOUTH

"இவை மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஒருவர் சிறுவயதில் சிகரெட் பிடிக்கத் துவங்க மூன்று காரணங்கள் இருக்கின்றன.

ஒன்று, நண்பர்கள் குழு. இரண்டாவது, சிகரெட் புகைக்கும் பெற்றோர் தன் பிள்ளைகளை வாங்கிவரச் சொல்வது, மூன்றாவது, ஒருவர் விரும்பும் ஹீரோ சிகரெட் பிடித்தால், அவரது ரசிகரும் சிகரெட் பிடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மூன்றாவது காரணத்தால் சிகரெட் புகைக்க ஆரம்பிப்பவர்கள்தான் அதிகம். இது தொடர்பாக எவ்வளவோ பிரசாரம் செய்யப்பட்டும், வழக்குகள் தொடரப்பட்டும் சிகரெட் பிடிப்பது தொடர்பான காட்சிகள் சினிமாக்களில் தொடர்ந்து வந்துகொண்டேயிருக்கிறது.

சமீபத்தில் வெளியான பிச்சைக்காரன் - 2 படத்தில் எலக்ட்ரானிக் சிகரெட் பிடிப்பது போலக் காட்டுகிறார்கள். எலெக்ட்ரானிக் சிகரெட்டின் பயன்பாடு இந்தியாவில் முழுக்க முழுக்கத் தடைசெய்யப்பட்டிருக்கிறது. மேலும் ஹூக்கா பிடிப்பதையும் காட்டுகிறார்கள். இவையெல்லாம் புகைப் பழக்கத்தை ஊக்குவிக்கும்.

இதுபோக, ஓடிடிகளில் வரும் படங்களில் எந்தவிதக் கட்டுப்பாடுமின்றி சிகரெட் பிடிக்கும் காட்சிகள் இடம்பெறுகின்றன. இதனால், தமிழ்நாட்டில் புதிதாக சிகரெட் பிடிப்போரின் எண்ணிக்கை குறைவதேயில்லை." என்கிறார் சிரில் அலெக்ஸாண்டர்.

"கதையை நம்பாமல் சர்ச்சைகளை நம்புகிறார் விஜய்"

விஜய் தனது கதைகளை நம்புவதைவிட, சர்ச்சைகளையே நம்புகிறார்; அந்தப் பின்னணியில்தான் இதனைப் பார்க்க வேண்டியிருக்கிறது என்கிறார் சினிமா விமர்சகரான பிஸ்மி.

"இது ஏதோ தெரியாமல் நடந்துவிடவில்லை. விஜய்யின் ஒவ்வொரு படத்திற்கும் சர்ச்சை தேவைப்படுகிறது. படத்தின் உள்ளே இந்தக் காட்சி இடம்பெற்றிருந்தால் அது பேசப்படும் விஷயமாகியிருக்காது.

மாறாக, விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாமல், அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் முதல் பாடலிலேயே இந்தக் காட்சிகள் இடம்பெறுகின்றன. சர்ச்சை ஏற்படும் என்று தெரிந்தேதான் இதைச் செய்கிறார்கள்.

சமீபகாலமாக விஜய் தனது கதைகளை நம்புவதைவிட சர்ச்சைகளையே நம்புகிறார். ஆனால், செந்தில் பாலாஜி விவகாரத்தின் காரணமாக இது பெரிய சர்ச்சையாக உருவெடுக்கவில்லை. ஆகவே அடுத்த கட்டமாக இது தொடர்பாக கூடுதல் சர்ச்சையை ஏற்படுத்த முயல்வார்கள்" என்கிறார் பிஸ்மி.

அரசியலுக்கு வரப்போவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் விஜய் போன்றவர்களுக்கு கூடுதல் சமூகப் பொறுப்பு இருக்கிறது; இருந்தபோதும் அவர் இப்படிச் செய்கிறார் என்கிறார் பிஸ்மி.

விஜய்யின் தளபதி மக்கள் இயக்க பொதுச் செயலாளரான புஸ்ஸி ஆனந்திடம் இது குறித்துக் கேட்டபோது, "பிறகு பேசுகிறேன்" என்று சொல்லி அழைப்பைத் துண்டித்துவிட்டார்.

பாபா VS ராமதாஸ் மோதல்

தமிழ்நாட்டில், நடிகர்கள் சிகரெட் பிடிப்பது மது அருந்துவது போன்ற காட்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் போக்கு நீண்ட காலமாகவே இருந்துவந்தது என்றாலும் 2002ஆம் ஆண்டில் பாபா படத்தில் ரஜினி புகைப்பதைப் போன்ற காட்சி வெளியானபோது இது உச்சகட்டத்தை அடைந்தது.

பாபா படத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான ராமதாஸ் இதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். "தமிழ்நாட்டில் பொது இடங்களில் புகைபிடிக்கத் தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், இது இளைஞர்களிடம் பெரும் சீரழிவை ஏற்படுத்தும். பீடி குடித்துவிட்டு தூக்கிப்போட்டு கவ்வுவதுதான் இளைஞர்களுக்கான வழிகாட்டுதலா?" என்று கேள்வி எழுப்பிய ராமதாஸ், அந்தக் காட்சிகளை நீக்க வேண்டுமென்றார்.

இதையடுத்து, இந்த விவகாரம் பா.ம.கவுக்கும் ரஜினி ரசிகர்களுக்கும் இடையிலான மோதலாக உருவெடுத்தது. பாபா திரையிடப்பட்ட பல இடங்களில் திரையரங்குகள் தாக்கப்பட்டன. பண்ருட்டி, பெரம்பலூர், ஜெயங்கொண்டம் ஆகிய இடங்களில் மோதல்களும் நடந்தன. ஜெயங்கொண்டத்தில் தியேட்டர் சூறையிடப்பட்டு, படப்பெட்டி தூக்கிச்செல்லப்பட்டது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: