அன்று நாரை இன்று பருந்து - முகமது ஆரிஃபை தோழமையுடன் தேடி வந்த இன்னொரு பறவை
சில மாதங்களுக்கு முன்பு நாரையுடன் முகமது ஆரிஃப் என்பவருக்கு ஏற்பட்ட நட்பு வைரலானது உங்களுக்கு நினைவில் இருக்கிறதா?
இப்போது ஆரிஃபுக்கு ஒரு பருந்துடன் நட்பு ஏற்பட்டுள்ளது.
உத்தரபிரதேசத்தின் அமேதி மாவட்டத்தில் உள்ள மண்ட்கா என்ற கிராமத்தில் வசிக்கிறார் முகமது ஆரிஃப். தற்போது பறவைகள்,விலங்குகளை காப்பாற்றும் ஒரு தன்னார்வ தொண்டு அமைப்பை நடத்தி வருகிறார்.
பருந்து அவருக்கு இதன்மூலம்தான் கிடைத்தது.
நாரைக்கு பிறகு இப்போது ராஜாளியுடன் ஆரிஃப்பின் வீடியோ வைரலாகி வருகிறது.

“நாரை என்கிட்ட இருந்து போன சில நாட்களுக்கு பிறகு இது எனக்கு கிடைத்து. இங்கிருந்து சுமார் 20 – 25 கிலோமீட்டர் தூரத்தில் நஸீராபாத் உள்ளது. அங்கதான் காயம்பட்ட பருந்து இருப்பதாக எனக்கு அழைப்பு வந்தது. நான் நஸீராபாத்திற்கு சென்று அதை எடுத்து வரும் வழியில் மருத்துவமனையில் சிகிச்சையும் பார்த்தேன். சிகிச்சைக்கு பிறகு 20-25 நாட்கள் என்கூடவே வைத்திருந்தேன். அது குணமான பிறகு அதை பறக்கவிட்டுட்டேன். அதுவும் பறந்து போய்டுச்சு. அஞ்சு நாட்களுக்கு பிறகு அது மீண்டும் திரும்பி வந்துச்சு. பெரும்பாலும் என் வீட்டுக்கு பக்கத்திலேயேதான் அது இருக்கும். அங்கிருந்து பறந்து போனாலும் திரும்ப வந்துடும்.” என்கிறார் ஆரிப்.

ஆரிஃப் சாரஸ் வைட்லைஃப் கன்சர்வேஷன் என்ற பெயரில் என் ஜி ஓ நடத்தி வருகிறார் ஆரிப். காயம்பட்ட பறவைகளை காப்பாற்றி சிகிச்சை கொடுத்து அதை பறக்க விடுவது வழக்கம்.
“முதல் நாள் நான் இது பக்கத்துல போன போது எடுத்த வீடியோவை நான் இன்ஸ்டா கிராமில் அப்லோட் பண்ணியிருக்கேன். அப்போது இதன் பக்கத்தில் போனப்ப பறந்து போய்விட்டது. அப்புறம் கொஞ்ச நேரம் கழித்து அதுவாகவே கதவு பக்கத்தில் வந்தது. அப்புறம் வந்து போக ஆரம்பித்தது. கேட் மேல் உட்காரும், சுவர் மேல உட்காரும். சில நேரம் அலமாரிக்குள்ளேயும் உட்காரும்.”
“நான் அதுக்கு சாப்பாடு கொடுப்பேன். தண்ணீர் கொடுப்பேன். அதை நல்லா கவனிச்சிப்பேன். அப்புறம் அது எங்கயாவது பறந்து போயிடும். திரும்ப ஒன்னு இரண்டு மணி நேரத்துல இல்லைனா ஒரு நாள்ல திரும்ப வரும். இது எங்கூட பறந்து வராது. ஆனா அதை கையில தூக்கி வைச்சுப்பேன். தடவிக் கொடுப்பேன். அது என்ன ஒன்னும் செய்யாது. அப்படியே எங்கூட இருக்கும் சில நேரம் எங்கயாவது போகும். நான் வெளியில போகும்போது இதுவும் போயிடும். நாள் முடியறதுக்குள்ள திரும்ப வரும். இல்லைன்னா அடுத்த நாள் வரும். ஆனா கண்டிப்பா திரும்ப வந்திருகும்.”

உங்களிடம் இந்த பருந்து உள்ளது அதனிடம் நட்பு ஏற்பட்டுள்ளது என நீங்கள் வனவிலங்குகள் துறையிடம் தெரிவித்தீர்களா என்று ஆரிப்பிடம் கேட்டோம்.
அதற்கு பதிலளித்த முகமது ஆரிஃப், “நியூஸ் மூலம் அவங்களுக்கும் தெரிஞ்சிருக்கும். அவங்க கிட்ட என் நம்பர் இருக்கு. இந்த பறவையை வளர்க்ககூடாது என்ற விதி இருந்தால் எனக்கு இந்நேரம் ஃபோன் வந்திருக்கும். அதனாலதான் இதற்கு அரசு மருத்துவமனையில சிகிச்சை கொடுத்தேன். ஏதாவது சிக்கல் இருந்திருந்தா மருத்துவர்களும் அத பத்தி சொல்லியிருப்பாங்க. இங்கேயே எங்ககிட்டயே விட்டுட்டு போங்கன்னு சொல்லியிருப்பாங்க. ஆனா சிகிச்சைக்கு பிறகு நீங்களே எடுத்துட்டு போங்க ன்னு சொல்லிட்டாங்க.”
“நாம முழு மனசோட எத கவனிச்சுக்கிட்டாலும் அது நம்ம கூடவே இருக்க ஆரம்பிச்சுடும். என்கிட்ட மாய மந்திரம் எதுவும் இல்லை. ஒரு மனிதன் உண்மையான அன்போட விலங்குகள், பறவைகளை கவனிச்சுக்கிட்டா அது நமக்கு நண்பனாயிடும். என்னை பொருத்தவரைக்கும் இது ஒரு பெரிய விஷயம் இல்ல.” என்கிறார் ஆரிஃப்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













