சர்வதேச கால்பந்தில் மீண்டும் முத்திரை பதிக்கும் ரொனால்டோ - யூரோ தகுதிச்சுற்றில் சாதனைமேல் சாதனை

பட மூலாதாரம், Getty Images
யூரோ 2024 தகுதிச் சுற்றில் லக்சம்பர்க் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2 கோல்களை அடித்து நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ அசத்தியுள்ளார். இதன் மூலம் சர்வதேச கால்பந்து உலகிற்கு தனது மீள் வருகையை அவர் மீண்டும் அழுத்தமாக உரைத்துள்ளார்.
கத்தாரில் அண்மையில் நடந்து முடிந்த உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரொனால்டோவுக்கு மிகுந்த ஏமாற்றம் தருவதாக அமைந்துவிட்டது. ரொனால்டோ தலைமை தாங்கிச் சென்ற போர்ச்சுகல் அணி காலிறுதியுடன் வெளியேறியதுடன், அந்த அணி விளையாடிய கடைசி இரு நாக் அவுட் போட்டிகளிலுமே தொடக்கத்தில் அவர் களமிறங்க வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
சௌதி புரோ லீக் மூலம் புதிய அவதாரம்
35 வயதை எட்டிவிட்டதால் ரொனால்டோவின் சர்வதேச கால்பந்து வாழ்க்கை அத்துடன் முடிவுக்கு வந்துவிட்டதாகவே பலராலும் கணிக்கப்பட்டது. ஆனால், மான்செஸ்டர் அணியுடனான உறவு கசந்து, சௌதி புரோ லீக் தொடருக்கு மாறிய ரொனால்டோ அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தி உலகம் முழுவதும் ரசிகர்களைக் கவர தவறவில்லை.
அதேநேரத்தில், உலகக்கோப்பையில் மோசமான தோல்வியைச் சந்தித்த போர்ச்சுகல் அணியிலும் மாற்றங்கள் நிகழ்ந்தன. பயிற்சியாளர் பொறுப்பில் பெர்னாண்டோ சான்டோசுக்குப் பதிலாக ரொபர்டோ மார்டினெஸ் அமர்த்தப்பட்டார். புதிய பயிற்சியாளரின் நம்பிக்கையைப் பெற்ற ரொனால்டோ கணிப்புகளைப் பொய்யாக்கி போர்ச்சுகல் தேசிய அணியிலும் இடம் பிடித்தார்.
யூரோ தகுதிச்சுற்றில் தொடர்ந்து அசத்தல்
உலகக்கோப்பைக்குப் பிறகு போர்ச்சுகல் அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் யூரோ 2024 தகுதிச்சுற்றில் அவர் அசத்தி வருகிறார். லிச்டென்ஸ்டெய்ன் அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் 2 கோல்களை அடித்து அசத்திய ரொனல்டோ, லக்சம்பர்க் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்திலும் தனது சிறப்பான ஆட்டத்தைத் தொடர்ந்தார்.
ஆட்டத்தின் ஒன்பதாவது நிமிடத்திலேயே லக்சம்பர்க் அணியின் தடுப்பரணை உடைத்து முதல் கோலை அடித்து போர்ச்சுகல் அணிக்கு அவர் முன்னிலை பெற்றுத் தந்தார்.

பட மூலாதாரம், Getty Images
யூரோ தகுதிச்சுற்றில் போர்ச்சுகல் முதலிடம்
போர்ச்சுகல் அணியின் ஜோவா ஃபெலிக்ஸ் 15-வது நிமிடத்திலும், பெர்னார்டோ சில்வா 18-வது நிமிடத்திலும் கோல் அடித்து தங்களது அணிக்கு வலுவான முன்னிலை பெற்றுத் தந்தனர். நட்சத்திர வீரர் ரொனால்டோ 31-வது பாதியில் மீண்டும் ஒரு கோல் அடித்து தான் வலுவாக திரும்பி வந்திருப்பதை கால்பந்து உலகிற்கு பறைசாற்றினார்.
முதல் பாதியில் போர்ச்சுகல் அணி 4-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது. இரண்டாவது பாதியில் மாற்று ஆட்டக்காரர்களாக வந்த ரஃபேல் லிவோ, நெவெஸ் ஆகியோர் கோலடிக்க, முடிவில் போர்ச்சுகல் அணி 6-0 என்ற கோல் கணக்கில் லக்சம்பர்க் அணியைப் பந்தாடியது.
யூரோ 2024 தகுதிச் சுற்றில் 'J' பிரிவில் இடம் பெற்றுள்ள போர்ச்சுகல் அணி இதுவரை தான் ஆடிய 2 போட்டிகளிலும் ஒரு கோல் கூட வாங்காமல் வெற்றி பெற்று முதலிடத்தில் கம்பீரமாக வீற்றிருக்கிறது. புதிய பயிற்சியாளர் ரொபர்டோ மார்டினெஸின் அணுகுமுறை சிறப்பான பலனை அளித்திருப்பதாக போர்ச்சுகல் ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
சர்வதேச கால்பந்தில் சாதனைமேல் சாதனை
யூரோ 2024 தகுதிச்சுற்றில் ரொனால்டோ தொடர்ந்து அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். லிச்டென்ஸ்டெய்ன், லக்சம்பர்க் ஆகிய அணிகளுக்கு எதிராக ஆடிய முதலிரு போட்டிகளிலுமே தலா 2 கோல்கள் அடித்து தனது திறமையையும், சிறப்பான பார்மையும் அவர் நிரூபித்துள்ளார்.
போர்ச்சுகல் அணிக்காக யூரோ சாம்பியன்ஷிப் தகுதிச்சுற்றில் அதிக கோல் அடித்தவரான ரொனால்டோ, தனது சாதனை கோல் கணக்கை 35-ஆக உயர்த்திக் கொண்டுள்ளார். 37 ஆட்டங்களில் விளையாடியதன் மூலம் இந்த மைல்கல்லை அவர் எட்டியுள்ளார்.
யூரோ தகுதிச்சுற்றுக்கு முன்பாகவே, சர்வதேச கால்பந்திலும் அதிக கோல் அடித்த வீரர் என்ற சாதனையை தம் வசம் வைத்திருந்த ரொனல்டோ 196 போட்டிகளில் 122 கோல்களை அடித்து, சாதனை சிகரத்தில் கம்பீரமாக அமர்ந்துள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












