அக்டோபர் மாதம் பார்க்க வேண்டிய வானியல் நிகழ்வுகள் - எதையெல்லாம் வெறும் கண்ணில் காணலாம்?

பட மூலாதாரம், Getty Images
அக்டோபர் மாதத்தில் ஏற்படவிருக்கும் முக்கிய வானியல் நிகழ்வுகள் குறித்து இங்கு விவரிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாத தொடக்கத்தில் வியாழன் கோளை நிலா மறைக்கும் நிகழ்வு பலரது ஆர்வத்தையும் தூண்டியது. அந்நிகழ்வை பார்க்கத் தவறியவர்கள், இந்த மாதம் அடுத்து நடைபெறவுள்ள நிகழ்வுகள் குறித்து தெரிந்துக் கொள்ளலாம்.
அக்டோபர் 8: டிராகோனிட் விண்கல் மழை
விண்வெளியில் பூமி பயணிக்கும்போது, ஒரு வால் நட்சத்திரம் விட்டுச் சென்ற தூசி மற்றும் சிறிய கற்துகள்களின் பாதையை கடக்கிறது என்று நினைத்துக் கொள்ளுங்கள். அந்தத் துகள்கள் பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும்போது எரிந்து, வானில் ஒளிக் கீற்றுகளாகத் தோன்றும். இதைத்தான் நாம் "எரிநட்சத்திரம்" அல்லது "விண்கல்" (meteor) என்று சொல்கிறோம். பல விண்கற்கள் ஒரே காலகட்டத்தில் தோன்றி வானில் ஒளிக்கீற்றுகளாகப் பாய்வதையே விண்கல் மழை என்று அழைக்கிறார்கள்.
டிராகோனிட் விண்கல் மழைக்கு காரணம் 21P/Giacobini-Zinner என்ற வால் நட்சத்திரம். பூமி அந்த வால் நட்சத்திரத்தின் தூசிப் பாதையைக் கடக்கும்போது விண்கல் பொழிவு ஏற்படுகிறது. இந்த விண்கற்கள் அனைத்தும் வானிலுள்ள Draco (டிராகோ) என்ற "டிராகன்" நட்சத்திரக் கூட்டத்தில் இருந்து வருவது போலத் தோன்றும். இதனால்தான் இந்த விண்கல் மழைக்கு "டிராகோனிட்" என்று பெயர் வந்தது.

பட மூலாதாரம், Getty Images
"பூமி அந்த விண்கல் தூசி பாதையில் ஒவ்வோர் ஆண்டும் பொதுவாக அதே நேரத்தில்தான் கடக்கும். எனவே இந்த விண்கல் பொழிவுகளை ஒவ்வோர் ஆண்டும் அதே நாட்களில் எதிர்ப்பார்க்கலாம். இதைப் பார்க்க தொலைநோக்கி அல்லது பைனாகுலர் தேவைப்படாது. வெறும் கண்களால் பார்த்தாலே போதும்" என்றார் மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்கு வானியல் கற்று தரும் ஸ்பேஸ் இந்தியா அமைப்பின் மூத்த பயிற்றுநர் பிரியதர்ஷினி.
விண்கற்கள் வானின் எந்தப் பகுதியிலும் தோன்றக்கூடும் என்பதால், முழு வானத்தையும் காணும் வகையில் வெறும் கண்களால் பார்ப்பதுதான் சிறந்தது என்று வானியல் அறிஞர்கள் கூறுகின்றனர். பெரும்பாலான விண்கல் மழைகளை நள்ளிரவுக்குப் பிறகே சிறப்பாகக் காண முடியும். ஆனால் டிராகோனிட் விண்கல் மழை மாலை இருள் படரத் தொடங்கியவுடன் காணப்படும்.
வானம் மேகமில்லாமல் தெளிவாக இருந்தால் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் டிராகோனிட் விண்கல் மழையைக் காண முடியும். பொதுவாக ஒரு மணிநேரத்தில் சில விண்கற்களையே காண முடியும். ஆனால் அரிதாக சில ஆண்டுகளில், நூற்றுக்கணக்கான விண்கற்கள் ஒரே மணிநேரத்தில் தோன்றும் "விண்கல் புயல்" (meteor storm) ஆகவும் இது மாறியிருக்கிறது.
அக்டோபர் 21,22 - ஓரியோனிட் விண்கல் மழை

பட மூலாதாரம், Getty Images
ஆண்டுதோறும் நடைபெறும் பிரபலமான விண்கல் மழைகளில் ஒன்று ஓரியோனிட் விண்கல் மழை. இந்த விண்கற்கள் வானிலுள்ள Orion (ஓரியன்) நட்சத்திரக் கூட்டத்தின் திசையில் இருந்து வருவது போலத் தோன்றும். அதனால் இதற்கு "ஓரியோனிட்" என்று பெயர் வந்தது.
ஓரியோனிட் விண்கல் மழைக்குக் காரணம் உலகப் புகழ்பெற்ற ஹேலியின் வால் நட்சத்திரம் (Halley's Comet). இந்த வால் நட்சத்திரம் விட்டுச் செல்லும் தூசி மற்றும் கற்களை கடக்கும்போது, அந்தத் துகள்கள் வளிமண்டலத்தில் எரிந்து ஒளிக் கீற்றுகளாக மாறுகின்றன. அதுவே ஓரியோனிட் விண்கல் மழையாகத் தெரிகிறது. ஓரியோனிட் விண்கல் மழை ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் தொடக்கம் முதல் நவம்பர் தொடக்கம் வரை காணப்படும். அதிகபட்ச விண்கற்கள் அக்டோபர் 21 அல்லது 22ஆம் தேதிகளில் தெரியும். இந்த விண்கல் மழையையும் வெறும் கண்களால் பார்க்க முடியும்.
ஓரியோனிட் விண்கற்கள் மிகவும் வேகமாக நகரும். அதனால் "அவை நீண்ட ஒளிக் கீற்றுகளையும் சில நேரங்களில் 'நெருப்புப் பந்துகள்' (fireballs) போலப் பிரகாசமான காட்சிகளையும் உருவாக்கும்" என்கிறார் இரவு வானை காணும் நிகழ்வுகளை ஒருங்கிணைத்து வரும் சென்னை அஸ்ட்ரானமி கிளப் என்ற அமைப்பின் அறங்காவலர் சிவசுப்ரமணியம்.
இந்தியாவில் ஓரியோனிட் விண்கல் மழை பல இடங்களில் தெரியக் கூடும். நள்ளிரவுக்குப் பிறகு முதல் விடியற்காலை வரை இதை வானில் காணலாம். "அமாவாசைக்கு ஓரிரு நாட்கள் முன்பு டிராகோனிட் விண்கல் மழை நிகழ்கிறது. வானம் அதிக இருள் சூழ்ந்திருக்கும் நேரம் என்பதால் இதைப் பார்ப்பதற்கு அதிக வாய்ப்பு இருக்கலாம். எனினும் டிசம்பர் மாதம் நிகழும் இதே போன்ற ஒன்றான ஜெமினிட் நிகழ்வு இன்னும் நன்றாக வானில் தெரியும்" என்றார் சிவசுப்ரமணியம்.
அக்டோபர் 27-28: 'நிலா - பிளியாடீஸ் சந்திப்பு'

பட மூலாதாரம், Getty Images
இது விண்கல் மழை போன்ற நிகழ்வு அல்ல. வானில் நிலாவும், பிளியாடீஸ் எனப்படும் ஒரு நட்சத்திரக் கூட்டமும் ஒன்றுக்கொன்று மிகவும் அருகில் இருப்பது போலத் தோன்றும் ஒரு அழகான வானியல் நிகழ்வு. இந்த நிகழ்வு 'நிலா - பிளியாடீஸ் சந்திப்பு' (Moon–Pleiades) என அழைக்கப்படுகிறது.
"வானைப் பார்ப்பவர்களுக்கு, நிலா "ஏழு சகோதரிகள்" என்று அழைக்கப்படும் பிளியாடீஸ் நட்சத்திரக் கூட்டத்தை நெருங்குவது போலத் தோன்றும்" என்கிறார் ப்ரியதர்ஷினி. நிலா பூமியைச் சுற்றி வருகிறது. அந்தப் பயணத்தின்போது ஒவ்வொரு மாதமும் பல நட்சத்திரங்கள் மற்றும் கோள்களின் அருகே செல்வது போல நமக்குத் தோன்றும்.
அக்டோபர் 27-28 அன்று, "நிலா தனது சுற்றுப்பாதையில் நகரும்போது பிளியாடீஸ் நட்சத்திரக் கூட்டத்திற்கு மிக அருகில் தோன்றும். ஆனால் உண்மையில் அவை அருகில் இல்லை. வானில் பிரகாசமான நிலாவுக்கு அருகில் சிறிய நட்சத்திரக் கொத்து போன்ற ஒன்றைக் காண்பீர்கள். அதுவே பிளியாடீஸ். பலருக்கு வெறும் கண்களால் 6 அல்லது 7 நட்சத்திரங்கள் மட்டுமே தெளிவாகத் தெரியும். ஆனால் தொலைநோக்கி மூலம் பார்க்கும்போது இன்னும் பல நட்சத்திரங்களைத் தெளிவாகக் காண முடியும்" என்றார் ப்ரியதர்ஷினி.
நிலா பூமியிலிருந்து சுமார் 3.84 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. பிளியாடீஸ் நட்சத்திரக் கூட்டம் பூமியில் இருந்து நூற்றுக்கணக்கான ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது. நமக்குப் பார்ப்பதற்கு மட்டும் அவை அருகருகே இருப்பது போலத் தோன்றுகின்றன என்று அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா குறிப்பிடுகிறது.
நிலா பூமியை சுமார் 27 நாட்களுக்கு ஒருமுறை சுற்றி வருவதால், பிளியாடீஸ் அருகே நிலா தோன்றும் நிகழ்வு ஆண்டுதோறும் பல முறை நிகழ்கிறது. ஆனால் ஒவ்வொரு முறையும் நிலாவின் நிலை, நேரம் மற்றும் பார்வைச் சூழல் மாறுபடும். அக்டோபர் 27-28 நிகழ்வு வானில் மிக எளிதாகக் காணக்கூடிய அழகான சந்திப்பாகக் கருதப்படுகிறது. பிளியாடீஸ் உலகின் பெரும்பாலான பகுதிகளில் இருந்தும், இந்தியாவில் இருந்தும் தெளிவாகப் பார்க்கக்கூடிய நட்சத்திரக் கூட்டம். அக்டோபர் 27 மாலை முதல் 28 அதிகாலை வரை, கிழக்குத் திசையில் வானைக் கவனித்தால் இந்நிகழ்வு தென்படும்.
அக்டோபர் 12-13: புதன் - நிலா சந்திப்பு

பட மூலாதாரம், Getty Images
இதுவொரு கிரகணம் அல்ல, விண்கல் மழையும் அல்ல. இந்த நிகழ்வில் நிலாவும், சூரியனுக்கு மிக அருகிலுள்ள, சூரிய குடும்பத்தின் மிகச் சிறிய கிரகமுமான புதனும் வானில் ஒன்றுக்கொன்று மிகவும் அருகில் இருப்பது போலத் தோன்றும். வானில் மெலிதான பிறை நிலாவின் அருகே ஒரு சிறிய பிரகாசமான புள்ளி இருப்பது போலத் தெரியும். அந்தப் புள்ளியே புதன் கிரகம்.
சூரியனுக்கு மிக அருகில் இருப்பதால் புதனைப் பார்ப்பது எளிதல்ல. அது பொதுவாக சூரிய உதயத்திற்கு முன்போ அல்லது சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகோ சிறிது நேரம் மட்டுமே தெரியும். ஆனால் நிலா அதற்கருகே தோன்றும்போது, புதனை அடையாளம் காண்பது எளிதாகிறது.
நிலா பூமியைச் சுற்றி வருகிறது. அதே நேரத்தில், புதன் கிரகமும் சூரியனைச் சுற்றி வருகிறது. இவை இரண்டும் தங்களுடைய பாதைகளில் நகரும்போது, சில நேரங்களில் பூமியில் இருந்து பார்க்கும்போது அவை ஒன்றுக்கொன்று அருகில் இருப்பது போலத் தோன்றும். ஆனால் உண்மையில் அவை அருகில் இல்லை. நிலா பூமியில் இருந்து சுமார் 3.84 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. புதன் கிரகம் கோடிக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
நிலா ஒவ்வொரு மாதமும் தனது சுற்றுப்பாதையில் பயணிக்கும்போது பல கிரகங்களின் அருகே செல்வது போலத் தெரியும். எனவே நிலா-புதன் சந்திப்பு ஆண்டுக்குப் பல முறை நிகழ்கிறது. "நிலா மெல்லிய பிறையாக இருக்கும். புதனும் அடிவானத்தில் மிகவும் கீழே இருக்கும். எனவே இதை எளிதாக வெறும் கண்களால் பார்க்க முடியாது. மேகங்கள் இல்லாமல் இருந்தால் தெரிய வாய்ப்புள்ளது" என்றார் சிவசுப்ரமணியம்.
"இந்த நிகழ்வை தொலைநோக்கியில் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். ரம்மியமான வானியல் புகைப்படங்கள் எடுக்கலாம்" என்றார் ப்ரியதர்ஷினி. இது போன்ற வானியல் நிகழ்வுகளைக் காண பொதுவாக நகர விளக்குகள் குறைவாக இருக்கும் பகுதியைத் தேர்வு செய்ய வேண்டும் என்றும், 15-20 நிமிடங்கள் இருளுக்கு கண்கள் பழகிய பிறகு நிகழ்வைப் பார்த்தால் சிறப்பாக இருக்கும் என்றும் வானியல் நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு




























