இந்தியாவிடம் பாகிஸ்தான் மீண்டும் தோல்வி பற்றி முன்னாள் வீரர்கள் என்ன சொல்கிறார்கள்?
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி என்றாலே எப்போதும் பரபரப்புக்குப் பஞ்சம் இருக்காது. அதேபோல்தான் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியும் அமைந்துள்ளது.
போட்டிக்குப் பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், பாகிஸ்தான் அணி சவாலான போட்டியாளராக இல்லை என்கிற வகையில் பேசினார்.
இது ஒருபுறமிருக்க, பாகிஸ்தான் முன்னாள் வீரர்களான வாசிம் அக்ரமும், ஷோயிப் அக்தரும் பாகிஸ்தான் அணியைக் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
போட்டியில் நடந்தது என்ன? பாகிஸ்தானைப் பற்றி அந்த அணியின் முன்னாள் வீரர்கள் கூறியது என்ன?
துபையில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆசியக் கோப்பை சூப்பர் 4 போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழப்பிற்கு 171 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஃபர்ஹான் 45 பந்துகளில் 58 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் ஷிவம் துபே 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
பின்னர் களமிறங்கிய இந்திய அணி, 18.5 ஓவரில் 174 ரன் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடக்கம் முதல் அதிரடியாக ஆடிய அபிஷேக் சர்மா 39 பந்துகளில் 74 ரன்களை விளாசினார்.
கை குலுக்காத வீரர்கள்
லீக் சுற்றைப் போலவே, இந்தப் போட்டியிலும் டாஸ் முதல் கடைசி வரை இந்தியா - பாகிஸ்தான் வீரர்கள் கைகுலுக்கிக் கொள்ளவில்லை.
அபிஷேக் - ரவுஃப் உரசல்
இந்திய அணி பேட்டிங் செய்த போது, அபிஷேக் ஷர்மாவுக்கும் பாகிஸ்தான் வீரர் ஹரிஷ் ரவுஃப்-க்கும் இடையே உரசல் ஏற்பட்டது. சுப்மன் கில் அவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தினார்.
போட்டிக்கு பின் இதைப் பற்றி பேசிய அபிஷேக் ஷர்மா 'காரணமின்றி அவர்கள் எங்களை சீண்டியது எனக்கு பிடிக்கவில்லை, அதனால்தான் அவர்களை சீண்ட வேண்டி இருந்தது' என்றார்.
சூர்ய குமார் என்ன சொன்னார்?
போட்டிக்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் பேசிய இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே எந்தப் போட்டியும் இல்லை என்றும், அதைப் பற்றி கேள்வி எழுப்புவதை நிறுத்த வேண்டும் என்றும் கூறினார்.
பாகிஸ்தான் இந்தியாவுக்கு சவால் தரும் போட்டியாளர் இல்லை என்று கூறிய சூர்யகுமார், "என்னைப் பொருத்தவரை இரு அணிகள் 15-20 போட்டிகள் விளையாடி, ஒரு அணி 7-8 என்கிற கணக்கில் முடிவுகள் அமைந்தால் அதை நல்ல கிரிக்கெட் எனச் சொல்லலாம். ஆனால் 13-0, 10-1 (சரியான எண்கள் எனக்கு தெரியவில்லை) என முடிவுகள் இருந்தால் அது சரியான போட்டியல்ல." எனத் தெரிவித்தார்.
பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் கூறியது என்ன?
பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அகா பேசுகையில், "பவர் பிளேவை எங்களை விட இந்திய வீரர்கள் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார்கள். எங்கள் அணியின் பவுலர்கள் அதிக அளவு ரன்களை விட்டுக் கொடுத்தார்கள். அதை நாங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும் என நினைக்கின்றோம்." என்றார்.
சோனி லைவ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய பாகிஸ்தானின் முன்னாள் நட்சத்திரம் வாசிம் அக்ரம், "பாகிஸ்தான் இப்படி விளையாடுவதைப் பார்ப்பதற்கு கடினமாக உள்ளது. கடந்த 4-5 ஆண்டுகளாக பாகிஸ்தான் அணியால் இந்திய அணியுடன் போட்டியிட முடிவதில்லை." என்று தெரிவித்தார்.
பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷோயிப் அக்தர், பாகிஸ்தான் அணியின் தேர்வு பற்றியும், அணியின் செயல்பாடு குறித்தும் விமர்சித்தார்.
டப்மேட் ஓடிடி தளத்தில் பேசிய அவர், "அணி நிர்வாகம் என்ன நினைக்கிறது என்று எனக்கு உண்மையில் புரியவில்லை. தவறான முடிவுகள் மீண்டும் மீண்டும் எடுக்கப்படுகின்றன. மிடில் ஆர்டர் சரியாகத் திட்டமிடப்படவில்லை, பவர்பிளேவும் திறம்படப் பயன்படுத்தப்படவில்லை." என்றார்.
மேலும், "பவுலர்களையும் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தவில்லை. சரியான ஒருங்கிணைப்பு இல்லை. பந்துவீச்சில் சரியான லைன் அன்ட் லென்த் இல்லை. பவுன்சர் வீசி பவுலிங்கை தொடங்கினர், பின்னர் விஷயங்கள் மோசமாகிக் கொண்டே இருந்தன." என அவர் கூறினார்.
இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி பாராட்டு
இந்திய அணி அனைத்துத் துறைகளிலும் பாகிஸ்தான் அணியை விட வலுவாக இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி கூறுகிறார்.
"பாகிஸ்தான் அணியால் சரியான நேரத்தில் விக்கெட் எடுக்க முடியவில்லை. அபிஷேக் சர்மா பேட்டிங் செய்யத் தொடங்கிய உடனே பாகிஸ்தான் கையிலிருந்து போட்டி விலகிச் சென்றது. இந்திய அணி மிக வலுவாக உள்ளது" எனத் தெரிவித்தார் ரவி சாஸ்திரி.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



