கோவை ஆனைகட்டியில் ரிசார்ட்களால் காட்டுயானைகள், பழங்குடி மக்களுக்கு பாதிப்பா?

    • எழுதியவர், சேவியர் செல்வகுமார்
    • பதவி, பிபிசி தமிழ்

கோவை ஆனைகட்டி பகுதியில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள ரிசார்ட்கள் மற்றும் பண்ணை விடுதிகளால் யானைகள் வழித்தடம் பாதிக்கப்படுவதாகவும், யானை–மனித மோதலுக்கு இதுவும் ஒரு முக்கியக் காரணமாக இருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக உயர்நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் ரிசார்ட்களுக்கு நகர ஊரமைப்புத்துறை மற்றும் கிராம ஊராட்சி நிர்வாகத்திடமிருந்து நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

பழங்குடியினரின் நிலங்களும் முறைகேடாக வாங்கப்பட்டு, அவற்றிலும் ரிசார்ட்கள் கட்டப்படுவதாக பழங்குடியினர் அமைப்புகள் குற்றம்சாட்டுகின்றன.

தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை பிபிசியிடம் பேசிய ரிசார்ட் நிர்வாகங்கள் மறுத்தன.

ஆனைகட்டி பகுதியில் யானை வழித்தடம் இருப்பது இதுவரை இறுதி செய்யப்படவில்லை என்றும், தங்கள் துறையிடம் தடையின்மைச் சான்று பெறாவிட்டாலும் அந்த கட்டடங்களின் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என்றும் வனத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்த நோட்டீஸ்களில் கிடைக்கும் தகவலின் அடிப்படையில், அனுமதியற்ற கட்டடங்கள் முறைப்படுத்தப்படும் அல்லது இடிக்கப்படும் என்று நகர ஊரமைப்புத்துறை தெரிவிக்கிறது.

திரும்பிய திசையெல்லாம் ரிசார்ட் விளம்பரங்கள்!

கோவை மாவட்டத்தில், ஆனைகட்டி மலைப்பகுதி, தமிழக–கேரள எல்லைப்பகுதியாக அமைந்துள்ளது. தடாகம் சாலை வழியாக இந்த மலைப்பகுதியைக் கடந்து சென்றால், பாலக்காடு மாவட்டத்தின் மன்னார்காடு, அட்டப்பாடி, அகழி, முக்காலி ஆகிய பகுதிகளை அடையலாம். ஆனைகட்டி பகுதி, இவ்விரு மாநிலங்களின் சாலைகள் மற்றும் வனப் பகுதிகளுக்கான சந்திப்புப் பகுதியாகவுள்ளது. ஆனைகட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், 20க்கும் மேற்பட்ட இருளர் இன பழங்குடியின மக்கள் வாழும் கிராமங்கள் உள்ளன.

இயற்கை எழில் சூழ்ந்த இந்த உயரம் குறைவான மலைப்பகுதியில் வனப்பகுதியும், பட்டா நிலங்களும் கலந்துள்ளன. இந்தப் பகுதியில்தான், மத்திய அரசின் சலீம்அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையம் (SACON-Salim Ali Centre for Ornithology and Natural History), கார்ல் க்யூபல் கல்வி பயிற்சி மையம், சுவாமி தயானந்த சரஸ்வதி ஆசிரமம் போன்றவை அமைந்துள்ளன.

சமீபகாலமாக சூழல் சுற்றுலா என்ற தனியார் ரிசார்ட்களின் வசீகர விளம்பரங்களால் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பதால் இப்பகுதியில் சுற்றுலா சார்ந்து தொழில்களும் பெருகி வருகின்றன.

இதனால் பலருக்கு வேலைவாய்ப்பு, வருவாய் கிடைக்கிறது என்றாலும், இந்த ரிசார்ட்கள் உள்ளிட்ட வணிகக் கட்டடங்களால் பழங்குடியினரின் உரிமையும், சொத்துகளும் பறிபோவதாகச் சொல்கிறார் கோவை மாவட்ட இருளர் சமூக நலச்சங்கத்தின் தலைவர் மல்லன். தடாகம் பள்ளத்தாக்கில் யானை வழித்தடத்தில் அமைந்துள்ள செங்கல் சூளைகளை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி உயர்நீதிமன்றத்தில் இவரும் தனியாக மனு தாக்கல் செய்திருந்தார்.

''இங்குள்ள இருளர் பழங்குடியினருக்கு, 1918 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் 5–10 ஏக்கர் வரை நிலத்துக்கு இலவசப்பட்டா வழங்கப்பட்டது. அந்த நிலங்களில் எங்கள் மக்கள் விவசாயம் செய்து வந்தனர். சோளம், கேழ்வரகு (ராகி) போன்றவை ஏராளமாக விளைந்த பகுதி இது. ஆனால் கடந்த 10–15 ஆண்டுகளில் எங்களின் நிலங்கள், மக்களின் கைகளை விட்டு கைநழுவிப் போய்க் கொண்டிருக்கின்றன.'' என்று பிபிசியிடம் தெரிவித்தார் மல்லன்.

''தமிழகம், கேரளா ஆகிய இரு மாநிலங்களிலும் ஏராளமான சிவில் வழக்குகள் நடக்கின்றன. கோவை மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காததால்தான் நீதிமன்றத்தை நாடினேன். யானை வழித்தடம் மறிப்பு, பழங்குடியினர் நிலம் அபகரிப்பு இரண்டையும் சுட்டிக்காட்டி அவற்றை மீட்க வேண்டுமென்பதே என் கோரிக்கை.'' என்கிறார் அவர்.

பிபிசி தமிழிடம் பேசிய பழங்குடியினர் பலரும் இதே கருத்தைத் தெரிவித்தனர். பல தலைமுறைகளாக தங்களிடம் இருந்த நிலங்கள், கடந்த சில ஆண்டுகளாக கட்டடங்களாக மாறிவருவதாக அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில்தான் சுற்றுச்சூழல் ஆர்வலர் முரளீதரன் என்பவர், ஆனைகட்டியில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள ரிசார்ட்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, பொதுநல மனு தாக்கல் செய்தார். அது உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது. தடாகம் பள்ளத்தாக்கிலுள்ள செங்கல் சூளைகளால் யானை வழித்தடம் பாதிக்கப்படுவதாக, கடந்த 2019 ஆம் ஆண்டில் இவர் தாக்கல் செய்திருந்த மனுவுடன் இந்த வழக்கும் இணைக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் யானை வழித்தடத்தில் இருந்ததாக நீதிமன்ற உத்தரவால் மூடப்பட்ட ரிசார்ட்கள், சமீபகாலமாக கோவை ஆனைகட்டி பகுதியில் காளான்களைப் போல முளைத்து வருவதாகத் தனது மனுவில் தெரிவித்துள்ள முரளீதரன், இதற்கு கோவை மாவட்ட வன அலுவலர் உள்ளிட்ட வனத்துறையினர் உதவுவதாகக் குற்றம்சாட்டியுள்ளார். சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள இந்த ரிசார்ட்களை மூடுவதற்கும், இடிப்பதற்கும் உத்தரவிட வேண்டுமென்று அவர் தனது மனுவில் கோரியுள்ளார்.

தமிழக வனத்துறையின் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர், முதல் பிரதிவாதியாக சேர்க்கப்பட்டுள்ள இந்த மனுவில், கோவை மாவட்ட ஆட்சியர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய முதன்மை செயலாளர் அல்லது தலைவர் ஆகியோரும் இதற்குப் பதிலளிக்க வேண்டியவர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

''நீதிபதிகளின் நேரடி கள ஆய்வில் உண்மை வெளிவரும்!''

ஆனால் ஆனைகட்டி பகுதியில் யானை வழித்தடம் இருப்பதே இதுவரை இறுதி செய்யப்படவில்லை என்கிறார் கோவை மண்டல தலைமை வனப்பாதுகாவலரும், ஆனைமலை புலிகள் காப்பகக் கள இயக்குநருமான வெங்கடேஷ்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், ''தடையின்மைச் சான்று தரவோ, மறுக்கவோ வனத்துறைக்கு அதிகாரம் உள்ளது. ஆனால் இந்த கட்டடங்களுக்கு திட்ட அனுமதி தருவது நகர ஊரமைப்புத்துறைதான். இதைத்தான் நீதிமன்றத்தில் எங்களது தரப்பு பதிலாக டி.எப்.ஓ. சமர்ப்பித்துள்ளார்.'' என்றார்.

இந்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள ரிசார்ட்கள் மற்றும் பண்ணை விடுதிகள் உள்ளிட்ட கட்டடங்கள் அமைந்துள்ள ஆனைகட்டி மலைப்பகுதி, வீரபாண்டி கிராம ஊராட்சிக்குட்பட்டதாகும். இந்த பகுதி, மலையிட பாதுகாப்புக்குழும (HACA-Hill Area Conservation Authority) எல்லைக்குள் இருப்பதால், இங்கு பெரிய கட்டடங்கள் கட்டுவதற்கு வனத்துறை, வருவாய்த்துறை, கனிமவளத்துறை மற்றும் வேளாண்துறை என 4 துறைகளில் தடையின்மைச் சான்று பெற்ற பின், அதை வைத்தே நகர ஊரமைப்புத்துறை திட்ட அனுமதி வழங்கும்.

அதுமட்டுமின்றி, ஆனைகட்டி சுற்றுச்சூழல் உணர்திறன் பகுதி (Ecological Sensitive Area) என்று வரையறுக்கப்பட்டுள்ளதாலும் இப்பகுதிகளில் பெரிய கட்டடங்கள் மற்றும் வணிகமயமான நடவடிக்கைகளுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இவையனைத்தும் மீறப்படடிருப்பதாகக் கூறியே, தமிழக அரசுக்கு எதிராக பல தரப்பினராலும் 13 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள முரளீதரன், ''அது 'ஹாகா' ஏரியா என்பதால் அதற்குரிய விதிமுறைகளைக் கடைபிடித்திருக்க வேண்டும். அவையனைத்தும் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளன. எங்கள் மனுக்களின் மீதான விசாரணையின் அடிப்படையில்தான், நீதிபதிகள் வரும் செப்டம்பர் 5 மற்றும் 6 ஆகிய இரு நாட்களும் கோவையில் களஆய்வு மேற்கொள்கின்றனர். அன்று இந்த ரிசார்ட்களையும் கண்டிப்பாக ஆய்வு செய்வார்கள். அப்போது எல்லா உண்மைகளும் வெளிவரும்.'' என்று பிபிசியிடம் தெரிவித்தார்.

பிபிசியிடம் பேசிய தடாகம் பள்ளத்தாக்கு பாதுகாப்புக்குழுத் தலைவர் கணேஷ், ''மாதவராவ் மற்றும் காட்கில் குழுக்களின் அறிக்கைப்படி, ஆனைகட்டி, தடாகம் பள்ளத்தாக்கின் வழியாக யானைகள் கேரளாவிலிருந்து தமிழகத்திற்குள் வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வழி தடைபட்டதால்தான் யானைகள் ஊர்களுக்குள் ஊடுருவுவது அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி சுற்றுச்சூழல் உணர்திறன் பகுதி என்ற அடிப்படையிலும் இந்த கட்டடங்களை வனத்துறை தடுத்திருக்க வேண்டும். '' என்கிறார். தடாகம் பள்ளத்தாக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்கில் இவரும் மனுதாரர்களில் ஒருவர்.

சூழலியல் பாதிப்பு, யானை உள்ளிட்ட காட்டுயிர்களுக்கான வழித்தடம் மற்றும் வாழ்விடங்கள் மறிப்பு என பல்வேறு குற்றச்சாட்டுகளும் அடுக்கப்படும் நிலையில், இவற்றை விட இப்பகுதியிலுள்ள பழங்குடியினருக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளே அதிகம் என்கிறார் சமூக செயற்பாட்டாளரான மேக் மோகன். வருவாய்த்துறை ஆவணங்களில் இப்போதும் பழங்குடியினர் நிலங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ள பெரும்பாலான நிலங்கள், தற்போது வெவ்வேறு சமுதாயத்தினரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக அவர் கூறுகிறார்.

''சூழல் சுற்றுலா என்ற பதமே இங்கு தவறாகக் கையாளப்படுகிறது. உண்மையில் சூழல் சுற்றுலா என்றால் உள்ளூர் சூழலைக் கெடுக்காமல், உள்ளூர் உணவைக் கொடுத்து, உள்ளூர் மக்களுக்கு வருவாய்க்கும், வேலைவாய்ப்புக்கும் ஏற்பாடு செய்துதர வேண்டும். தண்ணீர் கூட வெளியிலிருந்து வரக்கூடாது. உதாரணமாக ஒரு சுற்றுலாப்பயணி ஆயிரம் ரூபாய் செலவு செய்தால் அதில் 800 ரூபாய் உள்ளூர் மக்களுக்கு சென்று சேரும் வகையில் இருக்க வேண்டும். இங்கே அப்படி எதுவுமே நடப்பதில்லை.'' என்கிறார் மோகன்.

தொடர்ந்து பேசிய அவர்,'அது மட்டுமின்றி சூழல் சுற்றுலா என்றால் வருகிறவர்களுக்கு சூழலின் முக்கியத்துவத்தை அனுபவப்பூர்வமாக விளக்க வேண்டும். காடு, காட்டுயிர், அங்குள்ள தாவரங்களைப் பற்றி அறிவூட்ட வேண்டும். ஆனால் இங்கேயுள்ள எல்லா ரிசார்ட்களிலும் அவ்வாறு நடப்பதில்லை.'' என்றார்.

ஆனைகட்டியில் எத்தனை ரிசார்ட்கள் உள்ளன?

இந்தப் பகுதியில் 50க்கும் மேற்பட்ட ரிசார்ட்கள் துவக்கப்பட்டிருப்பதாக உயர்நீதிமன்றத்தில் தாக்கலாகியுள்ள மனுவில் கூறப்பட்டுள்ளது. ஆனால் ஆனைகட்டி பகுதியை உள்ளடக்கிய வீரபாண்டி கிராம ஊராட்சியின் செயலாளர் கோபி இதை மறுத்தார். ஆனைகட்டி மலைப்பகுதியில் 8 ரிசார்ட்கள் மட்டுமே செயல்படுவதாக பிபிசி தமிழிடம் கூறிய அவர், மற்ற ரிசார்ட்கள் பெரும்பாலும் கேரள எல்லைக்கு உட்பட்ட இடத்தில் அமைந்துள்ளதாகத் தெரிவிக்கிறார்.

பிபிசி தமிழிடம் பேசிய கிராம ஊராட்சி செயலாளர் கோபி, ''அனைத்து ரிசார்ட்கள் மற்றும் வணிகமயமான பிற கட்டடங்களுக்கும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த ரிசார்ட் நிர்வாகங்கள், பல ஆண்டுகளுக்கு முன்பு முதலில் சிறு அளவில் வாங்கிய திட்ட அனுமதி அளவுக்கே சொத்துவரியும் செலுத்துகின்றன. அதற்குப் பின் பல ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கட்டடம் கட்டியுள்ளன. அதற்காக தனியாக நோட்டீஸ் அனுப்பியுள்ளோம்.'' என்றார்.

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து ரிசார்ட் உரிமையாளர்கள் தரப்பில் பேச முயன்ற போது, ஆனைகட்டி பகுதியில் உள்ள ரிசார்ட்களுக்கு என்று பொதுவான சங்கம் எதுவுமில்லை. ஆகவே, ஆனைகட்டியில் பெரிய அளவில் இரு ரிசார்ட்களை நடத்தி வரும் சந்தோஷ் என்பரிடம் பேசினோம்.

அவர் பேசுகையில், ''எங்கள் 2 ரிசார்ட்களுக்கும் வனத்துறை உட்பட 4 துறைகளில் தடையின்மைச் சான்று பெற்று முறையான திட்ட அனுமதியும் வாங்கியுள்ளோம். ஹாகா விதிகள் எதையும் மீறவில்லை. யானை வழித்தடம் எதுவும் மறிக்கப்படவில்லை. அதேபோன்று சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் எந்த செயலையும் நாங்கள் செய்வதில்லை. எங்கள் ரிசார்ட்களில் பணியாற்றுவோரில் 70 சதவீதம் பேர், அதே பகுதியிலுள்ள பழங்குடி மக்கள்தான்.'' என்றார்.

மேலும் அவர் ''இங்கு கூட்டம் நடத்த வரும் டாக்டர்கள், தொழில்முனைவோர் பலரையும் பழங்குடியினர் கிராமங்களுக்கு அழைத்துச் செல்கிறோம். அவர்கள் அங்கே மருத்துவ முகாம் நடத்துகின்றனர். அவர்கள் குழந்தைகள் கல்விக்கும், அவர்களின் உடல்நலத்துக்கும் உதவுகின்றனர். சுற்றுலாப் பயணிகளுக்கு இயற்கை விவசாயம் குறித்து கள அனுபவம் வழங்க தனியாக வேளாண் பண்ணையும் வைத்துள்ளோம். '' என்றும் தெரிவித்தார்.

ஆனைகட்டி பகுதியிலுள்ள ரிசார்ட்கள் தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததன் எதிரொலியாக, கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் நகர ஊரமைப்புத்துறைக்கும் நீதிமன்றம் சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதன் எதிரொலியாக, இங்குள்ள ரிசார்ட்கள், பண்ணை விடுதிகள், ஆசிரமக் கட்டடங்கள் மற்றும் தனியார் வணிகக் கட்டடங்கள் அனைத்துக்கும் நகர ஊரமைப்புத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது.

இதுபற்றி பிபிசி தமிழிடம் பேசிய நகர ஊரமைப்புத்துறை கோவை இணை இயக்குநர் புருஷாேத்தமன், ''ஆனைகட்டியில் அனைத்து ரிசார்ட்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். அனைத்துவிதமான ஆவணங்களையும் சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளோம். அதைப் பரிசீலித்தே அந்த கட்டடங்களை முறைப்படுத்துவதா அல்லது இடிப்பதா என்பதை முடிவு செய்ய முடியும். இதில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில்தான் துறை எதையும் தீர்மானிக்கும்.'' என்றார்.

பழங்குடியினரின் நிலங்கள் மற்ற சமுதாயத்தினரால் அபகரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவரிடம் பிபிசி தமிழ் கேட்டபோது, ''ரிசார்ட் கட்டடங்களுக்கு திட்ட அனுமதி இருக்கிறதா என்பதை அறியவே அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்குமாறு நகர ஊரமைப்புத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் சமர்ப்பிக்கும் ஆவணங்களைப் பார்த்தால் பழங்குடியினர் நிலம் அபகரிக்கப்பட்டுள்ளதா என்பதும் தெரிந்துவிடும். அப்படி அபகரிக்கப்பட்டிருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.'' என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு