நியூசிலாந்திடம் படுதோல்வி எதிரொலி - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு சிக்கல்

காணொளிக் குறிப்பு, இந்தியாவின் உத்தியை வைத்து இந்தியாவையே வீழ்த்திய நியூசிலாந்து அணி
நியூசிலாந்திடம் படுதோல்வி எதிரொலி - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு சிக்கல்

இந்திய அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்று நியூசிலாந்து அணி புதிய வரலாறு படைத்தது.

இதுபோன்ற வரலாற்று வெற்றியை நியூசிலாந்து அணியினர் இந்திய மண்ணில் இறங்கியபோது நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள்.

புனே டெஸ்ட் போட்டியைப் போன்று இந்த ஆட்டமும் 3 நாட்களில் முடிந்துள்ளது. மும்பை வான்ஹடே மைதானத்தில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை 25 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது நியூசிலாந்து அணி. 147 ரன்கள் இலக்கைத் துரத்திய இந்திய அணி, 29.1 ஓவர்களில் 121 ரன்களுக்கு ஆட்டமிழந்து, 25 ரன்களில் தோல்வி அடைந்தது.

இந்திய அணி 106 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றியின் விளிம்பில்தான் இருந்தது. ஆனால், கடைசி 4 விக்கெட்டுகளை 15 ரன்களுக்குள் இழந்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி முதல்முறையாக உள்நாட்டில் 2 டெஸ்ட் போட்டிகளுக்கும் அதிகமான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒயிட் வாஷ் ஆவது இதுதான் முதல்முறை. இதற்கு முன் கடைசியாக 2000ஆம் ஆண்டில் மறைந்த ஹன்சி குரோனியே கேப்டன்சியில் இந்தியா வந்த தென் ஆப்பிரிக்கா அணியிடம் 2-0 என்ற கணக்கில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி ஒயிட் வாஷ் ஆகியிருந்தது.

அப்போது இந்திய அணிக்கு சச்சின் டெண்டுல்கர் கேப்டனாக இருந்தார். அதன்பின் 24 ஆண்டுகளுக்குப் பின் ரோஹித் சர்மா கேப்டன்சியில் டெஸ்ட் தொடரில் இந்திய அணி ஒயிட் வாஷ் ஆகியுள்ளது. ஆனால், இது 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் தொடரை இழந்த பிறகு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில், “டெஸ்ட் தொடரையும், போட்டியையும் இழந்தது சாதாரணமான விஷயமில்லை. இதை ஜீரணிக்க முடியாது. நாங்கள் எங்களின் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இந்தத் தொடர் முழுவதும் நியூசிலாந்து அணியினர் சிறப்பாக ஆடினர்," என்று கூறினார்.

தாங்கள் ஏராளமான தவறுகளைச் செய்துவிட்டதாகக் கூறிய ரோஹித் சர்மா, "முதல் இரு டெஸ்ட் போட்டிகளில் முதல் இன்னிங்ஸ்களில் போதுமான ரன்கள் குவிக்கவில்லை. இந்த ஆட்டத்தில் 28 ரன்கள்தான் முன்னிலை பெற்றோம். எளிதான இலக்குதான் அதைக்கூட அடைய முடியவில்லை. அணியாக நாங்கள் தோற்றுவிட்டோம்," என்றார்.

மேலும், "எங்களுக்கு இது உண்மையில் துர்அதிர்ஷ்டமான டெஸ்ட் தொடராக அமைந்தது. ஒரு கேப்டனாக நான் சிறப்பாகச் செயல்படவில்லை. ஓர் அணியாக நாங்கள் தோல்வி அடைந்துவிட்டோம்,” எனத் தெரிவித்தார்.

நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு அந்த அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள்தான் முக்கியக் காரணம். 3வது டெஸ்ட் போட்டியில் அந்த அணியின் நம்பிக்கை பேட்டர்கள் பெரிதாக யாரும் ரன் குவிக்கவில்லை. ஆனால், அந்த அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் அஜாஸ் படேல், கிளென் பிலிப்ஸ், ஈஷ் சோதி ஆகியோர் இந்திய ஆடுகளத்தை நன்கு பயன்படுத்தினர். இரு இன்னிங்ஸிலும் சேர்த்து அஜாஸ் படேல் 11 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

புனே டெஸ்டில் நியூசிலாந்து அணி வெற்றி பெறுவதற்கு அந்த அணியின் மிட்செல் சான்ட்னர் சுழற்பந்துவீச்சாளரின் பங்கு துருப்புச்சீட்டாக இருந்தது. புனே டெஸ்டில் சான்ட்னர் 13 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். அவர் இந்தப் போட்டியி்ல் பங்கேற்கவில்லை.

சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான பிட்சை அமைத்து இந்திய அணி தன்னுடைய சுழற்பந்துவீச்சின் பலத்தை வெளிநாட்டு அணிகளிடம் காண்பித்து வந்தது.

ஆனால், இந்த முறை இந்திய அணியின் ஆயுதத்தையே எடுத்து அவர்களைத் தாக்கும் வித்தையை நியூசிலாந்து அணி பயன்படுத்தியுள்ளது.

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி இழந்ததைத் தொடர்ந்து, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான புள்ளிப் பட்டியலில் 2வது இடத்துக்குச் சரிந்துள்ளது. ஆஸ்திரேலிய அணி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.

இந்திய அணி 14 டெஸ்ட் போட்டிகளில் 5 தோல்வி, 8 வெற்றிகள், ஒரு டிரா என 98 புள்ளிகளுடன், வெற்றி சதவீதம் 58.33 ஆகக் குறைந்துவிட்டது.

இதற்கு முன் ஆஸ்திரேலிய அணியின் 62.50 சதவீதத்தைவிட அதிகமாக இருந்தது. டெஸ்ட் தொடரில் ஒயிட் வாஷ் ஆன பிறகு இந்திய அணியின் வெற்றி சதவீதமும் குறைந்துவிட்டது.

இதனால், இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குச் செல்வதும் கடினமாகியுள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை குறைந்தபட்சம் 4-0 அல்லது 5-0 என்று வென்றால் மட்டுமே இந்திய அணி 3வது முறையாக பைனலுக்கு முன்னேற முடியும்.

ஆனால், ஆஸ்திரேலிய அணியை சொந்த மண்ணில் வைத்து 5-0 என்று வெல்வது சாத்தியமானது அல்ல.

இந்த மாத இறுதியில் ஆஸ்திரேலிய அணியுடன் டெஸ்ட் தொடரில் பங்கேற்க இருக்கும் நிலையில் இந்த டெஸ்ட் தொடர் தோல்வி இந்திய அணிக்குப் பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)