இந்தியாவுக்கு தேவையான பயணிகள் விமானங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்க முடியுமா?

இந்தியா, பயணிகள் விமானம், எஸ்ஜே-100 ஒப்பந்தம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்
    • எழுதியவர், ஜுகல் புரோஹித்
    • பதவி, பிபிசி ஹிந்தி

உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் விமான போக்குவரத்து சந்தைகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது.

சந்தையின் 90 சதவீதத்திற்கும் அதிகமான பங்கைக் கொண்டுள்ள இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா நிறுவனங்கள், அடுத்த பத்தாண்டுகளில் சுமார் 1,500 விமானங்களை வாங்குவதற்கு ஆர்டர் செய்துள்ளன.

இந்த விரிவாக்கமானது உலகளாவிய விமான விநியோகத்தில் 86 சதவீதப் பங்கைக் கொண்டுள்ள போயிங் மற்றும் ஏர்பஸ் நிறுவனங்களையே சார்ந்துள்ளது; 2024-ல் இந்த நிறுவனங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவிலான 'வரலாற்று ரீதியான' விநியோக நிலுவைகளை எதிர்கொண்டன. இது இந்திய ஆர்டர்களையும் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது ஒரு பழைய கேள்வியை மீண்டும் எழுப்பியுள்ளது: இந்தியா தனக்கான சொந்தப் பயணிகள் விமானங்களை உருவாக்க வேண்டுமா?

அக்டோபர் மாதம் இந்தியாவும் ரஷ்யாவும் 'SJ-100' பயணிகள் விமானத்தை இந்தியாவில் தயாரிப்பதற்கான முதற்கட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டபோது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இது உள்நாட்டு விமானத் தயாரிப்பு குறித்த நம்பிக்கையை அதிகரித்தது.

ரஷ்யாவுடனான இந்த ஒப்பந்தம் ஒரு தீர்வாகுமா? கூட்டுத் தயாரிப்புத் திட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பாக இன்னும் பல தடைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

இந்தியா, பயணிகள் விமானம், எஸ்ஜே-100 ஒப்பந்தம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் விமான போக்குவரத்து சந்தைகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது

SJ-100 இரண்டு என்ஜின்களைக் கொண்ட ஒரு விமானமாகும். இது 103 பயணிகள் வரை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது என்றும் இது ஏற்கனவே பல ரஷ்ய விமான நிறுவனங்களின் பயன்பாட்டில் உள்ளது என்றும் அதன் தயாரிப்பாளரான யுனைடெட் ஏர்கிராஃப்ட் கார்ப்பரேஷன் (UAC) கூறுகிறது.

இந்தியா இந்த விமானத்தை ஒரு 'கேம் சேஞ்சர்' என்று விவரித்துள்ளதுடன், இதை குறுகிய தூரப் பயணங்களுக்குப் பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. ஆனால், வல்லுநர்கள் இத்திட்டத்தின் செலவு மற்றும் சாத்தியக்கூறுகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர் - இவை குறித்த பல விவரங்கள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

ரஷ்ய நிறுவனத்தால் இந்தியாவில் விமான உற்பத்தியை மிக விரைவாகத் தொடங்கி, அதை ஒரு பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய முடியுமா என்பதுதான் தற்போது எழுந்துள்ள மிகப்பெரிய சந்தேகமாக உள்ளது.

2008 மற்றும் 2020-க்கு இடைப்பட்ட காலத்தில் சுமார் 200 SJ-100 விமானங்களை விநியோகித்ததாக அதன் தயாரிப்பாளர் கூறுகிறார். ஆனால், 2022-ல் யுக்ரேனுக்கு எதிராக ரஷ்யா போரைத் தொடங்கியபோது அந்த வளர்ச்சிப் பாதையில் மாற்றம் ஏற்பட்டது.

மேற்கத்திய நாடுகளின் தடைகள் மிக முக்கியமான உதிரிபாகங்களின் வரவைத் துண்டித்தன. இதனால் அந்த நிறுவனம் சுமார் 40 தொழில்நுட்ப அமைப்புகளை மாற்ற வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டதுடன், 2023-ல் 'இறக்குமதிக்கு மாற்றாக' உருவாக்கப்பட்ட பொருட்களை பயன்படுத்த வேண்டியிருந்தது

மேலும், ஐரோப்பாவின் விமான பாதுகாப்பு அமைப்பு விமானங்களுக்கான சான்றிதழை ரத்து செய்தது. இதன் விளைவாக SJ-100 மற்றும் பிற ரஷ்ய விமானங்கள் ஐரோப்பிய வான்வெளியில் பறப்பது தடைசெய்யப்பட்டது.

இந்தியா நீண்டகாலமாகப் பயணிகள் விமானங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க முயற்சித்துக்கொண்டிருந்தது, ஆனால் அதில் மிகக் குறைந்த அளவிலான வெற்றியையே பெற்றுள்ளது.

1959-ஆம் ஆண்டில், 'சிறிய மற்றும் நடுத்தர அளவிலான பயணிகள் விமானங்களை' உருவாக்குவதற்காக தேசிய விண்வெளி ஆய்வகத்தை (National Aerospace Laboratories) அரசாங்கம் நிறுவியது.

இந்த நிறுவனம் இரண்டு இருக்கைகள் கொண்ட ஹன்சா மற்றும் ஐந்து இருக்கைகள் கொண்ட பயிற்சி விமானங்களை உருவாக்கியுள்ளது, ஆனால் பெரிய அளவிலான பயணிகள் விமானங்களின் உருவாக்கம் இன்னமும் தொலைவிலேயே உள்ளன.

1960-களில், இந்தியா வெளிநாட்டு உரிமங்களின் கீழ் பயணிகள் விமானங்களைத் தயாரித்தது. அரசுக்குச் சொந்தமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட், பிரிட்டன் வடிவமைப்பான 'அவ்ரோ 748' ரகத்தில் பல விமானங்களைத் தயாரித்தது. இவை பயன்பாட்டிலிருந்து நீக்கப்படுவதற்கு முன்பு வரை வணிக ரீதியிலான விமான நிறுவனங்களாலும் ராணுவத்தாலும் பயன்படுத்தப்பட்டன.

1980-களில், 19 இருக்கைகள் கொண்ட பயணிகள் விமானத்தைத் தயாரிப்பதற்காக ஜெர்மனியின் டோர்னியர் நிறுவனத்துடன் இந்தியா கைகோர்த்தது. அவற்றில் சில விமானங்கள் இன்றும் ராணுவத்திலும், குறிப்பிட்ட சில சிவில் பயன்பாட்டிலும் உள்ளன.

இதையடுத்து, இந்தியா தனது சொந்த சிறியப் பயணிகள் விமானங்களை உள்நாட்டிலேயே சுயமாக வடிவமைக்கவும் முயன்றது.

இந்தியா, பயணிகள் விமானம், எஸ்ஜே-100 ஒப்பந்தம்

பட மூலாதாரம், Hindustan Times via Getty Images

படக்குறிப்பு, கடந்த மாதம் இண்டிகோ நிறுவனம் விமானங்களை ரத்து செய்ததைத் தொடர்ந்து, பல்வேறு விமான நிலையங்களில் ஆயிரக்கணக்கான பயணிகள் சிக்கித் தவித்தனர்.

2000-ஆம் ஆண்டில், NAL-இன் 15 இருக்கைகள் கொண்ட சரஸ் விமானத்தைத் தயாரிப்பதற்கு உதவி கோரி ரஷ்யாவுடன் இந்தியா ஓர் ஒப்பந்தம் செய்தது. அந்த விமானம் 2004 மே மாதத்தில் தனது முதல் பயணத்தை மேற்கொண்டது; ஆனால் 2009-ல் அதன் இரண்டாவது முன்மாதிரி விமானம் விபத்துக்குள்ளாகி மூன்று விமான ஓட்டிகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அந்தத் திட்டம் முடங்கியது.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, இந்திய அரசாங்கம் இத்திட்டத்தை மீண்டும் புதுப்பித்து, 19 இருக்கைகள் கொண்ட 'சரஸ் எம்கே2' என்ற அடுத்த முன்மாதிரி விமானத்தை உருவாக்கியது; இருப்பினும், இது சான்றளிப்பிற்காக காத்திருக்கிறது.

மற்றொரு திட்டமான பிராந்திய போக்குவரத்து விமானம் திட்டமும், பல ஆண்டுகளாக மிகக் குறைந்த அளவிலான முன்னேற்றத்தையே கண்டுள்ளது. ரஷ்யாவின் SJ-100 விமானத்திற்கு இணையான 90 இருக்கைகள் கொண்ட இந்த விமானத்திற்கான அறிக்கைகள் 2011-லேயே சமர்ப்பிக்கப்பட்டன; ஆனால் அதன் பிறகு இதில் பெரிய முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.

இந்தியாவில் விமானத் தயாரிப்புத் துறை நீண்டகாலமாகப் பல தடைகளைச் சந்தித்து வருவதாக விமானப் போக்குவரத்துத் துறை வல்லுநர்கள் கூறுகின்றனர்.

சமீபகாலம் வரை 'உள்நாட்டில் பெரிய அளவிலான தேவை இல்லாதது', உயர் தகுதி வாய்ந்த மனிதவளப் பற்றாக்குறை மற்றும் மிகச்சிறிய அளவிலான உள்நாட்டு உற்பத்திச் சூழல் ஆகியவை இத்துறையின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தியுள்ளதாக NAL-இன் இயக்குனர் முனைவர் அபய் பாஷில்கர் சுட்டிக்காட்டுகிறார்.

இதற்கான தீர்வு 'இந்திய மற்றும் உலகளாவிய உற்பத்தியாளர்களுடன் இணைந்து செயல்படுவதுதான்' என்று அவர் மேலும் கூறுகிறார்.

SJ-100 திட்டம் உண்மையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் காரணியாக அமையுமா?

இந்தியா, பயணிகள் விமானம், எஸ்ஜே-100 ஒப்பந்தம்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

தற்போதைக்கு, அது அப்படித்தான் தோன்றுகிறது.

இந்தத் திட்டம் ஒரு 'நடைமுறைச் சாத்தியமான அணுகுமுறையை' வழங்குகிறது என்று இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்டின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் கோபால் சுதார் கூறுகிறார்.

ரஷ்யாவை பொறுத்தவரை, SJ-100 விமானத்திற்குப் பரவலான அங்கீகாரம் கிடைப்பது, மேற்கத்திய தொழில்நுட்பம் இல்லாமலேயே தங்களால் ஒரு பயணிகள் விமானத்தைத் தயாரிக்க முடியும் என்பதை நிரூபிக்கிறது.

இந்த ஒப்பந்தம் சில சமரசங்களுடனேயே வருகிறது. மேலும் இது இந்தியா விமானத் தயாரிப்பின் எதிர்காலம் குறித்த கேள்விகளையும் எழுப்புகிறது; இருப்பினும், இந்தியாவின் 'உறுதியான ஆதரவாளராக' ரஷ்யாவின் பங்கு இப்போதும் மிக முக்கியமானது என்று சுதார் போன்ற வல்லுநர்கள் வாதிடுகின்றனர்.

தடைகள் சவால்களை ஏற்படுத்தக்கூடும், ஆனால் அவை இரு நாடுகளாலும் முன்கூட்டியே கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கும் என்று அவர் கூறினார்.

விமானங்கள் கிடைப்பது என்பது இந்தியாவின் விமானப் போக்குவரத்து சவால்களில் ஒரு பகுதி மட்டுமே; இத்துறையின் வேகமான விரிவாக்கம் என்பது பயிற்சி பெற்ற பணியாளர்களைப் பொறுத்தே அமையும்.

விமானிகளின் பணிப்பட்டியல் திட்டமிடலில் ஏற்பட்ட குளறுபடிகளால், சமீபத்தில் இண்டிகோ நிறுவனம் ஆயிரக்கணக்கான விமானச் சேவைகளை ரத்து செய்தது; இதனால் பல்லாயிரக்கணக்கான பயணிகள் பல மணிநேரம் ஏன் பல நாட்களாக கூட தவித்தனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு