காணொளி: ஆட்சியில் பங்கு குறித்த முதலமைச்சரின் கருத்துக்கு காங்கிரஸ் தலைவர்களின் எதிர்வினை என்ன?
ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டுக்கு ஒத்துவராது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
கூட்டணியில் முறிவை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக சிலர் திட்டமிட்டு இதனை பேசி வருவதாக ஸ்டாலின் பேசியுள்ளார்.
இதன் மூலம் ஆட்சியில் பங்கு என காங்கிரஸ் கட்சியில் சிலர் எழுப்பிவரும் குரல்களுக்கு தீர்க்கமான பதிலை அவர் வழங்கியிருக்கிறார்.
இந்தியா டுடே ரவுண்ட் டேபிளில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இதனை தெரிவித்தார்.
இதற்கு காங்கிரஸ் தரப்பில் இருந்தும் எதிர்வினை வந்துள்ளது.
இந்த விவகாரத்தில் நடந்தது என்ன?
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிவரும் சூழலில் கூட்டணி, தொகுதி பங்கீடு போன்றவை வேகமெடுக்க தொடங்கியுள்ளன. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸில் மாணிக்கம் தாகூர் எம்.பி. போன்றோர் 'ஆட்சியில் காங்கிரஸுக்கும் பங்கு வேண்டும்' என்ற கோரிக்கையை எழுப்பினர்.
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிகவின் மாநில துணை பொதுச் செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான ஆளூர் ஷானவாஸ் பிபிசிக்கு அளித்த பேட்டியில், ஆட்சி பகிர்வு என்பது தங்களின் கொள்கையாக இருந்தாலும் தற்போதைய சூழலுக்கு அத்தகைய முழக்கத்தை வைக்கவிரும்பவில்லை என்றார்.
இதேபோல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீர பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் ஆகியோரும் ஆட்சியில் பங்கு என்பது தங்கள் முழக்கமல்ல என பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டியில் தெளிவுபடுத்தினர்.
திமுக கூட்டணியில் காங்கிரஸைச் சேர்ந்த சிலர் மட்டுமே அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையை தொடர்ந்து எழுப்பி வருகின்றனர்.
மறுபுறம் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை என அமைச்சர்கள் பெரியசாமி போன்றோர் காங்கிரஸுக்கு பதிலளித்தனர்.
இதற்கிடையே காங்கிரஸ் - திமுக இடையே தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தொடங்கப்படாமல் இருந்து வந்தது காங்கிரஸ் தரப்பில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பிப்ரவரி 10ம் தேதி டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தேர்தல் பேச்சுவார்த்தை குழு அமைக்கப்படவில்லை என்பது காங்கிரஸார் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறினார்.
"காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் பேசும்போது, நவம்பரில் காங்கிரஸ் தலைவர் கூட்டணி தொடர்பான குழுவை அமைத்தார். 5 பேர் கொண்ட குழு டிசம்பர் 3ஆம் தேதி முதலமைச்சரை சந்தித்தோம். தற்போது கிட்டதட்ட 70 நாட்கள் ஆகிவிட்டது. நாங்கள் நம்பிக்கையோடு காத்துக்கொண்டிருக்கிறோம். அவர்கள் உடனடியாக பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும், எத்தனை தொகுதிகளில் நாங்கள் போட்டியிடுவோம் என்பதை தெளிவுப்படுத்த வேண்டும். அப்போதுதான் நாங்கள் தயாராக முடியும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவர்கள் குழுவை அமைக்கவில்லை, பேச்சுவார்த்தையை தொடங்கவில்லை என்பது வருத்தமாக இருக்கிறது" என்றார்.
இந்நிலையில், கூட்டணி கட்சியினருடன் பிப்ரவரி 22ம் தேதி முதல் திமுக தொகுதி பங்கீட்டுக் குழு பேச்சுவார்த்தையை தொடங்கும் என திமுக தரப்பில் செவ்வாயன்று அறிவிக்கப்பட்டது.
காங்கிரஸ் தரப்பில் ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கை தொடர்ச்சியாக வைக்கப்பட்டு வரும் சூழலில் இது குறித்தும் இந்த பேச்சுவார்த்தையில் பேசப்படுமா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்தது. இந்நிலையில்தான், இதற்கு திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
புதனன்று இந்தியா டுடே ஊடகம் நடத்திய ரவுண்ட் டேபிள் நிகழ்ச்சியில் ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது, எத்தனை கூட்டணி வைத்தாலும் திமுக தலைமையிலான கூட்டணியை வெற்றி பெற முடியாது என்றும் 200 தொகுதிகளை எதிர்பார்க்கிறோம் அதனையும் தாண்டி வெற்றி பெறுவோம் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
நடைபெறவுள்ள சட்டபேரவைத் தேர்தலை காங்கிரஸுடன் இணைந்து திமுக சந்திக்குமா என எழுப்பப்பட்ட கேள்விக்கு, 'நிச்சயமாக இருப்போம் என பதிலளித்த ஸ்டாலின், ஆட்சியில் பங்கு வழங்கப்படுமா என்பது குறித்தும் பதிலளித்தார்.
"ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டுக்கு ஒத்துவராது. இது எங்களுக்கும் தெரியும் காங்கிரஸுக்கும் தெரியும். கூட்டணியில் முறிவு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இடையில் சிலர் திட்டமிட்டு இந்த விவகாரத்தை கிளப்புகின்றனர்" என்றார்.
அதே நிகழ்வில் ராகுல் காந்தி பற்றி பேசும்போது, 'அரசியலை தாண்டி ராகுல் தன்னை சகோதரராக பார்ப்பதாகவும், தானும் அவரை சகோதரராக பார்ப்பதாகவும்' ஸ்டாலின் குறிப்பிட்டார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



