காணொளி: அமெரிக்காவில் வரலாறு காணாத பனிப்புயல்

காணொளிக் குறிப்பு, அமெரிக்காவில் வரலாறு காணாத பனிப்புயல்
காணொளி: அமெரிக்காவில் வரலாறு காணாத பனிப்புயல்

வட கிழக்கு அமெரிக்காவை வரலாற்றில் இல்லாத அளவு மிகப்பெரிய பனிப்புயல் தாக்க தொடங்கியுள்ளது. இதனால், 59 மில்லியன் மக்கள் வானிலை எச்சரிக்கையின் கீழ் உள்ளனர்.

நியூயார்க் நகரில் மின்தடை மற்றும் முழுமையான பயணத் தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. பல அமெரிக்க மாகாணங்களில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. பனிப்புயல் காரணமாக பல இடங்களில் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஒரு தசாப்தத்தில் இந்த அளவிலான பனி புயலை நியூயார்க் நகரம் எதிர்கொண்டதில்லை என நியூயார்க் மேயர் மம்தானி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

“கடந்த ஒரு தசாப்தத்தில் இந்த அளவிலான பனி புயலை நியூயார்க் நகரம் எதிர்கொண்டதில்லை.

“இந்த சூழ்நிலைகளை முன்னிட்டு, இன்று இரவு 9 மணிமுதல் நாளை மதியம் 12 மணி வரை அவசரநிலையை அறிவித்து, பயணத் தடை விதிக்கிறோம்”

150 ஆண்டுகளில் ஏற்பட்ட மிக மோசமான குளிர்காலப் புயல்களில் ஒன்றாக இது இருக்கும் என நியூயார்க் மாகாண ஆளுநர் கேத்தி ஹோக்குல் தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து பிபிசியின் அமெரிக்க கூட்டாளி சிபிஎஸ் நியூஸிடம் தேசிய வானிலை சேவையில் பணியாற்றும் வானிலை ஆய்வாளர் கோடி ஸ்நெல் பேசினார்.

அவர் கூறுகையில், கடுமையான பனிப்பொழிவையும் தீவிரமான தாக்கங்களையும் ஏற்படுத்தும் இவ்வகை ‘நோர்'ஈஸ்டர்’ எனப்படும் வடகிழக்கு புயல்கள் அடிக்கடி ஏற்படுவதாகவும் ஆனால், நாட்டில் இந்தளவுக்கு மக்கள் அடர்த்தியாக வாழும் ஒரு பகுதியை முழுவதுமாக இந்த அளவிலான தீவிரத்துடன் தாக்கிய ஒரு புயலை கடந்த சில ஆண்டுகளாக நாம் காணவில்லை, என்றும் அவர் தெரிவித்தார்.

வடகிழக்கு மாகாணங்களில் இதுவரை 1,50,000-க்கும் மேற்பட்டோர் மின்தடை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் நியூ ஜெர்சி மாகாணத்தில் மட்டும் 60,000 பேர் மின்சாரம் இன்றி உள்ளனர். மேலும், வர்ஜீனியா, டெலாவேர் மற்றும் மெரிலாண்ட் மாகாணங்களில் ஆயிரக்கணக்கானோர் மின்சாரம் இன்றி உள்ளதாக PowerOutage.us கண்காணிப்பு தரவுகள் தெரிவிக்கின்றன.

FlightAware கண்காணிப்பு சேவையின் தகவலின்படி, ஞாயிற்றுக்கிழமை சுமார் 5,500 அமெரிக்க விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் நூற்றுக்கணக்கான விமானங்கள் தாமதமாகின.

அமெரிக்காவின் வடகிழக்கு பகுதிகளில், குறிப்பாக போஸ்டன், பிலடெல்பியா மற்றும் நியூயார்க் நகரங்களில், ஞாயிற்றுக்கிழமை மாலை பனிப்பொழிவு தொடங்கியது.

இப்பகுதிகளில் மிகவும் கடுமையான வானிலை நிலை ஏற்படும் என முன்னறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் அதிக மக்கள் தொகையுள்ள நகரமான நியூயார்க் நகரத்தில் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக பனிப் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அங்கு 50–60 செ.மீ.) வரை பனிப்பொழிவு ஏற்படும் என்றும், வெப்பநிலை சுமார் -6°C) வரை குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

நியூ யார்க் மாகாண மேயராக மம்தானி பதவியேற்ற பின் ஏற்பட்ட இரண்டாவது பெரிய பனிப்புயல் இதுவாகும்.

கடந்த ஜனவரி மாதத்தில் மூன்று வாரங்கள் நீடித்த கடும் பனியினால் 19 பேர் உயிரிழந்தனர்.

நியூ யார்க் மாகாணம் முழுவதும், குறிப்பாக கடற்கரைப் பகுதிகளில் மணிக்கு 104–112 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மரக்கிளைகள் முறிவதும், மின்தடைகள் ஏற்படுவதும் சாத்தியமுள்ளதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

நியூ ஜெர்சி மாநில ஆளுநர் மைகி ஷெரில் அவசரநிலையை அறிவித்து, ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் மாநிலத்தின் போக்குவரத்து சேவைகளை நிறுத்தியுள்ளார்.

1996 ஆம் ஆண்டுக்குப் பிறகு நாம் கண்ட மிகக் கடுமையான புயலாக இது இருக்கக்கூடும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், மக்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருக்கவும் சாலைகளில் செல்லாமல் தவிர்க்கவும் அவர் கேட்டுக் கொண்டார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு