காணொளி: இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு - இனியும் பெயர் சேர்க்க முடியுமா?
தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு பிறகான இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது. முன்பிருந்த வாக்காளர் பட்டியலோடு ஒப்பிடும் போது சுமார் 74 லட்சத்துக்கும் அதிகமான பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. எந்த தொகுதியில் அதிக வாக்காளர்கள் உள்ளனர். இனியும் நீங்கள் விண்ணப்பித்து வாக்களிக்க முடியுமா? இந்த காணொளியில் விரிவாக பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் கடந்த நவம்பர் 4 ஆம் தேதி தொடங்கியது. டிசம்பர் 19ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வரைவு வாக்காளர் பட்டியலில் சுமார் 97 லட்சத்துக்கும் அதிகமான பெயர்கள் நீக்கப்பட்டன. அதற்குப் பின்பு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும் நீக்கவும் முகவரி மாற்றம் செய்யவும் ஜனவரி 30, 2026 வரை காலஅவகாசம் வழங்கப்பட்டது.
அதனடைப்படையில் மாற்றங்கள் செய்யப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று வெளியிட்டார்.
இந்த வகையில் பார்த்தால் தமிழ்நாட்டில் கடந்த தேர்தலில் இருந்த வாக்காளர்களில் சுமார் 74 லட்சத்துக்கும் அதிகமான பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. சதவீத அடிப்படையில் பார்த்தால் இது 12 சதவீதம்.
சோழிங்கநல்லூர் சுமார் 5 லட்சத்து 36 ஆயிரம் வாக்காளர்களுடன்மாநிலத்திலேயே பெரிய தொகுதியாகவும், சென்னை துறைமுகம் தொகுதி சுமார் ஒரு லட்சத்து 16 ஆயிரம் வாக்காளர்களுடன் சிறிய தொகுதியாகவும் உள்ளன.
இறுதி வாக்காளர் பட்டியல் வந்துவிட்ட நிலையில், இனியும் நீங்கள் விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அது எப்படி என்பதை பார்க்கலாம்.
இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகத்தில் படிவம் 6-ஐ சமர்ப்பித்து விண்ணப்பிக்கலாம். voters.eci.gov.in என்ற இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம். அதே போல "Voter Helpline App" செயலியைத் தரவிறக்கம் செய்து அதன் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது வாக்குச்சாவடி நிலை அலுவலர் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். என கூறப்பட்டுள்ளது. அதே நேரம் 2026 ஜனவரி 1ஆம் தேதிப்படி உங்களுக்கு 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
ஒரு வேளை பெயர் இருந்து அதில் திருத்தம் செய்ய வேண்டிய தேவை இருந்தாலோ அல்லது நீக்கம் செய்ய விரும்பினாலோ அதையும் நீங்கள் செய்யலாம்.
அதற்கான வழிமுறைகளை பார்க்கலாம். பெயர் நீக்கம் செய்ய படிவம் 7, திருத்தம் செய்ய படிவம்-8-ஐ இணையம் மூலமாகவோ நேரடியாகவோ நீங்கள் சமர்பிக்கலாம்.
இது பற்றி தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் பிபிசி தமிழிடம் கூறும் போது, வேட்புமனு தாக்கல் துவங்குவதற்கு 10 நாட்களுக்கு முன்பு வரையிலும் இதற்கு விண்ணப்பிக்க முடியும். இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாவிட்டாலும் உரிய ஆவணங்களுடன் சரியான முறையில் விண்ணப்பித்து, அது ஏற்கப்பட்டால் வரும் தேர்தலில் அந்த வாக்காளரால் வாக்களிக்க முடியும் என்றார்.
அப்படியெனில் இறுதிப்பட்டியல் வந்துவிட்டதே, இனி என் பெயர் எந்தப்பட்டியலில் இடம்பெறும் என்ற கேள்வி உங்களுக்கு வரலாம்.
இனிமேல் வேறு எந்த வாக்காளர் பட்டியலும் வெளியாகாது. இப்போது வெளியாகியிருப்பதே இறுதி பட்டியல். ஆனால் இனி விண்ணப்பிப்பவர்களின் படிவங்கள், ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியானவர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டு, இணைப்புப் பட்டியல் தயாராகும். அது அந்தந்த வாக்குச்சாவடிக்கு மட்டும் அனுப்பப்படும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



