You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வட்டிக்கு வாங்கி கட்டிய வீட்டை பள்ளிக்காக கொடுத்துவிட்டு குடிசையில் வசிக்கும் குடும்பம்
- எழுதியவர், மோகர் சிங் மீனா
- பதவி, பிபிசி இந்திக்காக
ராஜஸ்தான் மாநிலம் ஜலாவார்க் மாவட்டத்தில் உள்ள பிப்பிளோடி கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளியின் கட்டடம் 2025 ஜூலை 25 அன்று இடிந்து விழுந்தது.
இந்த சம்பவத்தில் ஏழு குழந்தைகள் உயிரிழந்தனர், சுமார் 21 குழந்தைகள் படுகாயமடைந்தனர்.
சம்பவத்திற்குப் பிறகு குழந்தைகளின் கல்வி நிறுத்தப்பட்டு, கிராம மக்கள் கல்வியை எப்படி தொடர்வது என குழப்பத்தில் ஆழ்ந்தனர்.
அப்போது கிராமத்தைச் சேர்ந்த பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த மோரு சிங் பீல். தானே முன்வந்து இரண்டு அறைகளைக் கொண்ட வீட்டை பள்ளிக்கு வழங்கிவிட்டு, தனது எட்டு பேர் கொண்ட குடும்பத்துடன் ஒரு குடிசையில் வசிக்கத் தொடங்கினார்.
நிர்வாகம் அவரது இந்த முயற்சிக்கு பொருளாதார உதவி வழங்கியுள்ளது, கிராமத்தில் புதிய பள்ளிக் கட்டடத்தை கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
விபத்துக்கு பிறகு குழந்தைகளின் கல்வி நிறுத்தப்பட்டிருந்தது
2025 ஜூலை 25 அன்று காலை 7.30 மணியளவில் பிப்பிளோடி தொடக்கப்பள்ளியின் கூரை இடிந்து விழுந்தபோது, கிராமமெங்கும் அலறல் எழுந்தது. ஏழு இளம் குழந்தைகள் உயிரிழந்தனர் மற்றும் 21க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
11 குழந்தைகளுக்கு கோட்டா மற்றும் ஜலாவார்க் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக அனைவரும் பத்திரமாக வீடு திரும்பினர்.
சம்பவத்திற்குப் பிறகு அரசு தரப்பில் தற்காலிக ஏற்பாடுகள் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மாவட்ட ஆட்சியர் அஜய் சிங் ரத்தோட், நிர்வாகம் 2-3 கட்டடங்களை பார்வையிட்ட போதிலும் எந்த இடத்தையும் இறுதி செய்யமுடியவில்லை என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த மோரு சிங் பீல், 2011 ஆம் ஆண்டு கடன் வாங்கி கட்டிய தனது வீட்டின் சாவியை குழந்தைகளின் கல்விக்காக வழங்கிவிட்டு, தனது எட்டு பேர் கொண்ட குடும்பத்துடன் குடிசைக்கு வசிக்கச் சென்றார்.
"நான் முழுமையாக கல்வியறிவில்லாதவன். நான் ஒருபோதும் பள்ளிக்கு செல்லவில்லை. தொழிலாளியாக வேலை செய்து எனது குடும்பத்தை கவனித்து வருகிறேன். எனது குழந்தைகளை படிக்க வைத்தேன்," என மோரு சிங் சொல்கிறார்.
பரந்த மனம் மற்றும் எளிமையான தன்மையைக் கொண்ட மோரு சிங், "பள்ளிக் கட்டடம் இடிந்து ஏழு குழந்தைகள் உயிரிழந்தனர். 14 நாட்கள் பள்ளி மூடப்பட்டிருந்தது. படிக்க ஒரு இடம் கிடைக்கவில்லை, எனவே எனது வீட்டை தந்தேன்," என பிபிசி இந்தியிடம் கூறினார்.
வாடகை பற்றி கேட்டபோது, அவர் புன்னகைத்து, "நாங்கள் எந்த வாடகையும் வசூலிக்க மாட்டோம். இரண்டு ஆண்டுகள் ஆனாலும், மூன்று ஆண்டுகள் ஆனாலும் பள்ளி கட்டப்படும் வரை எனது வீட்டில் குழந்தைகள் படிக்கட்டும் என்று கூறியுள்ளோம்," என்றார்.
குடிசையில் குடும்பம், கான்கிரீட் கட்டடத்தில் பள்ளி
இன்று, வெளிர் சிவப்பு நிறத்தில் உள்ள அந்த வீட்டின் வாசலில் பள்ளியின் பெயர் பலகை தொங்குகிறது. வெளியே குழந்தைகளின் காலணிகளால் நிரம்பிய ஒரு மேசை வைக்கப்பட்டுள்ளது. உள்ளே இரண்டு அறைகள் மற்றும் வராந்தாவில் 65 குழந்தைகளின் வகுப்புகள் நடைபெறுகின்றன. ஆசிரியர்கள் வெள்ளை பலகையில் கவிதைகள் மற்றும் எண்களை கற்பிக்கின்றனர்.
இங்கு ஒரு காலத்தில் மோரு சிங் குடும்பம் வசித்தது. இப்போது அவர் வயல்வெளி ஓரத்தில் மூங்கில் மற்றும் தார்பாயினால் அமைக்கப்பட்ட குடிசையில் வசிக்கிறார். மழையால் அதிக நீர் தேங்குகிறது, இதனால் கொசுக்கள் அதிகமாக இருப்பதால் பகலிலும் புகை போட வேண்டியிருக்கிறது.
"இங்கு சிரமங்கள் உள்ளன, ஆனால் கான்கிரீட் வீட்டில் குழந்தைகள் கல்வி கற்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். கிராமத்து குழந்தைகளும் எங்கள் குழந்தைகள்தான்," என அவரது மனைவி மாங்கி பாய் கூறுகிறார்.
"2011 ஆம் ஆண்டு நான்கு லட்சம் ரூபாய் வட்டிக்கு கடன் வாங்கி வீட்டைக் கட்டினோம். பல ஆண்டுகள் தொழிலாளியாக வேலை செய்து கடனை அடைத்தோம். ஆனால் நாங்கள் தவறான முடிவு எடுத்ததாக எப்போதும் நினைக்கவில்லை," என அவர் மேலும் கூறினார்.
கிராம மக்களும், ஆசிரியர்களும் கூறுவது என்ன?
கிராம மக்கள் மோரு சிங்கின் தியாகத்தை வெகுவாக பாராட்டுகின்றனர்.
"மோரு சிங் வீட்டை கொடுக்கவில்லை என்றால் குழந்தைகள் எங்கு படிப்பார்கள்? மழையில் அவரது குடும்பம் குடிசையில் வசிக்கிறது, ஆனால் அவர் மாணவர்களுக்கு வீட்டை கொடுத்துள்ளார். முழு கிராமமும் நல்லது செய்ததாக பாராட்டுகிறது," என 60 வயதான அமர் லால் கூறினார்,
ஆனால் கோபமும் உள்ளது. "குழந்தைகள் இறந்தபோது அதிகாரிகள் மற்றும் தலைவர்கள் அனைவரும் வந்தனர், கூட்டம் இருந்தது. இப்போது யாரும் கேட்க வரவில்லை. மோரு சிங் முன் வரவில்லை என்றால் குழந்தைகளின் கல்வி நிறுத்தப்பட்டிருக்கும்," என ஒரு முதியவர் கூறினார்,
"பள்ளி இடிந்த பிறகு குழந்தைகள் பயந்துவிட்டனர். மோரு சிங் வீட்டை கொடுத்ததால் படிப்பு மீண்டும் தொடங்கியது. முன்பு 72 குழந்தைகள் இருந்தனர், ஏழு பேர் இறந்ததால் 65 பேர் மீதமுள்ளனர், ஆனால் இப்போது மூன்று புதிய குழந்தைகளும் சேர்ந்துள்ளனர்," என ஆசிரியர் மகேஷ் சந்த் மீனா கூறினார்,
பள்ளிக்கு இடம் வழங்குவது தொடர்பாக கிராம மக்களின் கூட்டம் நடைபெற்றது என ஆசிரியர் மகேஷ் கூறினார். ஆனால் யாரும் தயாராகவில்லை. பின்னர் மோரு சிங் பீல், "நான் எனது வீட்டை குழந்தைகளின் கல்விக்காக வழங்குகிறேன்" என்று கூறினார்.
பள்ளியை நடத்துவதற்கு மின்சாரம் மற்றும் தகர மேற்கூரை போன்ற பழுது பார்க்கும் பணிகளை கிராம ஆசிரியர்கள் தங்களது சொந்த பணத்தில் செலவு செய்ததாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.
நிர்வாகம் அளித்த தகவல் என்ன?
ஜலாவார்க் மாவட்ட ஆட்சியர் அஜய் சிங் ரத்தோட்,"மோரு சிங் உத்வேகத்துடன் வீட்டை கொடுத்தார். நிர்வாகம் பழுது பார்த்து 10-12 நாட்களில் பள்ளியை தொடங்கியது. அவரது தியாகத்திற்கு முழு நிர்வாகமும் நன்றியுள்ளதாக இருக்கிறது," என கூறினார்,
மோரு சிங்கின் மற்றொரு வீட்டை பழுது பார்ப்பதற்கு 2 லட்சம் ரூபாய் உதவி வழங்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
"அவருக்கு வசிப்பதில் சிரமம் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய முயல்கிறோம். தேவைப்பட்டால் மேலும் உதவி வழங்கப்படும்," என அவர் தெரிவித்தார்.
கிராமத்தில் வேறு நிலத்தில் புதிய பள்ளி கட்ட 1.5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
"அடுத்த ஆண்டுக்குள் அதிக பரப்பளவு மற்றும் அதிக அறைகளுடன் புதிய கட்டடம் தயாராகிவிடும். அருகிலேயே அங்கன்வாடி, ரேஷன் கடை மற்றும் துணை மையமும் கட்டப்படும்."
மாவட்ட ஆட்சியரின் கூற்றுப்படி, சம்பவத்திற்குப் பிறகு இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 11 லட்சம் ரூபாய் உதவி வழங்கப்பட்டது.
இதில் தலா 5 லட்சம் ரூபாயை நிரந்தர வைப்புத் தொகையாக மாற்றப்பட்டு, மாதம் 3,000 ரூபாய் வட்டி கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது.
பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் மற்றும் லேசான காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டது. இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் வேலை வழங்கப்பட்டது.
"மிகவும் நல்ல விஷயம் என்னவென்றால், சம்பவத்திற்குப் பிறகு பள்ளியில் குழந்தைகளின் பதிவு அதிகரித்துள்ளது. இது சமூகம் மற்றும் நிர்வாகத்தின் முயற்சிகளின் விளைவாகும்," என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
பிப்பிளோடி சம்பவம் பெரும் துயரத்தை கொண்டு வந்தது, ஆனால் இது கிராமத்திற்கு கல்வியின் முக்கியத்துவத்தையும் காட்டியுள்ளது.
"எங்கள் குழந்தைகள் படிக்கிறார்கள் என்றால் சிறிய சிரமங்களை எங்களால் பொறுத்துக்கொள்ள முடியும். குழந்தைகளின் சந்தோஷத்திற்கு முன்னால் இந்த சிரமம் ஒன்றும் அல்ல," என மோரு சிங் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு