You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வங்கதேச ஆட்சிக் கவிழ்ப்பின் பின்னணியில் அமெரிக்கா, பாகிஸ்தானா? ஹசீனாவின் மகன் பேட்டி
வங்கதேசத்தில் வெடித்த போராட்டத்தால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டே வெளியேறிய ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப் வாஜித் ஜாய், தனது தாயின் அரசாங்கம் வீழ்ச்சி அடைந்ததற்கு நாட்டில் உள்ள ஒரு சிறு குழுவினரின் சதியும், ஐஎஸ்ஐயும் தான் காரணம் என்று குற்றம்சாட்டியுள்ளார்.
தனது தாயின் உயிரை காப்பாற்றிய இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
ஷேக் ஹசீனாவின் விசாவை மேற்கத்திய நாடுகள் ரத்து செய்ததாக வெளியான தகவலும், அவர் பிற நாடுகளில் அரசியல் தஞ்சம் கோரியதாக வெளியான செய்திக்கும் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏஎன்ஐ (ANI) செய்தி முகமைக்கு அவர் அளித்த பேட்டியில், வங்கதேசத்தின் ஒரு சிறிய குழு மற்றும் வெளிநாட்டு புலனாய்வு அமைப்பான இன்டர் சர்வீசஸ் இன்டலிஜென்ஸ் (ஐஎஸ்ஐ) அமைப்பால் தான் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என்று தான் நம்புவதாக சஜீப் வாஜித் கூறியுள்ளார். ஏனென்றால், அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த எந்த முகாந்திரமும் இல்லை. போராட்டக்காரர்கள் கோரியபடி இட ஒதுக்கீட்டை அரசு வெகுவாகக் குறைத்துவிட்டிருந்தது.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இடஒதுக்கீடு தொடர்பான விவகாரங்களில் முடிவு எடுத்தது ஹசீனா அரசாங்கம் அல்ல, நீதிமன்றம் தான் என்று அவர் கூறினார்.
"போராட்டத்தில் காவல்துறையை அத்துமீறி தாக்குதல் நடத்துமாறு அரசு ஒருபோதும் உத்தரவிடவில்லை. அத்துமீறி அதிகாரத்தை பயன்படுத்திய காவல்துறை அதிகாரிகளை அரசாங்கம் உடனடியாக இடைநீக்கம் செய்தது, ஆனால் போராட்டக்காரர்கள் திடீரென எனது தாயாரின் அரசாங்கத்தை ராஜினாமா செய்யக் கோரத் தொடங்கிவிட்டனர்" அவர் விவரித்தார்.
"மேலும், போராட்டம் நடத்திய மாணவர்களுக்கு எங்கிருந்து ஆயுதங்கள் கிடைத்தன? அவர்கள் மாணவர்கள் அல்ல, கலவரக்காரர்கள். அவர்கள் அரசாங்கத்தை கவிழ்க்க தூண்டப்பட்ட பயங்கரவாதிகள். நாட்டில் இனப் படுகொலை சூழலை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற காரணத்தினால் எனது தாயார் பதவி விலகினார்.” என்று சஜீப் வாஜித் ஜாய் கூறியுள்ளார்.
அமெரிக்கா குறித்து சஜீப் வாஜித் ஜாய் கூறியது என்ன?
ஷேக் ஹசீனாவின் அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு மேற்கத்திய நாடுகள் பொறுப்பேற்க வேண்டும் என்று ஷேக் ஹசீனாவின் ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த சஜீப் வாஜித் ஜாய், `இதில் அமெரிக்கா ஈடுபட்டதா இல்லையா என்பதற்கு என்னிடம் ஆதாரம் இல்லை என்று கூறினார். ஆனால் நிலைமையைக் கூர்ந்து கவனித்தால், போராட்டக்காரர்களை அரசுக்கு எதிராக யாரோ தூண்டிவிட்டதை உணரமுடியும் என்றார்.
மேலும் கூறுகையில், “ஆரம்பத்தில் போராட்டம் அமைதியாக நடந்தது. முதல்கட்ட போராட்டத்திற்கு பிறகு இடஒதுக்கீட்டை அரசு குறைத்தது. வன்முறையைத் தடுக்க தேவையான எல்லாவற்றையும் அரசாங்கம் செய்தது. இந்த வன்முறை சில அடையாளம் தெரியாதக் குழுக்களால் பரப்பப்பட்டது. இது வேண்டுமென்றே செய்யப்பட்டுள்ளது. மேற்கத்திய நாடுகளால் இந்த வன்முறை தூண்டப்பட்டிருக்கலாம் என்று நான் நம்புகிறேன்.” என்றார்.
பிரதமர் மோதிக்கு சஜீப் நன்றி
சஜீப் வாஜித், தனது தாயார் ஷேக் ஹசீனாவின் உயிரைக் காப்பாற்றிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவிப்பதாக கூறியுள்ளார்.
அப்போது அவர், “இந்திய அரசின் உடனடி நடவடிக்கைக்காக பிரதமர் நரேந்திர மோதிக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். விரைந்து சீக்கிரம் முடிவெடுத்ததால்தான் அம்மாவின் உயிரைக் காப்பாற்ற முடிந்தது.” என்றார்.
''உலகளவில் இந்தியா முன்னணியில் இருக்க வேண்டும். எந்தவொரு வெளிநாட்டு சக்தியும் அண்டை நாடுகளில் ஆதிக்கம் செலுத்த அவர் அனுமதிக்கக் கூடாது. வங்கதேசம் இந்தியாவின் கிழக்கு அண்டை நாடு. எனவே, இந்தியா எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ” என்றார்.
ஷேக் ஹசீனாவின் அரசு வங்கதேசத்தை பொருளாதார முன்னேற்றத்தின் உச்சத்துக்கு கொண்டு சென்றதை யாராலும் மறுக்க முடியாது என்றார். "தீவிரவாதிகளை கட்டுப்படுத்தி இந்திய துணைக் கண்டத்தின் கிழக்கு எல்லையில் ஸ்திரத்தன்மையை நிலைநாட்டினார். நாங்கள் நினைத்ததைச் செய்ய முடியும் என்பதை நிரூபித்தோம். ஆனால் நாட்டின் மற்ற அரசுகள் தோல்வியடைந்தன." என்று அவர் கூறினார்.
'இடைக்கால அரசாங்கம் அரசியலமைப்புக்கு முரணானது'
வங்கதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள இடைக்கால அரசு அரசியலமைப்பிற்கு முரணானது என சஜீப் வாஜித் தெரிவித்தார். வங்கதேச அரசியலமைப்பின் படி, மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத எந்த அரசாங்கமும் ஆட்சியில் நீடிக்க முடியாது என்று அவர் விளக்கினார்.
தொண்ணூறு நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும், எனவே இடைக்கால அரசாங்கத்தின் முதல் முன்னுரிமை தேர்தலை நடத்துவதாக இருக்க வேண்டும்.
வங்கதேசத்தில் நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 8 அன்று, அவருக்கும் இடைக்கால சபை உறுப்பினர்களுக்கும் குடியரசுத் தலைவர் முகமது ஷஹாபுதீன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
யூனுஸை இடைக்கால அரசாங்கத்தின் தலைவராக்கியது குறித்து பேசிய சஜீப் வாஜித் "இவர்களுக்கு ஆதரவாக இந்நாட்டில் இங்கு ஒரு சிறிய குழு செயல்படுகிறது. சமூகத்தில் உள்ள மேல் தட்டு மற்றும் மேற்கத்திய நாடுகளின் ஆதரவும் உள்ளது" என்று கூறினார்.
"அரசாங்கத்தில் ஆலோசகராகப் பணியாற்றிய எனது அனுபவத்தின் அடிப்படையில் சொல்கிறேன், விருப்பத்தின் பேரில் ஒருவரை பதவியில் நியமிப்பது வேறு, அரசாங்கத்தை நடத்துவது வேறு. அரசியல் மற்றும் ஆட்சி அனுபவம் இல்லாத ஒருவர் நாட்டை வழிநடத்துவது மிகவும் கடினம். அவர்கள் எப்படி ஆட்சி செய்கிறார்கள் என்று தான் பார்க்க வேண்டும். அவரால் ஆட்சியை நடத்த முடியுமா?” என்றார் அவர்.
சிறுபான்மையினர் மீதான தாக்குதல்
வங்கதேசத்தில் இந்துக்கள் மற்றும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் குறித்து சஜீப் வாஜித் கூறுகையில், "இந்த நாட்டின் வரலாற்றில் சிறுபான்மையினரின் பாதுகாப்பில் நம்பகத்தன்மையை நிலைநாட்டி, இந்த நாட்டை பாதுகாப்பாக வைத்திருக்க ஒரே ஒரு அரசுதான் உள்ளது. வங்கதேசத்தின் வரலாற்றில் கடந்த 15 வருடங்கள் சிறுபான்மையினருக்கு மிகவும் பாதுகாப்பான காலமாக இருந்தது.
ஷேக் ஹசீனாவின் காலத்தில் நாடு மிக விரைவான பொருளாதார முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்பதை விமர்சிப்பவர்கள் கூட மறுக்க முடியாது. தற்போதைய தேர்ந்தெடுக்கப்படாத அரசாங்கத்திற்கு வங்கதேசத்தின் ஒட்டுமொத்த மக்களின் ஆதரவும் கிடைக்கவில்லை. அவரால் சிறுபான்மையினரை பாதுகாப்பாக வைத்திருக்க முடியுமா?
சிறுபான்மையினர் நாட்டை விட்டு வெளியேற முயற்சிப்பதை நீங்கள் காண்கிறீர்கள். நான் அவர்களைப் பற்றி கவலைப்படுகிறேன். சிறுபான்மையினரைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும், வங்கதேசத்தில் சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்கவும் என்னால் முடிந்த அனைத்தையும் செய்ய விரும்புகிறேன். ஜனநாயகத்தை மீட்டு கொண்டுவர அனைத்து முயற்சிகளையும் செய்ய விரும்புகிறேன். இதுவே எங்களின் இலக்கு." என்றார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)