You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
திருப்பரங்குன்றம்: தர்காவுக்கு எதிராக போராட்டம் தொடர்வது ஏன்? நீதிமன்றத்தில் அரசு சொன்னது என்ன?
- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ்
திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலையாக மாற்ற முயல்வதாகக் கூறி போராட்டம் நடத்த கிளம்பிய இந்து அமைப்பு நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். பின்னர் நீதிமன்ற அனுமதியின் பேரில் போராட்டம் நடத்தப்பட்டது.
'பாபர் மசூதி போன்ற சம்பவம் ஏற்பட்டுவிடக் கூடாது' என்பதற்காகவே போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு கூறியுள்ளது.
திருப்பரங்குன்றம் மலையை முன்வைத்து சர்ச்சை தொடர்வது ஏன்?
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் சுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. கோவிலின் மலை உச்சியில் காசி விஸ்வநாதர் கோவிலும் அதன் மறுபுறத்தில் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்காவும் உள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ராஜபாளையத்தைச் சேர்ந்த அபு தாஹிர் என்பவர், நேர்த்திகடன் செலுத்துவதற்காக ஆடு மற்றும் இரண்டு சேவல்களுடன் தர்காவுக்கு செல்ல வந்திருந்தார்.
ஆனால், "மலைக்கு மேல் அனுமதிக்க முடியாது" எனக் கூறி அங்கிருந்த காவலர்கள் அவரைத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
"காலம்காலமாக நேர்த்திக்கடன் கொடுப்பது வழக்கமாக உள்ளது. இப்போது தடுப்பது ஏன்?" எனக் அப்பகுதி முஸ்லிம்கள் கேள்வி எழுப்பினர்.
இதுதொடர்பாக, மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதாவிடம் தர்கா நிர்வாகிகள் மனு கொடுத்தனர். அப்போது அவர், வருவாய் கோட்டாட்சியர் நேரில் விசாரணை நடத்த உள்ளதாக தர்கா நிர்வாகிகளிடம் கூறியுள்ளார்.
"ஆய்வு நடத்திய வருவாய் கோட்டாட்சியர், இங்கு இந்துக்கள் அதிகமாக உள்ளதால் ஆடு, கோழிகளை பலியிடக் கூடாது" எனக் கூறி தடை விதித்ததாக பிபிசி தமிழிடம் குறிப்பிட்டார் தர்காவின் செயற்குழு உறுப்பினர் அல்தாஃப்.
இதனை அறிந்து கடந்த ஜனவரி மாதம் 22-ஆம் தேதி தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவரும் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினருமான நவாஸ்கனி, திருப்பரங்குன்றம் மலைக்கு சென்றிருந்தார்.
அப்போது அவருடன் வந்தவர்கள், மலையின் படிக்கட்டில் அமர்ந்து அசைவ பிரியாணி சாப்பிட்டதாக பாஜகவும் இந்து அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தன. இதன் தொடர்ச்சியாக திருப்பரங்குன்றத்தில் இந்து முன்னணி சார்பில் வேல் ஊர்வலம் நடத்தப்பட்டது.
மதுரையில் 144 தடை உத்தரவு
இந்தநிலையில், ''திருப்பரங்குன்றம் மலையைக் காக்க செவ்வாய்க்கிழமையன்று (பிப்ரவரி 4) போராட்டம் நடத்த உள்ளதாக'' இந்து முன்னணி அறிவித்தது.
ஆனால், போராட்டத்துக்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை. ''போராட்டம் நடத்தினால் இரு தரப்பிலும் அசாதாரண சூழல் உருவாகும்'' எனக் கூறி மதுரையில் 144 தடை உத்தரவை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்தார்.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ''ஆர்ப்பாட்டத்தில் தென்மாவட்டங்களில் இருந்து பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்ள உள்ளதால் காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இந்து, இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்தோர் திருப்பரங்குன்றம் மலை குறித்து பல்வேறு கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.
இதன் காரணமாக இரு அமைப்பினர் இடையே அசாதாரண சூழல் உருவாக வாய்ப்புள்ளது. மதுரை மாவட்டம் மற்றும் மாநகரில் வெளிநபர்கள் பிரவேசிக்காத வகையில் பிப்ரவரி 3 முதல் 4 ஆம் தேதி இரவு 12 மணி வரையில் போராட்டம், கூட்டங்கள் மற்றும் தர்ணா போன்றவற்றுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது'' என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வாக்குவாதம் - தீக்குளிப்பு முயற்சி
அரசின் தடை உத்தரவை மீறி இந்து அமைப்பினர் மதுரையை நோக்கி வந்து கொண்டிருந்ததால், அந்தந்த மாவட்டங்களில் அவர்களைக் கைது செய்யும் வேலையில் காவல்துறை இறங்கியது.
திருப்பூரில் இருந்து இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கிளம்பியபோது, அவரை போலீஸ் தடுத்து நிறுத்தி கைது செய்தது. அப்போது இந்து முன்னணி தொண்டர் ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்ததை போலீஸ் தடுத்து நிறுத்தியது.
இதேபோல், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இருந்து மதுரைக்கு கிளம்ப முயற்சித்த பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச்.ராஜாவை போலீஸ் தடுத்து நிறுத்தியது.
அப்போது அவர், "மதுரையில் மட்டும் தான் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. காரைக்குடியில் அப்படிப்பட்ட உத்தரவு ஏதும் உள்ளதா?" எனக் கேள்வியெழுப்பி வாக்குவாதம் செய்தார்.
மதுரை ரயில் நிலையம், மாட்டுத்தாவணி பேருந்து நிலையம், ஆரப்பாளையம் பேருந்து நிலையம், மதுரை-திண்டுக்கல் நெடுஞ்சாலை ஆகியவற்றில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
திருப்பரங்குன்றம் ரயில் நிலையத்தில் வந்திறங்கிய விஸ்வ இந்து பரிஷத் நிர்வாகிகளையும் போலீஸார் கைது செய்தனர்.
பாஜக கூறியது என்ன?
இதுகுறித்து பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசும்போது, "மதுரையில் ஜனநாயக முறையில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு இந்து முன்னணி திட்டமிட்டது. ஆனால், மக்களைத் தூண்டுவதற்காக தற்காலிகமாக தடை உத்தரவு போட்டுள்ளனர்" என்றார்.
அரசின் தடை உத்தரவு ஒருபுறம் இருந்தாலும், கோவிலில் சாமி தரிசனம் சென்ற பக்தர்களைக் காவல்துறை தடுக்கவில்லை.
நீதிமன்றத்தில் என்ன நடந்தது?
இந்தநிலையில், 144 தடை உத்தரவை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் சுந்தரவடிவேல் என்பவர் மனுத்தாக்கல் செய்தார். நீதிபதிகள் ஜெயச்சந்திரன், பூர்ணிமா அமர்வில் இந்த வழக்கு செவ்வாய்க்கிழமையன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'பாபர் மசூதி பிரச்னைபோல இது உருவாகிவிடக் கூடாது. வரும் 11 ஆம் தேதி வரையில் விழா காலம் என்பதால் போராட்டம் நடத்த அனுமதிப்பது கடினம்' எனத் தெரிவித்தார்.
"கால்நடைகளை பலியிட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா?' என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதுதொடர்பாக 13 வழக்குகளைப் பதிவு செய்துள்ளதாகக் கூறிய அரசுத் தரப்பு வழக்கறிஞர், "ஜனவரி 18 அன்று ஆடு, கோழிகளை பலியிட்டு சமைத்து பரிமாற முயன்றதாக 200 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது" எனக் கூறினார்.
இதுபோன்ற நிகழ்வுகள் நடப்பதற்கு முன்பே நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் கூறிய நீதிபதிகள், "பழங்காநத்தத்தில் மாலை 5 மணி முதல் ஆறு மணி வரை (பிப்ரவரி 4) ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கப்படுகிறது" என கூறினர்.
மேலும் "வெறுப்பைத் தூண்டும் வகையிலான முழக்கங்களை எழுப்பக் கூடாது. ஒரே ஒரு மைக் மட்டுமே பயன்படுத்த வேண்டும்' என்ற நிபந்தனைகளை விதித்தனர்.
நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து பழங்காநத்தத்தில் திரண்டு இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
தர்கா நிர்வாகிகளின் பதில்
இந்து முன்னணி அமைப்பினர் காலம்காலமாக நடந்து வரும் வழக்கத்தை மாற்ற முயற்சிப்பதாக கூறுகிறார், திருப்பரங்குன்றம் சிக்கந்தர் அவுலியா தர்காவின் செயற்குழு உறுப்பினர் அல்தாஃப்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "தர்காவை இடமாற்றுமாறு கூறுகின்றனர். அதை எங்களால் நிறைவேற்ற முடியாது. நாங்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த இஸ்லாமியர்கள்தான். வேறு எங்கிருந்தும் வரவில்லை. பாஜகவும் இந்து முன்னணியும் பிரச்னையை ஏற்படுத்துகின்றன" எனக் கூறுகிறார்.
கோவிலைச் சுற்றியுள்ள மக்கள், தங்களுக்கு ஆதரவாக உள்ளதாகக் கூறும் அல்தாஃப், "காலம்காலமாக தர்கா எப்படி செயல்பட்டு வந்ததோ, அதே அப்படியே தொடர வேண்டும் என நினைக்கிறோம். மலையில் ஆர்.டி.ஓ விசாரணை நடத்தினார். ஆடு, கோழிகளை உரிக்கும் இடம், சமையல் செய்யும் இடம் ஆகியவற்றை அவர் பார்வையிட்டார். ஆனால், ஆடுகளை பலியிடுவதற்கு அவர் தடை விதித்துள்ளார். கோவிலுக்கும் எங்களுக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை" என்கிறார்.
"திருப்பரங்குன்றம் மலையைச் சுற்றி சாலை வசதி உள்பட எத்தனையோ பிரச்னைகள் உள்ளன. அதைத் தீர்ப்பதற்கு எவ்வித முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை. ஆனால், ஆடு, கோழிகளை மையமாக வைத்து பதற்றமான சூழலை ஏற்படுத்துகின்றனர்" எனக் கூறுகிறார் அல்தாஃப்.
"தர்காவை மாற்ற சொல்லவில்லை
இந்த விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் சுமார் நான்கு ரிட் மனுக்கள் நிலுவையில் உள்ளதாகக் கூறுகிறார் பாஜக மாநில பொதுச்செயலாளர் இராம.சீனிவாசன்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "சட்டரீதியான நடவடிக்கைகள் ஒருபுறம் நடந்து வருகிறது. சில இஸ்லாமிய அமைப்பினர், தோளில் கிடாவை போட்டுக் கொண்டு மலையில் ஆடு வெட்டுவதைத் தான் நாங்கள் எதிர்க்கிறோம். இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்துகின்றனர்" என்றார்.
"ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி உடன் வந்தவர்கள் நடந்து கொண்ட விதம், எஸ்டிபிஐ போராட்டம், இந்துக்களுக்கு எதிராகப் பேசியது என அவர்கள் தான் பிரச்னையை ஏற்படுத்துகின்றனர். தர்காவை இடமாற்றம் செய்வது என்பது அரசு எடுக்க வேண்டிய முடிவு. அதனை இடமாற்றம் செய்யுமாறு பாஜக கூறவில்லை" என்கிறார் இராம.சீனிவாசன்.
கோவிலின் தலைமை பட்டர் ராஜாவிடம் பிபிசி தமிழ் பேசியது. "இது கோவிலுக்கு சொந்தமான மலை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இவ்வளவு காலம் பிரச்னை வந்தது இல்லை. அங்கு ஆடு, கோழிகளைக் கொண்டு சென்றதாக எங்களுக்குத் தெரியவில்லை" எனக் கூறினார்.
"பொதுப்பிரச்னையாக மாற்ற வேண்டாம்"
திருப்பரங்குன்றம் மலை தொடர்பாக ஜனவரி 29 அன்று சென்னையில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஊடகங்களுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
"அரசின் நிலைப்பாடு என்பது எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான். அவரவர் விரும்பும் மத சடங்குகள், முன்னோர்கள் எப்படி பின்பற்றி வந்தார்களோ அதே நிலை தொடர்ந்தால் அமைதியான சூழல் தொடரும்" எனக் கூறியுள்ளார்.
"எந்த மதமாக இருந்தாலும் வழிபாட்டு நெறிமுறையில் அமைதி நிலவ வேண்டும் என்பதுதான் அரசின் நோக்கம். இதைப் பொதுப் பிரச்னையாக மாற்றிவிட வேண்டாம்" எனக் கூறுகிறார் சேகர்பாபு.
"மதம், சாதி, இனங்களுக்கு அப்பாற்பட்டு அனைவரும் மனிதர்கள் என்ற நிலையில் இதை அணுக வேண்டும். யாருக்கும் சாதகமான சூழலை ஊடகங்கள் எடுத்துச் செல்ல வேண்டாம்" எனக் கூறியுள்ள சேகர்பாபு, "நீதிமன்றத்தில் இந்த வழக்கு இருப்பதால் மேலும் விரிவாக பேசுவது சரியானதாக இருக்காது" எனத் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)