You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கும்பமேளா: திரிவேணி சங்கமம் என்பது என்ன? கங்கை, யமுனை ஆற்று நீர் வெவ்வேறு நிறங்களில் இருக்குமா?
பிரயாக்ராஜில் மகா கும்பமேளா ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஜனவரி 29 மௌனி அமாவாசையன்று திரிவேணி சங்கமத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குறைந்தபட்சம் 30 பேர் உயிரிழந்திருக்கலாம் என்றும் மேலும் பலர் காயமடைந்திருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
கூட்ட நெரிசலுக்குப் பிறகு, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பக்தர்கள் திரிவேணி சங்கமத்திற்குச் செல்ல வேண்டாமென்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கும்பமேளாவுக்கு வரும் பக்தர்கள், அவர்களுக்கு அருகில் காணப்படும் கங்கை ஆற்றிலேயே நீராடுமாறும், திரிவேணி சங்கமத்திற்குச் செல்ல முயல வேண்டாம் என்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
கடந்த 13-ஆம் தேதியன்று புனித நீராடலுடன் தொடங்கிய கும்பமேளாவில், இரண்டாவது நாளில் மகர சங்கராந்தியன்று அகரா துறவிகளின் முதல் புனித நீராடல் நடைபெற்றது.
கும்பமேளா நிகழ்வில் புனித நீராடல் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. இது 'ராஜயோக ஸ்நானம்' என்றும் அழைக்கப்படுகிறது. மகா கும்பமேளாவின் மிக முக்கியமான மத சடங்காக இது பார்க்கப்படுகிறது.
இந்த நேரத்தில், திரிவேணி சங்கமத்தின் பெரும் பகுதி அகராவின் துறவிகளுக்காக ஒதுக்கப்படும். துறவிகள் சங்கமத்தை அடைவதற்கென மரக்கட்டைகளால் பாதைகள் அமைக்கப்பட்டன.
இந்தக் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு, இந்த நிகழ்வின் முக்கியமான இடமாகப் பார்க்கப்படும் திரிவேணி சங்கமம் என்பது என்ன என்ற கேள்வி எழுகிறது. அதுகுறித்து இங்கு பார்ப்போம்.
திரிவேணி சங்கமம் என்றால் என்ன?
கங்கை, யமுனை நதிகள் சந்திக்கும் இடமே திரிவேணி சங்கமம். புராணங்களின்படி, சரஸ்வதி நதியும் இங்கு சங்கமித்ததாகக் கருதப்படுகிறது. இந்த மூன்று நதிகளின் சங்கமமாகக் கருதப்படுவதால் இது திரிவேணி சங்கமம் என்றழைக்கப்படுகிறது. இங்கு பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதற்கு புனித நீராடலே காரணம்.
இங்கு சங்கமிக்கும் இரண்டு நதிகளின் நீரும் வெவ்வேறு வண்ணங்களில் காட்சியளிக்கும். யமுனையின் நீர் வெளிர் நீல நிறத்தில் இருக்கும். கங்கை நீர் சற்று சேறும் சகதியுமாகத் தோற்றமளிக்கும். யமுனை நதி இந்த இடத்தில் கங்கையுடன் இணைகிறது.
பிபிசியிடம் பேசிய பிரயாக்ராஜின் ஜோதிடரான பண்டிதர் ரமேஷ் பாண்டே, "பல்வேறு துறவிகள், தங்கள் மத சடங்குகளையும் புனித நீராடலையும் சங்கமத்தில் மேற்கொள்கின்றனர். புனித நீராடல் நாளில், அகரா துறவிகள், திரிவேணி சங்கமத்தை அடையவதற்காகப் பல்வேறு பாதைகள் அமைக்கப்படுகின்றன," என்று விளக்கினார்.
"இந்தச் சங்கமத்தில் குளிப்பதன் மூலம் ஒருவர் முக்தி அடைவதாக இந்து மதத்தில் நம்பப்படுகிறது. ஒவ்வொரு பக்தரும் சங்கமத்திற்குச் சென்று நீராட விரும்புவதற்கான காரணமும் இதுதான்," என்றும் அவர் தெரிவித்தார்.
பிடிஐ செய்தி முகமையின்படி, நீர்ப்பாசனத் துறையின் 'இயந்திர தடுப்பு, இயந்திர பராமரிப்புப் பிரிவு', சாஸ்திரி பாலத்திற்கும் சங்கமத்திற்கும் இடையே இருக்கும் நிலப்பகுதியின் பரப்பை 26 ஹெக்டேர் அளவுக்கு அதிகரிக்கும் பணிகளைத் தொடங்கியுள்ளது.
கும்பமேளாவை முன்னிட்டு, இந்தச் சங்கமத்தில் மட்டும் நிலப்பகுதியின் பரப்பளவை 85 நாட்களில் இரண்டு ஹெக்டேர் அதிகரிப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பக்தர்களின் நெரிசலைக் கருத்தில் கொண்டு, சங்கமத்தின் நுனியில், 1,650 மீட்டர் பரப்பளவில் மணல் மூட்டைகள் போடப்பட்டு, நிலம் விரிவுபடுத்தப்பட்டதாக அதிகாரிகள் கூறியதாகவும் பிடிஐ செய்தி முகமை மேற்கோள் காட்டியுள்ளது.
இதற்காக, நான்கு பெரிய தூர்வாரும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. அவற்றின் உதவியுடன் திரிவேணி சங்கமத்தில் குளிப்பதற்கு என்றே ஒரு பெரிய பகுதி உருவாக்கப்பட்டது.
அதிகாரிகளின் கூற்றுப்படி, அவ்வாறு செய்த பிறகு சங்கமத்தில் மக்கள் குளிப்பதற்கான பரப்பளவு மூன்று மடங்கு அதிகரித்தது.
கடந்த 2019ஆம் ஆண்டில், ஒரு மணிநேரத்தில் 50 ஆயிரம் பக்தர்கள் சங்கமத்தில் குளிக்க முடிந்ததாகவும், இப்போது ஒவ்வொரு மணிநேரத்திற்கும் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நீராட முடியுமெனவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
திரிவேணி சங்கமத்தை அடைவதற்கான ஏற்பாடுகள்
பிரயாக்ராஜில் கும்பமேளா ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 26 வரை நடைபெறும். முன்னதாக, 2019ஆம் ஆண்டு பிரயாக்ராஜில் அர்த்த கும்பமும், 2013ஆம் ஆண்டு பூர்ண கும்பமும் ஏற்பாடு செய்யப்பட்டன.
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை, ஹரித்வார், உஜ்ஜைன், நாசிக், பிரயாக்ராஜ் ஆகிய பகுதிகளில் கும்பமேளா அடுத்தடுத்து நடத்தப்படுகிறது.
பிரயாக்ராஜில் 4,000 ஹெக்டேர் நிலப்பரப்பில் கும்பமேளா நடைபெறுகிறது. இது 25 செக்டார்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச அரசு கும்பமேளா பகுதியை அம்மாநிலத்தின் 79வது மாவட்டமாக அறிவித்துள்ளது. மேலும், மாவட்ட நிர்வாகம் அங்கு மொத்தமாக 41 படித்துறைகளை அமைத்துள்ளது.
பத்து நிரந்தர படித்துறைகளும் 31 தற்காலிக படித்துறைகளும் உள்ளன. இந்தப் படித்துறைகளை அடைய 14 முக்கிய வழித்தடங்கள் உள்ளன.
புனித நீராடல் தவிர, மற்ற நாட்களில், மக்கள் ஆரைல் படித்துறையில் இருந்து படகு மூலமாக சங்கமத்தை அடைய முயல்கிறார்கள்.
ஆனால், புனித நீராடல் நாளில், படித்துறைகளில் படகுகளை நிறுத்த முடியாது. அவற்றின் சேவை நிறுத்தப்படுகிறது. இதனால் பக்தர்கள், படகு மூலம் சங்கமத்தை அடைய முடியாதது மட்டுமின்றி, கூட்டத்தையும் ஓரளவுக்குக் கட்டுப்படுத்த முடியும்.
புனித நீராடலின் முதல் நாளில், பல பக்தர்கள் பிபிசியிடம் பேசும்போது, மாவட்ட நிர்வாகம் இதர படித்துறைகளில் இருந்த படகுகளையும் நிறுத்திவிட்டதால் திரிவேணி சங்கமப் பகுதியை அடைய முடியவில்லை என்று புகார் கூறினர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)