You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ்நாட்டில் வீட்டிற்குள் நுழையும் பாம்புகளை பிடிக்க புதிய செயலி அறிமுகம் - எவ்வாறு செயல்படும்?
- எழுதியவர், சேவியர் செல்வகுமார்
- பதவி, பிபிசி தமிழ்
பாம்பு என்றால் அஞ்சாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். உங்கள் வீடுகளுக்குள் பாம்புகள் நுழைந்தால் உடனடியாக அவற்றை மீட்பதற்கு செயலி இருந்தால் எவ்வாறு இருக்கும்?
தமிழ்நாடு வனத்துறை அத்தகைய முன்னெடுப்பை தொடங்கியுள்ளது. ஓலா, ஊபர் போல உருவாக்கப்பட்டுள்ள புதிய செயலியால் பாம்பு மீட்பாளர்களையும் துரிதமாக தொடர்பு கொள்ள முடியும்.
தமிழகத்தில் பாம்புகளிடமிருந்து மக்களையும், மக்களிடமிருந்து பாம்புகளையும் காப்பாற்றும் வகையில், பாம்பு மீட்பாளர்களை ஒருங்கிணைக்கும் 'நாகம்' மொபைல் செயலியை தமிழக வனத்துறை அறிமுகம் செய்துள்ளது.
மக்கள் தங்கள் செல்போன்களில் பதிவிறக்கம் செய்து கொண்டு, வீடுகள், நிறுவனங்கள் உள்ளிட்ட கட்டடங்களுக்குள் பாம்புகள் வரும்போது, இதில் பாம்பு மீட்பாளர்களை உடனே அழைக்க முடியும்.
தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எப்படி காட்டுயிர்களுக்கும், மக்களுக்குமான இடைவெளியைக் குறைக்க முடியும் என்பதற்கு இது மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக இருக்குமென்று வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹூ பிபிசி தமிழிடம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பாம்பு மீட்பாளர்கள் மரணம்
இந்தியாவில் பாம்புக்கடிக்கு ஆண்டுக்கு 10 லட்சம் பேர் பாதிக்கப்படுவதாகவும், அவர்களில் 58 ஆயிரம் பேர் உயிரிழப்பதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் தரவுகள் கூறுகின்றன. தென் இந்தியாவில் பாம்புக்கடியால் தமிழகம்தான் அதிகளவில் பாதிக்கப்படுவதாகச் சொல்கிறார் கிருஷ்ணகிரியில் இயங்கி வரும் உலகளாவிய பாம்புக்கடி கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் நிறுவனர் மற்றும் முதன்மை விஞ்ஞானியுமான மனோஜ்.
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளில் பாம்பு மீட்பாளர்கள் சிலரும் மரணமடைந்துள்ளனர். கோவையில் கடந்த மார்ச் 19-ஆம் தேதி பாம்பு மீட்பாளர் சந்தோஷ் பாம்பு பிடிக்கும்போது பாம்பு தீண்டி உயிரிழந்தார். கடந்த ஆண்டில் முரளீதரன் என்ற பாம்பு மீட்பாளரும், 3 ஆண்டுகளுக்கு முன்பு நிர்மல் என்ற பாம்பு மீட்பாளரும் கோவையில் பாம்பு கடித்து மரணமடைந்தனர். கடலுார் நெல்லிக்குப்பத்தைச் சேர்ந்த உமர்அலி என்ற பாம்பு மீட்பாளரும் கடந்த ஆண்டு ஏப்ரலில் பாம்பு கடித்து உயிரிழந்தார். கடந்த 2022 ஆம் ஆண்டில் 5 பாம்பு மீட்பாளர்கள் உயிரிழந்திருந்தனர்.
கேரளாவில் உயிர்களை காப்பாற்றும் 'சர்ப்பா' செயலி!
இந்தியாவில் அடையாளம் காணப்பட்டுள்ள 362 பாம்பு வகைகளில் தமிழகத்தில் 134 வகையான பாம்புகள் இருப்பதாகச் சொல்கிறார் ஊர்வனம் இயற்கை மற்றும் விலங்குகள் பாதுகாப்புக் குழுவின் நிறுவனர் இரா.விஸ்வநாத். இவற்றில் அதிக நஞ்சுள்ள பாம்புகள் 17, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தாத நஞ்சுள்ள பாம்புகள் 11, ஆபத்தில்லாத அதே நேரத்தில் நஞ்சுள்ளவை 20, நஞ்சில்லாதவை 86 என்று பாம்புகளின் வகைகளையும் அவர் பட்டியலிட்டு விளக்குகிறார்.
கேரளாவில் வனத்துறையால் கடந்த 2020 ஆகஸ்ட்டில் 'சர்ப்பா' (SARPA - Snake Awareness, Rescue and Protection App) மொபைல் செயலி அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பின்பு கேரளாவில் பாம்புக்கடியால் உயிரிழப்போர் எண்ணிக்கை பெருமளவில் குறைந்திருப்பதாக கேரளஊடகங்கள் கூறுகின்றன. கேரள வனத்துறை இணையதளமும் இதை பதிவு செய்துள்ளது.
கேரளாவில் கடந்த 2019 ஆம் ஆண்டில் பாம்புக்கடியால் இறந்தவர்கள் எண்ணிக்கை 119 ஆக இருந்தது. கடந்த 2024 ஆம் ஆண்டில் அக்டோபர் வரையிலும் இந்த எண்ணிக்கை 14 ஆக குறைந்தது. இந்த செயலியில் 800க்கும் மேற்பட்ட பாம்பு மீட்பாளர்களும், பாம்பு விஷமுறிவு சிகிச்சை தரும் 84 மருத்துவமனைகளும் இணைக்கப்பட்டுள்ளன.
கேரளாவை பின்பற்றி ஒடிஷா, கர்நாடகா மற்றும் தற்போது தமிழ்நாடும் செயலிகளை அறிமுகப்படுத்தியுள்ளன. கடந்த ஜூலை 16 உலக பாம்புகள் தினத்தன்று 'நாகம்' செயலியின் பீட்டா பதிப்பை தமிழக வனத்துறை செயலர் சுப்ரியா சாஹூ அறிமுகப்படுத்தி வைத்ததுடன், முதற்கட்டமாக பாம்பு மீட்பாளர்களுக்கான பயிற்சியையும் துவக்கி வைத்தார்.
அப்போது பேசிய அவர், ''பாம்புக்கடி கவனத்திற்குரிய நோய்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. பாம்பு மீட்பாளர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முழுமையாக அறிந்திருப்பது அவசியமாகவுள்ளது. பொதுமக்கள் பாம்புகளைப் பார்த்தவுடன் தகவல் பதிவிட்டால், உரிய நேரத்தில் பாம்பு மீட்பு நடவடிக்கையை உறுதி செய்யும் வடிவில் நாகம் செயலி வடிவமைக்கப்பட்டுளளது. தகவலறிந்த உடன் மீட்புக்குழுவினர் விரைந்து வந்து பாம்பை மீட்டு அதன் வாழ்விடத்தில் விடுவர்.'' என்றார்.
மெட்ராஸ் முதலைப்பண்ணை அறக்கட்டளையின் (MCBT-Madras Crocodile Bank Trust) சட்ட ஆலோசனையுடன் சிறுத்தைகள் ஆய்வகம், நாகம் செயலியை உருவாக்கியுள்ளது. தமிழக வனத்துறை பிபிசி தமிழிடம் பகிர்ந்த தகவலின்படி, தமிழகத்தில் தொழில்முறை பயிற்சியின்றி பலரும் பாம்புகள் பிடிப்பதைக் கட்டுப்படுத்தும் விதமாக இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. பாம்பு மீட்பாளர்களை ஒழுங்குபடுத்தி ஒருங்கிணைக்கும் முயற்சி இது என்றும், பாம்புகளைக் பாதுகாப்பற்ற முறையில் கையாளுதலைத் தடுத்து, அறிவியல்முறையில் மீட்டு முறையாக காட்டுக்குள் விடுவிப்பதை உறுதி செய்யும் நடவடிக்கை என்றும் வனத்துறை விளக்குகிறது.
தொழில்நுட்ப ரீதியாக சர்ப்பாவை மிஞ்சும் நாகம்!
கேரளாவில் உள்ள 'சர்ப்பா' செயலியை விட, தொழில்நுட்ப ரீதியாக நாகம் செயலி பல விதத்திலும் மேம்படுத்தப்பட்டுள்ளதாகச் சொல்கிறார் மெட்ராஸ் முதலைப்பண்ணை அறக்கட்டளையைச் சேர்ந்த ஞானேஸ்வர். இவர் இந்த செயலியின் தொழில்நுட்ப பங்குதாரராகவுள்ளார்.
பிபிசி தமிழிடம் பேசிய ஞானேஸ்வர், ''தமிழகத்தில் 300க்கும் மேற்பட்ட பாம்பு மீட்பாளர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் இந்த செயலியில் ஒருங்கிணைக்கப்படவுள்ளனர். ரேபிடோ, ஓலா, ஊபர் போன்றே இதுவும் ஓர் எளிய செயலியாக இருக்கும். இதை பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளலாம். வீட்டுக்குள் பாம்பு வந்துவிட்டால் அதிலுள்ள எமர்ஜென்ஸி பட்டனை அழுத்தவேண்டும். உடனடியாக அந்தப் பகுதியிலுள்ள பாம்பு மீட்பாளர்களுக்கு அந்த தகவல் போகும். அவர்களில் ஒருவர் பொறுப்பேற்று, அரை மணி நேரத்தில் அங்கு வந்து பாம்பை மீட்பார். அதுபற்றி வனத்துறைக்கும் தகவல் போய்விடும்.'' என்றார்.
மேலும் தொடர்ந்த அவர், ''கேரளாவின் சர்ப்பா செயலியில் பாம்பு மீட்பாளர்களை அழைக்கும் (Call option) வசதி இல்லை. அதை விட மேம்படுத்தப்பட்ட மென்பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளதால், தொழில்நுட்ப ரீதியாக நாகம் செயலி இன்னும் சிறப்புடையதாக இருக்கும். தற்போது பீட்டா பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக பயிற்சி தரப்பட்ட 30 பாம்பு மீட்பாளர்களுக்கு இந்த செயலி பகிரப்பட்டுள்ளது. அவர்கள் பகிரும் கருத்துகளின்படி இதில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். அதன் பின்பே பொது மக்கள் பயன்பாட்டுக்கு இ்ந்த செயலி வெளியிடப்படும். அதற்கு இரு மாதங்களாகலாம்.'' என்றார்.
பாம்பு உள்ள இடம் குறித்து தகவலறிந்து அங்கு செல்லும் பாம்பு மீட்பாளர், பாம்பை மீட்ட இடம், அதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் பாம்பு குறித்த பல்வேறு தகவல்களை பதிவிடுவது கட்டாயமாக்கபபட்டுள்ளது. இதன் மூலமாக, பாம்பு முறைப்படி மீட்கப்படுவதும், காட்டிற்குள் உரிய காலத்துக்குள் விடுவிக்கப்படுவதும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக வனத்துறையினர் கூறுகின்றனர்.
''தமிழகத்தில் 2022 ஆம் ஆண்டில் மட்டும் 5 பாம்பு மீட்பாளர்கள் இறந்துள்ளனர். பாம்பு கடித்தால் செய்ய வேண்டிய முதலுதவி குறித்தும் அவர்களில் பலருக்கு எதுவும் தெரிவதில்லை. அதனால் அறிவியல் முறையில் பாம்புகளைப் பிடிக்க பயிற்சி தரப்பட்டதுடன், முதலுதவி பயிற்சியும் பாதுகாப்பு உபகரணங்களும் கொடுத்துள்ளோம். பாம்பு மீட்பாளர்களுக்கு காப்பீடு பாதுகாப்பு அளிப்பதற்கும் முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.'' என்றார் ஞானேஸ்வர்.
பாம்பு மீட்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு உபகரணங்களில், பாம்பைப் பிடிப்பதற்கான கொக்கி (Hook), பெரிய பாம்புகளைப் பிடிப்பதற்கு 4 அடி நீளமுள்ள இரும்புக்குச்சி (Stick), சிறிய பாம்பைப் பிடிப்பதற்கு ஒன்றரை அடி நீளமுள்ள குச்சி, ராஜநாகம், மலைப்பாம்பு போன்றவற்றைப் பிடிப்பதற்கான பெரிய கைப்பிடி கொண்ட உபகரணம், 2 பைகள் போன்றவை உள்ளன.
முதற்கட்டமாக 30 பேருக்கு கொடுக்கப்பட்டுள்ள இந்த பாதுகாப்பு உபகரணங்கள், விரைவில் மேலும் 150 பேருக்கு பயிற்சியுடன் வழங்கப்படவுள்ளதாகவும் பயிற்றுநர்கள் தெரிவித்தனர். இந்த பயிற்சி கொடுக்கப்பட்டு, பாம்பு மீட்பாளர்களுக்கு சான்று அளிக்கப்பட்ட பின், இந்த பயிற்சி சான்று இல்லாத யாரும் பாம்புகளைப் பிடிப்பது வனஉயிரினப் பாதுகாப்புச்சட்டப்படி குற்றமாகக் கருதப்படுமென்றும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அனுபவமுள்ள பாம்பு மீட்பாளர்களை வனத்துறை புறக்கணிக்கிறதா?
வனத்துறை சார்பில் தரப்பட்ட பயிற்சியில் பங்கேற்ற கோவையைச் சேர்ந்த பாம்பு மீட்பாளர் சாந்தகுமார், இந்த பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக பிபிசி தமிழிடம் தெரிவித்தார். இந்த பயிற்சி தமிழகத்தில் மிகவும் அவசியமென்று அவர் கூறுகிறார்.
''பாம்பு மீட்பாளர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பாம்பு பிடிப்பார்கள். சிலர் வாலைப் பிடித்து உதறித் துாக்குவர். சிலர் குச்சியை வைத்து தலையை அழுத்திப் பிடிப்பர். அதனால் ஒரே மாதிரியாக பாதுகாப்பான வழிமுறையில் பாம்பைப் பிடிப்பதற்கு அறிவியல்பூர்வமாக பயிற்சி தரப்பட்டது. பாம்பு இருக்கும் நிலைக்கேற்ப எப்படி நின்று பிடிக்க வேண்டும், அதன் உடலில் எந்த பாகத்தைப் பிடித்து அதற்கு காயம் ஆகாத வகையில் எப்படித் துாக்க வேண்டும் என்பதும் கற்றுக்கொடுக்கப்பட்டது.'' என்றார் சாந்தகுமார்.
வழக்கமாக, ஒரு வீட்டிற்குள் பாம்பு வந்துவிட்டால் பொதுமக்கள் பதற்றமாகி, தீயணைப்புத்துறை, வனத்துறை, பாம்பு மீட்பாளர்கள் என பலருக்கும் போன் செய்துவிடுவார்கள். அனைவரும் அங்கே வந்து சேரும்போது பல நேரங்களில் அங்கு பாம்பே இருப்பதில்லை. ஆனால் நாகம் மொபைல் செயலியில் பாம்பு மீட்புக்கு (Rescue call) ஒருவர் பட்டனை அழுத்தியதும் அருகிலுள்ள பாம்பு மீட்பாளர்கள் அனைவருக்கும் தகவல் செல்கிறது. அவர்களில் யார் முதலில் அந்த அழைப்பை ஏற்கிறார்களோ, அவர்களே அந்த பாம்பைப் பிடிக்கும் பொறுப்பாளராகிறார்.
''தமிழகத்தில் எந்தவிதப் பயிற்சியும் அனுபவமும் இல்லாமல், சமூக ஊடகங்களில் புகழ் பெற வேண்டுமென்று பலரும் பாம்புகளைப் பிடிக்கின்றனர். அதனால்தான் சில நேரங்களில் விபரீதங்கள் நிகழ்ந்துவிடுகின்றன. இனிமேல் பயிற்சி சான்று இல்லாத, இந்த செயலியில் இணைக்கப்படாத யாரும் பாம்பு பிடிக்க முடியாது. சான்றுள்ளவர்களும் சமூக ஊடகங்களில் பதிவிடுவது கண்காணிக்கப்படும். மீறினால் உரிமம் ரத்தாகும். இது பாம்பு மீட்பை ஒழுங்குபடுத்துமென்று நம்புகிறோம்.'' என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார் ஊர்வனம் இயற்கை மற்றும் விலங்குகள் பாதுகாப்புக் குழுவின் நிறுவனர் இரா.விஸ்வநாத்.
அதேநேரத்தில் பாம்புகள் பிடிப்பதில் மிகவும் அனுபவமும், நீண்டகாலமாக பாம்பு மீட்புப்பணியில் ஈடுபடுவோரை இந்த பயிற்சியில் வனத்துறை புறக்கணித்திருப்பதாக கோவையைச் சேர்ந்த பாம்பு மீட்பாளர் அமீன் தெரிவித்தார். இதுபற்றி பிபிசி தமிழிடம் பேசிய அவர், ''பாம்பு மீட்பாளர்களை ஒழுங்குபடுத்தி ஒருங்கிணைக்கும் இந்த முயற்சி நல்லதுதான். ஆனால் பயிற்சியும் சான்றும் வழங்குவதில் பாம்பு மீட்பாளர்களிடம் வனத்துறையினர் எவ்வித பாரபட்சமும் காட்டக்கூடாது.'' என்கிறார்.
''நான் 27 ஆண்டுகளாக பாம்புகள் மீட்பை முழுநேரப் பணியாகவே செய்து வருகிறேன். இதுவரை எந்தவொரு புகாருக்கும் உள்ளானதில்லை. பாம்பு மீட்பைக் கட்டுப்படுத்த வேண்டுமென்ற கோரிக்கையை நீண்ட காலமாக நான் வலியுறுத்தி வருகிறேன். வனத்துறை சார்பில் தரப்படும் இந்த பயிற்சியில், மிகவும் அனுபவம் வாய்ந்த பாம்பு மீட்பாளர்களை வைத்தும் பயிற்சியளிக்க வேண்டும்.'' என்றார்
இது முதற்கட்டப் பயிற்சி என்பதால் மிகக் குறைவான நபர்களுக்கே பயிற்சி தரப்பட்டுள்ளது என்று கூறும் 'நாகம்' செயலி தொழில்நுட்ப பயிற்றுநர் ஞானேஸ்வர், அடுத்தடுத்து தமிழகத்திலுள்ள அனைத்து பாம்பு மீட்பாளர்களுக்கும் ஓராண்டுக்குள் பயிற்சி வழங்கப்பட்டு, அனைவரும் 'நாகம்' மொபைல் செயலி என்ற ஒரே குடையில் கொண்டு வரப்படுவார்கள் என்கிறார்.
நாகம் மொபைல் செயலி குறித்து பிபிசி தமிழிடம் பேசிய தமிழக வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹூ, ''தமிழகத்தில் பாம்பு மீட்பு என்பதை ஒழுங்குபடுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதற்கு நாகம் நிச்சயமாக வழிவகுக்கும். தொழில்நுட்பத்தைக் கொண்டு, மனிதர்களுக்கும், காட்டுயிர்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க முடியும் என்பதற்கு நாகம் செயலி, ஆகச்சிறந்த ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியும்.'' என்றார்.
பாம்புகள் மீட்பு நிகழ்வை அறிக்கையிடுவது, அதற்கான வனத்துறை நெறிமுறைகளைக் கையாள்வது, பாம்பு மீட்பு படங்கள் மற்றும் தகவல்களைப் பதிவிட்டு ஆவணப்படுத்துவது போன்றவற்றுக்கு நாகம் செயலி உதவுவதுடன், விஷமுறிவு மருத்துவமனை, பாம்புகள் குறித்த தரவுகள் போன்ற தகவல்களும் இருப்பதால் இரு தரப்பு பாதுகாப்பையும் உறுதி செய்ய நாகம் உதவுமென்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு