You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மதிய உணவில் பாம்பு! நீக்கிவிட்டு பரிமாறியதால் மாணவர்கள் பாதிப்பு - எங்கு நடந்தது?
- எழுதியவர், ஜார்ஜ் ரைட்
- பதவி, பிபிசி செய்திகள்
பிகாரில் பாம்பு விழுந்த மதிய உணவை உட்கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டனர்.
இந்த விவகாரத்தை தேசிய மனித உரிமைகள் ஆணையம் தற்போது விசாரணை செய்து வருகிறது.
சமையல் பணியாளர், உணவில் இறந்து கிடந்த பாம்பை நீக்கிவிட்டு மாணவர்களுக்கு உணவை பரிமாறியதாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
பிகாரின் மொகாமா நகரில் அமைந்திருக்கும் அந்த பள்ளியில் படித்து வரும் சுமார் 500 குழந்தைகளுக்கு இந்த உணவு பரிமாறப்பட்டிருக்கலாம் என்று நம்புவதாக தனது அறிக்கையில் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
குழந்தைகள் அடுத்தடுத்து உடல் நலக்குறைவால் பாதிப்பைச் சந்திக்க, உள்ளூர்வாசிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"தற்போது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உண்மையானால், இது மாணவர்களின் மனித உரிமை மீறல் பிரச்னையாக மாறும். இரண்டு வாரங்களில், மாணவர்களின் உடல் நலம் குறித்த தகவலை உள்ளடக்கிய விரிவான அறிக்கையை மாநில அரசின் உயர் அதிகாரிகள் சமர்பிக்க வேண்டும்," எனவும் அந்த அறிக்கையில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் கூறியுள்ளது
ஏழ்மையான பின்னணியில் இருந்து வரும் மாணவர்களுக்கான இலவச மதிய உணவு திட்டம் முதன் முதலாக சென்னை (மெட்ராஸ்) மாநகரில் 1925-ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.
உலகின் மிகப்பெரிய திட்டங்களில் இதுவும் ஒன்று. பசியை ஒழித்து, மாணவர்களின் பள்ளி வருகையை ஊக்குவிக்கும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டது. இருப்பினும், உணவின் தரம் குறித்து அவ்வபோது புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது.
2013-ஆம் ஆண்டு பிகாரில், மதிய உணவை உட்கொண்ட 23 பள்ளி மாணவர்கள் உயிரிழந்தனர். உணவில் பூச்சிக்கொல்லி மருந்தின் நஞ்சு அதிக அளவில் உணவில் இருந்தது ஆய்வுகள் மூலம் உறுதியானது என்று காவல்துறையினர் அறிவித்தனர்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு