70% பேர் கட்டாய நாடு கடத்தல்- இரானில் ஆப்கானியர்களுக்கு எதிரான மனநிலை ஏன்?
இரானிலிருந்து வெளியேறிய ஆப்கானியர்கள் கபூலில் உள்ள முகாமில் தங்கியுள்ள காட்சி இது.
சர்வதேச குடியேற்ற அமைப்பின் கூற்றுப்படி, ஒரு நாளிற்கு சுமார் 28,000 ஆப்கானியர்கள் இரானிலிருந்து வெளியேறுகின்றனர்.
2025ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் மட்டும் 2,56,000 ஆப்கானியர்கள் இரானை விட்டு வெளியேறியுள்ளனர் என ஐக்கிய நாடுகளின் குடியேற்ற முகமை தெரிவிக்கிறது.
அதுமட்டுமின்றி, 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 7 லட்சத்திற்கும் அதிகமான ஆப்கானியர்கள் இரானை விட்டு வெளியேறியுள்ளனர் என அந்த அமைப்பு கூறுகிறது.
இதில் 70% பேர் கட்டாயமாக நாடு கடத்தப்பட்டுள்ளனர் என அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் அவந்த் அசீஸ் ஆகா (Avand Azeez Agha) AFP செய்தி முகமையிடன் தெரிவித்தார்.
முன்னதாக, இரான் அரசு ஜூலை 6 தேதிக்குள் ஆவணங்கள் இல்லாத அனைத்து ஆப்கானியர்களும் நாடு விட்டு வெளியேற வேண்டும் என்று கடுமையான உத்தரவைப் பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.
சரி, ஆப்கானியர்கள் இரானிலிருந்து வெளியேறக் காரணம் என்ன? அவர்கள் எப்போது இரானுக்குச் சென்றார்கள்? விரிவாகப் பார்க்கலாம்.
இரானிலிருந்து ஆப்கானியர்கள் வெளியேறக் காரணம் என்ன?
ஜூன் மாதத்தில் இரான் மற்றும் இஸ்ரேல் நேரடி மோதலில் ஈடுபட்டன. இந்த மோதலின் இஸ்ரேல் இரானின் ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது. இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் 12 நாட்கள் தொடர்ந்தது. அதன் பிறகு சண்டை நிறுத்த ஒப்பந்தத்தின் மூலம் அது முடிவுக்கு வந்தது.
இந்த மோதலின் போது இஸ்ரேலுக்கு சில ஆப்கானிய அகதிகள் உளவுபார்த்ததாகச் சந்தேகிக்கப்பட்டதன் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர் என அரசு ஊடகம் செய்தி வெளியிட்டது.
இந்த குற்றச்சாட்டுக்குப் பின், ஆப்கானிய அகதிகளை வெளியேற்ற புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இரானில் செயல்படும் மேஹர் செய்தி நிறுவனம், காவலர்களுக்கு அகதிகளை விரைவாக நாடுகடத்த அறிவுறுத்தப்பட்டதாகத் தெரிவித்தது. பின்னர் காவல்துறை இதற்கு மறுப்பு தெரிவித்தது.

ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுப் போர் முடிவடைந்த பிறகு, 2021-ஆம் ஆண்டு தாலிபான் ஆட்சியைக் கைப்பற்றியது. அந்த சமயத்தில் பல ஆப்கானியர்கள் பாதுகாப்புக்காக இரானில் தஞ்சம் புகுந்தனர். ஆனால் அவர்களில் பெரும்பாலோருக்கு இரானில் சட்டப்படி தங்கும் உரிமை இல்லை.
இதனால், இரானில் ஆப்கானியர்களுக்கு எதிரான மனநிலை அதிகரித்தது. இதனால் இரானில் அவர்கள் அதிக துன்புறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றனர்.
முறையான விசா மற்றும் ஆவணங்கள் வைத்திருக்கும் ஆப்கானியர்களும் நாடு கடத்தப்பட்டதாக இரானிய ஊடகங்களில் வெளியான செய்திகள் கூறுகின்றன. கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட சில ஆப்கானியர்கள், இரானுக்கு அவர்கள் துரோகம் செய்ததாக அதிகாரிகள் குற்றம் சுமத்தியதாகக் கூறினர்.
இரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான மோதல் நிறைவடைந்தாலும், அதன் விளைவுகள் இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கின்றன என்று ஆப்கானிஸ்தானுக்கான ஐ.நா. அகதிகள் ஒருங்கிணைப்பாளராக உள்ள அரஃபாத் ஜமால் (Arafat Jamal) கூறினார்.
"இந்த அகதிகள் இயக்கம் போருக்கு முன்பே தொடங்கியது, ஆனால் போர் அதை மேலும் மோசமாக்கியது" எனவும் அவர் தெரிவித்தார்.
இரானில் வாழும் ஆப்கான் அகதிகள் இதைத் தவிர மேலும் சில சிரமங்களை எதிர்கொள்கிறார்கள். அவர்கள் இரானில் பிறந்தாலும், இரான் குடியுரிமை பெற முடியாது. பலரால் வங்கிக் கணக்குகளைத் தொடங்க முடியவில்லை, SIM கார்டுகள் வாங்க முடியவில்லை, சில பகுதிகளில் வாழவும் அவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
அவர்களுக்கு வேலை வாய்ப்புகளும் மிகவும் குறைவாகவே உள்ளன. பெரும்பாலும் அவர்கள் கடின உழைக்க வேண்டியிருக்கும். ஆனாலும் அவர்களுக்காகச் சம்பளம் மிகக்குறைவானதாகவே உள்ளது.
இவர்களை வெளியேற்றச் செய்து வரும் முயற்சியின் ஒரு பகுதியாக, முறையான ஆவணங்கள் இல்லாத ஆப்கானிய அகதிகள் பற்றி பொதுமக்கள் புகாரளிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இது ஒருபுறம் இருக்க, முன்னதாக முறையான ஆவணங்கள் இல்லாத "ஆப்கானிய மக்களுக்கு இதற்கு மேல் அடைக்கலம் கொடுக்க முடியாது" எனக்கூறி பாகிஸ்தான் அவர்கள் நாடு கடத்தியது.
இந்த ஆண்டில் மட்டும் இரான் மற்றும் பாகிஸ்தானிலிருந்து சுமார் 10 லட்சத்திற்கும் மேலான அகதிகளை நாடுகடத்தியுள்ளனர் என அரஃபாத் ஜமால் (Arafat Jamal) தெரிவித்தார்.
தாலிபான் அரசின் துணைப் பிரதமர் மௌலவி அப்துல் சலாம் ஹனாஃபி (Maulvi Abdul Salam Hanafi), "இரான் அதிகாரிகளுடன் இந்த பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாகக் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



