ஜிஎஸ்டி மாற்றம் அமலானால் தமிழகத்திற்கு ரூ.6,000 கோடி இழப்பு ஏற்பட வாய்ப்பு - சரிகட்ட என்ன வழி?

ஜிஎஸ்டி சீர்திருத்தம், மத்திய அரசு, தமிழ்நாடு அரசு

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி)யை மாற்றியமைக்கப் போவதாக சமீபத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி அறிவித்தார். புதிய வரி விகிதங்கள் தொடர்பான பரிந்துரைகள், இதற்கான அமைச்சர்கள் குழு முன்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் மாநிலங்கள் கடுமையான நிதி இழப்பைச் சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதுகுறித்து தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களின் நிதியமைச்சர்கள் கூறுவது என்ன? மாநில அரசுகளின் இழப்பை ஈடுகட்ட என்ன செய்யலாம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்? விரிவாகப் பார்க்கலாம்.

'ஜிஎஸ்டி அடுக்குகள் இரண்டாக குறையும்'

இந்தியாவின் சுதந்திர தினத்தன்று நாட்டு மக்களிடம் உரையாற்றிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, தீபாவளிப் பரிசாக ஜி.எஸ்.டி. வரி விகிதம் மாற்றியமைக்கப்படும் என அறிவித்தார்.

"அடுத்த தலைமுறை சரக்கு மற்றும் சேவை வரி சீர்திருத்தங்கள் தீபாவளியன்று வெளியிடப்படும். அது அத்தியாவசியப் பொருட்களின் மீதான வரிகளைக் குறைத்து, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், உள்ளூர் விற்பனையாளர்கள், நுகர்வோர் ஆகியோருக்குப் பயனளிக்கும்" என்று குறிப்பிட்டார் பிரதமர் நரேந்திர மோதி.

தற்போது நான்கு அடுக்குகளாக உள்ள ஜி.எஸ்.டி வரி, திருத்தத்திற்குப் பிறகு 5 சதவீதம் மற்றும் 18 சதவீதம் என இரண்டு அடுக்குகளை மட்டுமே கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது வரி விதிப்பை எளிதாக்கும் என்றாலும்கூட, மாநிலங்களின் வரி வருவாயைக் கடுமையாக பாதிக்கும் என்ற அச்சம் மாநிலங்களுக்கு எழுந்திருக்கிறது.

ஜிஎஸ்டி சீர்திருத்தம், மத்திய அரசு, தமிழ்நாடு அரசு

பட மூலாதாரம், Getty Images

ஜி.எஸ்.டி. வரிகளின் பின்னணி

இந்தியாவில் சரக்குகளுக்கும் சேவைகளுக்கும் ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு விகிதத்தில் மதிப்புக் கூட்டு வரிகளை (VAT) விதித்து வந்த நிலையில், நாடு முழுவதும் சரக்குகளின் போக்குவரத்தை எளிதாக்கும் நோக்கில், ஒரு பொருளுக்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விகிதங்களோடு 2017ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, நாடு முழுவதும் சரக்குகளுக்கும் சேவைகளுக்கும் 0 முதல் 28 சதவீதம் வரை (0%, 5%, 12%, 18%, 28%) சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) அறிமுகப்படுத்தப்பட்டது.

இது தவிர, வெகு சில பொருட்களுக்கு மிகக் குறைவான வரிகள் விதிக்கப்படுகின்றன. அதாவது, வைரம் போன்ற மதிப்பு மிகுந்த கற்களுக்கு 0.25% வரியும் தங்கம் போன்ற மதிப்பு மிக்க உலோகங்களுக்கு 3% வரியும் விதிக்கப்படுகின்றன. மேலும், 2017ல் நாடு முழுவதும் மாநிலங்கள் ஜி.எஸ்.டி. வரிக்கு மாறியபோது, அவை வருவாய் இழப்பைச் சந்தித்தன. இந்த இழப்பை ஐந்தாண்டுகளுக்கு ஈடுகட்டுவதாக மத்திய அரசு அறிவித்தது. இந்த நிதியை வழங்குவதற்காக இழப்பீட்டு மேல் வரி (Compensation Chess) என்ற சிறப்பு வரி விதிக்கப்பட்டது. இந்த வரி, ஏற்கனவே 28% வரி விதிப்பை எதிர்கொள்ளும் பிரிவில் இருக்கும் பொருட்களில், சில பொருட்களுக்கு மட்டும் விதிக்கப்பட்டது. குறிப்பாக சிகரெட் போன்ற பொருட்களுக்கு இழப்பீட்டு மேல்வரி 40 சதவீதம் அளவுக்கு விதிக்கப்பட்டது.

மத்திய அரசு மாநிலங்களுக்குத் தந்துவந்த இழப்பீடு, 2022ஆம் ஆண்டோடு முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால், மத்திய அரசு தந்துவந்த மொத்த இழப்பீட்டுத் தொகை வசூலான இழப்பீட்டு மேல்வரியைவிட அதிகமாக இருந்ததால், அதனை ஈடுகட்டுவதற்காக தற்போதுவரை அந்த வரி விதிக்கப்பட்டுவருகிறது. அடுத்த மாதம் இந்த இழப்பீட்டு மேல்வரி முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில்தான் வரி விகிதங்களை மாற்றியமைக்கப் போவதாக மத்திய அரசு தற்போது அறிவித்துள்ளது.

ஜிஎஸ்டி சீர்திருத்தம், மத்திய அரசு, தமிழ்நாடு அரசு

பட மூலாதாரம், Getty Images

புதிய ஜி.எஸ்.டி. விகிதம் பற்றிய பரிந்துரை

பிரதமரின் அறிவிப்பை அடுத்து, புதிய வரி விகிதங்கள் தொடர்பான பரிந்துரைகள், இதற்கான அமைச்சர்கள் குழு முன்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பிரதானமான வரி விகிதங்கள் 5% மற்றும் 18% என இரண்டு அடுக்குகளாக மட்டுமே இருக்கும். ஏற்கனவே 0.25% வரி விதிப்பில் இருக்கும் பொருட்களுக்கும் 3% வரி விதிப்பில் இருக்கும் பொருட்களுக்கும் 1% அல்லது அதைவிடக் குறைவாக வரி விதிக்கப்படலாம்.

புதிய 5% பிரிவில், ஏற்கனவே 5% வரி விதிக்கப்பட்ட பொருட்கள், 12% வரி விதிப்பில் இருந்த பொருட்கள், 18% வரி விதிக்கப்பட்ட பொருட்களில் தினசரி பயன்படுத்தப்படும் சோப்பு, ஷாம்பூ போன்ற பொருட்கள் இருக்கும். 18% வரி பிரிவில், ஏற்கனவே 18% வரி விதிக்கப்பட்ட பொருட்களில் தினசரி தேவைக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் தவிர்த்த பிற பொருட்கள், 28% வரி விதிப்பு பிரிவில் உள்ள பெரும்பாலான பொருட்கள் இடம்பெறும். இவை தவிர, Sin Goods எனப்படும் புகையிலை சார்ந்த பொருட்கள், ஆன்லைன் விலையாட்டுகள் போன்ற 5- 7 பொருட்களுக்கு 40 சதவீத வரி விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

"ரூ.1.1 லட்சம் கோடி முதல் ரூ.1.8 லட்சம் கோடி வரை இழப்பு இருக்கலாம்"

இப்படி வரி விகிதங்கள் மாற்றியமைக்கப்படுவதால் எந்த அளவுக்கு வரி இழப்பு ஏற்படும் என்பது குறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பு ஏதும் இதுவரை மத்திய அரசிடமிருந்து வெளியாகவில்லை. பல்வேறு நிதி நிறுவனங்கள், முதலீட்டு அமைப்புகள் இது தொடர்பான கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன.

ஒட்டுமொத்தமாக 1.1 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என பன்னாட்டு முதலீட்டு வங்கியான UBSஐ மேற்கோள்காட்டி ஃபினான்சியல் எக்ஸ்பிரஸ் இதழ் தெரிவித்துள்ளது. HSBC வங்கியை மேற்கோள்காட்டி, இந்த இழப்பு 1.43 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இருக்கலாம் என சில செய்தித் தாள்கள் கூறுகின்றன.

ஆனால், நாடு முழுவதும் உள்ள பொருளாதார நிபுணர்களின் கணிப்பின்படி, இந்த இழப்பு 1.1 லட்சம் கோடி ரூபாயிலிருந்து 1.8 லட்சம் கோடி ரூபாய் வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இழப்பில் பாதியை மத்திய அரசும், மற்றொரு பாதியை மாநிலங்களும் பகிர்ந்துகொள்ள வேண்டும்.

ஜிஎஸ்டி சீர்திருத்தம், மத்திய அரசு, தமிழ்நாடு அரசு

பட மூலாதாரம், Getty Images

"தமிழ்நாட்டிற்கு 8% வருவாய் இழப்பு வரலாம்"

ஒட்டுமொத்த ஜி.எஸ்.டி. வருவாயைப் பொறுத்தவரை, 2024 - 25ஆம் நிதியாண்டைப் பொறுத்தவரை தமிழ்நாட்டின் ஜி.எஸ்.டி வசூல், 1,31,000 கோடி ரூபாயாக இருக்கிறது. புதிய வரி விதிப்பு மாற்றத்தால் இதில் தமிழ்நாட்டிற்கு சுமார் 8 சதவீதம் வரை இழப்பு ஏற்படலாம் என தமிழ்நாட்டின் வணிக வரித் துறை அதிகாரிகள் கருதுகின்றனர். அதாவது, இந்த 1,31,000 கோடி ரூபாயில் மத்திய அரசின் பங்கான பாதியை அளித்த பிறகு, மீதமுள்ள 65,000 கோடி ரூபாயில் இந்த இழப்பு 5,000 கோடி ரூபாய் முதல் 6,000 கோடி ரூபாய் வரை ஏற்படலாம் என அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

இந்த சீர்திருத்தத்தை மத்திய அரசு இப்போது ஏன் மேற்கொள்கிறது என்பது பலருக்கும் புரியவில்லை. "இத்தனைக்கும் இந்த ஆண்டு வருமான வரி வசூலும் குறைந்திருக்கிறது. கடந்த ஆண்டோடு ஒப்பிட்டால், மொத்த வருமான வரி வசூல் 1.87 சதவீதம் குறைந்திருக்கிறது. கூடுதலாக வரி செலுத்தியவர்களுக்கு, திருப்பித் தர வேண்டிய தொகையை திருப்பித்தந்த பிறகு, வசூல் 3.95 சதவீதம் அளவுக்குக் குறைந்திருக்கிறது. இந்த நிலையில் ஜி.எஸ்.டி. வரியைக் குறைக்கவும் மத்திய அரசு ஏன் விரும்புகிறது என்பதில் தெளிவில்லை" என்கிறார் ஒரு அதிகாரி.

தமிழ்நாடு நிதியமைச்சர் கூறியது என்ன?

எதிர்பார்த்தபடியே மாநில நிதியமைச்சர்கள் இதுகுறித்து எச்சரித்திருக்கின்றனர். ஆகஸ்ட் 20ஆம் தேதியன்று தில்லியில் நடந்த ஜி.எஸ்.டி. தொடர்பான கூட்டம் ஒன்றில் பங்கேற்ற தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, வரிச் சீர்திருத்தம் மாநிலங்களுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் வகையில் இருக்கக்கூடாது எனக் கூறியிருக்கிறார்.

"தமிழ்நாடு உட்பட பல மாநிலங்கள் பெரும் உள்கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் சமூக நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில், இதற்கான செலவினங்களைக் குறைக்கும் வகையில் வரிசீரமைப்பு வழிவகுக்கக்கூடாது. தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் சுகாதாரம் மற்றும் கல்வியில் முதலீடு செய்வதன் மூலம் முழு மனித ஆற்றலையும் அடைவதற்கான வழியைக் காட்டுகின்றன. எனவே வரிசீரமைப்பு முனைவுகள் ஒவ்வொரு மாநிலத்தின் வருவாயை பாதுகாக்கும் விதமாக அமைந்திட வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.

ஜிஎஸ்டி சீர்திருத்தம், மத்திய அரசு, தமிழ்நாடு அரசு

பட மூலாதாரம், Getty Images

கர்நாடக நிதியமைச்சர் கவலை

கர்நாடக நிதியமைச்சர் கிருஷ்ண பைரே கவுடாவும் இது குறித்து கவலை தெரிவித்திருக்கிறார்.

"இந்த வரி குறைப்பு மாநிலங்களின் வருவாயில் ஏற்படுத்தவிருக்கும் தாக்கம் கவலையளிக்கிறது. இது தொடர்பான கலந்தாலோசனைகளை, ஜிஎஸ்டி ஆலோசனை வட்டத்திற்கு வெளியில் மத்திய அரசு செய்ததால், ஏன் இதைச் செய்தது என்பது தெரியவில்லை. மாநிலங்களின் வருவாயைப் பாதுகாக்க ஏதாவது வழிமுறைகள் இருக்கிறதா என்பதும் தெரியவில்லை. மத்திய அரசுக்கு ஏகப்பட்ட வருவாய் வழிகள் இருக்கின்றன. மாநில அரசைப் பொறுத்தவரை, ஜி.எஸ்.டிதான் முக்கியமான வருவாய் ஆதாரம். அதில் மாற்றம் ஏற்பட்டால், அது மாநிலங்களைக் கடுமையாகப் பாதிக்கும்" என ஊடகங்களிடம் அவர் தெரிவித்திருக்கிறார்.

நிபுணர்கள் கருத்து

ஆனால், ஜி.எஸ்.டி. வரி நிபுணர்களைப் பொறுத்தவரை இதைத் தவிர்க்க முடியாது என்கிறார்கள். "பல நாடுகளில் ஜி.எஸ்.டி. வரி என்றால், எல்லாப் பொருட்களுக்கும் ஒரே மாதிரி வரி விதிக்கப்படும். இந்தியா போன்ற மிகப்பெரிய நாட்டில் உடனடியாக அதைச் செய்ய முடியாது. ஆனால், இத்தனை மட்டங்களாக வரி விதிக்கப்படும் நிலையில் இதனை எளிமைப்படுத்த வேண்டும் என தொடர்ந்து ஆலோசிக்கப்பட்டுவந்தது. இப்போது வரி வருவாய் நன்றாக இருப்பதால் அதைச் செய்யலாம் என நினைக்கிறார்கள். எப்போதுமே வரி வருவாய் அதிகரிக்கும்போது, வரியைக் குறைப்பதுதான் சரியாக இருக்கும். ஆகவே அதைச் செய்கிறார்கள்" என்கிறார் ஜி.எஸ்.டி. விவகாரங்களின் நிபுணரான கே.வைத்தீஸ்வரன்.

இதே கருத்தை எதிரொலிக்கும் ஜி.எஸ்.டி. வரி ஆலோசகரான ஜி. நடராஜன், மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை எப்படி ஈடுசெய்வார்கள் என்பதில் தெளிவில்லை என்கிறார். "கடந்த எட்டு ஆண்டுகளில் ஜி.எஸ்.டி வரி வசூல் தொடர்ந்து அதிகரித்து வந்திருக்கிறது. ஆகவே, இரண்டு வரி மட்டங்களை நீக்குகிறார்கள். இதனால் நிச்சயமாக வருவாய் இழப்பு இருக்கும். அதை எப்படி எதிர்கொள்வார்கள் என்பதில் தெளிவு இல்லை" என்கிறார் அவர்.

ஜிஎஸ்டி சீர்திருத்தம், மத்திய அரசு, தமிழ்நாடு அரசு

பட மூலாதாரம், Getty Images

இந்தத் தருணத்தில் மத்திய அரசு ஏன் இதைச் செய்கிறது?

"வரி குறைவதால் மக்கள் செலவு செய்வது, பொருட்களை வாங்குவது அதிகரிக்கும்; அது பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் என மத்திய அரசு கருதியிருக்கலாம்" என்கிறார் வைத்தீஸ்வரன். மேலும் ஒரு காரணத்தையும் முன்வைக்கிறார் அவர்.

"28 சதவீத வரி என்பது Sin Goods ஆக கருதப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட்டது. அதாவது சிகரெட், கார், ஏசி, ஃப்ரிட்ஜ், சிமெண்ட் போன்ற பொருட்களுக்கு இந்த வரி விதிக்கப்பட்டது. ஆனால், கார், ஏசி, ஃப்ரிட்ஜ், சிமெண்ட் போன்றவற்றை Sin Goodsஆக கருதுவது சரியல்ல என்று நீண்ட காலமாக சொல்லப்பட்டுவந்தது. தற்போது அரசு அதனை மாற்றுகிறது" என்கிறார் வைத்தீஸ்வரன்.

"இழப்பீட்டு செஸ் ரத்தாவது மாநிலங்களுக்கு சாதகம்"

ஆனால், மாநில வரி அதிகாரிகளைப் பொறுத்தவரை சில கேள்விகள் இருக்கின்றன. இப்போது சிகரெட் போன்றவற்றுக்கு இழப்பீட்டு மேல் வரியுடன் சேர்த்து 68 சதவீத வரி விதிக்கப்படும் நிலையில், புதிய முறையில் சிகரெட் போன்ற பொருட்களுக்கு 40 சதவீத வரி மட்டுமே விதிக்கப்படும். இழப்பீட்டு மேல் வரி இருக்காது. அது சரியானதாக இருக்குமா என்ற கேள்வி இருக்கிறது.

ஆனால், இது மாநிலங்களுக்குச் சாதகமாக இருக்கும் என்கிறார் ஜி. நடராஜன். "முன்பு சிகரெட்டிற்கு 28 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்படும். இழப்பீட்டு மேல் வரியாக 40 சதவீதம் விதிக்கப்படும். ஆனால், மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டியில் இருந்து மட்டுமே பகிர்வு அளிக்கப்படும். இழப்பீட்டு மேல் வரியில் இருந்து பகிர்வு இருக்காது. இப்போது சிகரெட்டிற்கான ஜி.எஸ்.டி. 40 சதவீதமாக உயரும்போது மாநிலங்களுக்கு அதிலிருந்து கிடைக்கும் பகிர்வு அதிகரிக்கும்" என்கிறார் அவர்.

ஜிஎஸ்டி சீர்திருத்தம், மத்திய அரசு, தமிழ்நாடு அரசு

பட மூலாதாரம், Getty Images

வருவாய் இழப்பை தவிர்க்க மாற்று வழி என்ன?

இந்த சீர்திருத்தத்தால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை எப்படி சரிசெய்வது என்பதில் இதுவரை எந்த தெளிவும் இல்லையென்றாலும் தமிழக நிதியமைச்சர் ஒரு ஆலோசனையை முன்வைத்திருக்கிறார். அதாவது இழப்பீட்டு மேல்வரியை நீட்டித்து, அதை மாநிலங்களுக்கு அளிக்க வேண்டும் என்கிறார் அவர்.

"இழப்பீட்டு மேல்வரியினை 4 முதல் 6 ஆண்டுகள் வரையிலான காலத்திற்கு வருவாய் இழப்பை ஈடுசெய்வதற்காக மாநிலங்களுக்கு மட்டும் முழுமையாக அளிக்க வேண்டும். உடனடி தீர்வாக மாநிலங்களின் நிகர கடன் உச்சவரம்பை மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் 4 சதவீதமாக உயர்த்த வேண்டும்" என்கிறார் தங்கம் தென்னரசு.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ஜி. நடராஜன் வேறொரு ஆலோசனையை முன்வைக்கிறார். "சில பொருட்களுக்கான வரி விகிதத்தை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதத்திற்குக் குறைக்கும்போது அது 12 சதவீதமாக இருக்கும் வகையில் இழப்பீட்டு மேல்வரி போன்ற ஒரு வரியை சில ஆண்டுகளுக்கு விதிக்கலாம். இது மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை ஓரளவுக்குச் சரிசெய்யும்" என்கிறார் அவர்.

இந்த வரி சீர்திருத்தம் செப்டம்பர் மாதத் துவக்கத்தில் ஜி.எஸ்.டி. கவுன்சிலில் விவாதத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு