You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆந்திராவில் இருந்து ஆப்ரிக்காவுக்கு கடத்தப்பட இருந்த ரேஷன் அரிசி: பவன் கல்யாண் கப்பலில் என்ன செய்தார்?
- எழுதியவர், கரிக்கிபட்டி உமாகாந்த்
- பதவி, பிபிசிக்காக
ஆந்திர பிரதேசத்தின் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள துறைமுகம் வாயிலாக, ஏழை மக்களுக்கான நியாயவிலைக் கடை அரிசி பெருமளவில் கடத்தப்படவிருந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
காக்கிநாடா துறைமுகத்தில் ஸ்டெல்லா எல் (Stella L) எனும் கப்பலில் ஏராளமான நியாயவிலைக் கடை அரிசி ஏற்றப்பட்டிருந்தது, அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து துணை முதலமைச்சர் பவன் கல்யாண் அக்கப்பலை பார்வையிட்டார்.
மாநில குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் நாதெண்டல மனோகருடன் பவன் கல்யாண் படகு மூலம் அக்கப்பலை அடைந்து, அதை பார்வையிட்டார்.
"காக்கிநாடா துறைமுகம் கடத்தல் மையமாக மாறியுள்ளது. இங்கிருந்து நியாயவிலைக் கடை அரிசி அதிகளவில் கடத்தப்படும் நிலையில், அதிகாரிகள் என்ன செய்துகொண்டிருக்கின்றனர்? இந்த கடத்தலை தடுப்பதில் அதிகாரிகளின் தோல்வி, நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது" என பவன் கல்யாண் தெரிவித்தார்.
இதன்மூலம், எதிர்காலத்தில் சட்ட விரோதமாக வெடிமருந்துகள் மற்றும் போதைப்பொருட்கள் நாட்டுக்குள் நுழையாது என்பதற்கு என்ன உத்தரவாதம் என, பவன் கல்யாண் கேள்வி எழுப்பினார்.
அந்த கப்பலை பறிமுதல் செய்து, இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு அதிகாரிகளுக்கு பவன் கல்யாண் உத்தரவிட்டுள்ளார்.
முன்பு நடந்தது என்ன?
கடந்த புதன்கிழமை மாலை மாவட்ட ஆட்சியர் ஷான் மோகன், காக்கிநாடாவின் ஆங்கரேஜ் துறைமுகத்திலிருந்து மேற்கு ஆப்ரிக்காவுக்கு புறப்படத் தயாராக இருந்த ஸ்டெல்லா எல் கப்பலில் 640 டன்கள் அரிசியும், IV 0073 எனும் விசைப்படகில் அதே துறைமுகத்திலிருந்து வேறொரு கப்பலில் ஏற்றப்படவிருந்த 1,064 டன் அரிசியும் இருந்ததை கண்டறிந்தார்.
இந்த அரிசியின் மொத்த மதிப்பு ரூ.6.64 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
கடலில் ஒரு மணிநேர பயணம்
அரசு ஏழை மக்களுக்கு விநியோகிக்கும் நியாயவிலைக் கடை அரிசி, காக்கிநாடா துறைமுகத்திலிருந்து ஆப்ரிக்காவுக்கு எடுத்துச் செல்லப்படுவது குறித்து மாவட்ட ஆட்சியருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, உடனடியாக அவர் 5 கடல் நாட்டிக்கல் மைல்கள் (சுமார் 9 கிமீ), காவல்துறை, துறைமுகம், வருவாய் குடிமை வழங்கல் அதிகாரிகளுடன் படகில் பயணித்து ஸ்டெல்லா எல் கப்பலை அடைந்தார்.
அந்த கப்பல் மேற்கு ஆப்ரிக்காவுக்கு பயணப்பட தயாராக இருந்தது.
52,000 டன் கொள்ளளவு கொண்ட அக்கப்பலில், 38,000 டன்கள் அரிசி ஏற்றப்பட்டிருந்தது. அதில், 640 டன்கள் நியாயவிலைக் கடை அரிசி என கண்டுபிடிக்கப்பட்டது.
அக்கப்பலின் ஐந்து தொகுதிகளிலிருந்து அரிசி எடுக்கப்பட்டு, ரசாயனங்கள் மூலம் நிகழ்விடத்திலேயே பரிசோதிக்கப்பட்டது.
அரிசி எங்கிருந்து வந்தது?
இரண்டு மாதங்களுக்கு முன்பு நடந்த ஆய்வுவின்போது, மாநில குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் நாதெண்டல மனோகர் ரேஷன் அரிசிகளை பறிமுதல் செய்தார். பின்னர் நீதிமன்றத்தில் வங்கி உத்தரவாதம் செலுத்தப்பட்டு அரிசி மீட்கப்பட்டது.
அந்த அரிசி தற்போது பிடிபட்டதா? அல்லது இது கணக்கில் வராத அரிசியா? இதுகுறித்து விசாரிக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
கப்பலில் இருந்த 640 டன் அரிசிக்கு 22 ஏற்றுமதி நிறுவனங்களிடம் ரசீதுகள் இருப்பதாக அவர் கூறினார்.
IV 0073 எனும் விசைப்படகில் இருந்த 1,064 டன் அரிசி, இரண்டு வெவ்வேறு நிறுவனங்களுக்கு சொந்தமானது என ஆரம்பத்தில் கண்டறியப்பட்டது என மாவட்ட ஆட்சியர் விளக்கினார்.
"பிடிக்கப்பட்ட அரிசியை இன்னும் பறிமுதல் செய்யப்படவில்லை அந்த அரிசி ரசீதுகளை நாங்கள் சரிபார்த்து வருகிறோம். ஆய்வுகள் முடிந்த பிறகு நாங்கள் முடிவு எடுப்போம்" என்று மாவட்ட ஆட்சியர் ஷான் மோகன் பிபிசியிடம் தெரிவித்தார்.
‘கடத்தல் மையமாக விளங்கும் காக்கிநாடா’
ஏழைகளுக்கான அரிசியை கடத்துவதற்கான மையமாக காக்கிநாடா மாறியுள்ளது என்பதை அரசு ஏற்பதாக கூறிய அமைச்சர் நாதெண்டல மனோகர், அதுகுறித்து தங்கள் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்தார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தன்னுடைய கவனத்திற்கு கொண்டு வந்ததாகவும், தெளிவான உத்தரவுகளை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
காக்கிநாடா துறைமுகத்தில் இதுபோன்ற சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார்.
''அரிசி மூட்டைகள் கடலுக்கு கொண்டு செல்லப்பட்டு கப்பலில் ஏற்றப்படுகிறது. துறைமுகத்தில் இருந்து கப்பலில் சரக்குகளை நேரடியாக ஏற்றுப்படுவதில்லை”
“இது போன்ற சட்டவிரோத கடத்தல்களை கட்டுப்படுத்துவோம். அரிசி கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும்" என, அமைச்சர் நாதெண்டல மனோகர் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)