சொர்க்கவாசல் விமர்சனம்: சிறைக் கைதியாக ஆர்.ஜே.பாலாஜி நடிப்பு கவனம் பெற்றதா?

சித்தார்த் இயக்கத்தில் ஆர்.ஜே பாலாஜி, செல்வராகவன், கருணாஸ், நடராஜன், சானியா ஐய்யப்பன், பாலாஜி சக்திவேல் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான சொர்க்கவாசல் திரைப்படம் எப்படி இருக்கிறது?

இப்படத்திற்கு கிறிஸ்டோ சேவியர் இசையமைத்துள்ளார், செல்வா ஆர்.கே ஒளிப்பதிவு செய்துள்ளார்.

‘சொர்க்கவாசல்’ திரைப்படம் குறித்துப் பல்வேறு ஊடகங்களில் வெளியான விமர்சனங்களைப் பார்க்கலாம்.

சொர்க்கவாசல் படத்தின் கதை என்ன?

கடந்த 1999ஆம் ஆண்டு சென்னை மத்திய சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் ஜெயிலர் ஜெயக்குமார் எரித்துக் கொல்லப்படுகிறார். இந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு சொர்க்கவாசல் படத்தின் கதை அமைந்துள்ளதாக தினமணி குறிப்பிடுகிறது.

கடந்த 1999இல் சென்னை மத்திய சிறைச்சாலையில் நடக்கும் கலவரம், அதன் பிறகு ஓய்வுபெற்ற நீதிபதி இஸ்மாயில் தலைமையில் அமைக்கப்படும் ஆணையத்தின் விசாரணை, என திரைக்கதை விளக்கப்படுகிறது.

கதாநாயகன் பார்த்திபன் (ஆர்ஜே பாலாஜி) செய்யாத குற்றத்திற்காக சிறைச்சாலைக்குச் செல்கிறார். அவரை சிறைச்சாலை மிகவும் சோதிக்கிறது. மத்திய சிறைச்சாலையில் இருக்கும் ரவுடியான சிகா (செல்வராகவன்). சிறைச்சாலையைக் கட்டுப்படுத்தும் ரவுடியாக வளம் வருகிறார்.

இவருக்கும் புதிதாக வரும் ஜெயிலருக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. அதைத் தொடர்ந்து, ஜெயிலர் சிகாவை கட்டுப்படுத்தப் பல நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்.

இதற்கிடையே தான் சிறைக்கு வரக் காரணம் சிகாதான் என அறிந்த பார்த்திபன், சிகாவை எதிர்க்க முடியாமல் தனது இயலாமையை வெளிப்படுத்துகிறான்.

இந்த நேரத்தில், சிறையில் ஒருநாள் கலவரம் வெடிக்க, அதனால் நடந்த கொலை. இதன்பின் என்ன ஆனது என்பதே படத்தின் மீதிக் கதை.

கதாபாத்திரங்களின் வடிவமைப்பு எப்படி?

கதையின் தொடக்கத்தில் வில்லன் சிகா கதாபாத்திரம் (செல்வராகவன்) பற்றிப் பல எதிர்பார்ப்புகள் ஏற்படுத்தப்பட்ட போதிலும், செல்வராகவனின் நடிப்பு மற்றும் கதாபாத்திர வடிவமைப்பு கதைக்குத் தேவையான அளவுக்குப் பொருந்தவில்லை என இந்து தமிழ் திசையின் விமர்சனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"கதாநாயகனாக பார்த்திபன் (ஆர்ஜே பாலாஜி) படத்தின் இரண்டாம் பாதியில் வெளிப்படுத்தியதைப் போல, முதல் பாதியில் சரியான நடிப்பை வெளிப்படுத்தவில்லை. இந்தக் கதாபாத்திரம் புதுப்பேட்டையின் தனுஷுக்கு ஒப்பான கதாபாத்திரம் போலச் சில இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது," என்று இந்து தமிழின் விமர்சனம் கூறுகிறது.

அதோடு, கதாநாயகி சானியா ஐயப்பனுக்கு கதையில் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்றும், கருணாஸ் கதாபாத்திரத்திற்குத் தேவையான நடிப்பை நிறைவாகத் தந்துள்ளதாகவும், நடராஜன், பாலாஜி சக்திவேல் ஆகியோர் சிறிய கதாபாத்திரத்திற்குத் தேவையான நடிப்பைக் கொடுத்துள்ளதாகவும் இந்து தமிழ் திசை கூறியுள்ளது.

விறுவிறுப்பான இரண்டாம் பாதி

படத்தின் இரண்டாம் பாதி விறுவிறுப்பாக இருந்ததாகவும் இந்து தமிழ் தனது விமர்சனத்தில் கூறியுள்ளது.

குறிப்பாக, "சிறையில் நடந்த கலவரம் தொடர்பான விசாரணை, அதில் வெளிப்படும் தகவல்கள் எனப் பரபரப்பான காட்சிகள் படத்திற்குப் பலம் சேர்த்துள்ளன. இருப்பினும், பார்த்திபனாக நடித்துள்ள ஆர்ஜே பாலாஜி கைது செய்யப்பட்டதற்கான காரணம் மற்றும் ஐஏஎஸ் அதிகாரியை யார் கொலை செய்தது போன்ற சில காட்சிகள், பலவீனமாக கதைக்களத்தை விட்டு விலக வைப்பதாக" இந்து தமிழ் திசை விமர்சித்துள்ளது.

குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடாமல் சிறைக்கு வந்தவர்களின் காட்சிகள் மற்றும் சிறை நிர்வாகத்தின் செயல்பாடு போன்ற சிறையின் மற்றொரு பக்கத்தைக் காட்டும் காட்சிகள் படத்திற்குப் புதிய வண்ணத்தைக் கொடுப்பதாக இயக்குநரைப் பாராட்டியுள்ளது தினமணி விமர்சனம்.

காவல்துறை விசாரணையில் கலவரத்தைப் பலரது கோணத்தில் இருந்து விளக்கியது கதைக்களத்தின் மீதான ஆர்வத்தைக் கூட்டினாலும், நீளமான மற்றும் பிடிப்பில்லாத சில காட்சிகளால் படத்தின் சுவாரஸ்யம் குறைந்துள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா குறிப்பிட்டுள்ளது.

வெற்றி பெற்றுள்ளதா சொர்க்கவாசல்?

உண்மையான கதையின் அடிப்படையில் திரைப்படம் எடுக்கப்பட்டு இருந்தாலும், காட்சிகள், திரைக்கதை, இயக்கம், இசை, ஒளிப்பதிவு என்று அனைத்தும் படத்தை நிச்சயம் பார்க்க வைக்கும் ஒரு கலவையான படைப்பாக உருவாக்கியுள்ளதாக தினமணி குறிப்பிட்டுள்ளது.

சில கதாபாத்திரங்கள் தடுமாறினாலும், பெரும்பாலான கதாபாத்திரங்களின் நடிப்பு, இரண்டாம் பாதியில் கோர்வையான அடுத்தடுத்த காட்சிகள் என படத்தை ரசிக்கும் படியானதாக இயக்குநர் உருவாக்கியுள்ளதாக இந்து தமிழ் திசை பதிவு செய்துள்ளது.

கதைக்களம் மற்றும் கதாபாத்திரம் இவை இரண்டைத் தாண்டி, தப்பிக்க முடியாத சூழ்நிலையில் சிக்கிய கதாபாத்திரங்கள் கூட்டிய சுவாரஸ்யம் படத்திற்குக் கைகொடுத்துள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா தனது விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)