You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழகத்தில் 6 மடங்கு அதிகரித்த மயில்கள் – என்ன காரணம்? விவசாயிகளுக்கு பாதிப்பா?
- எழுதியவர், சேவியர் செல்வக்குமார்
- பதவி, பிபிசி தமிழ்
கடந்த 20 ஆண்டுகளில் தேசிய அளவில் மயில்களின் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாகவும், இது தமிழகத்தில் 6 மடங்கு அதிகமாகியிருப்பதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.
மயில்கள் அதிகரிப்பால் பயிர் சேத பாதிப்புகள் அதிகமாகி வருவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
- யானைகளுக்கு மதம் பிடிப்பது ஏன்? பெண் யானைகளுக்கு மதம் பிடிக்காதா?
- தமிழ்நாட்டில் இனி வீட்டில் நாய் வளர்க்க ரூ.5,000 கட்டணம், 11 ரக நாய்களை வளர்க்க தடை - புதிய கட்டுப்பாடுகள் என்ன?
- நஞ்சாக மாறி 10 யானைகளின் உயிரைப் பறித்த சிறுதானியம் - என்ன நடந்தது?
- ரந்தம்பூர் காப்பகத்தில் ‘காணாமல் போன’ 25 புலிகள் என்னவாயின?
மயில்களை கணக்கெடுப்பதற்கு காரணமென்ன?
தமிழகத்தில் பெருகியுள்ள மயில்களின் எண்ணிக்கையை அறியும் முயற்சியில் தமிழக வனத்துறை இறங்கியது.
விவசாயிகள் குறை தீர்ப்புக் கூட்டங்களில், மயில்களால் ஏற்படும் பயிர் சேதங்கள் குறித்து விவசாயிகள் தொடர்ச்சியாகக் கூறி வரும் புகார்களும், மற்றொரு புறத்தில் மயில்கள் கொல்லப்படுவது அதிகரித்து வருவதாக எழும் புகார்களும் இதற்கு முக்கியக் காரணங்கள் என்கிறார்கள் வனத்துறை அதிகாரிகள்.
தமிழக அரசின் புத்தாக்க முயற்சிகள் திட்டத்தின் கீழ் (TANII -Tamil Nadu Innovation Initiatives),மயில்களின் கணக்கெடுப்பை நடத்தித் தருமாறு, கோவை ஆனைகட்டி சலீம்அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையத்திடம் (SACON) தமிழக வனத்துறை கோரியது.
மயில்களின் எண்ணிக்கையைக் கண்டறிவது, மயில்களால் ஏற்படும் பயிர் சேதத்தைக் கட்டுப்படுத்த விவசாயிகள் கையாளும் முறைகளை அறிவது, மயில்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு செயல் திட்டத்தைத் தயாரிப்பது என 3 விதமான இலக்குகளுடன் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.
அந்த மையத்தின் முதன்மை விஞ்ஞானி ஹொன்னவள்ளி குமாரா, முதுநிலை விஞ்ஞானி பாபு ஆகியோர் தலைமையில், ஆராய்ச்சியாளர்கள் கிஷோர் மற்றும் அரவிந்தன் ஆகியோர், கள ஆய்வு செய்தும், ஜிபிஎஸ் உதவியுடன் இணைய முறையிலான கண்காணிப்பு முறையிலும் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.
கடந்த ஆண்டில் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு, இந்த அறிக்கை (ASSESSING HUMAN-PEAFOWL CONFLICT AND DEVELOPING AN ACTION PLAN TO REDUCE THE CONFLICTS IN SELECT ZONES OF TAMIL NADU) வனத்துறையிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில்தான், ஆச்சரியமூட்டும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாட்டில் குறைந்தது 37 லட்சம் மயில்கள்
மேற்குத் தொடர்ச்சி மலை, கிழக்குத் தொடர்ச்சி மலை, மத்திய சமவெளிப்பகுதி மற்றும் கிழக்குக் கடற்கரைப் பகுதி என தமிழகத்தின் பரப்பை 4 விதங்களாகப் பிரித்து, குறிப்பிட்ட மண்டலங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
மொத்தம் உள்ள 38 மாவட்டங்களில் 32 மாவட்டங்களில் 1,025 மயில் பறவைகள் நேரடியாகப் காட்சிபதிவு செய்யப்பட்டு, அவற்றின் நகர்வு அடிப்படையில், மயில்களின் எண்ணிக்கை கணிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் அதிகபட்சமாக 60,85,073 மயில்களும், குறைந்தபட்சமாக 37,76,698 மயில்களும் இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி, கரூர், திருநெல்வேலி, திருவாரூர், துாத்துக்குடி மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ஒரு சதுர கி.மீ. பரப்பில் 70 மயில்கள் இருப்பதாகவும், கோவை, அரியலுார், தர்மபுரி, திண்டுக்கல், மதுரை, நாகை, திருவண்ணாமலை, திருப்பூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பில் 50 க்கும் அதிகமான மயில்கள் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மயில்கள் அதிகம் காணப்படவில்லை என்பதும் இந்தக் கணக்கெடுப்பில் தெரிந்துள்ளது.
‘‘பொதுவாக மயில்கள் புதர்க்காடுகள், வன எல்லைப்பகுதிகள், குறைவான மழையுள்ள அதாவது முற்றிலும் வறட்சி இல்லாத பகுதிகளையே வாழ்விடங்களாகக் கொண்டிருக்கும். ஆனால் தற்போது இந்த பறவைகள், நகர்ப்புறங்களிலும் அதிகளவில் பரவியிருப்பது, மனித–மயில்கள் மோதலுக்கு மிக முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.’’ என்கிறார் ஆய்வில் ஈடுபட்ட முதன்மை விஞ்ஞானியான குமாரா.
தமிழகத்தில் ஆறு மடங்கு அதிகரிப்பு
மயில்கள் எண்ணிக்கை பற்றி கருத்துத் தெரிவித்துள்ள இயற்கை பாதுகாப்பு நிறுவனத்தின் (NCF-Nature Conservation Foundation) விஞ்ஞானி சுஹைல் காதர், ‘‘இந்தியாவில் 20 ஆண்டுகளில் மயில்களின் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது; அதுவே தமிழகத்தில் 6 மடங்கு அதிகரித்துள்ளது. இது முக்கியமாக கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய விஷயமாக மாறியுள்ளது.’’ என்று கூறுகிறார்.
இந்தியா முழுவதும் 942 வகையான பறவை இனங்களின் மீது மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பு அறிக்கை (The State of India’s Birds 2023), கடந்த ஆண்டு சமர்ப்பிக்கப்பட்டது. நாடு முழுவதும் 30 ஆயிரம் பறவை ஆர்வலர்கள், 3 கோடி பறவைகளை அடையாளம் கண்டு பகுப்பாய்வு செய்ததில் இந்த எண்ணிக்கை கணக்கிடப்பட்டது.
இந்த கணக்கெடுப்பில் பங்கேற்ற சுஹைல் காதர் “அந்த கணக்கெடுப்பில் 39 சதவீத பறவை இனங்கள், கடந்த 10 ஆண்டுகளில் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. அவற்றில் 178 வகையான பறவையினங்களைப் பாதுகாப்பதற்கு உடனடி கவனம் செலுத்தி, தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது.’’ என்றார்.
அதே அறிக்கையில், தமிழ்நாட்டில் மட்டும் மயில்களின் எண்ணிக்கை 6 மடங்கு அதிகமாகியிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
அந்த அறிக்கையின்படி, கடந்த 20 ஆண்டுகளில் நாடு முழுவதும் மயில்களின் எண்ணிக்கை சராசரியாக 149.35 சதவீதமும், தமிழகத்தில் 501.49 சதவீதமும் அதிகமாகி இருப்பதாக தெரியவந்துள்ளது. அதில் இந்தியாவில் பறவைகளுக்கு அச்சுறுத்தலான பல விஷயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. நில பயன்பாட்டு மாற்றம், நகரமயமாக்கல், சுற்றுச்சூழல் சீரழிவு, பலவித நோய், கட்டமைப்பு மேம்பாடு, செல்லப்பிராணி வர்த்தகம், வேட்டையாடுதல், மாசுபாடு மற்றும் காலநிலை மாற்றம் போன்றவை பிரதான காரணிகளாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
காலநிலை மாற்றத்தால் பறவைகளின் வாழ்விடங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைச் சுட்டிக்காட்டும் இயற்கை பாதுகாப்பு நிறுவனத்தின் பறவை ஆராய்ச்சியாளர் ஜெகநாதன், ‘‘காலநிலை மாற்றத்தால் பூக்கின்ற பருவங்கள் மாறுகின்றன; பல பறவைகளுக்கு கிடைக்க வேண்டிய உணவு கிடைக்காமல் பாதிக்கப்படுகின்றன. இதனால் அவற்றின் இனப்பெருக்கமும் பாதிக்கப்படுகிறது. ஆனால் அதற்கு மாறாக மயில்களின் எண்ணிக்கை மட்டும் பெருகியிருப்பதோடு, அவற்றின் பரவலும் அதிகமாகியுள்ளது.’’ என்றார்.
‘‘மயில்கள் எண்ணிக்கை பெருகவும், இதுவரையில்லாத பகுதிகளில் பரவுவதற்கும் காலநிலை மாற்றம் ஒரு முக்கியக் காரணமாயிருக்க வாய்ப்புள்ளது. முன்பு மழை அதிகம் பெய்த இடங்கள் இப்போது வறட்சியான பகுதியாக மாறியிருக்கின்றன என்பது கேரளாவில் நடந்த ஒர் ஆராய்ச்சியின் ஆரம்பகட்ட முடிவில் இது தெரியவந்துள்ளது.’’ என்றார்.
விவசாயிகளுக்கு என்ன பிரச்னை?
பெருகியுள்ள மயில்களால், பயிர்கள் சேதம் அதிகரித்து வருவதாக தமிழ்நாட்டில் பல மாவட்ட விவசாயிகள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
SACON நடத்திய மயில்கள் கணக்கெடுப்பின் கள ஆய்வில் பங்கேற்ற 35 மாவட்ட விவசாயிகளில் 78.70 சதவீதம் பேர், மயில்களால் பயிர் சேதம் ஏற்படுவதாகக் கூறியுள்ளனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட நிர்வாகியான உடுக்கம்பாளையம் பரமசிவம் பிபிசி தமிழிடம், ‘‘மயில்களால் சிறுதானிய விவசாயம் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. பல மாவட்டங்களில் தக்காளி, மிளகாய் உள்ளிட்ட காய்கறி விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது. ’’ என்றார்.
'குள்ளநரி, நரி எதையும் பார்க்க முடியவில்லை'
மயில்கள் பெருகுவதற்கு, இவற்றை வேட்டையாடும் காட்டுப்பூனை, குள்ளநரி, நரி, புனுகுப்பூனை, கீரி போன்ற உயிரினங்கள் குறைந்தது முக்கியக் காரணம் என்பதும் SACON அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆய்வுக்குழுவினர் 1136 பேர்களைச் சந்தித்துப் பேசியதில், 5.2 சதவீத விவசாயிகள் மட்டுமே, தங்கள் பகுதிகளில் நரிகளைப் பார்த்ததாகக் கூறியுள்ளனர்.
‘‘முன்பு விவசாய நிலங்களை ஒட்டி உயிர் வேலிகள்(செடி, கொடி மூலம் உருவாக்கப்படும் வேலி), பள்ளம், படுகைகள் நிறைய இருக்கும். அவற்றில் வங்க நரி, குள்ளநரி போன்றவை இருக்கும். அவை மயில் முட்டைகளைச் சாப்பிட்டு விடும். கோழிகள், மயில்கள் எதையும் விடாது. இப்போது உயிர்வேலிகள் அழிக்கப்பட்டு, கம்பிவேலிகளாகிவிட்டன. குள்ளநரி, நரி எதையும் பார்க்க முடியவில்லை.’’ என்று தெரிவித்தார் பரமசிவம்.
12 ஆண்டுகளில் 1345 மயில்கள் இறப்பு
மயில்களால் பயிர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளின் காரணமாக, இவற்றைக் கொல்வதும் சமீபமாக அதிகரித்து வருவதாக பறவை ஆராய்ச்சியாளர் ஜெகநாதன் குற்றம்சாட்டுகிறார்.
கடந்த 2011 ஆம் ஆண்டிலிருந்து 2023 வரையிலான 12 ஆண்டுகளில், தமிழகத்தில் 1345 மயில்கள் இறந்திருப்பதை SACON அறிக்கை உறுதி செய்துள்ளது.
அதில் அதிகபட்சமாக திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 420 மயில்கள் இறந்துள்ளன. நாகை–164, கரூர்–117, மதுரை–96 என்று வனத்துறை வழக்குப்பதிவுகள் மற்றும் ஊடகச் செய்திகள் அடிப்படையில் இது கணக்கிடப்பட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக பூச்சிக்கொல்லி விஷத்தால் 601 மயில்களும், மின்சாரம் தாக்கி 195 மயில்களும், 115 மயில்கள் வாகன விபத்திலும், நாய்கள் கடித்து 42 மயில்களும் இறந்துள்ளன. வேட்டையில் 16 மயில்கள் கொல்லப்பட்டுள்ளன.
மயில்களை துரத்தும் முக்கியமான வழிமுறைகள்!
தமிழகத்தில் மயில்களைத் துரத்துவதற்கு 23 விதமான வழிமுறைகள் கையாளப்படுவதாகவும், அவற்றில் 8 விதமான தடுப்பு முறைகளையே விவசாயிகள் அதிகமாகக் கையாள்வதாக SACON அறிக்கை தெரிவித்துள்ளது. அதிலும் 27 மாவட்டங்களில் ஆட்களை வைத்துத் துரத்தப்படுவதும், 19 மாவட்டங்களில் நாய்களை வைத்துத் துரத்துவதும் நடப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
பயிர்களின் உயரத்துக்கேற்ப பிளாஸ்டிக் டேப் பயன்படுத்துவது, ஒலி எழுப்புவது, மனித பொம்மை வைப்பது, பட்டாசு என பலவிதமான தடுப்பு முறைகள் கையாளப்படுகின்றன.
ஆனால் எல்லாவற்றிலும் ஆட்களை வைத்துத் துரத்துவதே, செலவு இல்லாததாகவும் இரு தரப்புக்கும் பாதுகாப்பாகவும் இருப்பதாகச் சொல்கிறார் பரமசிவம்.
‘‘மயில்களைத் துரத்துவதற்கு இயற்கையான வழிமுறைகளைக் கையாள்வது அவசியம்.’’ என்கிறார் பறவை ஆராய்ச்சியாளர் ஜெகநாதன்.
மேலும், ''சோலைக்கொல்லை பொம்மை வைப்பது, பளபளக்கும் ரிப்பன்களைக் கட்டி விடுவது, சிகப்பு நிறச் சேலைகளைக் கட்டுவது, நீளமான பளபளப்பான ஜிகினா தாள்களை விளைநிலங்களைச் சுற்றி கொடியில் கட்டிவிடுவது போன்றவை மயில்களை விரட்டுவதற்கான உத்தி'' என்கிறார் அவர்.
இந்த கணக்கெடுப்பு குறித்தும், மயில்கள் எண்ணிக்கை அதிகரிப்பு குறித்தும் தமிழக வனத்துறையின் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் தலைமை வனவிலங்கு காப்பாளர் ராகேஷ் குமார் டோக்ராவிடம் பிபிசி தமிழ் கேட்டபோது, ‘‘இதுபற்றி நாங்கள் விரிவாக விவாதித்துக் கொண்டிருக்கிறோம். மாவட்ட வன அலுவலர்களிடம் எந்தெந்தப் பகுதியில் மனித–மயில் மோதல் அதிகமிருக்கிறது என்பது பற்றி விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன. மயில்கள் எண்ணிக்கையைக் குறைப்பதும், கட்டுப்படுத்துவதும் கடினமான பணி. ஆனால் இவற்றைக் கையாள்வதற்கு என்னென்ன மாதிரியான நடைமுறைகளைச் செயல்படுத்தலாம் என்பது குறித்து ஆலோசனை நடக்கிறது. விரைவில் செயல் திட்டம் வகுக்கப்படும்.’’ என்றார்.
‘‘மயில்களால் மனித உயிர்களுக்கு ஆபத்து ஏதுமில்லை. அதனால் அவற்றைத் துரத்துவதற்கு மட்டுமே விவசாயிகள் முயற்சி எடுக்க வேண்டும். மயில்களை கொல்வதால் தேள், சிறிய பாம்புகள், பூச்சிகளின் எண்ணிக்கை பெருக வாய்ப்பு அதிகம். எனவே மயில்களைத் துரத்துவதற்கு இயற்கையான வழிமுறைகளைக் கையாள வேண்டும்’’ என்கிறார் ஜெகநாதன்.
மயில் இந்தியாவின் தேசியப்பறவையாகும். இந்திய வன உயிரின பாதுகாப்புச் சட்டம் 1972-ன்படி, பாதுகாக்கப்பட்ட இனங்களின் பட்டியலில் அட்டவணை ஒன்றில் (Schedule 1) மயில்கள் இடம் பெற்றுள்ளன. மயில்களைக் கொல்பவர்களுக்கு, இந்த சட்டத்தின் பிரிவு 51(1-A) இன் கீழ் 10 ஆயிரம் ரூபாய்க்குக் குறையாத அபராதம் மற்றும் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கவும் வழிவகை உள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)