டிரம்ப் மற்ற நாடுகள் மீது சுங்க வரி விதிக்க ஆர்வம் காட்டுவது ஏன்?

காணொளிக் குறிப்பு, டிரம்ப் சுங்க வரி விதிக்க ஆர்வம் காட்டுவது ஏன்? இது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்?
டிரம்ப் மற்ற நாடுகள் மீது சுங்க வரி விதிக்க ஆர்வம் காட்டுவது ஏன்?

இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப், வெளிநாட்டுப் பொருட்களுக்குக் கடுமையான வரிகளை விதிக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.

கனடா மற்றும் மெக்சிகோவிலிருந்து வரும் பொருட்களுக்கு 25% வரி விதிக்கப் போவதாக டிரம்ப் கூறுகிறார், இரு நாடுகளும் சட்டவிரோத குடியேறிகள் மற்றும் ஃபென்டனயில் போதைப்பொருள் அமெரிக்காவுக்குள் நுழைவதைத் தடுக்கும்வரை இந்த நடவடிக்கை இருக்கும் என டிரம்ப் கூறுகிறார்.

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10% சுங்க வரியும், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வரும் பொருட்களுக்கும் சுங்க வரி விதிக்கப் போவதாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.

சீனா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய மூன்று நாடுகள் அமெரிக்காவின் முதல் மூன்று வர்த்தகக் கூட்டாளிகளாக உள்ளன. எனவே, இந்த சுங்க வரிகள் அந்நாடுகளின் பொருளாதாரங்களை கடுமையாக பாதிக்கலாம். மேலும் அமெரிக்க நுகர்வோருக்கு விலைவாசி உயர்வையும் ஏற்படுத்தலாம்.

சுங்கவரி என்றால் என்ன?

சுங்க வரி என்பது இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது விதிக்கப்படும் வரி.

இந்த வரி இறக்குமதி செய்யும் நிறுவனங்களுக்கே விதிக்கப்படுகிறது. இறக்குமதி செய்யப்படும் பொருளின் மதிப்புக்கு ஏற்ப இந்த வரி இருக்கும்.

உதாரணமாக, ஒரு நிறுவனம் 50,000 அமெரிக்க டாலர் மதிப்புடைய கார்களை இறக்குமதி செய்தால், அவை 25% வரிக்கு உட்பட்டால், ஒவ்வொரு காருக்கும் 12,500 அமெரிக்க டாலர் சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டும்.

இந்த வரியின் பொருளாதார சுமை யார் தலையில் விழும் என்ற கேள்வி மிக சிக்கலானது.

அமெரிக்க இறக்குமதி நிறுவனம் சுங்கவரி செலவை நுகர்வோர் வாங்கும் பொருட்களின் மீது விதித்தால், அந்த பொருளாதாரச் சுமையை அமெரிக்க நுகர்வோர்தான் ஏற்க வேண்டியிருக்கும்.

இப்படியிருக்க, டிரம்ப் ஏன் சுங்கவரியை ஆதரிக்கிறார்?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

சுங்கவரி விதிப்பு அமெரிக்க உள்நாட்டு வேலைகளைப் பாதுகாக்கிறது மற்றும் புதிய வேலைகளை உருவாக்குகிறது என, டொனால்ட் டிரம்ப் கூறி வருகிறார். மேலும், அதை அமெரிக்க பொருளாதாரத்தை வளர்ப்பதற்கும் வரி வருவாயை அதிகரிப்பதற்கும் ஒரு வழியாக டிரம்ப் கருதுகிறார்.

"எனது திட்டத்தின் கீழ், அமெரிக்க தொழிலாளர்கள் இனி வெளிநாடுகளிடம் தங்கள் வேலைகளை இழப்பதைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள். மாறாக, பிற நாடுகள் அமெரிக்காவிடம் தங்கள் வேலைகளை இழப்பதைப் பற்றி கவலைப்படும்," என தேர்தல் பிரசாரத்தின் போது டிரம்ப் கூறியிருந்தார்.

டிரம்ப் உலகளாவிய பொருளாதார வரைபடத்தை மாற்ற விரும்புகிறார். மேலும் அமெரிக்காவுடனான சீனா மற்றும் ஐரோப்பாவின் வர்த்தக உபரியைக் குறைக்க விரும்புகிறார் என, பிபிசியின் பொருளாதார ஆசிரியர் ஃபைசல் இஸ்லாம் கூறுகிறார்.

கடந்த 2018ஆம் ஆண்டு அதிபராக இருந்தபோது எஃகு மற்றும் அலுமினியம் மீது அவர் அறிமுகப்படுத்திய வரிகள் போன்றவை, அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பைப் பாதுகாப்பதாகவும் டிரம்ப் கூறுகிறார்.

முந்தைய பதவிக்காலத்தில் டிரம்ப் விதித்த வரிகள் என்ன?

டொனால்ட் டிரம்ப், சுங்க வரி, அமெரிக்கா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமெரிக்க உற்பத்தியாளர்களைப் பாதுகாப்பதற்காக இறக்குமதி செய்யப்படும் எஃகு மீது டொனால்ட் டிரம்ப் வரி விதித்தார்

கடந்த 2018ஆம் ஆண்டில், இறக்குமதி செய்யப்படும் வாஷிங் மெஷின் மற்றும் சோலார் பேனல்கள் மீது டிரம்ப் 50% வரை வரிகளை விதித்தார். இந்த இரு துறைகளிலும் உள்ள அமெரிக்க உற்பத்தியாளர்கள் வெளிநாட்டிலிருந்து நியாயமற்ற போட்டியை எதிர்கொள்வதாக அமெரிக்கா கூறியது.

இறக்குமதி செய்யப்படும் எஃகு மீது 25% மற்றும் இறக்குமதி செய்யப்படும் அலுமினியத்தின் மீது 10% வரிகளையும் டிரம்ப் விதித்தார்.

மெக்ஸிகோ மற்றும் கனடாவுடன் அமெரிக்கா கொண்டிருந்த சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் காரணமாக, எஃகு மற்றும் அலுமினியத்திற்கு இந்த இரு நாடுகளுக்கும் விலக்கு அளிக்கப்பட்டது.

அமெரிக்காவுக்கு எஃகு ஏற்றுமதி செய்யும் மிகப்பெரிய ஏற்றுமதியாளரான ஐரோப்பிய ஒன்றியம், ஜீன்ஸ், போர்பன் விஸ்கி மற்றும் ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட அமெரிக்க ஏற்றுமதிப் பொருட்களுக்கு வரிகளை விதித்து பதிலடி கொடுத்தது.

இறைச்சி முதல் இசைக்கருவிகள் வரை 360 பில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள சீனப் பொருட்களுக்கும் டிரம்ப் வரிகளை விதித்தார். 110 பில்லியன் டாலருக்கும் அதிகமான அமெரிக்கப் பொருட்களுக்கு வரிகளை விதித்து சீனா பதிலடி கொடுத்தது.

இரண்டாவது பதவிக்காலத்தில் என்ன வரிகளை டிரம்ப் விதிக்கக் கூடும்?

டொனால்ட் டிரம்ப், சுங்க வரி, அமெரிக்கா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, உலகிலேயே கார் உற்பத்தி மையமாக மெக்ஸிகோ விளங்குகிறது

சட்டவிரோத குடியேறிகள் மற்றும் ஃபென்டனயில் போதைப்பொருள் அமெரிக்காவுக்குள் வருவதைத் தடுக்கும் வரை மெக்ஸிகோ மற்றும் கனடாவிலிருந்து வரும் பொருட்களுக்கு 25% வரிகளை அறிமுகப்படுத்துவதாக டிரம்ப் எச்சரித்துள்ளார்.

சட்டவிரோத ஃபென்டனயில் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பல ரசாயனங்கள் சீனாவில் இருந்து வருவதாகக் கூறி, ஏற்கனவே உள்ள வரிகளுக்கு மேல் கூடுதலாக 10% வரியை விதிக்க விரும்புவதாக டிரம்ப் கூறியுள்ளார்.

பிப்ரவரி 1 ஆம் தேதிக்குள் இது விதிக்கப்படலாம்.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், அமெரிக்காவை மிக மிக மோசமாக நடத்துகின்றன எனக் கூறும் டிரம்ப் அவற்றின் மீதும் வரிகளை விதிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அமெரிக்கா மீது பில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்புள்ள எதிர் வரிகளை விதிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். அதற்கான திட்டம் தயார் நிலையில் உள்ளது என்றும் கூறினார்.

கூடுதல் வரிகளுக்கு பதிலளிக்கும் விதமாக, தேசிய நலன்களைப் பாதுகாப்போம் என்று சீனாவின் வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

கனடா மற்றும் மெக்ஸிகோவுக்கு என்ன பாதிப்பை ஏற்படுத்தும்?

டொனால்ட் டிரம்ப், சுங்க வரி, அமெரிக்கா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கனடா மற்றும் மெக்சிகோவிலிருந்து வரும் பொருட்களுக்கு 25% வரி விதிக்கப் போவதாக டிரம்ப் கூறுகிறார்

இந்த வரிகள் நடைமுறைக்கு வந்தால், அவை குறிப்பாக கனடா மற்றும் மெக்ஸிகோவின் பொருளாதாரங்களை பாதிக்கும் என்று இங்கிலாந்தை தளமாகக் கொண்ட தேசிய பொருளாதார மற்றும் சமூக ஆராய்ச்சி சிந்தனைக் குழுவைச் சேர்ந்த பேராசிரியர் ஸ்டீபன் மில்லர்ட் கூறுகிறார்.

இந்த இரு நாடுகளும் அமெரிக்காவை அதிகம் சார்ந்துள்ளன. தற்போது மெக்ஸிகோ வெளிநாடுகளில் விற்கும் பொருட்களில் 83 சதவிகிதத்தை அமெரிக்காவே வாங்குகிறது. கனடாவின் அனைத்து ஏற்றுமதிகளிலும் 76% பொருட்களை அமெரிக்காவே வாங்குகிறது.

கனடா அமெரிக்காவுக்கு அதிக அளவு எண்ணெய் மற்றும் இயந்திரங்களை விற்பனை செய்கிறது என்று குறிப்பிடும் பேராசிரியர் மில்லர்ட், 25% வரி ஐந்து ஆண்டுகளில் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியை 7.5% குறைக்கக்கூடும், இது குறிப்பிடத்தக்க தாக்கமாக இருக்கும் என்றும் கூறுகிறார்.

மெக்ஸிகோ மீது 25% வரிகள் விதிக்கப்பட்டால், அந்த நாட்டில் கார் தொழிற்சாலைகளை அமைக்கும் நிறுவனங்கள் உற்பத்தியை தங்கள் நாடுகளுக்கு எளிதாக மாற்றலாம். இந்த வரிகள் ஐந்து ஆண்டு காலத்தில் மெக்ஸிகோவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை 12.5% ​​குறைக்கக்கூடும். இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்" என்று மில்லர்ட் கூறுகிறார்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)