காணொளி: நிலச்சரிவில் சிக்கிய பேருந்து - இமாச்சலபிரதேசத்தில் 15 பேர் பலி

காணொளிக் குறிப்பு, இமாச்சல பிரதேசத்தில் பேருந்து விபத்து : 2 குழந்தைகள் உட்பட 15 பேர் பலி
காணொளி: நிலச்சரிவில் சிக்கிய பேருந்து - இமாச்சலபிரதேசத்தில் 15 பேர் பலி

இமாச்சலப் பிரதேசத்தில் பிலாஸ்பூர் அருகே பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து, கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியதில் 15 பேர் உயிரிழந்தனர்.

பாட்டி(Bhatti) என்ற இடத்தில் இருந்து சுமார் இரு கிமீ தொலைவில் மாலை ஆறரை மணியளவில் ஏற்பட்ட நிலச்சரிவில் பேருந்து சிக்கியதாக அங்கே ஆய்வு செய்த பிலாஸ்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீப் தவால் கூறினார்.

பி.டி.ஐ. செய்தி முகமையிடம் அவர் கூறுகையில், "தனியார் பேருந்து ஒன்று நிலச்சரிவில் சிக்கியது. இதில் 9 ஆண்கள், 4 பெண்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் உட்பட 15 பேர் இறந்துள்ளனர்." என்று தெரிவித்தார்.

சம்பவ இடத்தில் ஆய்வு செய்த இமாச்சலப் பிரதேச துணை முதல்வர் முகேஷ் அக்னிஹோத்ரி, இரண்டு குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும், ஒரு குழந்தையை தேடும் பணி நடந்து வருவதாகவும் கூறினார்.

மரோட்டானில் இருந்து குமார்வினுக்குச் சென்ற இந்தப் பேருந்து மாலை 6.35 முதல் 6.50-க்கு இடைப்பட்ட நேரத்தில் நிலச்சரிவில் சிக்கியதாக கிராமவாசி ஒருவர் தெரிவித்தார்.

பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து இறந்தவர்களின் குடும்பத்திற்கு 2 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாய் வழங்கப்படும் என்று பிரதமர் மோதி தெரிவித்துள்ளார்.