You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வெற்றிமாறன் வெளியீடு: 'சார்' படத்தில் ஆசிரியராக விமல் மீண்டும் வாகை சூடினாரா? ஊடக விமர்சனம்
கிராமப்புறங்களில் கல்வியின் தேவை என்ன என்பதை உணர்த்தும் படமாக வெளியாகியுள்ளது விமல் நடிப்பில் வெளியான சார் திரைப்படம். நடிகர் போஸ் வெங்கட் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். சாயா தேவி நடிகையாக நடித்துள்ளார். நடிகர் சரவணன், விமலின் தந்தையாக நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குநர் வெற்றமாறனின் கிராஸ்ரூட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
1980களை களமாக கொண்ட திரைப்படம் இது. ஏற்கனவே கிராமம் ஒன்றில் பணியாற்றும் ஆசிரியராக வாகை சூடவா படத்தில் நடித்திருந்தார் விமல். விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த அந்த திரைப்படம் 2011-ஆம் ஆண்டுக்கான சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதை தட்டிச் சென்றது.
விமல் மீண்டும் ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த திரைப்படம், வாகை சூடவா படத்தைப் போன்ற தாக்கத்தை ஏற்படுத்தியதா?
படத்தின் கதை என்ன?
அரசு உதவி பெறும் பள்ளிக்கு வரும் புதிய ஆசிரியர் அங்குள்ள பிரச்னைகளை எவ்வாறு கையாளுகிறார் என்பது தான் படத்தின் கதை.
"வறுமையில் இருந்து வெளியேற கல்வி மட்டுமே உதவும்," என்பது தான் படத்தின் ஒன்லைன் என்று கூறுகிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா.
புதுக்கோட்டையில் உள்ள மாங்கொல்லை பகுதியில் உள்ள தனது தந்தைக்குச் சொந்தமான அரசு உதவி பெறும் பள்ளியை உயர் நிலைப் பள்ளியாக மாற்றும் முனைப்பில் இருக்கிறார் விமல்.
"அப்பா பின்பற்றும் வழி நிராகரிக்கப்பட்டு பிறகு ஏற்றுக் கொள்ளப்படும் ஒரு வழக்கமான அப்பா - மகன் கதை தான் இது," என்றும் படம் குறித்து குறிப்பிடுகிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா.
"காலம் மாறி தலைமுறைகள் கடந்தாலும் சாதியும் கடவுள் பெயரிலான மூடநம்பிக்கையும் அந்த ஊர் மக்களின் முன்னேற்றத்திற்கு தடையாகவே நிற்கிறது. இதை எதிர்த்து அந்த ஊர் மக்கள் எப்படி முன்னேறுகிறார்கள்? அவர்களுக்கு எப்படி கல்வி கிடைக்கிறது என்பதுதான் ‘சார்’ படத்தின் கதை," என்று கூறுகிறது தி இந்து தமிழ் திசையின் காமதேனு.
படம் விறுவிறுப்பாக நகர்கிறதா?
கல்வி கற்க விரும்பும் பட்டியல் பிரிவை சார்ந்த மக்களை ஒடுக்க நினைக்கின்றனர் ஆதிக்க சாதியினர். "சாதி, மதம், கல்வி என மிகவும் பழமையான திரைக்கதையை தன்னுடைய பாணியில் அழகாக இயக்கியுள்ளார் போஸ் வெங்கட்," என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா கூறுகிறது.
"கல்வி பெற்றால் ஒரு சமூகம் முன்னேறும் என்ற விஷயத்திற்கு சாதி பெருமையும், கடவுள் பெயரிலான மூடநம்பிக்கையும் எப்படி தடையாக இருக்கின்றன என்பதையே படத்தில் சொல்ல வருகிறார்கள். ஆனால், அது திரைக்கதையில் இருந்து படமாகி இருக்கும் விதம் பயங்கரமான சறுக்கலை சந்தித்திருக்கிறது.
சீரியஸான கதைக்களம் எடுத்திருப்பதால் ஆடல், பாடல், காதல் என முதல் பாதியில் ரசிகர்களை எண்டர்டெயின் செய்வோம் என எடுத்திருக்கும் விஷயம்தான் சொதப்பல். இடைவேளை வரையிலுமே கதைக்கரு நேர் கோட்டில் பயணிக்காமல் எங்கெங்கேயோ பயணிப்பது பார்வையாளர்களுக்கு அயர்ச்சி தருகிறது," என படத்தின் குறைகளை பட்டியலிடுகிறது காமதேனு.
இதர கலைஞர்களின் பங்களிப்பு எவ்வாறு உள்ளது?
"படத்தில் ஞானம் கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பைக் கொடுத்திருக்கிறார் விமல். மற்ற முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் சரவணன், சாயாதேவி, ரமா, ஜெயபாலன் மற்றும் பலர் குறையில்லாத நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். இனியன் ஹாரிஸூடைய ஒளிப்பதிவும், சித்துகுமார் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு பலம்," என்கிறது காமதேனு.
"விமல் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். எளிமையான, தீவிரமான காட்சிகளிலும் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார். நடிகையாக சாயா தேவி போட்டிபோட்டு நடித்துள்ளார்," என்கிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா.
படத்தில் கதாநாயகியாக வரும் சாயாதேவியின் கதாபாத்திரம் வழக்கமான சினிமா நாயகியாக அணுகப்பட்டு வீணடிக்கப்பட்டிருக்கிறது, என்கிறது காமதேனு.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் விமர்சனம், படத்தின் முரண்களைப் பற்றி குறிப்பிடும் போது, "விமல், படத்தில் நாயகியாக வரும் சாயா தேவியை பார்வை மோக நடத்தையுடன் (voyeuristic) அணுகுகிறார். இருப்பினும் அந்த பெண் இவரை விரும்புவது போல் படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆரம்ப காட்சிகளில் தன்னுடைய நடிப்பின் மூலம் கவரும் விமல், சாயாவை அணுகும் முறையை ஒரு குறும்புத்தனமாக காட்டியிருப்பது பிரச்னையாக இருக்கிறது," என்று கூறியுள்ளது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்.
"80களில் அமைந்த கதைக்களத்தை ஒளிப்பதிவு நேர்த்தியாக செய்திருந்தாலும், எடிட்டிங் தொடர்பற்றதாக இருக்கிறது. ஒன்று அல்லது இரண்டு பாடல்களை படத்தில் இருந்து நீக்கியிருக்கலாம்" என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா கூறுகிறது. .
இனியன் ஜே ஹரிஸின் ஒளிப்பதிவு அருமையாக இருக்கிறது. கிராமப்புறத்தின் நிலப்பகுதிகளை அழகாக படமாக்கியுள்ளார், என்று விமர்சனம் செய்துள்ளது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)