'மக்களை விட சினிமா பெரிதா?' - இலங்கையில் இந்திய சினிமா படப்பிடிப்புக்காக ரயில் சேவை குறைக்கப்பட்டதால் சர்ச்சை

‘பயணிகள் மற்றும் சரக்குப் போக்குவரத்திற்குப் பாதுகாப்பான, நம்பகமான, மற்றும் சரியான நேரத்தில் ரயில் போக்குவரத்துச் சேவையை குறைந்த செலவிலும் திறமையான முறையிலும் வழங்குவது’ இலங்கை ரயில்வே துறையின் நோக்கம்.

ஆனால், இதுகுறித்து இலங்கை பொதுமக்கள் இப்போது கேள்வி எழுப்பி வருகின்றனர்.

காரணம்: இந்தியத் திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்பு.

இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக அக்டோபர் 9-ஆம் தேதி முதல் ஒரு வார காலத்திற்கு மலையகப் பாதையில் ரயில் சேவையைக் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு தெமோதர ரக்கு என்ற பாலத்தில் நடைபெற்று வருவதாக இலங்கை ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

'தடங்கலுக்கு வருந்துகிறோம்'

இலங்கை ரயில்வே துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பை முன்னிட்டு, ‘கொழும்பு கோட்டைக்கும் எல்ல ரயில் நிலையத்திற்கும் இடையில் காலை 07:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை ரயில் சேவை குறைக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அக்டோபர் 9-ஆம் தேதி முதல் வரும் 15-ஆம் தேதி வரையிலான 7 நாட்களுக்கு ரயில் சேவைகள் குறைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து பிபிசி சிங்கள சேவையிடம் பேசிய இலங்கை ரயில்வே துணைப் பொது மேலாளர் (போக்குவரத்து) என்.ஜே.இண்டிபொலாகே, மலையகப் பாதையில் ரயில் சேவையை மட்டுப்படுத்தியதன் மூலம் பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு ரயில்வே துறை வருத்தம் தெரிவிப்பதாகக் கூறினார்.

'மக்களை விட சினிமா பெரிதா?'

இந்தியத் திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்புக்காக, மலையகப் பாதையில் ரயில் சேவைகள் குறைக்கப்பட்டிருப்பது குறித்து, இலங்கையில் பலரும் சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

'மக்களின் தினசரிப் போக்குவரத்தை விட ஒரு திரைப்படம் முக்கியமானதா?' என ஒரு பயனர் கேள்வி எழுப்பியிருக்கிறார். மேலும், ‘ரயில் பாதையை மூடுவது குறித்த அறிவிப்பு ஒரே ஒரு நாள் முன்னதாக அறிவிக்கப்பட்டது ஏன்?’ என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மற்றொருபுறம், இலங்கை சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு இவ்வாறான செயல்பாடுகள் அவசியமானவை என சமூக ஊடகப் பயனர்கள் சிலர் பதிவிட்டிருக்கின்றனர்.

ஃபேஸ்புக் பயனர்கள் சிலர், மலையக ரயில் சேவையில் தாம் முன்னர் செய்திருந்த இருக்கை முன்பதிவுகளில் இது என்ன விளைவை ஏற்படுத்தும் என்று கேள்வியெழுப்பியிருக்கிறார்கள்.

இந்தப் படப்பிடிப்பால் ரயில்வேக்கு ஏற்பட்ட நஷ்டத்தை வசூலிக்கும் முறை செய்யப்பட்டுள்ளதா எனச் சில சமூக ஊடகப் பதிவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

'கட்டணம் பெற்றுள்ளோம்'

எல்ல ரயில் நிலையத்துக்கும் பதுளைக்கும் இடையில் சுமார் ஒரு வார காலமாக ரயில் சேவை குறைக்கப்படுவதற்கு ஈடாக நஷ்ட ஈடு வழங்கப்பட்டுள்ளதா என பிபிசி சிங்கள மொழிச் சேவை ரயில்வே துறையிடம் வினவியது.

இதுகுறித்து, ரயில்வே துறை சார்பில், அதன் துணைப் பொது மேலாளர் (போக்குவரத்து) என்.ஜே.இண்டிபொலாகே, படப்பிடிப்பு காலகட்டத்திற்கான பணம் வசூலிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

"இந்தத் திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே ரயில்வே துறைக்கு 2.3 கோடி ரூபாய் செலுத்தியுள்ளது. மேலும் 4.8 கோடி ரூபாய் பாதுகாப்புத் தொகையாகச் செலுத்தியுள்ளது," என்றார்.

“ரயில்வே கட்டமைப்புகளுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டாலோ, வேறு ஏதேனும் சம்பவத்தால் பணம் வசூலிக்க நேர்ந்தாலோ, இந்தப் பாதுகாப்புத் தொகையில் இருந்து பிடித்துக்கொள்வோம்,” என்றார் அவர்.

முன்பதிவு செய்தவர்களின் நிலை என்ன?

ரயில் சேவை தடைபடுவதால், முன்பதிவு செய்த ரயில் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் குறித்து பிபிசி சிங்கள மொழிச் சேவை அவரிடம் வினவியது.

எல்ல ரயில் நிலையத்தில் இருந்து பதுளை வரை பயணிகள் சிரமமின்றிச் செல்வதற்குத் தேவையான போக்குவரத்து வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக துணைப் பொது மேலாளர் (போக்குவரத்து) என்.ஜே.இண்டிபொலாகே தெரிவித்தார்.

"பெரும்பாலான நேரங்களில், மிகக் குறைந்த எண்ணிக்கையிலான பயணிகள் மட்டுமே எல்ல-வில் இருந்து பதுளைக்கு ரயிலில் பயணிக்கின்றனர். ஏனெனில் பல சுற்றுலாப் பயணிகள் ‘நானு ஓயா’ பகுதியில் இருந்து எல்ல-வுக்குத் தான் செல்கிறார்கள்,” என்றார்.

“ரயில் எந்தத் தொந்தரவும் இல்லாமல் எல்ல-விற்குச் செல்கிறது. அதனுடன் அங்கிருந்து பதுளை செல்லும் பயணிகளுக்கு பஸ்களை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. படப்பிடிப்பை நடத்துபவர்களே இந்தப் பேருந்துகளை ஏற்பாடு செய்துள்ளனர். அதை மேற்பார்வையிட எங்கள் துறையைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகளை நியமித்துள்ளோம்,” என்றார்.

“எல்ல-வில் இருந்து பண்டாரவளைக்குச் செல்ல விரும்பும் ரயில் பயணிகளுக்குக் குளிரூட்டப்பட்ட பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மற்ற பயணிகளுக்கும் பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது,” என்றார்.

“இந்தப் படத்தின் ஷூட்டிங் நடப்பதால் கொழும்பில் இருந்து பதுளைக்கு இரவு நேரத்தில் ஓடும் மெயில் ரயிலுக்கு எந்த இடையூறும் ஏற்படாது,” என்றார்.

'சுற்றுலாவை ஊக்குவிக்கும்'

இந்தப் படப்பிடிப்பு இந்திய-இலங்கை கூட்டுத் திரைப்படத் திட்டம் எனவும், திரையிடப்பட்ட பின்னர் அது சுற்றுலாப் பயணிகளை கவரும் என்பதால், போக்குவரத்து அமைச்சகத்தின் ஒப்புதலுடன் படப்பிடிப்பிற்கான அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் ரயில்வே துணைப் பொது மேலாளர் தெரிவித்தார்.

"பல வருடங்களுக்கு முன் இலங்கையில் படமாக்கப்பட்ட ‘க்வாய் நதியின் மீது ஒரு பாலம்’ (The Bridge on the River Kwai) என்ற ஹாலிவுட் படத்தைப் பார்த்த வெளிநாட்டவர்கள் இலங்கையைச் சுற்றிப் பார்க்க வந்தனர். அதேபோல இந்தப் படத்தின் மூலம் இலங்கையின் சுற்றுலாத் துறை வளர்ச்சி அடையும் என்ற நம்பிக்கை உள்ளது," அவர் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)