பிகார் தேர்தல் கருத்துக் கணிப்பு குறித்து பத்திரிகையாளர்கள் அலசல் என்ன?

நிதீஷ் குமாருடன் தேஜஸ்வி யாதவ் (கோப்புப் படம்)

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நிதிஷ் குமாருடன் தேஜஸ்வி யாதவ் (கோப்புப் படம்)
    • எழுதியவர், அபினவ் கோயல்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

பிகார் மீண்டும் இந்திய அரசியலின் மையமாக மாறியுள்ளது. அங்கு தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்னரே வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன.

கிட்டத்தட்ட அனைத்து கருத்துக் கணிப்புகளும் மாநிலத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) முன்னிலையில் இருப்பதாகக் காட்டுகின்றன. அவற்றின்படி, என்டிஏ இந்த முறை பிகாரில் தனிப் பெரும்பான்மையுடன் அரசாங்கத்தை அமைக்கும் என்று தெரிகிறது.

இந்தக் கணிப்புகளுக்கு மத்தியில், இந்தக் கருத்துக் கணிப்புகள் பிகாரின் சாதி கணக்குகளையும் மாறி வரும் இளைஞர்களின் மனநிலையையும் சரியாகப் படிக்கின்றனவா என்பதே உண்மையான கேள்வி.

இதைப் புரிந்துகொள்வதற்காக, பிபிசி பிகாரின் மூத்த அரசியல் பத்திரிகையாளர்களிடம் பேசியது.

பல நேரங்களில் வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளுக்கும், இறுதி முடிவுகளுக்கும் இடையே வேறுபாடு காணப்பட்டுள்ளது. எனவே, இவை இறுதி முடிவுகள் அல்ல என்பதைத் தெளிவுபடுத்துவது அவசியம்.

இரண்டு கட்டங்களாக நடைபெற்ற வாக்குப் பதிவைத் தொடர்ந்து, பிகாரில் நாளை (நவம்பர் 14) வாக்கு எண்ணிக்கை நடைபெறும். அப்போதுதான் இறுதி முடிவுகள் தெரியவரும்.

பிகார் சட்டமன்றத்தில் மொத்தம் 243 இடங்கள் உள்ளன. மாநிலத்தில் அரசமைக்க ஒரு கட்சி அல்லது கூட்டணிக்கு 122 இடங்கள் தேவை.

இந்தத் தேர்தலில் ஆளும் என்டிஏ-வுக்கும் மகாகத்பந்தனுக்கும் (மகா கூட்டணி) இடையே முக்கியமான போட்டி நிலவுகிறது. அதே நேரம், முதல் முறையாகத் தேர்தலில் களமிறங்கியுள்ள பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி மீதும் அனைவரின் பார்வையும் உள்ளது.

பிகார் சட்டமன்ற தேர்தல், தேர்தல் கருத்துக்கணிப்புகள், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துகணிப்புகள்

பட மூலாதாரம், Getty/ANI

படக்குறிப்பு, தேஜஸ்வி யாதவ், நிதிஷ் குமார்

கன்ஹையா பேலாரி

பிகாரின் மூத்த பத்திரிகையாளர் கன்ஹையா பேலாரி இந்த முறை வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் தவறு என நிரூபிக்கப்படும் என்று கூறுகிறார்.

பிபிசியிடம் பேசிய அவர், "இந்த வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் எங்கோ ஒரு மூலையிலிருந்து இயக்கப்பட்டு இருப்பதாக நான் நினைக்கிறேன். இதன் நோக்கம் ஒருவிதமான உளவியல் ரீதியான சூழலை உருவாக்குவதுதான். இதன் மூலம் மக்கள் மற்றும் நிர்வாக அமைப்பு மத்தியில் ஒரு செய்தியை அனுப்ப முடியும்" என்றார்.

"களத்தில் காணப்படும் எதார்த்தம், வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளுடன் ஒத்துப் போகவில்லை. நாங்களே பல இடங்களுக்குச் சென்றுள்ளோம், ஆனால் எந்தக் கட்சிக்கும் ஆதரவாக அலை வீசுவதை நாங்கள் காணவில்லை" என்று அவர் கூறினார்.

அவரது கணிப்பின்படி, "ஐக்கிய ஜனதா தளத்தின் (ஜேடியு) இடங்கள் கடந்த முறையைவிட சற்று அதிகரிக்கும். அதே நேரம், பாஜகவின் இடங்கள் குறையும், ஆனால் முடிவு என்டிஏவுக்கு ஆதரவாக இருப்பது போலத் தெரியவில்லை."

"எனது கணிப்பின்படி, மகா கூட்டணிக்கு 124 இடங்கள், என்டிஏ-வுக்கு 114 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது'' என பேலாரி கூறுகிறார்.

தனது கணிப்புக்குப் பின்னால் உள்ள காரணங்களைப் பற்றி அவர் பேசுகையில், பெண்களுக்குப் பத்தாயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தால் நிதிஷ் குமாருக்கு சில நன்மைகள் கிடைத்துள்ளதாக அவர் கூறினார்.

"பாஜகவின் வாக்கு சதவிகிதம் குறைந்துள்ளது. கடந்த முறை பாஜகவுக்கு வாக்களித்த 'தாந்தி-தத்வா' போன்ற சாதிகள் இந்த முறை அவர்களுடன் இல்லை. இது சுமார் 22 லட்சம் வாக்குகள். மேலும், முகேஷ் சஹானி இப்போது என்டிஏ-வில் இல்லை. உபேந்திர குஷ்வாஹா மட்டும் என்டிஏவின் ஆதரவை சற்று அதிகரித்துள்ளார்" என்று பேலாரி கூறுகிறார்.

பாஜகவின் பலவீனமான செயல்பாட்டிற்கு ஜன் சுராஜ் கட்சியையும் ஒரு காரணமாகக் கருதுகிறார் பேலாரி.

பிரசாந்த் கிஷோரின் செயல்பாடு குறித்துப் பேசிய அவர், "அவரது வாக்கு சதவிகிதம் ஐந்து சதவிகிதத்திற்குக் குறையாது. இரண்டு முதல் மூன்று இடங்களில் அவர்கள் நல்ல செயல்பாட்டைக் காட்ட வாய்ப்புள்ளது."

"நிதிஷ் குமாரின் ஆதரவாளர்களும் இந்த முறை சஞ்சலமான மனநிலையில் இருந்தனர். கடைசி நிமிடம் வரை அமித் ஷாவோ, பிரதமர் மோதியோ நிதிஷின் பெயரைத் தெளிவாக அறிவிக்கவில்லை. (முதல்வர் வேட்பாளராக). கடந்த 2020இல் ஒரு பேரணியில், 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நிதிஷ்தான் முதல்வர்' என்று மோதி கூறினார். இந்த முறை 'முதல்வர் யார் என்பதை எம்எல்ஏ-க்கள் முடிவு செய்வார்கள்' என்று கூறப்பட்டது. இது பிரதமருக்கும் பொருந்துமா என்று நிதிஷின் ஆதரவாளர்கள் கேட்கின்றனர்" என்று அவர் கூறுகிறார்.

வாக்களித்த பெண்கள்

பட மூலாதாரம், Getty Images

புஷ்பேந்திரா

டாடா சமூக அறிவியல் நிறுவனத்தின் (Tata Institute of Social Sciences) முன்னாள் பேராசிரியர் புஷ்பேந்திரா வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

"வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு மூலம் எந்தக் கட்சிக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. உண்மையில், இது தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் கருத்துக் கணிப்பு நிறுவனங்களின் பொறுமையின்மையே ஆகும்.

ஊடகங்கள் தொடர்ந்து எதையாவது காட்ட வேண்டியுள்ளது. எனவே வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு அவர்களுக்குக் கவன ஈர்ப்புக்கான ஒரு வழியாகிறது" என்று அவர் கூறுகிறார்.

"பிகார் தேர்தலைப் பொறுத்தவரை, மிகவும் வலுவான ஆட்சி மீதான வெறுப்பு இல்லை. வேலையின்மை ஒரு பெரிய பிரச்னையாக உள்ளது. அரசு பெண்களுக்கு ரூ.10,000, மாணவர்கள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு நிதி உதவி போன்ற திட்டங்களால் பல்வேறு பிரிவினரை 'பயனாளிகள்' ஆக்கியது. இதனால் அதிருப்தி ஓரளவு குறைந்தது" என்று அவர் கூறுகிறார்.

வாக்களித்த பெண்கள் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் காட்சி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிகார் தேர்தலில் இந்த முறை பெண்கள் அதிக அளவில் வாக்களித்துள்ளனர்

மாதுரி குமார்

மாதுரி குமார் 28 ஆண்டுகளாக டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் பத்திரிகையாளராகப் பணியாற்றியுள்ளார். தற்போது அவர் பாட்னா மகளிர் கல்லூரியில் மாஸ் கம்யூனிகேஷன் துறையில் பணியாற்றுகிறார்.

அவர் வைஷாலி மாவட்டத்தில் 'ரேடியோ கூன்ஜ்' என்ற பெயரில் ஒரு சமூக வானொலி நிலையத்தையும் நடத்தி வருகிறார்.

"வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை பொறுத்தவரை, அவை சில நேரங்களில் சரியாக இருக்கும், சில நேரங்களில் முற்றிலும் தவறாகிவிடும். உதாரணத்திற்கு 2024 மக்களவைத் தேர்தலின் வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பை எடுத்துக் கொள்ளுங்கள். அப்போது பெரும்பாலான சேனல்கள் என்டிஏ-வுக்கு 400-க்கும் மேற்பட்ட இடங்களைக் கொடுத்தன, ஆனால் முடிவுகள் அப்படி இருக்கவில்லை."

"இந்த முறையும் ஆரம்பத்தில் தொலைக்காட்சி சேனல்கள் மிகுந்த உற்சாகத்துடன் என்டிஏ-வுக்கு பெரும்பான்மை காட்டின, ஆனால் இப்போது அவற்றின் தாளம் மாறிவிட்டது. இப்போது அதே சேனல்கள் ராஷ்ட்ரிய ஜனதா தளம் மிகப்பெரிய கட்சியாக உருவெடுக்கும் என்றும், என்டிஏ எப்படியாவது சமாளித்து அரசை அமைக்க முடியும் என்றும் கூறுகின்றன" என்று அவர் கூறுகிறார்.

"என்டிஏ அரசாங்கம் அமைத்தாலும், அது எளிதாக இருக்காது என்று என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியும். யாருக்கும் தெளிவான பெரும்பான்மை கிடைக்காது" என்று அவர் கூறுகிறார்.

மாதுரி கூறுகையில், "பாஜகவின் சில முன்னாள் அமைச்சர்களின் செயல்பாடு குறித்து மக்கள் மகிழ்ச்சியாக இல்லை, அதனால் அவர்களின் இடங்கள் குறைவது போலத் தெரிகிறது. நிதிஷ் குமாரை ஏற்றுக்கொள்ளும் தன்மை இன்னும் உள்ளது. களத்தில் மக்களுடன் பேசிய பிறகு எனது தனிப்பட்ட கருத்து, ஜேடியு-வின் செயல்பாடு முன்பைவிடச் சிறப்பாக இருக்கும் என்பதே" என்றார்.

"சிராக் பாஸ்வானால் நான்கு அல்லது ஐந்து இடங்கள் மட்டுமே பெற முடியும். ஜன்சுராஜ் கட்சி இடங்களை வெல்லாமல் இருக்கலாம், ஆனால் அது பாஜகவுக்கு சேதத்தை ஏற்படுத்தும் என்று தெரிகிறது" என்று அவர் கூறுகிறார்.

"பிகாரில் மகா கூட்டணி ஆட்சி அமைப்பது கடினம். பிகார் போன்ற இந்தி பேசும் மாநிலங்களில் பாஜகவுக்கு அரசாங்கத்தைக் காப்பாற்றுவது அரசியல் ரீதியாக முக்கியமானது. இங்கு ஆட்சி அமையவில்லை என்றால், அதன் தாக்கம் டெல்லி வரை செல்லும். மத்தியிலும் ஸ்திரமின்மை உருவாகும்" என்று அவர் கூறுகிறார்.

வித்யார்த்தி விகாஸ்

ஏ.என். சின்ஹா நிறுவனத்தின் உதவிப் பேராசிரியர் வித்யார்த்தி விகாஸ் இந்த முறை பிகாரில் வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தவறானவை என நிரூபிக்கப்படும் என்று கூறுகிறார்.

"இது 400 இடங்கள் என்ற முழக்கம் இருந்தபோது இருந்த அதே சூழ்நிலைதான். அப்போது 240இல் வந்து நின்றது. அதாவது கிட்டத்தட்ட 60% வரை சுருங்கிவிட்டது. இந்த முறையும் வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு அதே நிலைக்கு ஆளாகாமல் இருக்க வேண்டும்" என்று அவர் கூறுகிறார்.

"சமூக அறிவியல் ஆராய்ச்சியில் அனுபவம் இல்லாத புதிய முகமைகள் பெரும்பாலும் இந்த வேலையில் இறங்குகின்றன. அவர்கள் வெறும் தரவு இயக்குநர்கள் மட்டுமே, அவர்களின் ஆய்வில் விஞ்ஞான மாதிரிச் சேகரிப்பு மற்றும் பகுப்பாய்வுக் குறைபாடு உள்ளது.

இதனால்தான் கணிப்புகள் மீண்டும் மீண்டும் தவறு என நிரூபிக்கப்படுகின்றன. இந்த முறையும் வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு அப்படித்தான் இருக்கும் என்று தெரிகிறது" என்று அவர் கூறுகிறார்.

இனிப்பு தயாரிக்கும் புகைப்படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிகார் தேர்தல் முடிவுகளுக்கு முன் இனிப்பு தயாரிக்கும் கைவினைஞர்கள்

நசிகேதா நாராயண்

மூத்த பத்திரிகையாளர் நசிகேதா நாராயண் இந்த முறை பிகாரின் வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தவறானவை என நிரூபிக்கப்படும் என்று கருதுகிறார்.

"பிகார் போன்ற மாநிலங்களில், வன்முறை மற்றும் சமூக அழுத்தம் ஆழமாக வேரூன்றி இருப்பதால், மக்கள் வாக்குச் சாவடியில் இருந்து வெளியே வந்த பிறகு உண்மையைச் சொல்லத் தயங்குகிறார்கள். அதனால்தான் பிகாரில் வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் ஒருபோதும் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படுவதில்லை" என்று அவர் கூறுகிறார்.

"உண்மை என்னவென்றால், இந்தியாவின் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், பிகாரில் வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் அதிக முறை தவறாக நிரூபிக்கப்பட்டுள்ளன. அது சட்டமன்றத் தேர்தலாக இருந்தாலும் சரி, மக்களவைத் தேர்தலாக இருந்தாலும் சரி. இதற்கு மற்றொரு முக்கியக் காரணம், இங்கிருக்கும் வாக்காளர் தளத்தின் அளவு பெரியதாக இருந்தாலும், கருத்துக் கணிப்பு நிறுவனங்களிடம் அந்த அளவுக்குப் பெரிய மாதிரி அளவு இல்லை. பல நேரங்களில் இதன் பின்னணியில் தொலைக்காட்சி சேனல்களின் டிஆர்பி விளையாட்டும் இருக்கிறது."

"சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்த கருத்துக் கணிப்புகளில் முன்னிலை பெறுவதாகக் காட்டப்படும் கட்சிகள்கூட இதைத் தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை. களத்தில் எந்த அலையும் காணப்படவில்லை."

"நிதிஷ் குமாரின் செயல்பாடு, குறிப்பாக பெண்கள் நலத் திட்டங்கள் காரணமாகச் சிறப்பாக இருக்கலாம், ஆனால் முதல்வர் பதவிக்கு அவரது பெயர் முறையாக அறிவிக்கப்படவில்லை. இதனால் அவரது வாக்காளர்கள் சற்று அசௌகரியமாக உணர்ந்தனர்" என்று நசிகேதா நாராயண் கூறுகிறார்.

"மகா கூட்டணியை பற்றிச் சொல்வது கடினம், ஆனால் ஆர்ஜேடி-யின் செயல்பாடு சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த முறை ஆர்ஜேடி 147 இடங்களில் 77 இடங்களை வென்றது, கிட்டத்தட்ட 50% வெற்றி விகிதம். இந்த முறையும் அதே அளவில் இருக்கலாம் அல்லது சற்று மேம்படலாம்."

"ஜன் சுராஜ் கட்சியின் தாக்கம், குறிப்பாக உயர் சாதிகள் மத்தியில் இருந்தது. இது பாஜகவுக்கு சிரமத்தை ஏற்படுத்தும். சில பிரச்னைகளை தேசிய விவாதத்தின் ஒரு பகுதியாக மாற்றுவதில் ஜன் சுராஜுக்கு பங்கு இருந்தது" என்று நசிகேதா நாராயண் கூறுகிறார்.

"மொத்தத்தில், படம் மிகவும் தெளிவாக இல்லை. இது நிச்சயமாக ஒரு கடுமையான போட்டி. வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் என்ன சொன்னாலும், எந்தக் கட்சியும் மிகவும் தெளிவான பெரும்பான்மையில் இருப்பதாகத் தெரியவில்லை."

"பிரதமர் மோதி மற்றும் அமித் ஷாவின் டஜன் கணக்கான பேரணிகள், என்டிஏ இந்தத் தேர்தலை எவ்வளவு முக்கியமானதாகப் பார்க்கிறது என்பதைக் காட்டுகிறது. பிகார் போன்ற ஒரு பெரிய மாநிலம் கைநழுவிப் போனால், அது மக்களவைத் தேர்தல் 2024 போல ஒரு 'தற்செயல்' என்று கருதப்படாது. மாறாக அதற்குப் பெரிய அரசியல் விளைவுகள் இருக்கும் என்று அவர்கள் அறிவார்கள்" என்று நசிகேதா கூறுகிறார்.

"நிதிஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு போன்ற கூட்டணிக் கட்சிகளின் ஆதரவில்தான் மத்திய அரசு உள்ளது. பிகாரில் ஸ்திரமின்மை ஏற்பட்டால், அதன் தாக்கம் டெல்லி வரை செல்லும். மத்திய அரசு உடனடியாகக் கவிழ்ந்துவிடும் என்று சொல்ல முடியாது. ஆனால் கூட்டணிக் கட்சிகள் தங்கள் நிபந்தனைகளையும் பேரம் பேசும் வலிமையையும் இன்னும் உறுதியுடன் தொடங்குவார்கள்."

வாக்களித்த பெண்கள் புகைப்படத்திற்காக நிற்கிறார்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிகாரில் கிட்டத்தட்ட அனைத்து வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளும் மாநிலத்தில் என்டிஏ அரசாங்கம் அமையும் என்று கணிக்கின்றன

ரஜினி

பிகாரின் மூத்த பத்திரிகையாளர் ரஜினி கூறுகையில், "வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளின் புள்ளிவிவரங்களை முற்றிலும் நிராகரிக்க முடியாது. பல நேரங்களில் முடிவுகள் அவற்றை நெருங்கியே வருகின்றன. இந்த முறை காட்டப்படும் படம் பெரும்பாலும் அப்படியே இருக்க வாய்ப்புள்ளது."

"தேர்தலின்போது நான் பலரிடம் பேசினேன். தரைமட்டத்தில் இந்த முறை ஆர்ஜேடி-யின் செயல்பாடு நன்றாக இருக்கும் என்று தோன்றியது. தேர்தல் ஒருதலைப்பட்சமாகத் தெரியவில்லை.

எந்தக் கட்சிக்கு அதன் பாரம்பரிய வாக்காளர்கள் பலமாக இருக்கிறார்களோ, அங்கு அந்தக் கட்சி முன்னிலை வகிப்பதாகத் தெரிகிறது" என்று அவர் கூறுகிறார்.

"கடந்த முறையைவிட நிதிஷ் குமாரின் இடங்கள் அதிகரிக்கும் என்று தெரிகிறது. இருப்பினும், அரசாங்கத்தின் அமைச்சர்கள் மீது மக்கள் மத்தியில் கோபம் நிச்சயமாக உள்ளது. ஊழல் ஒரு பெரிய பிரச்னை. சிறிய வேலைகளுக்கும் பணம் கொடுக்க வேண்டியுள்ளது என்று மக்கள் கூறுகிறார்கள்."

"பிகார் மக்களுக்கு முதல்வர் நிதீஷ் குமார் மீது நம்பிக்கை இன்னும் உள்ளது. அதனால்தான் ஆட்சியாளர் மீதான வெறுப்பின் தாக்கம் இந்த முறை அவ்வளவு பெரியதாகத் தெரியவில்லை" என்று ரஜினி நம்புகிறார்.

தேர்தலில் பெண்ணின் விரலில் மை வைக்கப்படுகிறது

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிகார் தேர்தலில் கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் அதிக வாக்குப் பதிவு நடந்துள்ளது.

லவ் குமார் மிஸ்ரா

லவ் குமார் மிஸ்ரா 1973ஆம் ஆண்டிலிருந்து பத்திரிகை துறையில் உள்ளார். இவருக்கு நாற்பது ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளது. மேலும் நாடு முழுவதும் 40க்கும் மேற்பட்ட தேர்தல்களில் இவர் செய்தி சேகரித்துள்ளார்.

"இந்த முறை வரும் வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை நம்புவது கடினமாக உள்ளது. கிட்டத்தட்ட எல்லா சேனல்களும் ஒரு பக்க சார்பான முடிவுகளைக் காட்டுகின்றன, இது நம்பிக்கையைத் தரவில்லை" என்று அவர் கூறுகிறார்.

"எனது புரிதலில், எந்தக் கூட்டணிக்கும் ஆதரவாக அலை இல்லை. 2010இல் ஐக்கிய ஜனதா தளத்திற்கு (ஜேடியு) சாதகமாக அலை வீசியது தெளிவாக இருந்தது. ஆனால் இந்த முறை அப்படி ஒரு நிலை இல்லை. ஆம், என்டிஏ அரசாங்கத்தை அமைக்க முடியும், ஆனால் மிகக் குறைந்த வித்தியாசத்தில் மட்டுமே."

"இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு நவம்பர் 11 அன்று நடைபெற்றது. அன்றைய தினம் மாலை 6 மணி வரை மக்கள் வரிசையில் நின்று கொண்டிருந்தனர். ஆனால் சில சேனல்கள் 6:30 மணிக்குள் முழு வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளையும் வெளியிட்டன. இது எனக்கு மிகவும் அவசரமாக செய்யப்பட்டதாகத் தெரிந்தது" என்று அவர் கூறுகிறார்.

"சில வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் அடுத்த நாள் தங்கள் புள்ளிவிவரங்களைத் திருத்த வேண்டியிருந்தது. அதாவது, அவர்கள் அவசரத்தில் முடிவுகளை அறிவித்திருந்தனர். எனது கருத்தின்படி, சர்வே ஏஜென்சிகளுக்கு 'நடத்தை விதிகளை' உருவாக்குவது மிகவும் அவசியம்" என்று லவ் குமார் கூறுகிறார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பிரசாந்த் கிஷோர் குறித்துப் பேசிய அவர், "ஜன் சுராஜின் தொடக்கத்தில் நிறைய பேச்சு இருந்தது. பிரசாந்த் கிஷோருடன் நூற்றுக்கணக்கான கார்கள் சென்றன. ஆனால் அந்த உற்சாகம் வாக்குகளாக மாறவில்லை. பிகார் வாக்காளர்கள் இன்னும் சாதி மற்றும் உள்சாதி கணக்குகளின் அடிப்படையில் பிரிந்துள்ளனர். வாக்குப் பதிவும் அதன் அடிப்படையில்தான் நடக்கிறது."

"ராக்கோபூரில் இருந்து போட்டியிடுவேன் என்று பிரசாந்த் ஆரம்பத்தில் கூறினார். ஆனால் பிறகு அவர் பின்வாங்கினார். இதனால் அவரது தொண்டர்கள் ஏமாற்றமடைந்தனர். தலைவர் களத்தை விட்டு விலகும்போது, தொண்டர்களின் மன உறுதி குறைவது இயல்பு" என்று அவர் கூறுகிறார்.

"அவரது பிரசாரம் வாக்குப் பதிவுக்கு ஒரு வாரத்திற்கு முன்பே தொய்வடைந்துவிட்டது. இது அவரது வியூகத் தவறு, ஆதரவாளர்களின் தவறு அல்ல. இப்போது அவர் ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து வேலை செய்தால், அடுத்த தேர்தலில் ஏதாவது செய்ய முடியும்."

"மகா கூட்டணியிலும் ஒருங்கிணைப்புக் குறைபாடு காணப்பட்டது. தேர்தலுக்குப் பத்து நாட்களுக்கு முன்பு வரை கட்சிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடக்கவில்லை" என்று அவர் கூறுகிறார்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு