You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வங்கதேசம்: இடைக்கால தலைவர் முகமது யூனுஸின் இந்தியாவுடனான உறவு எப்படி இருக்கும்?
- எழுதியவர், கீர்த்தி துபே
- பதவி, பிபிசி செய்தியாளர்
வங்கதேசத்தின் புதிய இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் பொறுப்பேற்றுள்ளார். சமாதானத்திற்கான நோபல் பரிசு வென்ற யூனுஸ், வங்கதேசத்தில் 'ஏழைகளின் வங்கியாளர்' என்று அழைக்கப்படுகிறார்.
கடந்த 2006ஆம் ஆண்டு நோபல் பரிசை வென்ற யூனுஸ், மைக்ரோ ஃபைனான்ஸ் (குறு கடன்) மூலம் கிராமப்புறங்களில் பல்லாயிரக்கணக்கான மக்களை வறுமையிலிருந்து மீட்டெடுத்தார். அவரது பணியை உலகின் பல நாடுகள் பின்பற்றின.
நாட்டில் அரசியல் ஸ்திரமின்மை உச்சத்தில் இருக்கும் வேளையில் மற்றும் சிறுபான்மை இந்துக்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்துகொண்டிருக்கும் சூழலில் 84 வயதான யூனுஸ் நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளார்.
முகமது யூனுஸ் பதவியேற்றதும், அவருக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோதி, “புதிய பொறுப்பை ஏற்றுள்ள பேராசிரியர் முகமது யூனுஸுக்கு எனது வாழ்த்துகள். விரைவில் இயல்பு நிலை திரும்பும் என்று நம்புகிறோம். இது இந்துக்கள் மற்றும் எல்லா சிறுபான்மை சமூகங்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யும்,” என்று கூறியுள்ளார்.
"அமைதி, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான இரு நாட்டு மக்களின் கனவுகளையும் நிறைவேற்ற வங்கதேசத்துடன் இணைந்து பணியாற்ற இந்தியா உறுதிபூண்டுள்ளதாக," பிரதமர் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இந்தியாவுடனான உறவு குறித்து முகமது யூனுஸ் கூறியது என்ன?
“வங்கதேச மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவருடன் இந்தியா பணியாற்ற வேண்டும். மக்களோடு தொடர்புடைய தலைவராக அவர் இருக்க வேண்டும். வங்கதேசத்திற்கும் இந்தியாவுக்கும் இடையே ஒரு சிறந்த உறவு இருக்க வேண்டும். இருவரும் ஒருவரை ஒருவர் சந்தேகத்துடன் பார்க்கும் உறவாக அது இருக்கக்கூடாது,” என்று 'டைம்ஸ் நவ்' என்ற இந்திய செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் யூனுஸ் குறிப்பிட்டார்.
ஆனால் வங்கதேசத்தின் ’பங்களாதேஷ் தேசியவாத கட்சி’யிடமிருந்து (பிஎன்பி) ஆக்கப்பூர்வமான அறிக்கைகள் இதுவரை வெளியாகவில்லை.
ஷேக் ஹசீனாவுக்கு இந்தியா அடைக்கலம் கொடுத்ததற்கு காலிதா ஜியாவின் தலைமையில் இயங்கும் பிஎன்பி அதிருப்தி தெரிவித்துள்ளது.
”வங்கதேசம் மற்றும் இந்தியா இடையே பரஸ்பர ஒத்துழைப்பு இருக்க வேண்டும் என பிஎன்பி விரும்புகிறது. இதை இந்திய அரசு புரிந்து கொண்டு இந்த அடிப்படையில் நடந்துகொள்ள வேண்டும். ஆனால் நீங்கள் எங்கள் எதிரியுடன் சேர்ந்து பணியாற்றினால் இந்த பரஸ்பர ஒத்துழைப்பை மதிப்பது கடினம்,” என்று டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் பேசிய மூத்த பிஎன்பி தலைவர் கயேஷ்வர் ராய் தெரிவித்தார்.
வங்கதேசத்தில் இடைக்கால அரசு மற்றும் இந்தியாவுடனான உறவுகள்
“பேராசிரியர் யூனுஸ் தனது பணிக்காக வெளிநாடுகளில் அனைவராலும் அறியப்படுகிறார். மைக்ரோ ஃபைனான்ஸ் துறையில் அவர் ஆற்றிய பணி குறிப்பிடத்தக்கது. இந்தியா மற்றும் வங்கதேசத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
பேராசிரியர் யூனுஸ் பதவியேற்றவுடன் பிரதமர் நரேந்திர மோதி உடனடியாக அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். வங்கதேசத்தில் யார் ஆட்சியில் இருந்தாலும் அவருடன் இணைந்து பணியாற்ற இந்தியா விரும்புகிறது என்பதை இது காட்டுகிறது,” என்று வங்கதேசத்துக்கான முன்னாள் உயர் ஆணையர் (former high commissioner) வீணா சிக்ரி கூறினார்.
பிஎன்பி தலைவர் கயேஷ்வர் ராயின் கருத்துகளை நிராகரித்த அவர், “வங்கதேசத்தில் காலிதா ஜியா ஆட்சியில் இருந்தபோதும், அந்த நாட்டுடனான இந்தியாவின் உறவு சிறப்பாகவே இருந்தது. ஜனநாயகத்தில் எதிர்க்கட்சியை எதிரி என்று அழைப்பது ஜனநாயகத்தை இழிவுபடுத்துவதைப் போன்றது,” என்று குறிப்பிட்டார்.
வங்கதேசத்தின் இடைக்காலத் தலைவராக முகமது யூனுஸை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது மாணவர்களின் கோரிக்கையாக இருந்தது. இடைக்கால அரசு அமைக்கப்பட்டதன் பின்னர் இரண்டாவது கட்டமாக நாட்டில் புதிய அரசு தேர்வு செய்யப்படும் வகையில் தேர்தல் நடத்தப்படவுள்ளது.
இந்தியாவுடனான முகமது யூனுஸின் உறவு எப்படி இருக்கும் என்று இப்போது சொல்வது அவசரத்தனமானது என்று டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் தெற்காசிய ஆய்வுப் பேராசிரியர் சஞ்சய் பரத்வாஜ் கருதுகிறார்.
இருப்பினும் வங்கதேசத்தில் ஸ்திரத்தன்மையைக் கொண்டு வரும் ஒவ்வொருவருடனும் இந்தியா இணைந்து செயல்படும் என்று அவர் நம்புகிறார்.
“பேராசிரியர் யூனுஸ் இந்தியாவுக்கு வரும்போதெல்லாம் அவருக்கு மதிப்பும் மரியாதையும் கிடைத்துள்ளது. அவர் ஷேக் ஹசீனா அரசைக் கடுமையாக விமர்சிப்பவர். ஹசீனா இந்திய அரசுடன் நல்லுறவைப் பேணி வந்தார். எனவே மக்கள் எல்லா வகையான ஊகங்களையும் செய்கிறார்கள். ஆனால் இந்தியா மற்றும் வங்கதேசத்தின் புவியியல் அமைப்பைப் பார்க்கும்போது இரு நாடுகளுக்குமே பரஸ்பர தேவை உள்ளது.
வங்கதேசத்தில் இந்தியா பெரிய அளவில் முதலீடுகளைச் செய்துள்ளது. வங்கதேசத்தில் எந்த அரசு பதவியில் இருந்தாலும் அது பொருளாதார வளர்ச்சியை மையத்தில் வைக்க வேண்டும். அத்தகைய சூழ்நிலையில், வங்கதேசத்தில் அரசியல் ஸ்திரத்தன்மையை கொண்டு வரும் எந்தவொரு அரசுக்கும் இந்தியா ஆதரவளிக்கும்,” என்று பரத்வாஜ் குறிப்பிட்டார்.
ஹசீனா மற்றும் முகமது யூனுஸ் இடையிலான மோதல்
ஷேக் ஹசீனாவும் முகமது யூனுஸும் கடந்த பல வருடங்களாக நேருக்கு நேர் மோதியுள்ளனர். பேராசிரியர் யூனுஸ் ஷேக் ஹசீனாவை 'ஏழைகளின் ரத்தத்தின் தாகம் கொண்டவர்' என்று விவரித்துள்ளார்.
கடந்த 2007ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் யூனுஸ் ஒரு கட்சியை ஆரம்பிக்கக்கூடும் என்ற பேச்சு நிலவியது. "அரசியலில் புதிதாக வருபவர்கள் ஆபத்தானவர்கள். அவர்களை சந்தேகக் கண்ணுடன் பார்க்க வேண்டும்" என்று அப்போது ஷேக் ஹசீனா கூறியிருந்தார். ஆனால், முகமது யூனுஸ் அரசியல் கட்சி எதையும் துவங்கவில்லை.
கடந்த 2011ஆம் ஆண்டு வங்கதேச அரசு, கிராமீன் வங்கியின் (Grameen Bank) நிர்வாக இயக்குநர் பதவியில் இருந்து முகமது யூனுஸை நீக்கியது. அவர் ஓய்வுபெறும் வயதைத் தாண்டிவிட்டதாக அரசு தெரிவித்தது.
அடுத்த சில ஆண்டுகளில் யூனுஸ் மீது வரி ஏய்ப்பு மற்றும் அவதூறு குற்றச்சாட்டுகள் தொடர்பான பல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த ஆண்டு ஜனவரியில் வங்கதேச நீதிமன்றம் அவருக்கு ஆறு மாத சிறைத் தண்டனை விதித்தது.
இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் நிராகரித்த முகமது யூனுஸ் இவை அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்று கூறினார். தற்போது ஷேக் ஹசீனா நாட்டைவிட்டு வெளியேறிவிட்ட நிலையில் முகமது யூனுஸின் நிலைமை முற்றிலுமாக மாறிவிட்டது.
முகமது யூனுஸ் சமீபத்தில் அளித்த பேட்டியில், “இப்போது நாட்டில் அரசு இல்லை. ஜனநாயக விழுமியங்களின்படி அதிகாரத்தை மாற்றுவதற்காக ஓர் இடைக்கால அரசு அமைக்கப்படுகிறது. வங்கதேசத்தில் ஜனநாயக ரீதியில் தேர்தலை நடத்துவது இந்த இடைக்கால அரசின் வேலை. கடந்த பல ஆண்டுகளாக நாட்டில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெறாததால் இது ஒரு பெரிய பணி.
இதுவரை மக்கள் தலைவர்களைத் தேர்வு செய்ய முடியாமல் இருந்தனர். தங்கள் தலைவர்களைத் தேர்வு செய்ய, வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்தும் வாய்ப்பை இப்போது மக்கள் பெறுவார்கள். கடந்த பல ஆண்டுகளாக இளம் வாக்காளர்கள் வாக்களிக்க விடாமல் தடுக்கப்பட்டு வருகின்றனர்,” என்று கூறியிருந்தார்.
வங்கதேச தேர்தல் மற்றும் அதன் நம்பகத்தன்மை பற்றிய கேள்விகள்
வங்கதேசத்தில் தேர்தல் நடவடிக்கைகள் குறித்த கேள்விகள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வந்துள்ளன.
இந்த ஆண்டு ஜனவரியில் வங்கதேச தேர்தல் நியாயமான முறையில் நடந்ததை வெளிநாட்டு பார்வையாளர்கள் உறுதி செய்தனர். ஆனால் அந்த நாட்டின் மிகப்பெரிய எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி தேர்தலைப் புறக்கணித்தது. தேர்தல்கள் நியாயமாக நடப்பதை உறுதி செய்யும் பொருட்டு பராமரிப்பு அரசின் மேற்பார்வையில் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று பிஎன்பி கோரியது. ஆனால் ஹசீனா அரசு இந்தக் கோரிக்கையை ஏற்கவில்லை.
“தேர்தல்கள் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடந்ததாக வெளிநாட்டு பார்வையாளர்கள் ஒப்புக்கொண்டனர். பிஎன்பி தேர்தலில் பங்கேற்கவில்லை. இவை அனைத்தும் அவர்களின் உள்நாட்டு பிரச்னைகள். ஆனால் இந்தியா எப்போதுமே ஆட்சியில் இருக்கும் அரசுடன் இணைந்து செயல்பட்டு வந்துள்ளது,” என்று வீணா சிக்ரி தெரிவித்தார்.
இந்தியாவிற்கு மூன்று விஷயங்கள் முக்கியம் என்றும் பரத்வாஜ் கூறுகிறார். ”பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் அடிப்படைவாத கொள்கைகளைப் பின்பற்றாத அரசு. இந்த மூன்று விஷயங்கள் இந்தியாவிற்கு முக்கியம். எந்தவொரு நாடும் இந்த விஷயங்களில் செயல்படத் தயாராக இருக்கும் வரை இந்தியா அதனுடன் இணைந்து பணியாற்றும்,” என்றார் அவர்.
வங்கதேசத்தில் எப்போது தேர்தல் நடைபெறும் என்பது வரும் நாட்களில் தெரிய வரும். ஆனால் தேர்தலை நடத்துவதுடன் கூடவே சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கும் பெரிய பொறுப்பும் இந்த அரசுக்கு உள்ளது. இந்த விவகாரத்தில் இந்திய அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. முகமது யூனுஸுக்கு பிரதமர் நரேந்திர மோதி அளித்துள்ள வாழ்த்துச் செய்தியிலும் இது குறிப்பிடப்பட்டுள்ளது.
“யார் மீதும் தாக்குதல் நடக்காது. நாட்டின் தலைவராக இதுவே எனது முதல் பணி” என்று முகமது யூனுஸும் கூறியுள்ளார்.
முகமது யூனுஸ் வங்கதேசத்தில் ஸ்திரத்தன்மையை எவ்வளவு விரைவாகக் கொண்டு வருகிறார் என்பதையும், அத்தகைய சூழ்நிலையில், இந்தியாவிற்கும் வங்கதேசத்திற்கும் இடையிலான உறவுகள் எப்படி இருக்கும் என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)