ஆமதாபாத்: விமானம் மோதிய போது விடுதியில் இருந்தவர்கள் என்ன ஆயினர்?

பட மூலாதாரம், Reuters
ஆமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில், விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்துள்ளனர்.
விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் 230 பயணிகளும் 12 விமானப் பணியாளர்களும் பயணித்துள்ளனர்.
இந்த விபத்தில் பிரிட்டனை சேர்ந்த விஸ்வாஸ் குமார் ரமேஷ் என்ற பயணி மட்டுமே உயிர் தப்பியுள்ளார். அவர் விமானத்தின் 11A எண் இருக்கையில் இருந்ததாகவும் ஆமதாபாத் காவல் ஆணையர் ஜி.எஸ். மாலிக் செய்தி நிறுவனமான ஏஎன்ஐ செய்தி முகமையிடம் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
5 மருத்துவ மாணவர்கள் உயிரிழப்பு
வியாழக்கிழமையன்று (ஜூன் 12) ஆமதாபாத்தில் உள்ள பி.ஜே. மருத்துவக் கல்லூரியின் விடுதியில் ஏர் இந்தியா விமானம் மோதியதில், விடுதியில் இருந்த ஐந்து மருத்துவ மாணவர்கள், ஒரு முதுகலை பயிற்சி மருத்துவர் மற்றும் ஒரு சூப்பர் ஸ்பெஷலிஸ்ட் மருத்துவரின் மனைவி ஆகியோர் உயிரிழந்தனர் மற்றும் 60க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் காயமடைந்தனர்.
இந்தத் தகவலை அகில இந்திய மருத்துவ சங்கம் (FAIMA) தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், Reuters
விபத்து நடந்த இடத்தில் தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இடிபாடுகளுக்குள் இன்னும் சிலர் சிக்கியிருக்கலாம் என்றும் அகில இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய துணைத் தலைவர் மருத்துவர் திவ்யான்ஷ் சிங் தெரிவித்தார்.
"கண்டுபிடிக்கப்பட்ட உடல்கள் முற்றிலும் எரிந்த நிலையில் இருந்தன" என்று அவர் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
"இதுவரை எனக்குக் கிடைத்த தகவல்களின்படி, விமானம் கட்டுப்பாட்டை இழந்து பி.ஜே. மருத்துவக் கல்லூரியின் ஆண்கள் விடுதி கட்டடத்தின் மீது மோதியது.
அது மதிய உணவு நேரம், எனவே பெரும்பாலான மாணவர்களும், மருத்துவர்களும் அங்கு இருந்தனர்" என்று திவ்யான்ஷ் சிங் விளக்கினார்.

பட மூலாதாரம், PTI
விபத்து நடந்த இடத்தை அடைந்த தடயவியல் குழு
விபத்து நடந்த இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் வந்து விபத்து தொடர்பான ஆதாரங்களைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று (ஜூன் 13) ஆமதாபாத் விமான நிலையத்திலும் அங்கு செல்லும் சாலைகளிலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோதி பார்வை
ஏர் இந்தியா விமான விபத்துக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோதி ஆமதாபாத்திற்கு வருகை தந்துள்ளார். விபத்து நடந்த இடத்தை இன்று (ஜூன் 13) காலை சுமார் 20 நிமிடங்கள் பார்வையிட்ட பிரதமர், பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

பட மூலாதாரம், PTI
விமான விபத்து குறித்து விசாரிக்க உயர்மட்டக் குழு
வியாழக்கிழமை இரவு (ஜூன் 12), ஏர் இந்தியா விபத்து குறித்து அதிகாரபூர்வ விசாரணை தொடங்குவதாக இந்தியா அறிவித்தது.
சர்வதேச நெறிமுறைகளின்படி இந்தியாவின் விமான விபத்து புலனாய்வுப் பணியகம் விசாரணையைத் தொடங்கியுள்ளது என்று மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கிஞ்சரபு ராம்மோகன் நாயுடு தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
மேலும் விமான விபத்து குறித்து விரிவாக ஆய்வு செய்ய அரசு ஓர் உயர்மட்டக் குழுவை அமைத்து வருவதாகவும், அதில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் இருப்பார்கள் என்றும் ராம்மோகன் நாயுடு தெரிவித்தார்.
"இந்தக் குழு விமானப் பயணத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்கவும் செயல்படும்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












