சின்னஞ்சிறு கெக்கோ பல்லிகளை காக்க களமிறங்கியுள்ள புதிய படை

பட மூலாதாரம், FFI/ J BOCK
- எழுதியவர், கெம்மா ஹேன்டி
- பதவி, பிபிசி செய்திகளுக்காக
- இருந்து, செயின்ட் ஜான்ஸ், ஆன்டிகுவா
சண்டை மற்றும் தற்காப்புப் பயிற்சிகளுடன் அடர்ந்த காட்டிற்குள் செடி, கொடிகளுக்கு நடுவே ஆளே மறைந்து கொள்ளும் வண்ணத்தில் ஆடையணிந்த 'யூனியன் தீவு காவலர்கள்' போருக்குத் தயாராகியுள்ளனர்.
உலகின் மிகச்சிறிய உயிரினங்களில் ஒன்றான, அரிய வகை கெக்கோ பல்லிகளை காப்பதற்காகவே பணியாற்றுகிறார்கள்.
கரீபியனில் சிறிய தீவுகளில் ஒன்றில் சுமார் 123 ஏக்கரில் மட்டுமே தற்போது இவை உயிர் வாழ்கின்றன.
யூனியன் தீவுகளில் வாழும் இந்த கெக்கோ பல்லிகள் ஒரு பேப்பர் கிளிப் அளவே உடையவை. தொடர் வேட்டையால் இந்த இனமே முற்றிலும் அழிந்து போகும் நிலையில் இருக்கிறது.
2005ஆம் ஆண்டு முதன் முதலாக மனித கண்களுக்கு புலப்பட்டது முதலே, உடலில் உள்ள முத்து போன்ற அடையாளங்களால் இது அரிய பொருட்களை சேகரிப்பவர்களின் கவனத்தை ஈர்த்தது.
கிழக்கு கரீபியனில் அதிகம் கடத்தப்படும் ஒன்றாக இந்த பல்லி மாறிப் போனது.

பட மூலாதாரம், COURTESY ROXANNE FROGET
யூனியன் தீவு மக்களின் பங்களிப்புடன் கெக்கோ பல்லிகளை காக்கும் முயற்சி நடக்கிறது. செயின்ட் வின்சென்ட், கிரெனெடின்ஸ் ஆகிய இடங்களில் 2017ஆம் ஆண்டு முதல் உள்ளூர் மக்களுக்கு காவல் பயிற்சி அளித்து மனித நடமாட்டம் இல்லாத அடர்ந்த காட்டிற்குள் வெளியாட்கள் யாரேனும் நுழைகிறார்களா என்று 24 மணி நேரமும் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வனத்துறை மற்றும் சர்வதேச விலங்குகள், தாவரங்கள் பாதுகாப்பு அமைப்பு (FFI) உள்ளிட்ட சர்வதேச விலங்குகள் நல ஆர்வலர்களுடன் உள்ளூர் மக்களும் இணைந்து மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளின் பலனாக கெக்கா பல்லிகளின் எண்ணிக்கை 80% அதிகரித்துள்ளது.
2018-ம் ஆண்டு 10,000ஆக இருந்த கெக்கோ பல்லிகளின் எண்ணிக்கை தற்போது 18,000-ஆக அதிகரித்துவிட்டதாக அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு கூறுகிறது. இது அந்த தீவின் மக்கள் தொகையைக் காட்டிலும் 6 மடங்கு அதிகமாகும்.
"இதில் உள்ளூர் மக்களின் பங்களிப்பே பிரதானமானது" என்பது வனத்துறை தலைமை அதிகாரி கிளென்ராய் கேம்சின் கருத்து.
"தீவில் வசிக்கும் பலருக்கு கெக்கோ பல்லிகள் இருப்பதே தெரியாது" என்று கூறும் அவர், "நாங்கள் வீடுவீடாக சென்றும், சாலையோர கூட்டங்கள், பள்ளி நிகழ்ச்சிகள் வாயிலாகவும் இதுகுறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துகிறோம். அதற்காக, நாங்கள் காட்டிற்குள் சென்று கெக்கோ பல்லி ஒன்றைப் பிடித்து வந்து, அது என்ன என்று மக்களுக்கு விளக்குகிறோம். இதைப் பார்க்கும் ஒவ்வொருவரும் ஆச்சர்யப்படுகின்றனர். ஏனெனில் அவர்கள் இது பெரிதாக இருக்கும் என்று எதிர்பார்த்திருந்தனர்" என்று தெரிவிக்கிறார்.
"ஒன்றரை அங்குல நீளமே உள்ள இந்த பல்லிகளைப் பார்த்து மக்கள் ஆச்சரியப்படுகின்றனர்" என்று அவர் கூறுகிறார்.
பல்லுயிர் புகலிடம்
யூனியன் தீவில் கெக்கோ பல்லிகளை காக்கும் பணியில் முதல் பெண் காவலாளியாக ரோக்ஸான் ஃப்ரோஜெட் 2018-ம் ஆண்டு பிப்ரவரியில் இணைந்தார்.

பட மூலாதாரம், COURTESY ROXANNE FROGET
"யூனியன் தீவுகளில் மட்டுமே கெக்கோ பல்லிகள் காணப்படுகின்றன என்பதை அறிந்த போது ஆச்சர்யமடைந்தேன். முழு வண்ணத்துடன் இந்த பல்லிகளை முதன் முறையாக காணும் போது வியப்பாக இருந்தது" என்கிறார் அவர்.
கெக்கோ பல்லிகளை இருளில் இருந்து வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் போது அது பிரவுன் வண்ணத்தில் இருநது பல வண்ணம் கொண்டதாக மாறுகிறது.
இயற்கையை நேசிக்கும் ரோக்ஸான் ஃப்ரோஜெட், கெக்கோ பல்லிகளை காக்கும் இந்த திட்டத்தில் இணைந்திருக்க விரும்புகிறார்.
"காட்டிற்குள் 24 மணி நேரமும் ரோந்து செல்கிறோம். விலங்குகள், தாவரங்கள் மட்டுமின்றி, கெக்கோ பல்லிகளின் வசிப்பிடமாக திகழும் பாறைகளை கட்டுமானப் பணிக்காக எடுத்துச் செல்வதை தடுப்பது என காட்டிற்குள் அனைத்தையும் பாதுகாக்கிறோம். எங்கள் கண்காணிப்பில் உள்ள இடத்தில் எதையும் தொடக் கூட முடியாது" என்று அவர் உறுதிபடக் கூறுகிறார்.
"பறவைகளின் சத்தத்தைக் கேட்டுக் கொண்டு இயற்கையோடு இணைந்திருப்பது மிகவும் பிடிக்கிறது. ஒவ்வொரு நாளும் வேலைக்குச் செல்வதை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்," என்று புன்னகைக்கிறார் 2 குழந்தைகளுக்கு தாயான ரோக்ஸான் ஃப்ரோஜெட்.

பட மூலாதாரம், FFI/ROSEMAN
"என்னுடைய 8 வயது மகனுக்கும் காடு மிகவும் பிடிக்கும். கெக்கோ பல்லிகள் பற்றியும், அவற்றை பாதுகாப்பதில் என்னுடைய பங்கு குறித்தும் அவனிடம் கூறியுள்ளேன். என்னுடைய தீவில் நடக்கும் இந்த முக்கியமான திட்டத்தில் ஒரு பங்கு வகிப்பதை பெருமையாக கருதுகிறேன்," என்று அவர் கூறுகிறார்.
டேக்வோன்டோவில் கருப்புப் பட்டை பெற்ற கேம்ஸ், இந்த காவலர்களுக்கு ரோந்து மற்றும் தற்காப்புப் பயிற்சி அளிக்கிறார். அத்துடன், காட்டிற்குள் வசிக்கும் புதிதான விலங்கினங்கள் மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் உதவும் தாவரங்கள் குறித்தும் அவர்களுக்கு கற்றுத் தரப்படுகிறது. இதன் மூலம் உள்ளூர் பள்ளி குழந்தைகளுக்கும், பார்வையாளர்களுக்கும் அவர்கள் இதனை எடுத்துக் கூற முடிகிறது.
பல்லுயிர் புகலிடமாக திகழும் யூனியன் தீவுக்கு நிதிப் பற்றாக்குறை மட்டுமே பிரச்னையாக உள்ளது. கெக்கோ பாதுகாப்புத் திட்டம் தொடங்கிய பிறகு, அந்தக் குழுக்கள் காட்டுக்குள் வாழும் அரிய வகை பிங்க் ரைனோ இகுவானா போன்ற அழியும் தருவாயில் உள்ள உயிரினங்களையும் வேட்டைக்காரர்களிடம் இருந்து காக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளன.
உடலில் உள்ள கண்ணைக் கவரும் வண்ணங்களும், அரிதாகவே தென்படும் ஒன்றாகவும் இருப்பதே கெக்கோ பல்லி, இளஞ்சிவப்பு நிற ரைனோ இகுவானா ஆகிய இரண்டிற்கும் வினையாக மாறியுள்ளது.

பட மூலாதாரம், FFI/J DALTRY

பட மூலாதாரம், FFI/J HOLDEN
"இவற்றை சேகரிக்கும் பெரும்பான்மையானோர் இயற்கை ஆர்வலர்கள். கெக்கோ பல்லிகள் மிகவும் வித்தியாசமானவை என்பதால் அவற்றை அவர்கள் விரும்புகின்றனர். அவற்றை எவ்வாறு இனப்பெருக்கம் செய்வது என்பதை கற்றுக் கொள்ள அவர்கள் விரும்புகின்றனர். இதன் மூலம் மற்ற இயற்கை ஆர்வலர்களிடம் தங்களை பெருமையுடன் பறைசாற்றிக் கொள்ள விரும்புகின்றனர்," என்று சர்வதேச விலங்குகள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு அமைப்பின் கரீபியன் திட்ட மேலாளர் இசபெல் விக் கூறுகிறார்.
கெக்கா பல்லிகளை சேகரிப்பவர்கள் மிக தொலைவில் இருந்து, அதாவது அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் இருந்து படகுகளில் இங்கு வருவதாக விக் மேலும் கூறுகிறார்.

பட மூலாதாரம், FFI/J BOCK
"ஆனால், நாங்கள் களத்தில் இறங்கிய பிறகு, கெக்கோ பற்றிய இணையதள விளம்பரங்களை 80% அளவுக்கு குறைந்து விட்டது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்பு, கெக்கோ பல்லிகளின் வசிப்பிடம் குறித்து யூனியன் தீவு மக்களிடமே கேட்டுத் தெரிந்து கொள்வது வேட்டைக்காரர்களுக்கு சாதகமாக இருந்தது.
"சுற்றுலா பயணிகள் என்ற போர்வையில் வரும் வேட்டைக்காரர்கள் கெக்கோ பல்லிகளை எங்கே காணலாம் என்று உள்ளூர் மக்களிடமே கேட்டுத் தெரிந்து கொள்வார்கள்" என்று கூறும் விக், "மக்களுக்கு விழிப்புணர்வை உண்டாக்கியதன் பலனாக, கெக்கோ பல்லிகளை எங்கே பார்க்க முடியும் என்பதற்குப் பதிலாக அவர்களை காவல் நிலையத்திற்கு அவர்கள் அனுப்பி விடுவார்கள்," என்று அவர் மேலும் கூறுகிறார்.
2019-ம் ஆண்டு முதல் CITES என்ற சர்வதேச ஒப்பந்தம் மூலம் கெக்கோ பல்லிகள் பாதுகாக்கப்படுகின்றன. அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளால், அவற்றிக்கு உச்சபட்ச பாதுகாப்பை உறுதி செய்ய முடிகிறது. வேட்டைக்காரர்கள் பிடிபடும் போது அதிகபட்ச அபராதமும், சில நேரங்களில் சிறைத்தண்டனையும் விதிக்கப்படுகிறது.
உலகில் எஞ்சியுள்ள வெப்ப மண்டல உலர் காடுகளில் ஒன்றான கெக்கோ சாத்தம் வளைகுடா, மேற்கு இந்திய தீவுகளில் வாழும் விலங்குகளைக் காட்டும் ஆய்வகமாக திகழ்கிறது என்கிறார் FFI திட்ட மேலாளர் ஜேம்ஸ் குரோக்கெட்.
பிபிசியிடம் பேசிய அவர், "பூமியில் ஆபத்தில் உள்ள பல்லுயிர் புகலிடங்களில் கரீபியன் உலர் காடுகளும் ஒன்று. சாத்தம் வளைகுடா போன்ற வெகு சில மட்டுமே இதுவரை எந்த பாதிப்பையும் சந்திக்கவில்லை," என்று தெரிவித்தார்.

பட மூலாதாரம், FFI/J DALTRY
அதுவே இந்த திட்டத்தை மேலும் மதிப்புள்ளதாக்கியுள்ளது.
"மிகச்சிறிய, கச்சிதமான, அழகான இந்த கெக்கோ பல்லிகள், யூனியன் தீவை உலகளவில் பிரதிநிதித்துவப்படுத்தும் சரியான சின்னம் என்று கருதுகிறேன்," என்று குரோக்கெட் மேலும் கூறுகிறார்.
கெக்கோ பல்லிகளை பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றும் யூனியன் தீவு சுற்றுச்சூழல் அணி என்ற உள்ளூர் தன்னார்வ அமைப்பின் இணை நிறுவனரான ரோஸ்மேன் ஆடம்ஸ், இந்த கூற்றை ஏற்றுக் கொள்கிறார்.
"அரசாங்கத்தில் உள்ள சிலர், கெக்கோ பல்லிகளின் வசிப்பிடத்தை சிறந்த சுற்றுலா மையமாக மாற்றலாம் என்று நம்புகின்றனர். வெளியாட்களின் தொந்தரவு இல்லாத, ஆரோக்கியமான இந்த உலர் காடுகுளின் முக்கியத்துவத்தை அவர்களுக்கு எடுத்துரைக்க முயற்சித்து வருகிறோம். மனிதர்கள் இதுவரை அறிந்திடாத புதுப்புது உயிரினங்கள் இங்கிருந்துதான் உலகிற்கு தெரிய வருகின்றன," என்று அவர் கூறுகிறார்.
"கெக்கா பல்லிகளை கண்டுபிடித்து, பாதுகாத்திருக்காவிட்டால் அவை பூமியில் இருந்து நிரந்தரமாக அழித்தொழிக்கப்பட்டிருக்கும்," என்கிறார் அவர்.
"கெக்கோ பல்லிகள், இந்த பூமியில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உயிர் வாழ்பவை என்பதால் அவை மிகுந்த தாக்குப் பிடிக்கும் திறன் கொண்டவை என்ற உண்மை புலனாகிறது. கெக்கோ பல்லிகள் வாலை உயர்த்தினால் அது பெருமையாக தெரிகிறது," என்று அவர் கூறுகிறார்.
"இந்த பல்லிகள் நம்மை யூனியன் தீவுவாசிகளாக அடையாளப்படுத்துகிறது. நாம் அளவில் சிறிதாக இருக்கலாம். ஆனால், பெருமையுடனும், நெகிழ்வுடனும் இருக்கிறோம்" என்பது அவரது கூற்று.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












