You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காதலனின் குற்றத்திற்காக தூக்கிலிடப்பட்ட 'அசாதாரண' பெண்ணின் உருக்கமான கதை
- எழுதியவர், டிம் ஸ்டோக்ஸ்
- பதவி, பிபிசி நியூஸ்
1923ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி பிரிட்டனை சேர்ந்த ஓர் இளம்பெண் தான் செய்யாத ஒரு குற்றத்திற்காக மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார். எடித் தாம்ஸன் என்ற அந்த பெண்ணுக்கும் அவரது காதலர் ஃப்ரெடிரிக் பைவாட்டர்ஸுக்கும் ஒரே நாளில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
தனது காதலனால் தன்னுடைய கணவர் கொல்லப்படுவார் என்பது குறித்து துளியும் அறிந்திராத அந்த பெண், இந்த வழக்கில் ஏன் தண்டிக்கப்பட்டார்? ஒரு நூற்றாண்டு கடந்துவிட்ட பின்னரும் இந்த வழக்கு ஏன் இன்றும் பேசப்படுகிறது?
ஒரு குளிர் நிறைந்த செவ்வாய் கிழமையின் காலை வேளையில் எடித் தாம்ஸனின் மரண தண்டனையை நிறைவேற்றுவதற்காக லண்டனின் ஹாலோவே சிறைச்சாலைக்குள் சிறை அதிகாரி தனது உதவியாளர்களுடன் வந்துக்கொண்டிருந்தார். தொடர்ந்து மயக்க ஊசிகளால் துளைக்கப்பட்டிருந்த எடித் தாம்ஸனின் உடல் அப்போது சிறைக்குள் சரிந்து கிடந்தது. சிறை அதிகாரிகள் தனது அறைக்குள் நுழைந்தபோது சுயநினைவின்றி இருந்த அவரிடமிருந்து சிறு முனகல் மட்டுமே வெளிப்பட்டது.
எடித் தாம்ஸனை தூக்குமேடைக்கு அழைத்து செல்ல வந்த அதிகாரிகளில் ஒருவர், ‘இதோ சீக்கிரம் எல்லாம் முடிந்துவிடப்போகிறது, எழுந்து வா’ என்று கூறி அவரை தனது தோளில் சாய்த்து அழைத்து செல்கிறார். அங்கே அவருக்கு தூக்குமேடையும், மரணத்திற்கான கதவும் காத்துக்கொண்டிருந்தன. அடுத்த ஒரு சில நொடிகளில் எடித் தாம்ஸனின் உயிர் பிரிந்தது. அப்போது அவருக்கு வயது 29 மட்டுமே.
லண்டன் ஹாலோவே சிறைச்சாலையிலிருந்து அரை மைல் தூரத்தில் அமைந்திருந்த பெண்டொன்வில் சிறைச்சாலையில் அதே தினம் எடித் தாம்ஸனின் 20வயது காதலர் ஃப்ரெட்ரிக்கிற்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
அன்றைய தினத்திலிருந்து சுமார் மூன்று மாதத்திற்கு முன்பாக, தியேட்டரில் படம் பார்த்துவிட்டு எடித் தாம்ஸன் தனது கணவர் பெர்சியுடன் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது சற்றும் எதிர்பாராதவிதமாக அங்கு வந்த ஃப்ரெடிரிக், பெர்சியை பலமுறை தனது கத்தியால் குத்தினார். இந்த வழக்கு நடைபெற்று வந்த காலகட்டத்தில், ‘தான் செய்த கொலை குறித்து தனது காதலியான எடித் தாம்ஸனுக்கு எதுவும் தெரியாது’ என ஃப்ரெடிரிக் தொடர்ந்து கூறிவந்தார். ஆனாலும் ஃப்ரெடிரிக்குடன் சேர்ந்து எடித் தாம்ஸனுக்கும் மரண தண்டனை வழங்கப்பட்டது.
இந்த வழக்கு அன்றைய பிரிட்டன் மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது. வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட எடித் தாம்ஸன் மக்களால் மிகவும் ஒழுங்கீனமற்ற ஓர் பெண்ணாக பார்க்கப்பட்டார்.
ஆனால் அதேசமயம் எடித் தாம்ஸனுக்கு நிறைவேற்றப்பட்ட இந்த மரண தண்டனை குறித்து பிரிட்டன் எழுத்தாளரும் , கதாசிரியருமான எட்கர் வாலஸ் கூறுகையில் ”நாட்டின் வரலாற்றிலேயே மிகவும் பாரபட்சத்துடன் ஒரு வழக்கு நடத்தப்பட்டு, எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் ஒரு பெண் தண்டிக்கப்பட்டார் என்றால் அது எடித் தாம்ஸன்தான்” என்று குறிப்பிடுகிறார்.
எடித் தாம்ஸன் - ஓர் அசாதாரணமான பெண்
அன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான உழைக்கும் வர்க்க பெண்கள் ஏற்றுக்கொண்டு வாழ்ந்த வாழ்க்கையை வாழ்வதற்கு எடித் விரும்பவில்லை. அவர் எப்போதும் ஒரு வித்தியாசமான பார்வையைக் கொண்டிருந்தார்.
1893ஆம் ஆண்டு கிழக்கு லண்டனில் அமைந்துள்ள மேனர் பார்க் பகுதியில் ஒரு கிறிஸ்துமஸ் நாளில் எடித் பிறந்தார். குடும்பத்தில் மூத்த பெண்ணாக பிறந்திருந்த அவர் தனது மூன்று தம்பிகளையும், ஒரு தங்கயையும் வளர்ப்பதற்கு தன்னுடைய அம்மாவிற்கு உதவியாக இருந்தார்.
சாதிக்க வேண்டிய துடிப்பும், அறிவும் பெற்றிருந்த எடித், தன்னுடைய பள்ளி படிப்பை முடித்த கையோடு வேலைக்காக நகரத்தை நோக்கி சென்றார். அங்கு ஒரு பார்பிக்கன் நிறுவனத்தில் வேலை செய்த அவர், சிறந்த பணியாளராகவும் விளங்கினார்.
1916ஆம் ஆண்டு கிளர்க்காக பணிபுரிந்து வந்த பெர்சி தாம்ஸனை திருமணம் செய்துகொள்ளும் எடித், இல்ஃபோர்ட் பகுதியில் உள்ள கென்சிங்டன் கார்டனில் ஒரு வீட்டை வாங்குகிறார். சுமார் 250டாலர்கள் மதிப்புக்கொண்ட அந்த வீட்டை வாங்குவதற்காக பாதிக்கும் மேலான பணத்தை எடித் கொடுக்கிறார். ஆனாலும் அந்த வீடு அவரது கணவர் பெர்சியின் பெயரில் வாங்கப்படுகிறது.
’புதிதாக திருமணமான எடித் வீட்டை கவனித்து கொள்வதிலேயோ, குழந்தை பெற்று கொள்வதிலேயோ ஆர்வம் காட்டவில்லை. மாறாக தனது வாழ்வை முழுமையாக அனுபவிக்க விருப்பம் கொள்கிறார். நடனமாடுவதிலும், நண்பர்களுடன் பொழுதை கழிப்பதிலும், தனக்கு விருப்பமான உணவை ருசிப்பதிலும், படங்கள் பார்ப்பதிலும் தனது பெரும்பாலான நேரத்தை செலவழித்தார்’ என்று கூறுகிறார் பிரிட்டனைச் சேர்ந்த எழுத்தாளர் லாரா தாம்ஸன்.
எடித்தின் வழக்கு குறித்து இரண்டு புத்தகங்களை வெளியிட்டுள்ள லாரா தாம்ஸன் ”அசாதாரணமான வாழ்வை வாழ விரும்பிய ஒரு சாதாரண பெண் எடித்” என்று அவரை குறிப்பிடுகிறார்.
இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், வீட்டை பராமரித்துகொள்ளும் ஒரு சாதாரண மனைவியாக அவர் இருக்கவில்லை. மாறாக தன்னைவிட 8 ஆண்டுகள் இளைய வயதுடைய ஃப்ரெட்ரிக் பைவாட்டர்ஸ் என்னும் அழகான காதலனைக் கொண்டிருந்தார்.
எடித் தாம்ஸனுக்கும் ஃபெட்ரிக் பைவாட்டர்ஸுக்கும் இடையே உருவான காதல்
எடித் தாம்ஸனின் தம்பியின் வகுப்பு தோழரான ஃபெட்ரிக், எடித் மற்றும் அவரது குடும்பத்தை சிறுவயதிலிருந்தே நன்கு அறிந்திருந்தார். தன்னுடைய 13 வயதில் லண்டனுக்கு சென்ற ஃப்ரெட்ரிக், 1921ஆம் ஆண்டு ஜீன் மாதம் மீண்டும் தன்னுடைய வீட்டிற்கு வருகிறார். அந்த சமயத்தில் எடித், அவரது கணவர் பெர்சி மற்றும் எடித்தின் தங்கை ஏவிஸ் கிரேடன் ஆகியோர் ஃப்ரெட்ரிக்கை விடுமுறை கொண்டாட்டத்திற்காக அழைக்கிறார்கள்.
அந்த விடுமுறை கொண்டாட்டத்தின் இறுதி நாட்களில்தான் எடித்திற்கும்,ஃப்ரெட்ரிக்கும் இடையேயான காதல் மலர்கிறது. அதனைதொடர்ந்து எடித் தாம்ஸனின் வீட்டில் தங்குவதற்கான அழைப்பும் ஃப்ரெட்ரிக்கிற்கு கிடைக்கிறது. ஃப்ரெட்ரிக் அங்கு குடியேறுகிறார். ஆனால் எடித் தாம்ஸனின் வீட்டில் தங்கியிருந்த காலகட்டத்தில், பெர்சி தனது மனைவியை அடிக்கடி துன்புறுத்துவதை பார்க்கிறார். அதனை சகித்து கொள்ள முடியாத ஃப்ரெட்ரிக் சில நாட்களிலேயே அங்கிருந்து வெளியேறிவிடுகிறார்.
ஆனால் அதன்பின்னரும் எடித்திற்கும், ஃப்ரெட்ரிக்கிற்கும் இடையிலான காதல் கடிதங்களின் மூலம் தொடர்கிறது.
‘அந்த கடிதங்கள் அனைத்தும் மிகவும் உணர்ச்சிப்பூர்வமானவை. மிகவும் அந்தரங்கமான உரையாடல்கள் அதில் இருந்தன. ஒரு கடிதத்தில் தான் மேற்கொண்ட கருக்கலைப்பு குறித்தும், தற்கொலை முயற்சி குறித்தும்கூட எடித் எழுதியிருந்தார்’ என்று கூறுகிறார் இந்த கடிதங்களை ஆராய்ந்து புத்தகம் வெளியிட்டுள்ள லாரா தாம்ஸன்.
புத்தக வாசிப்பில் தீவிர ஆர்வமுடைய எடித், ஒரு சில நேரங்களில் தன்னை புத்தகங்களில் வரும் கதாபாத்திரங்களாகவே கற்பனை செய்துகொண்டுள்ளார். தனது கணவரிடமிருந்து விடைபெற வேண்டும் என நினைத்த எடித், உணவில் சிறிய கண்ணாடி சில்லுகளை கலந்து கொடுத்து அவரை கொலை செய்வதற்கான முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார்.
இந்த வழக்கு குறித்து இருபது ஆண்டுகளாக ஆய்வு செய்துவரும் யுனிவெர்சிட்டி காலேஜ் லண்டனை சேர்ந்த பேராசிரியர் ரெனே வெய்ஸ், ‘தன்னுடைய காதல் மற்றும் அந்தரங்க வாழ்வு குறித்து எடித் மிகவும் அதிகமான கவலையில் ஆழ்ந்திருந்தார்’ என்று கூறுகிறார்.
பெர்சியை கொலை செய்த ஃப்ரெட்ரிக்
1922ஆம் ஆண்டு அக்டோபர் 3ஆம் தேதி எடித் மற்றும் பெர்சி தாம்சன் தம்பதியினர் சினிமா பார்த்துவிட்டு வீட்டிற்கு வந்துக்கொண்டிருந்தபோது, சாலையில் மறைந்து நின்றுக்கொண்டிருந்த ஃப்ரெட்ரிக், திடீரென அவர்கள் மீது பாய்ந்து, பெர்சியை தான் வைத்திருந்த கத்தியால் தாக்கியுள்ளார்.
மருத்துவர் வந்து சோதித்தபோது பெர்சி ஏற்கனவே இறந்திருந்தார். அவரது ரத்தம் சாலையில் 13மீட்டர் தூரம் வரை படர்ந்திருந்தது.
பெர்சியின் சகோதரர் அளித்த புகரின் பேரில், காவல்துறையினர் ஃப்ரெட்ரிக்கின் வீட்டில் சோதனை செய்தனர். அப்போதுதான் எடித் அவருக்காக எழுதிய காதல் கடிதங்கள் முதன்முறையாக வெளியே தெரிய வந்தது. இந்த கடிதங்களை வைத்துதான் எடித் தாம்ஸனும் இந்த குற்றச்செயலில் சம்பந்தப்பட்டிருப்பார் என்று எண்ணி அவரை காவல்த்துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
ஆனால் உண்மையில் தனது காதலர் ஃப்ரெட்ரிக் இப்படி செய்வார் என எடித் தாம்ஸன் சற்றும் அறிந்திருக்கவில்லை. ஃப்ரெட்ரிக் ஏன் இப்படி செய்தார் என்று அவர் அழுது தீர்த்தார்.
ஃப்ரெட்ரிக் தான் செய்த குற்றத்தை மறுக்கவில்லை. ஆனால் அதேசமயம் எடித்திற்கும் இந்த குற்றத்திற்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என்று அவர் காவல்த்துறையினரிடம் வாக்குமூலம் அளித்திருந்தார்.
நாடு முழுவதும் பேசு பொருளான எடித் - ஃபெட்ரிக் காதல் ஜோடி
பெர்சியின் கொலை குறித்த செய்தியுடன் எடித் தாம்ஸன் மற்றும் ஃபெட்ரிக்கின் காதல் கடிதங்களும் பிரிட்டன் நாளிதழ்களில் வெளியானது. ஒரே இரவில் இவர்கள் நாட்டின் பேசுப்பொருளாக மாறினர். கிட்டதட்ட திரை நட்சத்திரங்களுக்கு இணையான வகையில் இவர்கள் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தனர்.
1922ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி, எடித் மற்றும் ஃபெட்ரிக்கை விசாரணைக்காக நீதிமன்றம் அழைத்து வந்தபோது, அவர்களை காண்பதற்காக பெருந்திரளான கூட்டம் நீதிமன்றத்தின் வெளியே கூடியிருந்தது.
ஒருகட்டத்தில் எடித் ஃபெட்ரிக் ஜோடியை வேடிக்கை பார்க்க வருபவர்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் சென்றது. பிரிட்டனில் வேலை இல்லாமல் சுற்றிக்கொண்டிருந்த இருந்த ஆண்கள் எல்லோரும் இவர்களை வேடிக்கை பார்க்க வருபவர்களுக்கு இடம்பிடித்து கொடுத்து சம்பாதிப்பதை தங்கள் வேலையாக மாற்றிக்கொண்டனர்.
மிகவும் கொடிய பாவிகளாக கருதப்பட்ட இவர்களின் உருவங்களை பிரிட்டனின் மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியத்தின் திகில் அறையில் வைப்பதற்கு முடிவு செய்யப்பட்டது. அதற்காக மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியத்தை சேர்ந்த கலைஞர்களும் நீதிமன்றத்திற்கு வர தொடங்கினர்.
நீதிமன்றத்தில் நிகழ்ந்த பாரபட்சம்
பெர்சியின் கொலை வழக்கு விசாரணையின்போது எடித் - ஃபெட்ரிக்கின் காதல் கடிதங்கள் வழக்கறிஞர்களால் அனைவரின் முன்னிலையிலும் மிகவும் சத்தமாக வாசிக்கப்பட்டது.
ஒருவரின் அந்தரங்க விஷயங்களை பொதுவெளியில் பேசியது மிகவும் கொடூரமான செயல் எனவும், அது சம்பந்தப்பட்டவர்களின் உளவியலின் மீது மோசமான பாதிப்பை ஏற்படுத்து எனவும் பிரிட்டன் எழுத்தாளர் லாரா தாம்ஸன் குறிப்பிடுகிறார்.
முதலாம் உலகப்போர் முடிந்திருந்த காலக்கட்டத்தில் எடித் - ஃப்ரெட்ரிக்கின் இந்த வழக்கு நடைபெற்று வந்தது. அந்த சமயத்தில் போரில் தங்களது கணவர்களை பெரும்பாலான பிரிட்டன் பெண்கள் இழந்திருந்தனர். ஏற்கனவே தங்களது கணவர்களின் இழப்பை தாங்கிகொள்ள முடியாமல் இருந்த பிரிட்டன் பெண்கள், எடித் தாம்சன் மீது அதிகப்படியான வெறுப்பை கொண்டிருந்தனர்.
கணவர் இருக்கும்போதே மற்றொரு ஆண் மீது எடித் தாம்சன் கொண்டிருந்த காதலை அவர்கள் இழிவான செயலாக கருதினர்.
‘பணமும், வீடும், சொகுசான வாழ்க்கையும் கிடைத்தபோதும் இவளுக்கு ஒரு ஆண் போதவில்லை’ என்றும், தன்னுடைய செயல்களால் இவள்தான் இளம் வயதான ஃப்ரெட்ரிக்கை மயக்கியிருப்பாள் என்றும் பிரிட்டன் பெண்கள் எடித் தாம்ஸன் பற்றி பேசி வந்ததாக’ பேராசிரியர் ரெனே வெய்ஸ் குறிப்பிடுகிறார்.
பொதுமக்களுக்கு எடித் தாம்ஸன் மீது ஏற்பட்டிருந்த வெறுப்பு இந்த வழக்கை விசாரித்து வந்த ’நீதிபதி ஷியர்மென்’ வரை எதிரொலித்ததாக கூறப்படுகிறது.
விசாரணையின் ஒருபகுதியாக கொலை செய்யப்பட்ட பெர்சியின் உடலில் சோதனை நடத்தப்பட்டது. எடித் தனது கடிதங்களில் கூறியிருந்தபடி பெர்சியின் உணவில் விஷம் அல்லது கண்ணாடி துண்டுகளை கலந்து கொடுத்திருந்தாரா என்பதை தெரிந்து கொள்வதற்காக பெர்சியின் உடல் பரிசோதிக்கப்பட்டது. ஆனால் அப்படி நடந்திருப்பதற்கான எந்தவொரு தடயமும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனாலும் எடித் தாம்சனின் மீதான தண்டனை உறுதி செய்யப்பட்டது. அவருக்கு எதிராக சாட்சியங்களை திருப்ப அனைத்து செய்லகளும் மேற்கொள்ளப்பட்டன.
எடித் தாம்சனின் கடிதங்களில் எழுதியிருந்தவை எல்லாம் திரிக்கப்பட்டு வாசிக்கப்பட்டது. பொய்யான வார்த்தைகளும், தேதிகளும் கோர்க்கப்பட்டன.
டிசம்பர் 11ஆம் தேதி சுமார் இரண்டு மணி நேர நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு எடித் தாம்சனும் , ஃப்ரெட்ரிக்கும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். அவர்களுக்கு தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது.
எடித் தாம்சனையும் குற்றவாளியாக அறிவித்த நீதிமன்றத்தின் தீர்ப்பை கேட்டு ஃப்ரெட்ரிக் கதறி அழுதார். எடித் குற்றமற்றவர் என நீதிமன்றம் அதிரும் அளவுக்கு கத்தினார். ஆனால் அது எதுவுமே அங்கிருந்த ஒருவரின் மனதில் கூட எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
எடித் தாம்ஸனின் மரணத்திற்கு பின் என்ன நடந்தது?
கடைசி வரை தன் பக்கத்து நியாயத்தையும், உண்மைகளையும் பேசுவதற்கு வாய்ப்பே அளிக்கப்படாத எடித் தாம்சன், தான் செய்யாத குற்றத்திற்காக தூக்கிலிடப்பட்டார்.
மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியத்தின் திகில் அறையில் பொதுமக்களை அதிகம் கவரும் மெழுகுச்சிலை உருவங்களாக எடித் மற்றும் ஃப்ர்ட்ரிக்கின் சிலைகள் இருந்தன. ஆனால் 1980 காலக்கட்டங்களுக்கு பிறகு அவர்களின் சிலை ஒருவழியாக அங்கிருந்து எடுக்கப்பட்டது. மெழுகுகள் சேதமடைந்த நிலையிலும், வண்ணங்கள் மங்க தொடங்கிய நிலையிலும் அந்த சிலைகள் அங்கிருந்து எடுக்கப்பட்டது.
அதேபோல் பேராசிரியர் ரெனே வெய்ஸுனுடைய பல ஆண்டுகால போராட்டங்களுக்கு பின், 2018ஆம் ஆண்டில் எடித் தாம்சனின் உடலில் தோண்டி எடுக்கப்பட்டு லண்டன் சிமெட்ரி மனார் பார்க்கில் அவரது பெற்றோர்கள் அடக்கம் செய்யப்பட்டிருந்த இடத்தில் மறு அடக்கம் செய்யப்பட்டது. தனது மகளின் உடல் தங்களுக்கு பக்கத்தில் அடக்கம் செய்யப்பட வேண்டுமென்பது எடித் தாமசனின் தாயின் கடைசி ஆசையாக இருந்தது என பேராசிரியர் வெய்ஸ் கூறுகிறார்.
’கிட்டத்தட்ட நூறாண்டுகள் ஆன பின்னரும் கூட எடித்திற்கு நிகழ்ந்த இந்த பாரபட்சமும், அநீதியும் இன்றும் பல இடங்களில் தொடரத்தான் செய்கிறது என்றும், அதனுடைய வடிவங்கள் மட்டுமே மாறுகிறது’ என்கிறார் எழுத்தாளர் லாரா தாம்சன்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்