மூன்று சிறுமிகள் கொல்லப்பட்ட விவகாரம்: பிரிட்டனில் கலவரமாக மாறிய போராட்டம் - என்ன நடக்கிறது?

    • எழுதியவர், அலெக்ஸ் பின்லி, டான் ஜான்சன்
    • பதவி, பிபிசி செய்தி நிருபர்

பிரிட்டன் முழுவதும் தீவிரமான போராட்டங்கள் நடந்து வருகின்றன. ஜூலை 29-ஆம் தேதியன்று பிரிட்டனின் சவுத்போர்ட் நகரில் நடைபெற்ற ‘டெய்லர் சுவிஃப்ட் யோகா மற்றும் நடனப் பயிலரங்கில்’ கலந்து கொண்ட மூன்று சிறுமிகள் கொல்லப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து சனிக்கிழமை அன்று (ஆகஸ்ட் 3) பிரிட்டனின் பல்வேறு நகரங்களில் தீவிர வலதுசாரி ஆர்ப்பாட்டங்கள் கலவரமாக மாறியதையடுத்து 90-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

ஹல், லிவர்பூல், பிரிஸ்டல், மான்செஸ்டர், ஸ்டோக்-ஆன்-ட்ரென்ட், பிளாக்பூல், மற்றும் பெல்ஃபாஸ்ட் ஆகிய இடங்களில் அமைதியின்மை ஏற்பட்டது. இங்கு ஏவுகணைகள் வீசப்பட்டன, கடைகள் சூறையாடப்பட்டன, மற்றும் சில இடங்களில் காவல்துறையினர் தாக்கப்பட்டனர். மற்ற இடங்களில் நடந்த சிறிய ஆர்ப்பாட்டங்கள் வன்முறையாக மாறவில்லை.

‘வெறுப்புணர்வை விதைக்க’ முயற்சிக்கும் ‘தீவிரப் போராட்டக்காரர்களுக்கு’ (extremists) எதிராக நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு முழு ஆதரவை வழங்குவதாக பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டாமர் உறுதியளித்துள்ளார்.

லிவர்பூல் நகரத்தில், செங்கற்கள், பாட்டில்கள், மற்றும் வெடிப்பொருட்கள் ஆகியவை போலீசார் மீது வீசப்பட்டன. ஒரு அதிகாரி மீது போராட்டக்காரர்கள் நாற்காலி வீசியபோது அவருக்குத் தலையில் பலமாக அடிப்பட்டது. மற்றொரு அதிகாரியை அவரது மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே இழுத்து தள்ளித் தாக்கினர்.

என்ன நடந்தது?

சுமார் 1,000-க்கும் மேற்பட்ட குடியேற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டத்தில் இறங்கினர். அவர்களில் சிலர் இஸ்லாமியர்களுக்கு எதிரான அவதூறு கருத்துக்களைச் சொல்லிக் கூச்சலிட்டனர். அவர்களுக்கு எதிராக மற்றொரு தரப்பு போராட்டத்தில் குதித்தது.

இதனைத் தொடர்ந்து, நூற்றுக்கும் மேற்பட்ட பாசிச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் லிவர்பூலின் லைம் ஸ்ட்ரீட் ஸ்டேஷன் அருகே மதிய உணவு நேரத்தில் கூடி, ஒற்றுமை மற்றும் சகிப்புத்தன்மைக்கு அழைப்பு விடுத்து கோஷங்கள் எழுப்பினர். ‘அகதிகள் இங்கு வரவேற்கப்படுகிறார்கள்’ மற்றும் ‘நாஜி கொள்கைகளை, எங்கள் தெருக்களுக்கு வெளியே வைத்து கொள்ளுங்கள்’ என்று அவர்கள் கோஷமிட்டனர்.

இருதரப்பு போராட்டக்காரர்களுக்கும் இடையே கலவரங்களைத் தடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் நாய்களுடன் அங்கு திரண்டிருந்தனர்.

ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 4) அதிகாலை வரை அமைதியின்மை தொடர்ந்தது. பாதுகாப்பு உடைகள் அணிந்திருந்த காவல்துறை அதிகாரிகளை நோக்கி வெடிகள் வீசப்பட்டன. நகரின் வால்டன் பகுதியில் ஒரு நூலகத்திற்குத் தீ வைக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் அதை அணைக்க முயன்றனர் என்று மெர்சிசைட் போலீசார் தெரிவித்தனர். கடைகள் உடைக்கப்பட்டன.

இந்தப் போராட்டங்கள் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியிருப்பதாகவும் பல அதிகாரிகள் காயமடைந்திருப்பதாகவும் பாதுகாப்புப் படை உறுதிப்படுத்தியது. இதில் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அரசு தரப்பு கூறுவது என்ன?

பிரிட்டனின் உதவித் தலைமைக் காவலர் ஜென்னி சிம்ஸ் கூறுகையில், "மெர்சிசைடில் ஒழுங்கின்மை, வன்முறை நடவடிக்கைகளுக்கு இடமில்லை," என்றார்.

மேலும், "இதுபோன்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களுக்கும் இந்த நகரத்திற்கும் அவமானத்தைத் தவிர வேறு எதையும் தேடித் தரவில்லை," என்றார்.

ஞாயிற்றுக்கிழமையும் (ஆகஸ்ட் 4) போராட்டங்கள் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் சனிக்கிழமை நடந்த அளவுக்கு இருக்காது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, சனிக்கிழமை (ஆகஸ்ட் 3) அன்று நடந்த அமைச்சர்கள் கூட்டத்தைப் பற்றி அதிபர் கியர் ஸ்டாமரின் செய்தித் தொடர்பாளர் பேசுகையில், "கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமை மற்றும் வன்முறை நிகழ்வுகள் ஆகிய இரண்டும் வெவ்வேறு விஷயங்கள்," என்று பிரதமர் அந்தக் கூட்டத்தில் பேசியதாகக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் பேசுகையில், "எந்தவிதமான வன்முறைக்கும் மன்னிப்பு இல்லை. நம் நகரத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க அரசாங்கம் காவல்துறைக்கு ஆதரவளிக்கிறது," என்று மீண்டும் வலியுறுத்தினார்.

சனிக்கிழமையன்று, உள்துறைச் செயலாளர் "ஏற்றுக்கொள்ள முடியாத கலவரத்தில் ஈடுபடுவோர் சிறைத்தண்டனை மற்றும் பிற தண்டனைகளுடன் பயணத் தடைகளையும் எதிர்கொள்ள நேரிடும்,” என்றும் எச்சரித்தார். மேலும் அனைவரையும் கைது செய்யப் போதுமான சிறைச்சாலை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றும் கூறினார்.

இரு குழுக்களுக்கு இடையே மோதல்

பிரிட்டனின் உள்துறைஸ் செயலாளர் யவெட் கூப்பர், "கிரிமினல் குற்றங்களுக்கும் வன்முறை மற்றும் ஒழுங்கின்மைக்கும் பிரிட்டனின் சாலைகளில் இடமில்லை," என்று கூறினார்.

கலவரத்தில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கக் காவல்துறைக்கு அரசின் முழு ஆதரவு உள்ளது என்றும் அவர் கூறினார்.

பிரிஸ்டல் நகரில், போராட்டக்காரர்களும் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் குழுக்களும் முற்றுகையில் ஈடுபட்டனர்.

ஒரு குழு ‘Rule Britannia’ என்ற பிரிட்டனின் தேசபக்திப் பாடலை பாடியது. "நான் இறக்கும் வரை இங்கிலாந்து தான். எங்கள் நாடு எங்களுக்கு திரும்ப வேண்டும்," என்று அந்தக் குழு உரத்தக் குரலில் பாடுவதைக் கேட்க முடிந்தது.

இனவெறிக்கு எதிரான குழு மீது பீர் கேன்கள் வீசப்பட்டன, மேலும் சில எதிர்ப்பாளர்கள் மீது அதிகாரிகள் தடியடி நடத்தினர்.

மான்செஸ்டரில், போலிசாருடன் போராட்டக்காரர்கள் கைகலப்பில் ஈடுபட்டனர். இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

பிளாக்பூலில், ‘Rebellion Festival’ நிகழ்வில் பங்கேற்பவர்களுக்கு எதிராக ஒரு குழு போராட்டத்தில் இறங்கியது. இரு குழுக்களிடையே மோதல் வெடித்ததால், பாட்டில்கள் மற்றும் நாற்காலிகள் வீசப்பட்டதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். 20-க்கும் மேற்பட்டோரைக் கைது செய்துள்ளதாக லங்காஷயர் போலீசார் தெரிவித்தனர்.

பெல்ஃபாஸ்டில் ​​ஒரு மசூதிக்கு வெளியே எதிர்ப்பாளர்கள் பத்திரிகையாளர்கள் மீது பாட்டில், கற்கள் உள்ளிட்டவற்றை வீசியதால் சிலர் கைது செய்யப்பட்டனர். இதுபோன்று பல்வேறு இடங்களில் சிறிய அளவிலான போராட்டங்கள் முதல் பெரிய கலவரங்கள் வரை நடந்தன.

சனிக்கிழமை (ஆகஸ்ட் 3) அன்று பிரிட்டன் முழுவதும் நடத்தப்பட்ட அனைத்து ஆர்ப்பாட்டங்களும் வன்முறையாக மாறவில்லை. சில இடங்களில் எதிர்ப்பாளர்கள் மாலைக்குள் கலைந்து சென்றனர்.

சண்டர்லேண்டில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 2) இரவு நடந்த வன்முறையைத் தொடர்ந்து சனிக்கிழமை அன்று நடந்த போராட்டங்களில் காயமடைந்த நான்கு போலீஸ் அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

வலதுசாரி ஆர்வலர்களின் திட்டம்

நூற்றுக்கணக்கான மக்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். ஒரு மசூதிக்கு வெளியே போராட்டத் தடுப்பு போலீஸார் மீது பீர் கேன்கள் மற்றும் செங்கற்கள் வீசப்பட்டன மற்றும் குடிமக்கள் ஆலோசனை அலுவலகம் எரிக்கப்பட்டது.

இந்த வன்முறை தொடர்பாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சவுத்போர்ட்டில் ஒரு புதிய போராட்டம் உட்பட, வார இறுதியில் பிரிட்டன் முழுவதும் தீவிர வலதுசாரி ஆர்வலர்களால் குறைந்தபட்சம் 30 ஆர்ப்பாட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டதாக பிபிசி கண்டறிந்துள்ளது.

வன்முறை தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக இந்த வார இறுதியில் கூடுதலாக 70 வழக்கறிஞர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

ரகசிய உள்துறை செயலர் ஜேம்ஸ் (Shadow home secretary) பொது ஒழுங்கை மீட்டெடுக்கத் தீவிர நடவடிக்கைகள் எடுக்கவும் மற்றும் கலவரக்காரர்களுக்கு ஒரு தெளிவான செய்தியை அனுப்பவும் அதிபர் மற்றும் உள்துறை செயலாளரையும் அழைத்தார்.

இந்த வாரத் துவக்கத்தில் ஒரு புதிய தேசிய வன்முறைத் தடுப்பு முன்முயற்சியை பிரிட்டன் பிரதமர் வெளியிட்டார். இது வன்முறை அமைப்புகளை எதிர்த்துப் போராடும் முயற்சியில் உளவுத்துறையுடன் இணைந்து பணியாற்ற காவல்துறைக்கு உதவுகிறது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)